Pages

Tuesday, February 09, 2010

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்..


முன் குறிப்பு
: இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே.யாரையும் குறிப்பவை அல்ல.

சென்னை அசோக் நகர், சனிக்கிழமை காலை பத்து மணி, என்னைத் தவிர என் அறை நண்பர்கள் ஒவ்வொருவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். "டேய் சிவா நாளைக்கு காலைல 3 மணிக்கு flight டா. சீக்கிரம் பேக் பண்ணி ரெடி ஆகு" - இது பாலு.

"ட்ரீட் தராம போய்ட போற டா" - வருத்தத்துடன், வீரு.

"டேய் மச்சி போறதுக்கு முன்னால நம்ம ஊர் பொண்ணுங்கள பாத்துக்கோ டா. ஒரு வருஷத்துக்கு உனக்கு அந்த சான்சே கிடைக்கப் போறது இல்ல" - ஷங்கர்.

இப்படி அனைவரும் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருக்க நான் மட்டும் ஒன்றுமே பேசவில்லை. எனக்கு இந்த ஆன்சைட் ட்ரிப் சுத்தமாக பிடிக்கவில்லை. ப்ராஜெக்ட் மேனேஜெரிடம் இஷ்டம் இல்லைன்னு சொல்லியும் அவர் மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் மிஸ் பண்ணப் போறது எனக்கு பெரும் மன பாரத்தைக் தந்தது. நண்பர்களுடன் அரட்டை, நைட் ஷோ சினிமா, வார இறுதியில் கிரிக்கெட், பீச், அஞ்சப்பர், வடபழனி முருகன் கோவில் இப்படி பக்கம் பக்கமாக எழுதலாம் எனக்கு சென்னையில் பிடித்த விஷயங்களை. இவை அனைத்தையும் இழக்கப் போறதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அலைபேசி சிணுங்கியது. அப்பா அழைத்தார். 'தம்பி, எல்லாம் பேக் பண்ணிட்டியா?? நாங்களும் கிளம்பி வர்றோம் டா சென்னைக்கு உன்னை வழியனுப்ப. அம்மா காலைல இருந்து ஒண்ணுமே பேச மாட்டேங்கிறா. உம்முன்னு மூஞ்ச தூக்கி வச்சுட்டு இருக்கா..' இப்படி அப்பா அடுக்கிக் கொண்டே சென்றார். நான் குறுக்கிட்டேன். இல்ல, வேணாம் பா, அம்மா கண்டிப்பா அழ ஆரம்பிச்சிடுவாங்க. என்னால கண்டிப்பா தாங்கிக்க முடியாது. எனக்கு இப்ப போறதே பிடிக்கல. உங்க எல்லாரையும் பார்த்துட்டேன்னா கண்டிப்பா சென்னைய விட்டு நகர மாட்டேன். இது ஓகேனா நீங்க எல்லாரும் கிளம்பி வாங்க என்றேன். 'சரி நாங்க வரலைடா ஆனா நீ பொண்ணு கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குப் போற மாதிரி பேசிட்டு இருக்க' என்றார் கிண்டலாக. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு வருஷம் தான் டா சீக்கிரம் போய்டும் - அப்பா. ஹ்ம்ம் சரி பா நான் நைட் கால் பண்றேன். அம்மாவை கண்டிப்பா அப்ப பேச வச்சுடுங்கன்னு சொல்லி அலைபேசியை துண்டித்தேன்.

ஒரு வழியாக பேக் செய்து அனைவரும் ஊர் சுற்றக் கிளம்பினோம். மணி 2. எப்பவும் சென்னையில் வெயில் அதிகம் என்று புலம்பும் எனக்கு இன்று அந்த மதிய வெயிலும் சொர்க்கமாக தெரிந்தது. அஞ்சப்பரில் சாப்பிட்டு விட்டு ஷாப்பிங் சென்றோம். வழக்கம் போல branded ஷோ ரூம்ஸ் சென்று ஒன்றும் வாங்காமல் வெளியே வந்தோம். கடைக்காரர் அடுத்து இவங்க வந்தா கடைக்குள்ள விடாத என்று சொன்னது எங்கள் காதில் விழுந்தது. அடுத்த முறையாது ஏதாச்சும் வாங்கணும் டா என்று பாலு சொல்ல, டேய் நீயும் அவரும் மாறி மாறி இதை தான் சொல்றீங்க யாராச்சும் டயலாக்க மாத்துங்க என்றேன். அடுத்து பீச் சென்றோம். நல்லா ஆட்டம் போட்டுவிட்டு படத்திற்கு சென்றோம். படம் படு மொக்கையாக இருந்தது. வீரு பசிக்குது என்று புலம்ப டேய் இன்னைக்கு உன்னோட ட்ரீட் டா என்று என் தலையில் கட்ட இடைவெளியிலேயே கிளம்பி விட்டோம். இரவு உணவை முடித்துவிட்டு வீட்டுக்குப் போய் சேரும் போது மணி 10 ஆகி இருந்தது. டாக்ஸி பிடித்து 12 மணிக்கு அனைவரும் புறப்பட்டோம். ஏர்போர்ட் போய் சேர்ந்ததும் வீட்டுக்கு கால் பண்ணினேன். ஒருவரும் உறங்கவில்லை. அம்மா, அப்பா, தங்கை அனைவரிடமும் பேசிவிட்டு ஊருக்குப் போனதும் கால் பண்றேன்னு சொல்லி அலைபேசியை வைத்தேன். 5 நிமிடங்கள் யாரும் பேசவில்லை. அந்த மௌனத்தின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஷங்கர் ஒரு பெண்ணை சைட் அடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தான், டேய் ட்ரெயினா இருந்தாலும் ரிசெர்வேசன் சார்ட்ல பேர பார்த்து பக்கத்துல யாருன்னு கண்டு பிடிச்சிடலாம். flightல அப்படி இல்லாம போச்சே. உன் பக்கத்துல ஒரு அழகான பாட்டிமா இருக்கணும்னு கடவுள வேண்டிக்கிறேன்னு சொல்ல அனைவரும் சிரிக்க ஆரம்பித்தோம். சரி என் அருமை நண்பர்களே நான் கிளம்புறேன். போனதும் கால் பண்றேன். skypeல வாங்க பேசிக்கலாம் என்று அனைவரிடமும் விடை பெற்று சென்றேன்.

சீட்டைக் கண்டு பிடித்து அமர்ந்தேன். பக்கத்துக்கு சீட்டுக்கு இன்னும் ஆள் வரவில்லை. ஷங்கர் சொன்ன மாதிரி ஒரு பாட்டி தான் வரப் போதுன்னு நினைத்துக் கொண்டிருக்க எக்ஸ்கூஸ் மீ விண்டோ சீட் என்னோடது கொஞ்சம் வழி விடுறீங்களா என்று ஒரு குரல். 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் குரல். சரி பாட்டிமாக்கு இவர்ட்ட கொஞ்சம் மொக்கைய போடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்க அவரோ என்னைச் சுத்தமாக சட்டை செய்யாமல் பாட்டு புக்ஸ் என்று அவர் உலகத்துக்குள் சென்று விட்டார். இன்னும் என்னுடைய இன்னொரு பக்கத்து இருக்கை காலியாக தான் இருந்தது. அப்பொழுது தான் அவளைப் பார்த்தேன். கண்களில் கண்ணீரை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு தன்னுடைய இருக்கையை தேடிக் கொண்டிருந்தாள். என் பக்கத்து இருக்கையாக அவள் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். கடவுள் இருக்கிறார் என்று அன்று தான் நம்பினேன். என் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

விமானம் பறக்க ஆரம்பித்திருந்தது. அருகில் அமர்ந்துவிட்டாள் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது என்று யோசித்து யோசித்து ஒரு மணி நேரம் ஓடிப் போனது. முதல் முறை நேரம் இவ்வளவு வேகமாக ஓடுவதற்கு சபித்துக் கொண்டேன். இப்பொழுது அழுகையை நிறுத்தி இருந்தாள். என் பக்கத்தில் இருந்தவர் அழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவர் என்ன செய்தால் எனக்கென்ன என்று நினைத்துக் கொண்டேன். என் மனசும் புத்தியும் ஒரு பெரிய போரே நிகழ்த்திக்கொண்டு இருந்தன. பேச்சுக் கொடு என்று என் மனமும், ஏன்டா இப்படி ஒரு மானம் கெட்ட பொழப்பு என்று என் புத்தியும் வாதாடிக் கொண்டிருந்தன. இறுதியில் என் மனமே வென்றது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவள் உறங்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அவளிடம், ஹாய் என்று புன்னகைத்தேன். அவளும் பதிலுக்கு ஹாய் என்றாள். அடுத்து என்ன கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவளே தொடர்ந்தாள். நியூயார்க் போறேன், safeஆ இருக்குமா அந்த இடம்? நீங்க எங்க போறீங்க? பர்ஸ்ட் டைம் flightல போறேன் ரொம்ப பயமா இருக்கு, நீங்க? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்ல என் மனதுக்குள் மகிழ்ச்சி வெள்ளம். நானும் ப்ராஜெக்ட் வொர்க் விசயமாக நியூயார்க் தான் போகிறேன் என்றும், எனக்கும் விமானத்தில் இதுதான் முதல் முறை என்றும் பதிலளித்தேன். நான் வர்றேன்ல கண்டிப்பா நியூயார்க் இனி safeஆ தான் இருக்கும் என்று சொல்ல 'உங்க உடம்புக்கு ஏத்த மாதிரி பொய் சொல்லுங்க' என்று சிரித்தாள்.

பிறந்த ஊர் நெல்லை என்றும் சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினீராக வேலை பார்ப்பதாகவும் கூறினேன். தாயகம் சென்னை என்றும் புனேவில் தானும் அதே துறையில் வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். அடுத்து வீடு, ஆபீஸ், பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள் இப்படி ஆரம்பித்து ஒபாமா வரை பேசிக் கொண்டு இருந்தோம். அவளுடன் பேசியதில் இருந்து வாழ்க்கையில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ரசிக்கிற பொண்ணு என்பது மட்டும் தெரிந்தது. அவளை முதல் முறை பார்க்கிறேன், பேசுகிறேன் என்பது போல எனக்கு தோன்றவே இல்லை. குழந்தை போல பாவிக்கின்ற அவளுடைய ஒவ்வொரு முக பாவனைகளையும் ரசித்துக் கொண்டிருந்தேன். தேவதையை பூமியில் காண்பது அரிது, அவர்கள் எப்பொழுதும் பறந்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதை நிரூபித்தாள். அவள் கண்களை ஒரு நிமிடமாது தொடர்ந்து பார்க்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தேன்.

தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேட்கலாமா என்று கேட்க ஹ்ம்ம் மட்டும் பதிலாய் வந்தது. ஏறும் போது உங்க கண் கலங்கி இருந்துச்சு, வீட்ட விட்டு ரொம்ப தூரம் போறதுக்கு வருத்தமா என்றேன். அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. ஏதாச்சும் தப்பாக் கேட்டுட்டேனா என வினவ, நான் என் நண்பர்கள்ட்ட மட்டும் தான் என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாத்தையும் பகுந்துக்குவேன், நீங்க ரொம்ப மரியாதையா பேசுறீங்க அதான் எனக்கு உங்கள்ட்ட சொல்லனும்னு தோணலை என்றாள். ஓ! இதான் காரணமா, சரி இப்ப சொல்லு ஏன் ஏறும் போது கண் கலங்கி இருந்துச்சு? வீட்ட விட்டு ரொம்ப தூரம் போறதுக்கு வருத்தப்படுரியா என்று மீண்டும் கேட்டேன்.

இப்படி கேட்கிறது எப்படி இருக்கு. குட் என்று கூறி விட்டு, வீட்ட விட்டு போறதுக்கும்.. ஹ்ம்ம் அவரை விட்டுட்டும் ரொம்ப தூரம் போறேன்ல என்று கண் சிமிட்டினாள். யார் அந்த அவர் என்று கேட்க தோன்றவில்லை. அவள் வெட்கமே காட்டிக் கொடுத்து விட்டதே. முதல் முறை ஒரு பெண்ணின் வெட்கம் எனக்கு வலியைத் தந்தது. எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. 5 நிமிடங்கள் அவள் பேசியது எதுவும் எனக்கு கேட்கவே இல்லை. இதுக்கு பாட்டியே பக்கத்துல உட்கார்ந்து இருக்கலாம் என்று தோன்றியது. ஹலோ, என்ன யோசிச்சிட்டு இருக்க என்று கேட்டு என்னை என் நினைவுலகில் இருந்து மீட்டாள். ஒன்னும் இல்ல நீ அவரை மிஸ் பண்றேன்னு சொன்னியா நானும் என் கனவுலகிற்கு போயிட்டேன் என்று புன்னகைத்தேன்.

'ஆஹா! அப்படியா செய்தி!! சரி எனக்கு உறக்கம் சுத்தமா வரல. உனக்கும் வரலேன்னா ஏதாச்சும் பேசு' என்றாள். என்ன சொல்லலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருக்க, அதையும் நான் தான் சொல்லனுமா, சரி நானே சொல்றேன் கனவுலகத்துக்குப் போயிட்டன்னு சொன்னல்ல அதைப் பத்தி பேசு என்றாள். சரி, நான் சொல்றேன் ஆனால் அதுல ஒரு கண்டிஷன் இருக்கு நீயும் உன் அவரைப் பத்தி சொல்லணும் என்றேன். சரி, கண்டிப்பா என்று அவளிடம் இருந்து பதில். எனக்குள் குழப்பம் என்ன சொல்றது என்று. அப்ப ஒரு பொய் சொன்னேன் அதை சீரியஸா எடுதுக்கிட்டாளே, ஏதாச்சும் ஒரு படக்கதையை மிக்ஸ் பண்ணி சொல்ல வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் சமீபத்தில் பார்த்த 'நாடோடிகள்' தான் நினைவுக்கு வந்தது. ஊரில் அத்தை பெண்ணைக் காதலிப்பதாகவும் US போன மாப்பிள்ளைக்குத் தான் பெண்ணை தருவேன் என்று மாமா உறுதியாக சொல்லிவிட்டதால் தான் US போவதாக தோன்றியவற்றை எல்லாம் சொல்லி முடித்தேன். மாமா, இத்தனை வருஷம் உங்களுக்காக இருந்துட்டேன் இன்னும் ஒரு வருஷம் இருந்திட மாட்டேனா என்று என் முறைப்பெண் எனக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள் என்று சில பல எக்ஸ்ட்ரா பிட்டுகளையும் போட்டேன். நமக்கும் கதை சொல்ல வருகிறதே என்று எனக்குள் பெருமையாக இருந்தது. அவளும் என்னுடைய கதையில் மூழ்கி இருந்தாள். கவலைப்படாதே நீ நினைச்ச பெண்ணே உனக்கு வாழ்க்கைத் துணைவியாய் வரும் என்று வாழ்த்தினாள். அப்படி நடக்க வாய்ப்பு இல்லையே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, நன்றி என்றேன். சரி, இப்ப உன்னோட முறை, உன் அவரைப் பத்தி சொல்லு என்றேன்.

என்னோடது ரொம்ப சிம்பிள். நானும் அவரும் ஒரே காலேஜ். கோயம்பத்தூர்ல படிச்சோம். என் காலேஜ் சீனியர். இரண்டு பேரும் சென்னை தான். முதல் வருஷம் ஒரு தடவை ட்ரெயின்ல பார்த்தேன். அவரை முதல் வருஷம்னு நினைச்சு நான் ரேகிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவரும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தாரு. எனக்கு பயங்கர சிரிப்பு என்னைப் போய் சீனியர்னு நம்புரானே என்று. ஒரு வாரத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவர் மூன்றாம் ஆண்டு என்று. செத்தேன்னு நினைச்சேன் ஆனால் ரொம்ப ப்ரென்ட்லியா பேசுனாரு. அப்புறம் அவரோட கடைசி ஆண்டு முடியுற வரை காலேஜ்ல பார்த்தா பேசுவேன், அவ்வளவு தான். மற்ற பசங்க மாதிரி இல்ல ஒரே ஊருன்னு உரிமை எடுத்துட்டு அங்க இங்க வான்னு அவர் கூப்பிடலை. அவருக்கு சென்னையில் வேலை கிடைச்சது. அதற்கப்புறம் இரண்டு ஆண்டுகள் ரொம்ப கஷ்டப்பட்டேன் அவர் இல்லாமல். எனக்கும் சென்னையில அதே கம்பெனில வேலை கிடைக்கனும்னு வேண்டுனேன். கிடைச்சது அதே கம்பெனில ஆனால் புனேல. வேலைக்கு சேர்ந்து அவருக்கு அனுப்பிய முதல் மெயிலே நான் அவரை விரும்புறேன்னு தான். அவர்கிட்ட இருந்து பதில் ஏதும் வரலை. அடுத்த நாள் மெயில் வந்துச்சு புட் கோர்ட் வா என்று. தப்பா அனுப்பிட்டீங்களா மெயில நான் புட் கோர்ட் வரனுமா என்று பதில் மெயில் அனுப்பினேன். தப்பா எல்லாம் அனுப்பல நீ தான் வா என்று சொன்னார். போய் பார்த்தால் புனேல என் ஆபீஸ்ல. என்னால நம்பவே முடியலை. என் மெயிலைப் பார்த்ததும் புறப்பட்டு வந்துட்டேன்னு சொன்னார். என்னைப் பார்த்த முதல் நாள்ல இருந்து விரும்புவதாகவும் சொன்னார். எனக்குப் பிடிச்சவரே என் lifeல வரப் போறதை நினைச்சு ரொம்ப சந்தோஷப் பட்டேன். அவரை அப்ப பார்த்தது அதற்கப்புறம் பார்க்கவே இல்லை. போன்ல மட்டும் தான் பேசிக்கிறோம் என்றாள் வருத்தமாக. ரொம்ப மொக்கைய போட்டேனா? நான் இப்படி தான் அவரைப் பத்தி பேசிட்டே இருப்பேன் என்றாள். அவரும் US வரலாம் இன்னும் கொஞ்ச நாள்ல என்று என் எல்லாக் கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாள். கவலைப்படாதே அவரை சீக்கிரமே பார்ப்ப என்று ஆறுதல் சொன்னேன். ஹ்ம்ம் என்றாள்.

இதோடு அவள் நிறுத்தவில்லை. மேலும் அவர் அவர் என்று சொல்லி என் நெஞ்சில் 'அவர்' ஏவுகணையை செலுத்திக் கொண்டிருந்தாள். நானும் எல்லாவற்றிற்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று தலையாட்டிக் கொண்டிருந்தேன். எப்ப உறங்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. ஹலோ சார் எழுந்திருங்க, இறங்கனும் நாம என்றாள். இப்படி உறங்கி அவள்ட்ட பேசுற நேரத்தை வீணடிச்சிட்டேன்னு என்னைக் கடிந்து கொண்டேன். இவ்வளவு பேசி இருக்கேன் உன் பேரை கேட்காம இருக்கேனே என்று சொல்லி விட்டு, ஹாய் ஐ'ம் சிவா என்றேன். 'நான் பூர்ணி.. பூர்ணிமா. பேரச் சொன்னேன்ல உன் மெயில் ஐடி சொல்லு, எனக்கு USல இப்போதைக்கு தெரிஞ்ச ஒரே நண்பன் நீ தான்' என்றாள். இருவரும் மெயில் ஐடி பகிர்ந்து கொண்டு பிரிந்து சென்றோம்.

உன் முதல் சந்திப்பிற்கு
25 வருடங்கள் காத்திருந்தேன்
போதும் பெண்ணே..
25 வருடங்களை
நான் இழந்தது போதும்..

இரண்டு நாட்களில் செட்டில் ஆகி இருந்தேன். புதிதாக ஒரு அலைபேசியும் வாங்கி இருந்தேன். புதன் கிழமை ஆபீஸ் சென்றதும் முதல் வேலையாய் அவளுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். 'எப்படி இருக்கிறாய், வொர்க் லோட் எப்படி இருக்கிறது இப்படி பொதுவான விஷயங்களுடன் என் அலைபேசி எண்ணையும் அனுப்பி இருந்தேன். அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. F9 அழுத்திக் கொண்டு இருந்தது மட்டும் தான் நான் அன்றைக்கு செய்த வேலைகளில் முக்கியமான ஒன்று. வெள்ளி வரை அவள் பதிலை எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். இப்படி விமானத்துல பார்த்த ஒரு பையனை அவள் எப்படி நம்புவாள் என்று என்னை நானே ஆறுதல் படுத்திக் கொண்டேன்.

சனிக்கிழமை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். அலைபேசி சிணுங்க பதறிக்கொண்டு எழுந்தேன். புதிய எண்ணாக இருந்தது. தூக்கக் கலக்கத்தில் ஹலோ என்றேன். எதிர்முனையில் தூங்கிட்டு இருக்கியா என்று ஒரு பெண் குரல். ஹலோ யாருங்க நீங்க என்றேன். நியூயார்க் அ பத்திரமா வச்சு இருக்க போல என்றாள். அப்பொழுது தான் புரிந்தது பூர்ணிமா என்று. சொல்லு பூர்ணிமா என்றேன். பரவாயில்லையே ஞாபகம் வச்சு இருக்கியே, ஹே உறங்குன்னா சொல்லு அப்புறம் கால் பண்றேன் என்றாள். எனக்கு அவளோட பேச வேண்டும் என்று மட்டும் தான் இருந்தது அந்த நேரத்தில். நேரத்தைப் பார்த்தேன் 6.15 என்று காட்டியது. இந்தியாவில் இது வரை காலை 6 மணியைப் பார்த்ததே இல்லையே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். ஹே லைன்ல தான் இருக்கியா இல்ல உறங்கிட்டியா என்றாள். உறங்கல, நான் எப்பவும் 6 மணிக்கு எழுந்திடுவேன் உடற்பயிற்சி பண்ண. காலேஜ் டேஸ்ல இருந்தே இந்த பழக்கம் என்று பல் கூட துலக்காத நார வாயோடு பொய் சொன்னேன். ஓ அப்படியா! எனக்கு தூக்கமே வரலை. அஞ்சு மணில இருந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன். சரி உனக்கு கால் பண்ணலாம்னு தோனுச்சு. நல்ல வேளை நீயும் எழுந்திருச்சிட்ட என்றாள்.

என்னோட போன் நம்பர் கொடுத்து மூன்று நாள் ஆயிடுச்சு இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா என்றேன். சாரி பா, ஆபீஸ்ல ரொம்ப வேலை. அம்மா, அப்பாட்ட கூட ஒரு தடவை தான் பேசுனேன். அவ்வளவு வேலை என்றாள் சோகத்துடன். ஓ சரி, நான் என்னை மறந்துட்டன்னு நினைச்சேன் என்றேன். உன்னை எப்படி மறப்பேன். எனக்கு இந்த நாட்டில தெரிஞ்ச நம்ம ஊர் பையன் நீ தான என்றாள். அவள் அலுவலகத்தில் நடந்தவை, புது இடம் எப்படி இருக்கிறது என்று பேசிக் கொண்டே இருந்தாள். தோழிகள் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாக பீல் பண்ணினாள். வார இறுதிகளில் ரூமில் இருந்ததே இல்லை, எப்பொழுதும் தோழிகளுடன் ஊர் சுற்றுவேன் என்றாள். அவளுடன் எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. Einstien relative theory ஞாபகத்துக்கு வந்தது. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். இன்றைக்கு எங்கேயும் வெளிய போகிறாயா என்றேன். இல்லை என்றாள். சரி, அப்ப இரண்டு பேரும் ஷாப்பிங் போயிட்டு, கொஞ்சம் ஊர் சுத்திட்டு வருவோமா? உனக்கு ஏதும் ப்ராப்ளம் இல்லையே என்றேன். கொஞ்சம் யோசித்து விட்டு ப்ராப்ளம் தான், உன்னை பத்திரமா வீட்டில சேர்க்கனும்ல என்றாள் கிண்டலாக. அவள் வீட்டு முகவரி தந்து விட்டு ஒரு மணி நேரத்துல வா என்றாள். போனை வைத்து விட்டு மணி பார்த்தேன். 9.15 ஆகி இருந்தது. என் வாழ்நாளில் மிக நீண்ட அழைப்பை இன்று பதிவு செய்தேன். இதற்கு முந்தைய என்னோட சாதனை 34 நிமிடங்களே!

அவளுடன் சேர்ந்து ஷாப்பிங் சென்றேன். என் அம்மாவும் தங்கையும் என்னை சரமாரியாக திட்டுவதைப் போல தோன்றியது எனக்கு. ஒரு முறை கூட அவர்கள் அழைத்து ஷாப்பிங் சென்றது இல்லை. அப்பாவும் அப்படித் தான். அவர்கள் ஷாப்பிங் கிளம்பினால் நானும் என் அப்பாவும் ஏதாவது பொய் சொல்லி விட்டு வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவது எங்கள் வாடிக்கையாக இருந்தது. நான் ஏன் இப்படி மாறிப் போனேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஷாப்பிங் போர் அடிக்க The Empire State Building, St. Patrick's Cathedral, Statue of Liberty, Ellis Island, Brooklyn Bridge என்று ஊர் சுற்றினோம். ரூம் திரும்பும் போது மணி இரவு 9 ஆகி இருந்தது. யாரிடமும் அவ்வளவு எளிதில் பழகாத நான் எப்படி இவளோடு மட்டும் இப்படி ஆனேன் என்று யோசிக்க எனக்கே வியப்பாக இருந்தது.

ஞாயிறு காலை அலாரம் வைத்து ஆறு மணிக்கு எழுந்துவிட்டேன் அவள் அழைப்பாள் என்று. அவள் அழைப்பிற்காகக் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு யுகம் போல இருந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரவில்லை. பொறுமையை இழந்து நானே அவளை அழைத்தேன். கோபத்துடன் நான் பேச ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பரவாயில்லையே உனக்கும் கால் பண்ணத் தெரியுமா? நான் உனக்கு attend பண்ண மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன் என்றாள் கோபத்துடன். அவளது கோபமும் நியாயம் தானே! அவள் கோபத்துடன் என்னைத் திட்டுவதை ரசித்துக் கொண்டிருந்தேன். இப்படியே கால், chat, சின்ன சின்ன சண்டைகள், வார இறுதிகளில் மீட்டிங் என்று எங்கள் நட்பு வளர்ந்து கொண்டே சென்றது.

ஒரு புதன்கிழமை அன்று. காலை 9 மணி. காலிங் பெல் சத்தம் கேட்க வெளிய போய் பார்த்தால் பூர்ணி நின்று கொண்டு இருந்தாள். ஹே என்னாச்சு உனக்கு என்று கேட்டேன் உறக்கக் கலக்கத்துடன். அதை நான் கேட்கணும் என்றாள். உறங்கிட்டு இருந்தியா என்று கேட்டாள். பேந்தப் பேந்த விழித்தேன். உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, பயத்துல பதறிப் போய் ஓடி வந்து இருக்கேன். நீ என்னன்னா உறங்கிட்டு இருக்க என்றாள் கடும் கோபத்துடன். அன்னைக்கு ஏன் பொய் சொன்ன காலைல ஆறு மணிக்கே எழுந்திடுவேன் என்று. உனக்கு இது சின்ன விஷயமாக இருக்கலாம். எனக்கு பொய் சொல்றவங்களை சுத்தமாகப் பிடிக்காது என்றாள். ஹே இப்ப என்னாச்சு நான் நல்லா தான இருக்கேன் என்றேன். போய் உன் மெயில் பாக்ஸ், மொபைல் எல்லாம் செக் பண்ணு என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள்.

missed calls, sms, ping, என்னோட எல்லா mail idsலயும் என்ன ஆச்சு? உடம்பு சரி இல்லையா? என்று அனுப்பி இருந்தாள். 2 நாள் என்னோட கால், மெயில் எதற்கும் பதில் இல்லை. என்ன பண்ணினால் திரும்ப பேசுவாள் என்று யோசித்தே மூளை சோர்வடைந்து விட்டது. சனி காலை 6 மணி அவளை அழைத்தேன். மூன்றாவது முறை எடுத்தாள். யார் பேசுறீங்க என்றாள். உள்ளுக்குள் கோபம் வந்தாலும் அதைக் காட்ட இது நேரம் இல்லை என்று சமாதானப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தேன். இங்க பாரு பூர்ணி நான் சொன்னது அப்ப வேணும்னா பொய்யா இருந்து இருக்கலாம். இப்ப அது 100% உண்மை. இப்ப எல்லாம் நான் காலைல ஆறு மணிக்கே எழுந்திடுறேன் என்றேன் பொறுமையாக. சிரிக்க ஆரம்பித்தாள். உண்மைலேயே லூசு தான் நீ என்றாள். எனக்காக ஒன்னும் நீ சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டாம் என்றாள். இனி நான் 6 மணிக்கு தான் எழுந்திருப்பேன். ஒருத்தருக்கு நல்ல பழக்கத்தை கத்துக் கொடுத்து இருக்கோம் என்று சந்தோஷப் பட்டுக்க என்றேன். தினம் சீக்கிரம் எழுந்திரிக்கும் போது உன் ஞாபகம் தான் இருக்கும் என்றேன். இவ்வளவு நல்லவனா நீ என்றாள். எவ்வளவு பீல் பண்ணி பேசிட்டு இருக்கேன் நீ கிண்டல் பண்றல்ல என்றேன் குட்டி கோபத்துடன். அப்படிலாம் இல்லை உண்மையா தான் சொல்றேன் என்றாள். ஆனால் நீ கொஞ்சம் அவசரப்பட்டு போன் பண்ணி 6 மணிக்கு எழுந்திரிப்பேன்னு கமிட் ஆயிட்ட. ஒரு மணி நேரம் பொறுமையா இருந்திருந்தா நானே கால் பண்ணி இருப்பேன் என்று சொல்லி சிரித்தாள். இதோடு எங்களுக்குள் நடந்த சண்டைகளின் எண்ணிக்கை ஐம்பதைக் கடந்து இருந்தது.

அலுவகலத்தில் பயங்கர வேலையாக இருந்தது. அந்த வாரம் முழுவதும் அவளுக்கு கால் பண்ண முடியவில்லை. சனிக்கிழமை காலை கால் பண்ணினேன். இப்ப தான் ஞாபகம் வந்துச்சா என்றாள். இருவரும் பேசிக்கொண்டே இருந்தோம். திடீரென்று தொடர்பு துண்டிக்கப்பட்டது. மறுபடியும் அழைத்தாள் not reachable என்று வந்தது. எனக்கு ரொம்ப பயமாகிவிட்டது. அப்படியே அவள் ரூம்க்கு கிளம்பினேன். போய் பார்த்தால் பயங்கர மூட் அவுட்டில் இருந்தாள். என்னாச்சு என்றேன். பேசிக்கொண்டிருக்கும் போது மொபைலை கீழே போட்டுவிட்டதாகவும் மொபைல் போய்டுச்சு என்று சொன்னாள். ஹே இதுக்கு ஏன் இப்படி அப்செட்டா இருக்க. புரியுது உன் நிலைமை நாம ஆசையா வாங்கின எந்த பொருளுக்கு இப்படி ஆனாலும் நமக்கு கஷ்டமா தான் இருக்கும். கொஞ்ச நாள் என் மொபைல வச்சுக்கோ புது மொபைல் வாங்குற வரை என்றேன். பொண்ணு மொபைல் இல்லாம இருக்கிறது நல்லது இல்ல உங்க வீட்லயும் தேவை இல்லாம பயப்படுவாங்க என்றேன். இல்ல பரவாயில்ல..வேணாம்..நீ என்ன பண்ணுவ என்றாள். ரொம்ப பேசாத என் கூட பேசிட்டு இருக்கும் போது தான உன் மொபைலுக்கு இப்படி ஆச்சு அதனால எனக்காக என் மொபைல வாங்கிக்கோ என்றேன். ஹ்ம்ம், சரி ஆனால் நாம அடுத்த வாரம் போய் புது மொபைல் வாங்கிடலாம் என்றாள்.

இன்று பூர்ணி பிறந்தநாள். நிறைய நேரம் அவளுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நல்ல வேளை ஞாயிறாக இருந்தது. காலை அவளுக்கு போன் செய்தேன். ஆனால் வாழ்த்தவில்லை. அவள் பேச்சில் இருந்து அவள் என் வாழ்த்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. சரி நான் வைக்கிறேன் வைக்கிறேன் என்று ஒரு 20 தடவை சொல்லி இருப்பேன். ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று மட்டும் அவளிடம் இருந்து பதில்.அவள் கோபமாய் இருக்கிறாள் என்பது புரிந்தது. நான் கோவிலுக்குப் போறேன், நீ ப்ரீயா இருந்தா வர்றியா என்றாள். இன்னைக்கு என்ன விசேஷம் என்றேன். 'சும்மா தான் ரொம்ப போர் அடிக்குது. அதான் போறேன்' என்றாள். சரி 30 நிமிடங்கள்ல அங்க இருப்பேன் என்று சொல்லிவிட்டு 20 நிமிடங்களில் இருந்தேன்.

முதல் முறை தாவணி உடுத்தி அவளைப் பார்த்தேன். நானும் ஷங்கரும் ஆபீஸ்ல ஏதாச்சும் ஒரு பெண்ணை சேலை/தாவணில பார்த்துட்டோம்னா உடனே போன் பண்ணி சீக்கிரம் வந்தா அந்த பெண்ணை பார்க்கலாம் என்று சொல்லுவோம். என்ன வேலை செய்தாலும் அப்படியே விட்டு விட்டு கிளம்பிவிடுவோம். முதல் முறையாக இப்படி ஒருத்தி தாவணி அணிந்து இருக்கிறாள் என்று அவனிடம் சொல்லக் கூடாது என்று தோன்றியது. காதில் ஜிமிக்கி, கையில் வளையல், காலில் கொலுசு என்று இன்று ஆளே மாறிப் போயிருந்தாள். அவளுடைய முகத்தில் விழுகின்ற முடியை நிமிடத்திற்கு நூறு முறை சரி செய்து கொண்டு இருந்தாள். ஒரு வருடம் தமிழ்நாட்டுப் பெண்களை பார்க்க முடியாது என்று சொன்னார்கள், எத்தனை வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் இப்படி ஒரு தேவதையை அவர்களால் பார்க்க முடியாதே என்று மனதுக்குள் பெருமிதப்பட்டுக் கொண்டேன். அவளைப் பார்த்தபடியே நின்றேன். சரி போகலாமா என்றாள். கோவிலுக்குச் சென்றோம். அந்த அம்மனை விட அவள் தான் எனக்கு அழகாகத் தெரிந்தாள். அம்மனுக்கே அவளைப் பார்த்ததில் பொறாமை வந்திருக்கும் நிச்சயமாக. நிறைய ஷாப்பிங் செய்தாள். அவளுடைய ஷாப்பிங் பொருட்களுடன் நான் அவளுக்கு வாங்கி இருந்த பரிசுப் பொருளையும் அவளுக்குத் தெரியாமல் வைத்தேன். இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியாய் காணப்பட்டாள். ஆனால் என்னிடம் தேவையே இல்லாமல் சண்டை போட்டும் கோபித்துக் கொண்டும் இருந்தாள். இன்னைக்கு என்னோட ட்ரீட் என்றாள். நான் எதுவும் தெரியாதது போல எதுக்கு என்றேன். சும்மா, அடுத்த டைம் உன்னோட ட்ரீட், deal ஓகேவா என்று சிரித்தாள். ஒரு இந்தியன் ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டு விட்டு அவளுடைய அறைக்குத் திரும்பினோம்.

ஹே நான் என் ரூம்க்கு கிளம்புறேன் என்றேன். அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. அம்மணி கோபத்துல இருக்காங்க என்பது தெரிந்தது. சரி கிளம்பு, என்கிட்ட ஏன் சொல்லிட்டு இருக்க, உனக்கு வேற எதாச்சும் அப்பாயின்மென்ட் இருக்கும் என்றாள். ஹே! ஆமா சொல்ல மறந்திட்டேன். என் டீம்மேட் ஜெஸினா பிறந்தநாள். நேற்று நைட் கரெக்டா 12 மணிக்கு வாழ்த்தினேன். இப்ப நான் ரூம்க்கு போகணும். பார்ட்டி போறோம். வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கா என்றேன். அப்படியே என்னை எரித்துவிடுவது போல பார்த்தாள். சரி நான் கிளம்புறேன் என்றேன். பதில் ஏதும் பேசவில்லை அவள். அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துட்டேன் என்றேன். என்ன என்றாள் ஆவலாக. என்னோட போனைத் தர முடியுமா? எங்க அத்தைப் பெண்கிட்ட பேசணும் என்றேன். போன் என்று நீ சொன்னதும் தான் ஞாபகம் வருது இன்னைக்கு இவ்ளோ ஷாப்பிங் பண்ணோம் போன் வாங்க மறந்துட்டோமே என்றாள். நான் மறக்கல, ஜெஸினா பார்ட்டிக்கு போக வேண்டி இருக்குல்ல அதான் லேட் ஆயிடும்னு உங்கிட்ட சொல்லலை என்றேன். கண்டிப்ப்பாக இன்றைக்கு அ
ரை நிச்சயம் என்று எதிர்பார்த்தேன். சரி, இந்தா பேசிட்டு கொடு என்றாள். இப்பவேவா? நான் என் அவள்ட்ட பேச ஆரம்பிச்சா மணிக்கணக்காக பேசுவேன் என்றேன். ஏன் அவளை இப்படி சீண்டி விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால், அவள் கோபத்தில் செய்யும் பேசும் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தேன். சரி இந்தா உன் போன், பை என்றாள். அறைக்குள் போகாமல் வெளியில் நின்று கொண்டு இருந்தாள்.

நான் கிளம்பினேன். கொஞ்ச தூரம் நடந்து விட்டு ஓரிடத்தில் நின்றேன். அவள் இன்னும் வெளியில் தான் நின்று கொண்டு இருந்தாள். கால் பண்ணினேன். 'ஹேப்பி பர்த்டே டு யு, ஹேப்பி பர்த்டே டு யு..' என்று சத்தம் கேட்க அவள் திகைத்து நின்றாள். அவள் ஷாப்பிங் பேக்கில் இருந்து தான் சத்தம் வருகிறது என்பதை அறிந்தாள். அதில் ஒரு கிப்ட் இருக்க திகைத்து நின்றாள். ஒளிந்து நின்று இதை அனைத்தையும் ரசித்துக் கொண்டு இருந்தேன். பிரித்துப் பார்த்தாள். அலைபேசி இருந்தது. எடுத்து ஹலோ என்றாள். சரியாய் அவள் பிறந்த நேரத்திற்கு "Wish you many many happy returns of the day. may god bless u with all the happiness in the universe" என்று வாழ்த்தினேன். ஹே லூசு உன் மேல செம கோபத்துல இருந்தேன் என்றாள். அது எனக்குத் தெரியுமே என்றேன் கிண்டலாக. போடா lusu எருமை என்று செல்லமாய் திட்ட ஆரம்பித்தா
ள். நீ மட்டும் இன்றைக்கு வாழ்த்தாம இருந்திருந்தன்னா அடுத்து உன்கூட பேசவே கூடாதுன்னு முடிவு பண்ணி இருந்தேன் என்றாள். தப்பு பண்ணிட்டேனே வாழ்த்தி என்றேன் கிண்டலாக. போ லூசு என்றாள் மறுபடியும்.

சரி ஒரு வாக் போலாமா??

உங்க ஜெஸினா பார்ட்டிக்கு போல??

அப்படி யாருமே எங்க ஆபீஸ்ல இல்லை..

என்னைக் கோபப்படுத்தி பார்க்கிறதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்??

...

இருவரும் நடக்க ஆரம்பித்தோம். நீ இந்த பிறந்தநாளையும் என்னையும் எப்பவும் மறக்கக் கூடாது அதான் இப்படி பண்ணேன் என்றேன். எப்படி மறப்பேன் உன்னை என்றாள் கோபமாக. இனி ஒவ்வொரு பிறந்தநாள் வரும் போதும் இந்த வருஷ பிறந்தநாள் தான் எனக்கு முதல்ல ஞாபகம் வரும் என்றாள். எவ்வளவு நடந்தோம் என்று தெரியவில்லை. பௌர்ணமி அன்று. அந்த வெண்ணிலவும் இவள் கண்களின் ஒளியில் தோற்றுக் கொண்டு மேகத்துக்குள் ஒளிந்து கொண்டது. நான் அவளுடன் செல்லும் பாதை முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்று தோன்றியது எனக்கு. அவளிடம் எனக்கு அப்படி ஒரு அத்தைப் பெண் இல்லை என்று சொல்லிவிடலாம் என்று தோன்றியது. ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை. சொல்லி பயனேதும் இல்லையே அவளின் 'அவர்' இருக்கும் போது. இருவரும் டின்னர் முடித்து விட்டு அறை வந்து சேர்ந்தோம். சரி நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் என்றேன். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நான் எதுவும் சொல்லிவிடுவேனோ என்ற பயத்திலேயே கிளம்பிவிட்டேன். ஒரு நிமிடத்தில் அழைத்தாள். அவளிடம் பேசிக்கொண்டே ஏன் அறை வந்து சேர்ந்தேன். வைப்பதற்கு முன் நீ தாவணில ரொம்ப அழகா இருந்த என்று சொல்லிவிட்டு வைத்தேன். இந்நாள் போல எந்நாளும் இருந்தால் என் வாழ்வில் சந்தோஷம் மட்டும் நிறைந்திருக்கும் என்று தோன்றியது. எனக்கு இப்படி ஒரு நாளைத் தந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

உயிரே உன்னோடு
என்னுடைய முதல் பிரிவு
நான் மடிந்த பின் தான் இருக்க வேண்டும்..

ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அவளிடம் என்னை அணு அணுவாய் இழந்து கொண்டிருந்தேன். அவளோடு ஒரு நாள் பேசவில்லை என்றால் வாழ்க்கை அர்த்தமே இல்லாத மாறி இருந்தது. ஆனால், அவளிடம் எதையும் சொல்லவில்லை. ஒரு நாள் பேச முடியாமல் இருந்தாலே தவித்துப் போகும் நான் நிரந்தரப் பிரிவை காணப் போகிறேன். ஆம்! அவள் அடுத்த வாரம் இந்தியா திரும்புகிறாள். பிரிவின் வலி அதிகமாக இருந்தது. அந்த ஒரு வாரம் முழுவதும் அவளுடன் அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன் என்ன செய்வதென்று தெரியாமல். இது தான் அவள் இருக்கப் போகிற கடைசி வீக்கென்ட். அவளை அழைத்தேன். ஷாப்பிங் போலாமா எனக்கு ரொம்ப போர் அடிக்குது என்றேன். அவளது பதிலோ பேக் பண்ணனும் நான் வரலை என்றாள். எனக்கு பயங்கர கோபம். நைட் பேக் பண்ணிக்கலாம் இப்ப கிளம்பு என்றேன். ஹ்ம்ம் என்றாள். இருவரும் வெளியே சென்றோம். பிரண்ட்ஸ், வீட்ல தர்றதுக்கு நிறைய சாக்கலேட்ஸ் வாங்கினாள். teddy bear, dress, digicam, ipod என்று ஒவ்வொரு கடையிலும் ஏதாச்சும் ஒன்றை எடுத்து வைப்பாள் வாங்கலாம் என்று. நானோ இது என்ன நல்லாவா இருக்கு, நம்ம ஊர்ல கிடைக்காததா என்று ஏதோ காரணம் சொல்லி அவளை வாங்க விடாமல் தவிர்த்தேன். திரும்பி வீட்டுக்கு வருகையில் என் முகம் வாடிப் போய் இருந்தது. அவளை வீட்டில் விட்டு விட்டு சரி நான் கிளம்புறேன் என்றேன். ஹே! பேசிட்டு போ என்றாள். எனக்கு வேலை இருக்கு நான் போகணும் என்று பொய் சொன்னேன். அவள் முகம் உம்மென்று ஆனது. சரி பை என்றாள். எனக்கும் போக இஷ்டம் இல்லை தான் ஆனால் அந்த இடத்தில் மேலும் ஒரு நிமிடம் இருந்தால் கதறி அழுது விடுவேன் என்பது போல இருந்தது எனக்கு. பிரிவின் ஆரம்பமா? கண்கள் கலங்கி இருந்தது இருவருக்கும். கிளம்பினேன். நாங்க சென்ற கடைக்குத் திரும்பி சென்றேன். அவள் எந்தெந்த பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாளோ அவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு என் அறைக்குத் திரும்பினேன்.

நான் வரக் கூடாது என்று நினைத்த அந்த நாளும் வந்தது. அவளை வழி அனுப்ப ஏர்ப்போர்ட் சென்று இருந்தேன். கல்லூரி படிப்பிற்காக அம்மாவை விட்டுப் பிரிந்து சென்ற வலியை இப்பொழுது மீண்டும் அனுபவித்துக் கொண்டிருந்தேன் இவளின் முதல் பிரிவில். பூர்ணி உன்னோட கொஞ்ச நேரம் பேசணும் என்றேன். பேசு பா நான் என்ன சொல்ல போறேன் என்றாள். பொய் சொல்றது உனக்கு பிடிக்காது ஆனால் நான் உன்கிட்ட ஒரே ஒரு பொய் சொல்லி இருக்கேன்.. அதுக்கு என்னை மன்னிச்சிடு என்றேன். ஹே! மன்னிப்பு அது இது என்று பேசாம என்னன்னு சொல்லு பா என்றாள். "உன்னை முதல் முதலாக பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனால், உங்கிட்ட எப்படி பேச ஆரம்பிக்கிறதுன்னு கூட எனக்கு தெரியலை. அப்புறம் எப்படியோ நாம ரெண்டு பேரும் பேசுனோம். எப்பவோ உன்னோட வாழ்ந்த மாதிரி தோனுச்சு உன்னை பார்த்ததும். அப்ப தான் நீ உங்க காலேஜ் சீனியர் பத்தி சொன்ன. பஸ்ஸா இருந்திருந்தா அடுத்த ஸ்டாப்ல இறங்கிப் போய் இருப்பேன். அப்படி இருந்தது எனக்கு. அதற்கப்புறம் தான் உன்னை மாதிரி ஒரு மாமா பொண்ணு இருந்திருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு ஒரு கதைய சொன்னேன். ப்ரண்டாவாது நீ எப்பவும் என் கூட இருக்க வேண்டும்னு பேச ஆரம்பிச்சேன் உன்னோட. ஆனால் என்னால அப்படி இருக்க முடியலை. லைப்ல இந்த மாதிரி ஒரு பொண்ண மிஸ் பண்ண போறேன். உன்னோட சீனியர் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்காரு நீ லைப்ல கிடைக்க. எனக்கும் கடவுள் வரம் தந்து இருக்காரு இப்படி ஒரு பெண்ணை லைப்ல மீட் பண்ணுவேன் அவளோட பழகுவேன்னு. பிடிச்ச பொண்ணுட்ட காதலை சொல்றது தப்பா தெரியல. என்ன உங்கிட்ட இருந்து எந்த பதிலையும் எதிர் பார்க்க முடியாது. பதில் என்னன்னு தெரிஞ்சே சொல்றேன். நான் ரொம்ப unlucky. ஆசைப்படுறது எதுவுமே நடக்காது என் லைப்ல. வலியோட வாழ்ந்து எனக்குப் பழக்கம் ஆயிடுச்சு. இதற்கப்புறம் நான் உன்னை சந்திப்பேனான்னு தெரியல. நீ உனக்கு பிடிச்சவரோட ரொம்ப சந்தோசமா இருக்கணும். All the best for ur married life. உன்னோட கல்யாணப் பத்திரிக்கை அனுப்பி வை. கண்டிப்பா நான் வர மாட்டேன்" என்று முடித்தேன். எனக்குப் பிடிச்ச பொண்ணுக்கு ஏதாச்சும் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ் மறுக்காம வாங்கிக்கோ என்று சொல்லி அவள் வாங்க முடிவு செய்த teddy bear, dress, digicam, ipod எல்லாவற்றையும் பரிசளித்தேன். இதெல்லாம் உன் கல்யாணத்துக்கு நான் தந்த அன்பளிப்பாக வச்சுக்கோ. அவளைப் பார்க்க கூட முடியவில்லை. நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கண்களில் நீருடன் நகர்ந்தேன்.

அதற்கப்புறம் ஆறு மாதங்கள் அவள் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அவளுக்கு மெயில் பண்ணினேன் ஊருக்குப் போய் சேர்ந்துட்டியா, எப்படி இருக்க என்று. ஆனால், அவளிடம் இருந்து மெயில்/கால் ஏதும் வரவில்லை. அவளது பிரிவு என்னை மிகவும் வாட்டியது. அப்பாவிடம் அவளைப் பற்றி எல்லாம் சொன்னேன். அவர் ஊருக்கு வா பார்த்துக்கலாம் என்றார். எப்ப ஊருக்குப் போகலாம் என்று தான் இருந்தது எனக்கு. ஒரு வழியாக நாட்களை கழித்துவிட்டு இதோ இப்பொழுது இந்தியா வந்துவிட்டேன். பூர்ணிகிட்ட பேசவேண்டும் என்று மட்டும் தான் என் மனதிற்குள் ஓடிக் கொண்டு இருந்தது. அவளை மறக்க முடியவில்லை. ஆனால், அவள் வாழ்க்கையில் எனக்கு இனி இடம் இல்லையே. அவளை ஒரே ஒரு முறை மீண்டும் பார்க்க வேண்டும் என்று இருந்தது. என் நண்பர்களும் அவள் கம்பெனியில் வேலை பார்ப்பதால் அவர்கள் மூலம் அவள் அலைபேசி எண்ணைக் கண்டு பிடித்தேன். ஊருக்கு வந்த இரண்டே நாட்களில் புனே சென்றேன். அவளை அழைத்தேன், உன் ஆபீஸ் வெளிய வா என்று. சிவா, நீ தப்பா கால் பண்ணிட்ட என்று நினைக்கிறேன் என்றாள். என்னோட குரலை நீ மறக்காம இருக்க இன்னும்.. நீ உன்னோட நம்பர் கூட தரல.. நானே கண்டுபிடிச்சு கால் பண்றேன் அப்ப எப்படி தப்பா கால் பண்ணுவேன் என்றேன். ஹ்ம்ம், என்னைப் பார்த்து என்ன பண்ண போற என்றாள். உங்கிட்ட கொஞ்சம் கடன் வாங்கிட்டு போலாம்னு இருக்கேன் பணக்கஷ்டம் அதான்.. ரொம்ப பேசாம வெளிய வா என்றேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவளைப் பார்த்தேன். உன்னால ஒரு மெயில் கூட பண்ண முடியாதா என்றேன் கோபமாக. அவள் ஒன்றும் பேசவில்லை. சிறிது அமைதிக்குப் பின் எவ்வளவு கடன் வேணும் என்றாள். நான் பணம் வாங்க வரலை உன்னைப் பார்க்க வந்து இருக்கேன், உன் கூட பேச வந்து இருக்கேன் என்றேன். சரி சொல்லு என்றாள்.

நான் உனக்கு அவ்வளவு வேண்டாதவனா ஆயிட்டேன்ல, ஒரு மெயில் பண்ணனும்னு கூட உனக்குத் தோனலைல என்றேன். இங்க நிறைய ப்ராப்ளம் அதான் எதுவும் பண்ணலை என்றாள். என்னாச்சு என்றேன். உங்க மாமா, என்னை US போயிட்டு வந்த மாப்பிள்ளைக்குத் தான் கல்யாணம் பண்ணித் தருவேன்னு சொல்லிட்டார் என்று சிரித்தாள். எங்க மாமாவா என்றேன். எங்க அப்பாவ நீ எப்படி கூப்பிடுவ என்றாள். உள்ளுக்குள் சந்தோஷம் என்றாலும் என் கண்களில் பல கேள்விகள் இருப்பதை அவள் உணர்ந்தாள். நீ என்ன யோசிக்கிற என்று எனக்குத் தெரியும் என்று கூறிவிட்டு அவளே தொடர்ந்தாள்.

"நான் சொன்ன மாதிரி எனக்கு காலேஜ் சீனியர்லாம் யாரையும் தெரியாது. நான் உங்கிட்ட அன்று பொய் தான் சொன்னேன். உன்னைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஆனால், அதை மட்டும் வைத்து வாழ்க்கையை வாழ முடியாதே. உன்னைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. பொதுவா பசங்க impress பண்றதுக்காக நல்லவங்க மாதிரி நடிப்பாங்க என்று என்னோட ப்ரண்ட்ஸ் நிறைய பேர் சொல்லுவாங்க. அதான் அப்படி ஒரு பொய் சொன்னேன். நீ என் கூட உண்மையா பழக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உன்னைப் பற்றி நல்லா தெரிஞ்சுக்க வேண்டும் என்று. அப்புறம் தான் நீ சொன்ன உனக்கு ஒரு அத்தைப் பெண் இருக்கிறாள் என்று. அப்படியே உடைந்து போய்விட்டேன் ஆனால் எதையும் காட்டிக்கவில்லை. நியூயார்க்ல முதல்ல உன் மெயில பார்த்ததும் உடனே உனக்கு கால் பண்ணேன். ஆனால் கட் பண்ணிட்டேன். என்னால சரியா உறங்கக் கூட முடியலை. அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன் ஒரு நண்பனா உன்னை என் லைப்ல மிஸ் பண்ணனும் என்று. அதற்கப்புறம் தான் உன்னோடு பழக ஆரம்பித்தேன். ஆனால், வெறும் நண்பனா மட்டும் என்னால நிறுத்திக்க முடியலை.. உன்னோட பாசம், care, என்கூட நீ போடுற சின்ன சின்ன சண்டைகள்ல கூட உன் மேல இருந்த காதல் அதிகமாயிட்டே தான் இருந்துச்சு. நிறைய தடவை உனக்கு அப்படி ஒரு முறைப் பெண் இருக்கக் கூடாது, ஒரு வேளை இருந்துச்சு என்றால் அந்தப் பெண் உன்னை வேண்டாம் என்று சொல்லிடனும் இப்படி என்னன்னவோ லூசு மாதிரி கேவலமா யோசிச்சு இருக்கேன். ஏர்ப்போர்ட்ல நீ பேசுனப்பவே நான் சொல்லிருப்பேன் ஆனால், நீ என் பதிலுக்குக் காத்திருக்காம போயிட்ட. உன்னை நேரில் பார்த்து இதை எல்லாத்தையும் சொல்லனும்னு முடிவு எடுத்தேன். என்னோட இறுதி மூச்சு உன் மடியில போனும்னு ஆசைப்படுறேன். உன் வாழ்க்கையை என்னோட ஷேர் பண்ணிக்கிறீயா?" என்றாள்.

ஆறு மாசமா என்னைக் கஷ்டப்படவச்சுட்டல்ல போடி லூசு உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் என்றேன். நானும் தான்டா ஆனால் நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே, என்னை இப்பவும் உனக்கு பிடிச்சிருக்கா என்றாள். ஹே லூசு நான் பதிலை நியூயார்க்லயே சொல்லிட்டேன் நீ கேள்வியை இப்ப தான் கேட்கிற என்றேன். இருவரும் சிரிக்க ஆரம்பித்தோம். கண்களாலேயே பேசிக் கொண்டிருக்க என் அலைபேசி சிணுங்க ஆரம்பித்தது..

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்..
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்..

என்று... இதற்கப்புறம் என்ன.. we lived happpily ever after :-)

1 comments:

Senthil Prabu said...

eppadi sir.. en stomach burn agara mathiri story elutharinga... :-)

Anyway good story

Post a Comment