Pages

Tuesday, July 12, 2011

ஈரம்

நீ பிரிந்து
சென்றதிலிருந்து

கண்கள் உறங்க

மறுக்கின்றன....

கனவுகளும்

ஈரமாவதால்....

Tuesday, July 05, 2011

இருபத்தி ஏழு


"கார்த்திக், சார் பார்க்கிறாரு. எழுந்திரு டா" என்றான் சிவா.

நான் முழிப்பதற்குள் அவர் என்னை கவனித்து விட, "Tell me the Second law of Thermodynamics" என்றார்.

"ஒன்னும் ஒன்னும் எத்தனை ன்னு கேட்டாலே இந்த நிலைமைல சொல்ல மாட்டான். இவன்கிட்ட போய் Second law of Thermodynamics கேட்கிறாரு பாரு" என்றான் அருள்.

"Two சார்" என்றேன்.

"What!!! 27 times imposition எழுதிட்டு வா" என்றார்.

"தேங்க்ஸ் சார்" அமர்ந்தேன் என்னிடத்தில். "அருள் தூங்கினாலும் ஒரு கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டேன் பார்த்தியா" என்றேன்.

"இந்த கேள்விக்கு பதில் சொல்ல நீ எதுக்கு காலேஜ் ல வந்து உறங்கணும். LKG போ. போய் ஆயா மடியில படுத்து உறங்கு" என்றான் அருள். அனைவரும் சிரிக்க ஆரம்பிக்க என் உறக்கம் முழுதும் கலைந்தது.

"அருள் என்னடா ஸ்கூல் பசங்களுக்கு தர்ற மாதிரி imposition எழுத சொல்றாரு. அது என்னடா இருபத்தி ஏழு தடவை. அதான் எனக்கு புரியலை" என்றேன்.

அருளும் யோசித்துப் பார்த்தான். நாங்கள் இருவர் மட்டுமல்ல எல்லோரும் யோசிக்க ஆரம்பித்தோம். யாருக்கும் பதில் கிடைக்கவில்லை.

ஹாஸ்டல் வந்தேன். ஹிந்து பேப்பரை புரட்ட ஆ
ம்பித்தேன்.

ஜூலை 5, முதல் ஆங்கில எழுத்துக்கள் இருபத்தி ஏழாக கூட்டப் படுகின்றது என்று ஒரு செய்தி இருந்தது. இருபத்தி ஏழாம் எழுத்தாக Heart Sybmol வரையப் பட்டிருந்தது.

எனக்கு பயங்கர ஆச்சரியம். ஒரு வேளை இந்த இருபத்தி ஏழுக்கும் சார் சொன்ன 27 times imposition க்கும் சம்பந்தம் இருக்குமோ? இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

நாளை என் அக்கா மகள் கௌசல்யாவிற்கு இங்கிலீஷ் எக்ஸாம். ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்த கேள்வி வந்தால் அவள் தவறாக விடை தந்து விடக் கூடாது என்று அக்காவை அழைத்தேன்.


"அக்கா, கௌசல்யா எக்ஸாமுக்கு படிச்சிட்டாளா
? இன்னைக்கு ஹிந்து பார்த்தியா. இங்கிலீஷ் ல" சொல்லி முடிக்கும் முன் அக்கா குறுக்கிட்டாள்.

"மாமா இப்ப தான் டா பேப்பர் பார்த்துட்டு சொன்னாரு. நானும் மாமாவும் அவளுக்கு சொல்லி கொடுத்திட்டு இருக்கோம்" என்றாள்.


"சரிக்கா. நான் அப்புறம் கால் பண்றேன்" என்றேன்.


விளையாட்டுச் செய்திகள் பக்கம் சென்றேன். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை இருபத்தி ஏழு ஓவர்கள் போட்டிகளாக மாற்ற ICC முடிவு என்று இருந்தது.


என்ன எல்லாமே இருபத்தி ஏழு மயமா இருக்கே!! ஒன்றும் புரியாதவனாய் டிவி ஹால் பக்கம் சென்றேன். எல்லா சேனலிலும் மொக்கை நிகழ்ச்சிகளே ஓடிக் கொண்டிருந்தன. நட்சத்திர பலன் ஒரு சேனலில் ஓடிக் கொண்டிருக்க சரி நம்ம நட்சத்திரத்திற்கு என்னன்னு பார்ப்போம் என்று பார்க்க ஆரம்பித்தேன். ஜோதிட சிகாமணி ஒருவர் எதற்கு மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இருக்கின்றது என்று பேசிக் கொண்டிருந்தார். அடுத்த சேனல் சென்றேன். வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இன்று இரவு பன்னிரண்டு மணி தொடங்கி அடுத்த இருபத்தி ஏழு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும் என்றார். இன்னைக்கு என்ன வானிலை அறிக்கை கூட வித்தியாசமா இருக்கே ஆச்சரியப் பட்டுக்கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தேன்.


வானில் அழகான வானவில் ஒன்று வரையப் பட்டிருக்க அதன் அழகை ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் வானவில்லில் ஏழு வண்ணங்கள் மட்டும் இருக்கும் ஆனால் இன்று அதை விட அதிகமாக இருந்தது. எண்ண ஆரம்பித்தேன். எனக்கு தலை சுற்றியது. நான் சொல்லத் தேவை இல்லை வானவில்லிலும் இருபத்தி ஏழு நிறங்கள்.


செல் போனில் மெசேஜ் டோன் சத்தம் கேட்க மொபைலை எடுத்து மெசேஜை படிக்க ஆரம்பித்தேன். எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது. Special offer on tomorrow. Speak for 27 minutes and get 27 minutes free என்று இருந்தது.


சூரியன் மறையத் தொடங்கியது. நிலா அல்ல நிலாக்கள் உலா வர ஆரம்பித்தன
இன்று. எதிரில் வந்து கொண்டிருந்த என் நண்பன் பிரேம் மச்சி என்னடா இன்னைக்கு நிறைய நிலா இருக்கு என்றான். இருபத்தி ஏழு இருக்கும் என்றேன். எண்ணிப் பார்த்தவன் எப்படி டா எண்ணாமலே கரெக்டா சொன்ன என்றான். எல்லாம் அப்படித் தான் என்றேன். வானைப் பார்த்து வியந்து கொண்டே சென்றான். வியந்தது அவன் மட்டுமல்ல நானும் தான்.

என் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அங்கும் இங்கும் பயத்தில் தலை தெறிக்க ஓடி கொண்டிருந்தனர். ஒருவனை நிறுத்தி என்ன ஆச்சு என்றேன். நம்ம காலேஜ் லைப்ரரில bomb வச்சுட்டாங்க யாரோ முழுதாக சொல்லி முடிக்கும் முன் ஓட ஆரம்பித்தான். இவன மாதிரி நாம பயந்து ஓடக் கூடாது. மனுசனா பிறந்தா எதையாவது சாதிக்கணும். bomb diffuse பண்ற வழியைப் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். லைப்ரரி நோக்கி ஓட ஆரம்பித்தேன்.


bomb பற்றிய பயத்தில் இருபத்தி ஏழு மாணவர்கள் மயங்கி உள்ளே மாட்டிக் கொண்டதாக librarian கூறினார். இன்னும் இருபத்தி ஏழு நொடிகளே இருந்தன வெடிப்பதற்கு. என் ஒரு உயிரா அல்லது இருபத்தி ஏழு உயிரா!! யோசித்துப் பார்க்க கூட இது சரியான நேரம் இல்லை. bomb diffuse பண்ணுவதைத் தவிர வேறு வழி இப்போது இல்லை. அலாரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் ஒலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. bomb ஐ கையில் எடுத்தேன். snooze, off இரண்டு options இருந்தது.


அப்ப எல்லாமே கனவா!! அலாரத்தை ஆப் செய்தேன். எப்பொழுதும் இரண்டு மணிக்கு மேல் உறங்கும் நான் இன்று எப்படி சீக்கிரம் உறங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை. மணியைப் பார்த்தேன் பன்னிரண்டாக இன்னும் இருபத்தி ஏழு நொடிகளே இருந்தன. காவ்யாவிற்கு கால் செய்தேன்.


ஒரு ரிங் அடித்து முடிக்கும் முன்னே எடுத்தாள். உன்னை நாளைக்கு திட்டிக்கிறேன் என்றாள்.


மணி சரியாக பன்னிரண்டு.


Happy Birthday Kavya.


வேறு சொல்ல நான் வாய் எடுப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள்.


எங்க 12 மணிக்கு நீ வாழ்த்து சொல்லாம போயிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன் என்றாள். அவள் குரலில் இப்பொழுது மகிழ்ச்சியும் உற்சாகமும் இருந்தது.


நான் எப்படி மறப்பேன்? என்றேன்.


நீ!! இவ்ளோ நேரம் சார் என்ன பண்ணீங்க....? எத்தனை கால் பண்ணேன் தெரியுமா உனக்கு? என்றாள்.


உறங்கிட்டேன் டி என்றேன்.


காதலிக்கிற பொண்ணு பிறந்த நாள் அன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் உறங்கின ஒரே ஆள் நீ தான் டா. கடிந்து கொண்டாள்.


நான் ஒரு கேள்வி கேட்பேன். சரியா பதில் சொல்லிட்டன்னா நீ தப்பிச்ச. இல்ல செத்த மகனே என்றாள். இருபத்தி ஏழு தடவை உனக்கு கால் பண்ணி நீ எடுக்காம உறங்கின கோபத்துல இருக்கேன். இது என்னோட எத்தனையாவது பிறந்த நாள்? என்றாள்.


இருபத்தி ஆறு என்றேன் வேணுமென்றே.


அடப்பாவி உனக்கு clue கொடுத்ததும் நீ தப்பா சொல்ற. போ என்னோட பேசாத.

உன்னை சீண்டிப் பார்க்கத் தான்டி அப்படி சொன்னேன். எனக்கு வந்த கனவை அவளிடம் சொன்னேன்.

விழுந்து விழுந்து சிரித்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதுல பெரிய காமெடி நீ bomb diffuse பண்றதுன்னு முடிவு எடுத்தது தான் என்றாள். தெருல நாயைப் பார்த்தாலே பத்து அடி ஒடுவ நீ போய்....


போடி... சிரிக்காத.


கார்த்திக், இன்னைக்கு என் பிறந்த நாள். மத்தவங்க சொல்றதை விட நீ ஏதாச்சும் வித்தியாசமா சொல்லேன்.... என்றாள்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றேன்.


அப்பா சாமி நான் போனை வைக்கிறேன். நீ போய் உன் உறக்கத்தை continue பண்ணு என்றாள் சிறு கோபத்துடன்.


வைக்கப் போறேன்.. போறேன்.. வச்சிடவா என்றேன்.


போடா நான் என்ன கேட்கிறேன்னு உனக்குப் புரியலையா என்றாள் பாவமாக.


என்னது காவ்யா.... தெரியலையே!


ஒன்னும் இல்லை சாமி ஆளை விடு. குட் நைட் என்றாள் கோபத்துடன்.


Happy Birthday to the one who means the whole world to me. love you டி என் புஜ்ஜு குட்டி. என்றேன்.


ஒரு வழியா நான் கேட்கனும்னு ஆசைப்பட்டதை சொல்லிட்ட. இதை முதல்லயே சொல்ல வேண்டியது தான? I love you karthik என்றாள்.


அது எப்படி....? உன்னை சீண்டிப் பார்க்கிறதுல ஒரு சின்ன சந்தோஷம். நீ செல்லமா கோபப்படும் போது எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா....


இருக்கும்ல. எனக்கு ஒரே ஒரு ஆசை டா. என்னோட அடுத்த பிறந்த நாள்ல உன்னோட காதலியா மட்டும் இல்லாம உன்னோட மனைவியாவும் இருக்கணும். Missing you a lot da என்றாள்.


நானும் தான் டி. கண்டிப்பா உன் ஆசை நிறைவேறும். உன்னோட பிறந்தநாள் ஆசை வேற அதனால கண்டிப்பா அடுத்த பிறந்த நாள் அன்னைக்கு நீ என் பொண்டாட்டியா இருப்ப என்றேன்.

ஹ்ம்ம்.

சரி டி. நீ போய் உறங்கு. நாளைக்கு கூப்பிடுறேன் என்றேன்.


என்ன சார் சொன்னீங்க. உறங்கவா.... இன்னைக்கு புல்லா உறங்கப் போறது இல்ல. அடுத்த இருபத்தி ஏழு மணி நேரம் நீ என் கூட மட்டும் பேசிட்டே இருக்கணும் என்றாள்.


மறுபடியும் இருபத்தி ஏழா.... !!!!


இன்னைக்கு காவ்யா birthday. அவங்க ரெண்டு பேரும் தனியா பேசட்டுமே. நாம இதோட நிறுத்திக்கலாம் :-)



Thursday, June 16, 2011

காதல் விவாகரத்து

நம் காதலுக்கு
நீ தந்த

விவாகரத்து

உன்

திருமண அழைப்பிதழ்!

Tuesday, June 07, 2011

நினைவஞ்சலி

என் காதல்

பிறப்பு : உன் மனவறை
இறப்பு : உன் மணவறை

Monday, May 09, 2011

D70

ஏப்ரல் 19, 2010

வீணாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன் "Nivetha Working Women Hostel" அமைந்து இருக்கும் தெரு முனையில். 15 நிமிடங்கள் ஆகியும் வீணா வராததால் போன் செய்தேன்.

'என்னடி பண்ணிட்டு இருக்க? இன்னும் லேட் ஆகுமா?'

"தலை சீவிட்டு இருக்கேன்டா? பத்து நிமிஷத்துல வர்றேன்"

'ஒன்னும் அவசரம் இல்ல வீணா'

"எப்பவும் லேட் ஆனா கோபப்படுவ? இன்னைக்கு என்னாச்சு சாருக்கு? ஒன்னும் புரியலையே. எங்க ஹாஸ்டல் பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருக்கியா? எல்லா பொண்ணுங்ககிட்டயும் உன்னை அண்ணன்னு கூப்பிடனும்னு சொல்லி வச்சு இருக்கேன். பார்த்துக்கோ"

சிரித்தேன்.

'சைட் லாம் அடிக்கல மா. நான் ரொம்ப கோபப்படுறேன். உனக்காக என்னை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு தோனுச்சு அதான். உனக்காக காத்து இருக்கிறதும் சுகமா இருக்கு. இந்த சுகத்தை இவ்வளவு நாள் இழந்திட்டேனேன்னு என் மேல கோபமா வருது'

"மறுபடியும் கோபமா!" - சிரித்தாள். "உனக்காக 5 நிமிஷத்துல அங்க இருப்பேன்டா. இனிமேல் கரெக்ட் டைமுக்கு கிளம்ப கத்துக்கிறேன் என் செல்லத்துக்காக" - போனை வைத்தாள் வீணா.

ஒரு சிகரெட்டை எடுத்து பத்த வைத்தேன். வீணா வருவது தெரிந்தது. சந்தோசமாக வருவாள் என்று எதிர்பார்த்தேன் மாறாக கோபத்துடன் வந்து கொண்டிருந்தாள்.

"கார்த்திக் எனக்காக இன்னொன்னு மாத்திப்பியா?"

'Anything for you'

"இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல. எத்தன முறை சொல்லி இருக்கேன் இனிமேல் நீ எப்பவும் தம் அடிக்கக் கூடாதுன்னு. Please quit smoking Karthik"

'நான் சிகரெட் பிடிக்கிற ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்ன்னு சொல்லுவ'

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு கார்த்திக். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. அப்படி உன்னால தம் அடிக்கிறதை விட முடியாதுன்னா என்னைய விட்டுடு"

'இனிமேல் தம் அடிக்கமாட்டேன் வீணா. அதுக்காக உன்னைய விட்டுடனும் அது இதுன்னு ஏதும் சொல்லாத. என்னால தாங்கிக்க முடியாது'

"உன்னைய பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. சரி பரவா இல்லை. சிகரெட் பிடிச்சுக்கோ. ஆனால், ஒரு கண்டிஷன் பத்த வைக்காம பிடிக்கணும்"

'அதான பார்த்தேன். வாரத்துக்கு ஒன்னு வேணா அடிச்சுக்கோன்னு சொல்லப் போறியோன்னு நினைச்சேன். இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் தாயி. போதுமா?'

"Thats my boy. ஆமா இன்னைக்கு என்னாச்சு? ரொம்ப பொறுமையா என்ன சொன்னாலும் கேட்டுக்கிற?"

'உனக்காக உன் பாசத்துக்காக. சரி, எங்க போலாம் வீணா?'

"கோவிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு டா. வடபழனிக்கு போகலாம்"

'சரிடி'

D70 வோல்வோ பஸ். வடபழனிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினாள் வீணா. "உனக்காகத் தானே இந்த உயிர் உள்ளது" கற்றது தமிழ் பாடல் பாடிக் கொண்டிருந்தது.

பேச்சைத் தொடர்ந்தாள்.

"நான் உனக்காக எதாச்சும் பண்ணனுமே.. என்ன பண்ணலாம்??"

யோசித்தாள்.

"நான் இப்படி எல்லாம் நாம வாழணும்னு நினைச்சு வச்சு இருக்கேன். எனக்கு தோனும் போதெல்லாம் உன்கிட்ட சொல்லுவேன் சரியா?"

'சொல்லு மா. கேட்க ரொம்ப ஆசையா இருக்கு'

சில நிமிடங்களுக்குப் பின்,

"கார்த்திக் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது நான் வேற சேனல் பார்க்கனும்னு உன்கூட சண்டை போட மாட்டேன். உன்கூட சேர்ந்து நானும் இந்தியாவிற்கு சப்போர்ட் பண்ணுவேன். சரியா?"

சிரித்தேன்.

"அப்புறம் நான் எந்த சீரியலும் பார்க்க மாட்டேன் அதனால உனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. சரியான நேரத்துக்கு சாப்பாடு ரெடி பண்ணிடுவேன். நான் தான் உனக்கு பரிமாறுவேன். நீயே போய் எடுத்து போட்டுக்கோன்னு சொல்ல மாட்டேன். நம்ம வீட்ல நோ சீரியல்ஸ்"

'இதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு டி'

"என்ன டா?"

'நீ என்னை ரெண்டு சீரியல் பார்க்க விடனும்'

"அடப்பாவி! நீயா? இப்ப எல்லாம் பசங்க சீரியல் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? அம்மா சீரியல் பார்த்தாலே நான் அப்படி சண்டை போடுவேன் அவங்களோட. பாருடி உன்னை கட்டிக்கப் போறவன் சீரியல் பார்க்கப் போறான்னு சொன்னாங்க. அவங்க சொன்னது உண்மை ஆயிடுச்சே!"

'இல்லைடி விஜய் டிவி ல ரெண்டு சீரியல் நல்லா இருக்கும். நீயும் பாரு சரியா?'

"நான் சீரியல் பக்கமே போல சாமி. சரி அப்படி என்னை சீரியல்ஸ் தான் பார்க்கிற?"

'மதுரை, இன்னொன்னு அன்பே வா'

"சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. சரி இது ரெண்டும் முடிஞ்சதுக்கு அப்புறமா வேற ஏதும் பார்க்க மாட்டல்ல?"

'மாட்டேன் டி. இதுல வர்ற காதல் ரொம்ப அழகா இருக்கும். அதனால தான் எங்க ரூம்ல எல்லாருமே பார்ப்போம்'

"பாலாஜி அண்ணனுமா?"

'அவன் தான்டி எனக்கு இந்த சீரியல் பத்தி சொன்னதே'

"அடப்பாவிங்களா. என்ன கொடுமை இது?"

'வடபழனி சிக்னல்' என்று கண்டக்டர் சொல்ல இருவரும் இறங்கி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

"சார் பூ வாங்கிட்டு போங்க சார்"

'ஒரு முழம் எவ்வளவு அக்கா?'

"அஞ்சு ரூபாய் சார்"

'எவ்வளவு டி வாங்க?'

"4 முழம் தாங்க. ஒவ்வொரு முழமா கட் பண்ணி தாங்க" என்றாள் வீணா.

"இந்தாங்கம்மா. சார் அம்மாவுக்கு பூ?"

'ஆறு முழம் கொடுங்கம்மா'

"டேய் ஆறு முழம் எதுக்கு? அதுவும் சாமிக்கு வாங்கியதை விட எனக்கு அதிகமா?"

'கண்ணுக்குத் தெரியாம வரம் தந்துட்டு இருக்கிற சாமிக்கு நாலு முழம் வாங்கும் போது என் கண்ணு முன்னால நின்னுட்டு வரம் தந்திட்டு இருக்கிற தேவதைக்கு ஆறு முழம் வாங்கக் கூடாதா?'

"எப்படி தான் இப்படி எல்லாம் பேசக் கதுக்கிட்டியோ. ஆனால், யாரையும் சாமி கூட ஒப்பிட்டு பேசாத டா. கார்த்திக், ஆறு முழம் பூ வைக்க என் கூந்தல்ல இடம் இல்லை டா" என்று பாவமாய் பார்த்தாள்.

"அம்மா சார் ஆசையா வாங்கிக் கொடுத்து இருக்காரு. சண்டை போடாம வச்சுக்கோங்கம்மா"

'இவனுக்கு நீங்களும் சப்போர்ட்டா' என்று சொல்லிக் கொண்டே பூவை சூடிக் கொண்டாள் வீணா.

ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு இருவரும் கோவிலுக்குள்ளே நடக்க ஆரம்பித்தோம்.

'லூசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி'

சிரித்தாள் வெட்கத்துடன்.

'விநாயகருக்கு என் மேல பயங்கர கோபமா இருக்கும்டி...'

"ஏன்?"

'அவரும் ரொம்ப நாளா ஒரு பொண்ணை தேடிட்டு இருக்காரு. கிடைக்க மாட்டேன்கிறது. ஆனால், தேவதையாய் ஒரு பொண்ணு என் பக்கத்துல நிற்கிறதை பார்த்தா கோபம் வராம இருக்குமா'

"கார்த்திக் சாமி கும்பிடும் போது பேசக் கூடாது" என்று சொல்லிவிட்டு, முணு முணு என்று சாமியிடம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். நானோ சாமி கும்பிடாமல் அவள் முணு முணுக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.

கோவிலை விட்டு வெளியே வந்தோம்.

'பசிக்குது சாப்பிடப் போலாம் டி'

"எங்க?"

'சரவண பவன்'

"கார்த்திக் நான் வெஜ் சாப்பிடப் போலாம்"

'இப்ப தான்டி கோவிலுக்கு போயிட்டு வந்தோம்'

"ஆமால்ல. சரி வா சரவண பவனுக்கே போலாம்" சலித்துக் கொண்டே சொன்னாள்.

'என்னடி இப்படி சலிச்சுக்கிற? எனக்காக இன்னைக்கு வெஜ் சாப்பிடு. இங்க பாரு மா நான் உன்னை நான்-வெஜ் சாப்பிட வேணாம்னு சொல்லல. கொஞ்சம் குறைச்சுக்க ட்ரை பண்ணு. வீட்டில நாங்க எல்லாரும் சுத்த சைவம். அம்மா...' என்று நான் சொல்லி முடிப்பதற்குள்

"கவலையே படாத கார்த்திக். அம்மா வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா நம்ம வீட்டில வெஜ் தான் இருக்கும். போதுமா? அத்தைக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்குவேன் டா"

'அப்புறம் இன்னொன்னுடி. அம்மா முன்னால மட்டும் என்னை வாடா, போடான்னு ஏன் பேர் சொல்லிக் கூட கூப்பிடாத'

"இதெல்லாம் கூட எனக்கு சொல்லித் தரனுமாங்க. எனக்கு தெரியுங்க. இப்படி பேசுனா போதுமாங்க?"

எனக்கு சிரிப்பு தான் வந்தது.

'நீ மரியாதையா பேசும் போது எனக்கு சிரிப்பு தான் டி வருது. ஆனால், வேற வழி இல்லை. நீ இப்படி தான் கூப்பிட்டு ஆகனும் அம்மா முன்னால'

"சரிங்க மாமா"

'கடவுளே'

வெயிட்டர் குறுக்கிட்டார். "சார் என்ன சாப்பிடுறீங்க"

'என்ன டி சாப்பிடுற'

"உங்களுக்கு என்ன தோனுதோ ஆர்டர் பண்ணுங்க. ஆனா எல்லாமே ஒரு ப்ளேட் தான். எனக்கு தனியா ஆர்டர் பண்ணாதீங்க'

'சாம்பார் இட்லி, ஒரு ப்ளேட் தயிர் வடை, அப்புறம் ஒரு நெய் ரோஸ்ட்' என்றேன் வெயிட்டரிடம்.

'இங்க பாருடி அம்மா இருக்கும் போது மட்டும் தான் மரியாதை தரச் சொன்னேன். வாடா போடான்னு மத்த நேரம் கூப்பிடு. அதான் எனக்கு பிடிச்சிருக்கு'

'சரி டா'

இருவரும் சாப்பிட்டு முடித்தோம்.

'சார் டீ, காபி?'

வீணா வேண்டாம் என்று தலை அசைக்க 'வேண்டாம்' என்றேன். பில் கட்டி விட்டு இருவரும் வெளியே வந்தோம்.

"கார்த்திக், டீ, காபி ன்னு அவர் சொன்னதும் தான் ஞாபகம் வருது. சனி, ஞாயிறு, லீவ் நாட்கள்ல நீ தான் என்னை காபி போட்டு வந்து எழுப்பி விடனும் சரியா? என்னைய லீவ் அன்னைக்கு நல்லா உறங்க விடனும் டா"

'டீ coffee மட்டும் தானா இல்லை சமையலும் நான் தானா?'

"சமையல் கண்டிப்பா நான் தான். என் புருசனுக்கு ரொம்ப வேலை தர மாட்டேன்"

அவளே தொடர்ந்தாள்.

"ஆனா கார்த்திக், நம்ம குழந்தைங்களுக்கு நீ தான் பாடம் சொல்லித் தரனும். அதுவும் கணக்கு கண்டிப்பா நீ தான் டா. சரியா?"

'என்னடி திடீர்னு பாடம் சொல்லித் தர்றதை பத்தி பேசுற?'

"ஒரு குழந்தை ஸ்கூல் யுனிபார்ம் போட்டு போயிட்டு இருக்கிறதை பார்த்தேன். அதான் திடீர்னு தோனுச்சு"

'ஹ்ம்ம் சரி டி. நானே சொல்லித் தரேன் போதுமா'

அவள் முகத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருந்தது.

இருவரும் மீண்டும் D70 ஏறினோம்.

"கார்த்திக்.. கார்த்திக்"

'சொல்லு மா'

"நமக்கு ரெண்டு குழந்தைங்க சரியா. முதல்ல பையன் ரெண்டாவதா ஒரு பொண்ணு. ஓகே வா?"

'இல்லைடி முதல்ல பொண்ணு தான் அதுவும் உன்னை மாதிரியே'

"போ.. முதல்ல பையன் தான்"

'இல்லை பொண்ணு தான்'

"சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஒரு பையன் ஒரு பொண்ணு. ஆனால் பொண்ணு உன்னை மாதிரி இருக்கனும் பையன் என்னை மாதிரி இருக்கனும். ஓகே வா?"

'இல்லைடி ரெண்டு பேரும் உன்னை மாதிரி தான் இருக்கனும்'

"போ.. நான் சொன்ன மாதிரி தான்"

நாங்கள் இறங்க வேண்டிய தண்டீஸ்வரம் ஸ்டாப் வந்தது. இறங்கி ஹாஸ்டல் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

'கார்த்திக் என் கூடவே இரு டா'

'உன் ஹாஸ்டல்ல என்னை சேர்த்துக்குவாங்களா?'

"நான் உன்னை என் ஹாஸ்டல்ல இருக்க சொல்லல. சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்கோ டா. நான் உன்னோட வாழனும். நமக்குன்னு ஒரு வீடு. குழந்தைங்க. அத்தை மாமா அம்மா அப்பா.. நினைச்சு பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு டா"

'எனக்கும் தான் லூசு. இன்னைக்கு நீ பேசினதை கேட்கும் போதே எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு.. வாழ்ந்தா எப்படி இருக்கும்?'

"கார்த்திக் இப்ப போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?"

'உனக்கு ஏதோ ஆயிடுச்சு இன்னைக்கு. ஏன்டி கோவில்ல இருக்கும் போது சொல்லி இருக்க மாட்ட? இப்ப கோவில் திறந்திருக்காதே. நாளைக்கு பண்ணிக்கலாம். சரியா?'

"நாளைக்கு வரை காத்து இருக்கனுமா? போ டா"

சிரித்தேன்.

"சிரிக்காத லூசு. போ. Missing you a lot..."

'என்னடி ஆச்சு. நாளைக்கு உன்னை மறுபடியும் பார்க்கப் போறேன்'

"தெரியலை டா. உன்னை ஒரு நிமிஷம் கூட என்னால பிரிஞ்சு இருக்க முடியலை டா. ஒவ்வொரு நிமிஷமும் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்றேன்னு எனக்கு சொல்லத் தெரியலை"

'புரியுது டி எனக்கு. நீ சொல்லிடுற. நான் சொல்ல மாட்டேன்கிறேன். அவ்வளவு தான் வித்தியாசம். அம்மாகிட்ட இன்னைக்கே பேசுறேன் டி நம்ம கல்யாணத்தைப் பத்தி'

"நானும் பேசப் போறேன் டா"

'ஹ்ம்ம் சரி டி. குட் நைட். கிளம்பட்டுமா?'

"இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டுப் போடா"

அந்த இடத்தை விட்டு நகர எனக்கும் மனசில்லை. இருவரும் பேச ஆரம்பித்தோம்...

09-05-2011

"நல்லா ஆடுனீங்க பாஸ். கடைசியா அடிச்ச சிக்ஸ் சூப்பர் ஷாட். நீங்க ஒன் டவுன் இறங்கி இருந்தா ஜெயிச்சு இருக்கலாம்" எங்கள் எதிர் அணியில் விளையாடிய ஒருவர் வந்து கை குலுக்கினார்.

'தேங்க்ஸ் பாஸ்..' என்றேன்.

"By the way, my name is varun" என்றார்.

'I am karthik. He is Ashwin and he is Ranga' என் நண்பர்களையும் அறிமுகம் செய்தேன்.

நால்வரும் பேசிக் கொண்டே க்ரௌண்டை விட்டு வெளியே வந்தோம்.

தம் என்று அவர் சிகரெட் பாக்கெட்டை நீட்ட ரங்காவும் அஷ்வினும் ஆளுக்கொன்றை எடுத்து பற்ற வைத்தனர்.

'கார்த்திக் நீங்க?'

'நான் ஒரு வருஷமா தம் அடிக்கிறது இல்ல வருண்'

அன்று நடந்த கிரிக்கெட் போட்டியைப் பற்றி பேசிக் கொண்டே நடந்தோம். 26th மெய்ன் வந்ததும் 'இதான் என் வீடு, எல்லாரும் வீட்டுக்குள்ள வாங்களேன். டிபன் சாப்பிட்டு போகலாம்' என்றார் வருண்.

"என்ன பாஸ் டிபன்?" என்றான் ரங்கா.

"தோசை சட்னி தான்" என்றார் வருண்.

"தோசைக்கு சிக்கன் குழம்புன்னா நல்லா இருக்கும் பாஸ். சிக்கன் குழம்பு வச்சுட்டு கூப்பிடுங்க கண்டிப்பா வர்றேன்" என்றான் ரங்கா.

"பாஸ் சும்மா பேச்சுக்கு கூட சாப்பிடக் கூப்பிடாதீங்க. உடனே நுழைஞ்சிடுவோம். பார்த்துக்கோங்க" - அஷ்வின்.

"நிஜமா தான் கூப்பிடுறேன். ஆனா இந்த வாரம் நான்-வெஜ் சமைக்க மாட்டோம் வீட்டில. வைப் சுத்த சைவம். மாமியார் வேற ஊரில இருந்து வந்திருக்காங்க. அடுத்த வாரம் நீங்க சொன்னதை ரெடி பண்ணிடலாம். என்ன ரங்கா ஓகே வா?" - வருண்.

'லவ் மேரேஜா வருண்?' - நான்.

"ஆமா"

'நீங்களும் உங்க மனைவியும் வேற வேற ஜாதியா வருண்?'

"ஆமா பாஸ்"

"இதெல்லாம் நீ ஏன் கேட்டுட்டு இருக்க? சாப்பாடு போட்டா சாப்பிட்டு மட்டும் போக வேண்டியது தான?" - அஷ்வின் கிண்டலடித்தார்.

'உங்க அம்மா அப்பா, அவங்க அம்மா அப்பா எல்லார் சம்மதத்தோட தான் உங்க கல்யாணம் நடந்துச்சா?'

"ஆமா கார்த்திக்" என்றார் வருண்.

'Congrats Varun. My best wishes'

"தேங்க்ஸ் கார்த்திக். கண்டிப்பா நீங்க எல்லாரும் ஒரு நாள் வீட்டுக்கு வரனும்" - வருண்.

'கண்டிப்பா வருண். சரி நான் கிளம்புறேன்' - அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

D70 வந்தது. ஏறி அமர்ந்தேன்.

"நமக்குன்னு ஒரு வீடு. குழந்தைங்க. அத்தை மாமா அம்மா அப்பா.." - என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்.
ஆனால், எனக்கு

உறவுகளே உன்
நினைவுகள் தான்.

என்னையும் அறியாமல் என் கண்கள் அழ ஆரம்பித்து இருந்தன எப்பொழுதும் போல....

Monday, April 25, 2011

பயணம் 2 : பெங்களூர் - சேலம் - பெங்களூர்(கிறுக்கல்கள்)

22.04.2011
புனித வெள்ளி என்பதால் அலுவலகத்தில் மூன்று நாட்கள் விடுமுறை. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பிறந்த ஊருக்குச் சென்று வந்ததால் இந்த விடுமுறைக்கு பைக்கில் எங்கயாவது செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அருள் புது வீடு கட்டிய பின்பு நான் அவன் வீட்டிற்குச் செல்லவில்லை. அருள்? என் கல்லூரி நண்பன். கல்லூரிக் காலங்களில் கோவையில் இருந்து சேலத்திற்கு பதினைந்து முறை சென்று இருப்போம் நண்பர்கள் பட்டாளத்துடன். எல்லா முறையும் அருள் வீட்டில் தான் தங்குவோம் நாம தான் சோறுன்னா சட்டி தின்கிற கூட்டம் ஆச்சே. நான் நிறைய முறை யோசித்திருக்கிறேன் எப்படி எங்க எல்லாருக்கும் சளைக்காமல் சமைச்சு போடுறாங்கன்னு. இதை விட அருள் வீடு எங்க எல்லோருக்கும் பிடிக்க காரணம் நம் வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும். அருள் வீட்டில் நாங்கள் அடித்த கூத்துகள் ஏராளம். அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம். எப்படியோ விக்னேஷை சம்மதிக்க வைத்து அவனையும் சேலம் வர வைத்தேன் ஏதாவது ஒரு சின்ன ட்ரிப் போலாம் என்று. அவனுக்கு வெள்ளி விடுமுறை இல்லாததால் சனிக் கிழமை காலை வருவதாய் சொன்னான்.

அம்மாவிற்கு போன் செய்தேன். சேலம் போவதாய் சொன்னேன். பஸ்ஸா, ரயிலா என்று கேட்டார்கள். பஸ் தான் என்று பொய் சொன்னேன். மன உறுத்தலாக இருந்தாலும் வேறு வழி இல்லை. பைக்கில் போகிறேன் என்றால் திட்டு யார் வாங்குறது!

நானும் ஷங்கரும் பெங்களூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்பினோம். ஓசூரைத் தாண்டி அடையார் ஆனந்த பவனில் ஒரு பிரேக் எடுத்தோம். போகும் வழியில் மழை வருவது போல இருந்தது. ஒரு சில இடங்களில் தூறல் இருந்தது. ஆனால், ஒரு இரண்டு கி மீ சென்றால் நல்ல வெயில். கிருஷணகிரி - சேலம் பாதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரோட்டிற்கு இருபுறமும் பச்சைப் பசேல் எனக் காட்சி அளித்தது. 5.30 மணிக்கு ஷங்கர் வீட்டை அடைந்தோம். ஷங்கரின் அக்கா மகனுக்கு ஒரு நான்கு வயது இருக்கும். எங்கள் இருவரையும் பார்த்து வெகுளித் தனமாக ஒரு கேள்வி கேட்டான். எப்படி மாமா பைக்கை பஸ்சில வச்சுட்டு வந்தீங்க? எங்க வச்சீங்க என்று. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல வேளை ஷங்கர் அம்மா நாங்கள் பைக்கில் வந்ததை கவனிக்க வில்லை. பார்த்து இருந்தால் எங்கள் இருவருக்கு அர்ச்சனை தான்.... விக்னேஷ் மெசேஜ் அனுப்பி இருந்தான் "5 மணி ரயில் ஏறிவிட்டதாகவும் 10 மணிக்கு சேலத்தில் இருப்பேன்" என்றும்.

நானும் ஷங்கரும் அருள் வீட்டுக்குப் புறப்பட்டோம். பின், ஊத்துமலை முருகன் கோவிலுக்குச் சென்றோம் அருள் குடும்பத்துடன். ஆனால், நான் கோவிலுக்குள் செல்லவில்லை. நான் தான் இப்பொழுதெல்லாம் சாமி கும்பிடுறது இல்லையே. அருளிடம் "கடவுள் இருந்தா நல்லா இருக்கும்" என்று கமல் வசனங்களைப் பேசி சமாளித்தேன். அந்த மலையில் இருந்து சேலம் முழுவதையும் பார்க்கலாம். அந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு திருச்சி மலைகோட்டை தான் நினைவுக்கு வந்தது (அடுத்த ட்ரிப் திருச்சியா :-) !). சேலம் முழுவதையும் பார்க்கும் அக்காட்சி மிக அழகாக இருந்தது. அங்கு இருந்து கிளம்பும் போது லேசாகத் தூறல் விழ ஆரம்பித்தது. அருள் வீடு வந்து சேரும் போது முழுவதும் நனைந்து இருந்தோம் நானும் ஷங்கரும். ஆரம்பித்த மழை நிற்கவே இல்லை. பெங்களுரு மழையில் இருந்து தப்பிக்க சேலம் சென்றால் அங்கும் எங்களை மழை விடவில்லை. இரவு உணவை A2B யில் முடித்தோம். ஷங்கர் அவன் வீட்டிற்குச் சென்றான். மழையின் காரணத்தால் விக்னேஷ் வர மிக தாமதம் ஆனது. தனிஷ்பேட்டையில் இருந்து சேலத்திற்கு 20 நிமிடிங்கள் தான் ஆகும். ஆனால், விக்னேஷ் ட்ரெயின் வர 2.30 மணி நேரம் ஆனது. அவன் வீடு வந்து சேரும் போது மணி 1. "ஏன்டா ட்ரெயின் நகரலன்னா ஆட்டோ பிடிச்சு வரத் தெரியாதா? நீ என்ன சின்னப் பிள்ளையா?" என்று அவனை கடுப்பேத்திக் கொண்டிருந்தேன். அப்படியே அன்று இரவு உறங்கிப் போனோம்.

23.04.2011
காலை எழும் போது மணி 9.30. நாங்கள் எப்பொழுது அருள் வீட்டிற்குச் சென்றாலும் 'காரப் பனியாரம்' சிற்றுண்டியாக இருக்கும். பேருக்குத் தான் சிற்றுண்டி. ஆனால், நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்தால், சாப்பாடை பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டதோ என்று எண்ணத் தோன்றும் பார்ப்பவர்களுக்கு. ஒரு கட்டு கட்டினோம் நானும் விக்னேஷும். அருள் வீட்டிலும் இரண்டு வாண்டுகள்.... அவன் அக்கா குழந்தைகள். நொடிக்கு ஒரு முறை எங்களையும் மாமா மாமா என்று அழைத்தது மிக அழகாக இருந்தது. மிகவும் ரசித்தேன். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம். அவர்களுடன் கேரம் விளையாடினோம். அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால், எங்களை அந்த பிஞ்சுகள் இரண்டும் மறக்கவில்லை.

12 மணி அளவில் நான், அருள், ஷங்கர், விக்னேஷ் மேட்டூர் புறப்பட்டோம். எங்களுடன் அருளின் அக்கா மகனும் சேர்ந்து கொண்டான். ஜலகண்டபுரம் வழியாக மேட்டூர் சென்றோம். போகும் வழியில் பல கிராமங்களைக் கடந்து சென்றோம். நகரங்களைப் போலில்லாமல் மிக அழகாக அமைதியாக இருந்தது. கடைசிக் காலங்களை இப்படி ஒரு அழகான கிராமத்தில் கடத்த வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. மேட்டூர் சென்று இறங்கியதும் தர்பூசணி, மாங்காய் என்று அடித்து நொறுக்கினோம். அதன் பின் குளிக்கச் சென்றோம். சிறு சிறு படிக்கட்டுகளில் இருந்து நீர் வீழ்ந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு படிக்கட்டும் நான்கு அடி இருக்கும். நாங்கள் அப்படியொரு ஒரு நான்கடி நீர் வீழ்ச்சியின் கீழ் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். நிறைய குட்டி மீன்கள் அந்த நீரோடு போய்க் கொண்டிருந்தன. அந்தப் படிக்கட்டில் இருந்து நீரோடு கீழே விழும் போது 'நாம் தண்ணீரில் தான் மீண்டும் விழப் போகிறோம்' என்று அறியாமல் ஒவ்வொரு மீனும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மீண்டும் படிக்கட்டின் மேலே தாவ முயன்று தோற்றுக் கொண்டு இருந்தது. அதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. அப்பொழுது விக்னேஷ் ஒரு தத்துவம் சொன்னான். அப்பொழுது அவனை நாங்கள் கிண்டல் அடித்தாலும் அதில் இருந்த உண்மையை மறைக்க இயலாது. "இந்த சின்ன நீர் வீழ்ச்சி ல இருந்து ஒவ்வொரு மீன் விழும் போது நாம சாகப் போறோம் என்று நினைச்சு தன்னை காப்பாதிக் கொள்ள மறுபடியும் தாவுகின்றன. அந்த மீன்களுக்குத் தெரியாது நாம போய் ஒரு பெரிய நீர்தேக்கத்தை தான் அடையப் போறோம்னு. இது தான் வாழ்க்கை என்று". உண்மையில் ரசித்தேன். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

குளித்து முடித்து விட்டு சேலம் புறப்படத் தயாரானோம். சாப்பிட நிறைய மீன் வகைகள் இருந்தது. அருள் என்னை சாப்பிட அழைத்தான். நான் இன்று சைவம் என்றேன். 'ஏன்டா சாமி கும்பிட மாட்ட அப்புறம் என்ன சனிக்கிழமை கறி சாப்பிட மாட்டேன்னு சொல்ற. நீயெல்லாம் இதை பின்பற்றக் கூடாது' என்றான். அவனிடம் என்ன பதில் கூற என்று தெரியவில்லை. அதெல்லாம் அப்படித்தான் என்றேன். "அவளுக்காகத் தான் என்னை மாற்றிக் கொண்டேன்" என்று சொல்ல வேண்டும் போல இருந்தது. அவளுக்காக மாறிய நான் மீண்டும் மாறுவது எனக்குப் பிடிக்கவில்லை.

ஷங்கரும், விக்னேஷும் சைவம். அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மீண்டும் தர்பூசணி, மாங்காய், கரும்புச் சாறு என்று என் வயிற்ரை நிரப்பிக் கொண்டிருந்தேன் அங்கே எதுவும் எனக்குப் பிடித்த ஹோட்டல் தென்படாததால். சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் சேலம் புறப்பட்டோம். ஜலகண்டபுரம் தாண்டியதும் மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. கோடை மழை போல தெரியவில்லை. மழைக் காலம் முன் கூட்டியே ஆரம்பித்தது போல இருந்தது. காரில் சென்றதால் இந்த முறை நனையாமல் தப்பித்தோம். 6 மணி அளவில் அருள் வீட்டை அடைந்தோம். சேலத்தில் வசிக்கும் இன்னொரு கல்லூரி நண்பன் சபரியும் அருள் வீட்டிற்கு வந்தான்.

மழை இன்னும் நின்ற பாடில்லை. மழையில் நனைந்து கொண்டே கணேஷ் மகாலிற்கு சென்றோம். இரவு உணவை அங்கே முடித்தோம். யார் பில் செலுத்துவது என்று ஒரு பட்டி மன்றமே நடந்தது. கடைசியில் நான் தான் பலிகடா ஆனேன். ஆனால், எப்பொழுது செய்த புண்ணியமோ "only cash" என்றார்கள் ஹோட்டல் நிர்வாகத்தினர். விக்னேஷ் அவன் அம்மாவோடு தன் கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டே wallet யைத் தந்தான். பலி ஆடு மாறியது :-)

வெளியில் மழை இன்னும் பெய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் ARRS multiplex சென்றோம். 'கோ' படம் பார்த்தோம். Housefull. படம் நன்றாகப் போனது. ஜீவா அருமையாக நடித்து இருந்தார். பியா கதாப்பாத்திரம் என் மனதை தொட்ட அளவிற்கு கார்த்திகா கதாப்பாத்திரம் இல்லை என்று தான் சொல்லுவேன். படம் முடிந்து வீடு வந்து சேரும் போது மணி இரண்டு. நாங்கள் ஒய்வெடுக்க ஆரம்பித்தோம் ஆனால் மழை ஒயவில்லை.

25.04.2011
காலை 10 மணிக்குத் தான் எழுந்தோம். அருள் வீட்டில் டிபன். சிக்கன், மட்டன் குழம்போடு இட்லி, தோசை, சப்பாத்தி. பாவம் விக்னேஷ் அவனுக்கு மட்டும் தக்காளி சாப்ஸ். வெளுத்துக் கட்டினேன். அதன் பின் வாண்டுகளுடன் மீண்டும் கேரம். அதற்குப் பிறகு கிரிக்கெட் விளையாடினோம் பிளாஸ்டிக் பாலில் தான். ஒவ்வொரு முறை அருள் வீடிற்கு போகும் போதும் ஏதாச்சும் உடைப்பது எங்கள் வழக்கம் என்றாகி விட்டது போல. இந்த முறை நொறுக்கியது ட்யூப்லைட்.

மதியம் பசிக்கவே இல்லை. காலைல அப்படி சாப்பிட்டா எப்படி பசிக்கும்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது :-) நானும் ஷங்கரும் பெங்களுரு புறப்படத் தயாரானோம் இருட்டுவதற்குள் வந்து சேர்ந்து விட வேண்டும் என்று. சரவணாவில் ஐஸ் கிரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு அருள், விக்னேஷிடம் இருந்து 3.10 க்கு விடை பெற்றோம். அவர்கள் இருவரும் சென்னைக்கு இரவு 10 மணிக்கு கிளம்புகின்றனர். ஓசூரை நெருங்கும் போது நன்றாக மழை வீசியது. முழுவதும் நனைந்து விட்டோம். மழையில் நடந்து இருக்கிறேன். நனைந்து கொண்டு பைக் ஓட்டியதும் நன்றாக தான் இருந்தது. ஓசூரைத் தாண்டினால் மழை சுத்தமாக இல்லை. பெங்களூரை நெருங்கும் போது எங்கள் உடை காய்ந்து இருந்தது.

மாலை 6.20 அம்மாவிற்குப் போன் செய்தேன். பெங்களுரு அடைந்து விட்டேன் என்றேன். அவர்களே பைக்கை ஷங்கர் வீட்டில் நிறுத்தி இருக்கியா என்றார்கள். ஆமாம், என்றேன். சிறிது நேரம் ஷங்கர் வீட்டில் இருந்து விட்டு 9 மணிக்கு என் ரூமிற்குப் புறப்பட்டேன்.

பயணம் ஆரம்பித்த நொடி முதல் இப்பொழுது வரை மனதில் இந்த வரிகள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது,

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்....

Monday, April 18, 2011

கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரத்தை
அறிந்தவளு(னு)க்கு
என் கண்ணீரின்
ஈரத்தை உணர
முடியவில்லை.
அதனால்,
என் மனதை
கல்லாக்கி விட்டேன்.
அப்படியாவது
என் மனம்
அவளு(னு)க்கு
புரியட்டும் என்று!