Tuesday, March 22, 2011
காவியக் காதல்
இதுவரை காவியம்
படைத்து இருக்கின்றன.
நாமாவது வாழ்ந்து
முதல் காவியம்
படைப்போம்.
வருவாயா????
Tuesday, March 01, 2011
பெங்களூர் - சென்னை - பெங்களூர்(கிறுக்கல்கள்)
25.02.2011
டாடா காண்பித்து விட்டு ஆபீசில் இருந்து 1.15 மணிக்கு புறப்பட்டாலும் வீட்டில் இருந்து புறப்பட 2.45 மணி ஆகிவிட்டது. மனதில் ஒரு சின்ன தடுமாற்றம் ஏற்பட்டதை என்னால் மறுக்க முடியாது. அம்மாவிடம் சொல்லவில்லை சென்னை போறதைப் பற்றி அதுவும் பைக்கில்....அப்புறம் என் கல்லூரி நண்பன் என்னை நம்பி வருகிறான். இருவரும் புறப்பட்டோம். பைக்கில் நெடுதூரப் பயணம் இதுவரை சென்றதில்லை. ஒரே வேகத்தில் 100 கி மீ ஓட்டினேன். வண்டியை நிறுத்தி ஒரு ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுத்தோம். அப்புறம் நானும் ஷங்கரும் மாறி மாறி வண்டி ஒட்டி 8.15 மணிக்கு சென்னையை அடைந்தோம். ஷங்கரை இன்னொரு கல்லூரி நண்பன் விக்னேஷ் வந்து அழைத்துச் செல்ல நான் நேராக சென்னையில் பணி புரிந்த என் பழைய ஆபீஸ் சென்றேன் மத்திய கைலாசில் இருந்து சோழிங்கநல்லூருக்கு. அங்கே சில நண்பர்களை சந்திக்க முடிந்தது. அவர்களுடன் சிறிது நேரம் மொக்கை போட்டு விட்டு விடை பெற்றேன் என் அலுவலக நண்பர்களுடன். வேளச்சேரி கிண்டி வழியாக அடையார் வந்து சேர்ந்தேன். என் கல்லூரி நண்பர்கள் பெசன்ட் நகர் பீச்சில் இருக்க அவர்களுடன் சேர்ந்து கொண்டேன் இரவு 11 மணிக்கு. அருண் ஐஸ் கிரீம், ப்ரூட் ஷாப் சென்றோம். அடையாரில் விக்னேஷ் வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 12.30.
26.02.2011
காலை எழும் போது மணி 10.30. கல்லூரி நண்பர்களுடன் மதியம் பைக்கில் மகாபலிபுரம் போவதாய் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது(மறுபடியும் பைக்கா!!!!). அந்த ட்ரிப் கிளம்புவதற்கு முன்பாக சைதையில் இருக்கும் நண்பரை(கார்த்திக்) சந்திக்கச் சென்றேன். மதிய உணவை அடையார் வசந்த பவனில் முடித்தேன் என் கல்லூரி நண்பர்களுடன். வேறு ஒரு நண்பரும் எங்களுடன் சேர்ந்து கொள்வதாக இருந்தது. அவரை அழைக்க விக்னேஷ் சென்று விட நான் கிண்டி சென்று என் அலுவலகத் தோழியை சந்தித்தேன். அந்த நண்பரை அழைத்துக் கொண்டு விக்னேஷ் வந்து விட நான், ஷங்கர், விக்னேஷ் மற்றும் அந்த நண்பர் ஆகிய நால்வரும் இரண்டு பைக்கில் புறப்பட்டோம். ECR ரோட்டில் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு, ஆசை என்று கூட சொல்லலாம்(இப்படி எல்லாம் கூட ஒரு கனவா, ஆசையா!!!!). போகும் வழியில் பீச் ஒன்று தெரிய வண்டியை நிறுத்தினோம். கடலில் ஒரு 30 நிமிடங்கள் ஆட்டம் போட்டு விட்டு மாமல்லபுரம் பயணத்தை தொடர்ந்தோம். 5.45 க்கு சென்றடைந்தோம். 6 மணி வரை தான் பூங்காவிற்குள் செல்ல அனுமதி என்பதால் டிக்கெட் தரவில்லை. நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம். மற்ற மூவரும் துப்பாக்கி சுடுதலில் பிஸியாக இருக்க நான் என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். மாங்காய், மிளகாய் பஜ்ஜி, பொறி, தர்பூசணி என்று அங்கே கிடைத்த எல்லாவற்றையும் சாப்பிட்டோம். 7 மணிக்கு புறப்பட்டோம். 8 மணி அடையார் வந்து சேரும் பொழுது. அதன் பின் மேலும் ஒரு அலுவலகத் தோழியை சந்திக்கச் சென்றேன். என் கல்லூரி நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பருடன் மந்தைவெளி வழியாக சத்யம் சென்றேன். சத்யம் ஸ்க்ரீனில் நான் பார்த்த முதல் திரைப்படம் - பயணம். நைட் ஷோவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது எனக்கு மட்டும் ஆச்சர்யமாக இருந்தது. படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன். குறிப்பாக shining star சீன்ஸ். அண்ணா சாலை வழியாக இரவு வீடு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு அனைவரும் உறங்கினோம்.
27.02.2011
காலை 7 மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து 8 மணிக்கு எழுந்தேன். 10.30 மணிக்கு என் பழைய அலுவலகத்தில் கிடைத்த நண்பர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் சேர்ந்து அபிராமி மால் சென்றேன். அபிராமி செல்வதும் இது தான் முதல் முறை. ஸ்ரீ அன்னையில் காவலன் பார்த்தோம். அதன் பின் Ampa Skywalk சென்றோம். எப்பொழுது அலுவலக நண்பர்களைச் சந்தித்தாலும் KFC கண்டிப்பாகச் செல்லுவோம். இந்த முறையும் தப்பவில்லை. ஆனால், வெறும் பாப்கார்ன் சிக்கன் மட்டுமே சாப்பிட முடிந்தது சில நண்பர்கள் சுத்த சைவம் என்பதால். இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை பெரிய திரையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போட்டியைக் காண அவ்வளவு கூட்டம் இருந்தது. மூன்றாவது மாடியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தோம். சச்சின் சதம் அடித்ததும் கீழே வந்துவிட்டோம். இந்தியா பேட்டிங் முழுவதையும் மிக்க ஆரவாரம் செய்து கொண்டு பார்த்தோம். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதன் பிறகு அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டோம். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு நான் அடையாறுக்கு புறப்பட்டேன். சென்னையை விட்டு நாளை பெங்களூருக்கு கிளம்ப வேண்டும் என்று நினைத்துப் பார்த்தேன். என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கின. என் கல்லூரி நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டனர் என் முகம் வாடிப் போய் இருப்பதை. இரவு உணவு அடையாரில் முடித்தோம். கிரிக்கெட்டில் இந்தியா தோற்று விடும் நிலைமையில் இருந்தது. மொபைலில் ஸ்கோர் பார்த்துக் கொண்டே இருந்தோம். திடீரென்று பார்த்தால் இந்தியா ஜெயித்து விடும் போல தோன்றவே வீட்டிற்கு விரைந்தோம். நாங்கள் மேட்ச் பார்க்க ஆரம்பித்த நேரமோ என்னவோ இந்தியா சொதப்பியது. ஆட்டம் டை யில் முடிந்தது இந்த சென்னை ட்ரிப்பிறகு மேலும் ஒரு சிறப்பைத் தந்தது.
சில நண்பர்களை நேரமின்மையால் சந்திக்க முடியாமல் போனது மிக வருத்தமாக இருந்தது.
28.02.2011
காலை 5.25 மணிக்கு புறப்பட்டோம். ஓசூர் வரும் வரை எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அதன் பிறகு தான் ஐயோ என்று இருந்தது. சென்னையை மிகவும் மிஸ் செய்கிறேன். சென்னையில் எனக்கு பிடித்த இடங்களை, என் நண்பர்களை. பெங்களூர் வந்து சேரும் போது மணி 10.15. இன்றைய தினம் முழுவதும் ஏதோ ஒரு கடுப்பு என்னுடன் இருந்து கொண்டே இருந்தது.
எல்லாவற்றையும் சொல்லி விட்டேனா???? இல்லை.... இந்த இரண்டு நாட்களும் சென்னையில் சுற்றாத இடங்கள் இல்லை. அதுவும் என் பைக்கில். ஏதோ ஒரு சந்தோசமும் ஒரு இனம் புரியாத வலியும் இருந்து கொண்டே இருந்தது. எப்பொழுதும் இந்த வலி இருக்கத் தானே போகிறது. பைக் ஓட்டும் போதெல்லாம் அவள் என்னுடன் இல்லை என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது. 27 ஆம் தேதி சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த வடபழனிக்கு சென்றேன். காலை 9 மணியில் இருந்து 10.15 மணி வரை அங்கே சுற்றி கொண்டே இருந்தேன் தனிமையில். இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருக்க வேண்டும் போல இருந்தது. எங்கே செல்கிறேன் என்று தெரியவில்லை அவள் நினைவுகள் என்னை அழைத்துச் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்று கொண்டிருந்தேன். கத்தி அழ வேண்டும் போல இருந்தது. வடபழனியை விட்டுக் கிளம்பவே மனசில்லை.
இந்தப் பயணம் முழுமையாக இருந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவேன். நான் எப்பொழுது சென்னை சென்றாலும் அது முழுமை அடையப் போவதில்லை. அவள் இல்லாத எந்தப் பயணமும் முழுமை பெறப் போவதில்லை என் வாழ்க்கைப் பயணத்தைப் போலவே.
என் அடுத்த பயணத்தை நோக்கி காத்து இருக்கிறேன்.
பயணங்கள் முடிவதில்லை....
Friday, February 25, 2011
பெங்களூர் - சென்னை. என் முதல் பயணம் (கிறுக்கல்கள்)
இதைப் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கருதுபவர்கள் இதோடு நிறுத்திக் கொண்டு தங்களுக்குப் பிடித்த வேலைகளை செய்யத் தொடங்கலாம். ஒரு சின்ன அறிவுரை "நேரம் பொன் போன்றது" என்பதால்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு முதன் முதலில் பயணம் செய்யப் போகிறேன். இவன் பொய் சொல்கிறான் பெங்களூரில் இருந்து சென்னைக்கு இவன் பல முறை சென்றுள்ளான் என்று என் நெருங்கிய நண்பர்கள் உண்மை பேசாலாம். ஆனால் நான் சொல்வதும் முற்றிலும் உண்மை. இன்று நான் செல்லும் பயணம் முற்றிலும் எனக்கு புதிதானது. எனவே என் முதல் பயணம் என்று குறிப்பிட்டேன். நிறைய புதிர் போட்டு குழப்புறானே என்று என்னைத் திட்ட வேண்டாம். 'பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு போல என்று வடிவேலு ஸ்டைலில் காமெடியும் செய்ய வேண்டாம். நானே சொல்லி விடுகிறேன் முதன் முதலாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு என் பைக்கில் செல்கிறேன்.
இதற்கு தான் இந்த பில்டப் கொடுத்தானா என்று நினைக்கிறீர்களா? ஆசை, கனவுகள் என்று இப்பொழுதெல்லாம் அதிகம் எதையும் என் மனதினுள் வைத்துக் கொள்வதில்லை. நானா விரும்பி எதையும் வாங்கவும் மாட்டேன். ஆனால், சமீபத்தில் நான் காத்திருந்து வாங்கியது என்னுடைய Honda Unicorn. பாவம் என் உடல் சுமையை சுமப்பது மட்டுமின்றி என் மனச் சுமையையும் இரண்டரை மாதங்களாக சுமக்க ஆரம்பித்திருக்கிறது அந்த ஜீவன் எனக்கு பைக்காக வாக்கப்பட்டதால்.
என்னுடன் என் கல்லூரி நண்பன் ஷங்கரும் வருகிறான். வேலை இருக்கிறது, அது இது என்று என்னன்னமோ காரணம் சொல்லி என்னிடம் இருந்து தப்பிக்கலாம் என்று பார்த்தான். ஆனால் நான் அவனை விடுவதாய் இல்லை. மற்ற ஊர்களுக்கு நான் இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் செல்ல மாட்டேன். ஏன், என் பிறந்த ஊருக்குக் கூட. சென்னை - A special place to me. கண்டிப்பாக ஏன் என்று தெரிந்திருக்கும் நான் வேற சொல்ல வேண்டுமா!
என் கல்லூரி நண்பர்கள் எத்தனையோ முறை சென்னை வரும் படி அழைத்த போதும் 'Chennai - Its too hot man!' என்று பீட்டர் விடுவது என் வழக்கம். இவன் என்ன சுவிஸ்லையா பொறந்தான் என்று சென்னை நண்பர்கள் என்னைத் திட்டாதீர்கள். என் கல்லூரி நண்பர்களிடம் ஏற்கனவே நிறைய வாங்கி கட்டிகொண்டேன். அவள் என் வாழ்வில் வரும் வரை சென்னை எனக்கு பிடிக்காத ஊராகத் தான் இருந்தது. இப்பொழுதெல்லாம் என் நண்பர்கள் அழைக்காமலே சென்னைக்கு செல்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் இரண்டாமிடம் சென்னைக்கு. முதல் இடம் அவள் பிறந்த ஊர் ஆயிற்றே :-)
அவளைப் பார்க்க சென்னைக்கு பைக்கில் செல்ல வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் அப்பொழுது பைக் என்னிடம் இல்லை. இதை ஆசை என்று கூட சொல்ல முடியாது பேராசை என்று தான் நான் சொல்லுவேன். ஏனென்றால் எனக்கு அப்பொழுது பைக் ஓட்டத் தெரியாதே. அவளை எப்படியாவது என் பின்னால் உட்கார வைத்து ஒரு 100 மீட்டர் தூரமாவது போக வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை காரணமாகத் தான் கல்லூரி நண்பர்களிடம் இரவல் வாங்கி பைக் ஓட்ட கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இப்பொழுது பைக்கும் வாங்கி விட்டேன். என்ன?, என் பைக் கொடுத்து வைக்கவில்லை அந்த தேவதையை ஏற்றிக் கொண்டு உலா வர.
பெங்களூர் - சென்னை பைக் பயணத்தை வைத்து ஏற்கனவே ஒரு கதை கூட எழுதி இருக்கிறேன். இங்கே படித்துப் பாருங்கள். இன்று நிஜமாகவே டீமிற்கு மெயில் அனுப்பப் போகிறேன் "Will be leaving by 1.30 today" என்று. ஒரே ஒரு வித்தியாசம் அந்தப் பதிவை எழுதும் போது இருந்த சந்தோஷம் இன்று இப்பொழுது மெயில் அனுப்பும் போது இருக்காது.
என் முதல் பயண அனுபவத்தை திரும்பி வந்து கிறுக்குகிறேன்.
Tata :-)
Monday, February 14, 2011
Friday, January 28, 2011
வரமா சாபமா
கோவை, காலை 10.57
'அங்கிள், நானும் உங்க பொண்ணு மீராவும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறோம்'
"நீங்க என்ன சாதி, மதம்?"
'மாசத்துக்கு ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறேன். காலம் முழுவதும் உங்க பொண்ண உங்களை விட பத்திரமா பார்த்துக்குவேன்'
"நீ என்ன சாதி, மதம்"
'உங்க சாதி மதத்தால மீராவுக்கு கிடைக்காத சந்தோஷம் என்னோட வாழ்ந்தா மட்டும் தான் கிடைக்கும்'
"அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு தேவை இல்ல. என் சாதி மதம் கவுரவம் இதெல்லாம் தான் எனக்கு முக்கியம். என் பொண்ணு சந்தோசமா வாழ்றதும் வாழாததும் அவளோட இஷ்டம்"
'எங்க மனச புரிஞ்சுக்கோங்க. ப்ளீஸ்'
"இதுக்கு மேல உங்கிட்ட பேச எனக்கு இஷ்டமில்லை. நீ கிளம்பலாம்"
மாலை 4.34
'மீரா, என்னடி சொல்ற???? நீ எடுத்திருக்கிறது ரொம்ப கோழைத்தனமான முடிவு'
"எனக்கு வேற வழி தெரியலை கார்த்திக். நீ வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ"
'உன்னைத் தவிர வேற யாரையும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது மீரா. நீ இல்லாத இந்த உலகத்துல நான் வாழுவேன்னு நினைக்கிறியா?'
"நம்மளால என்ன பண்ண முடியும்னு நினைக்கிற கார்த்திக்?"
'எங்கேயாவது ஓடி போயிடலாம் மீரா. வாழ்றதுக்கு தான் நான் உன்னை காதலிச்சேன். உன்னை பிணமா பார்க்க இல்ல. நீ மட்டும் தற்கொலைன்னு முடிவுக்கு போனா கண்டிப்பா நானும் உயிரோட இருக்க மாட்டேன்'
"நீ எதுக்கு சாகனும்? என்னைக் காதலிச்சது தவிர நீ வேற என்ன பாவம் பண்ண?"
'வா மீரா, நாம இந்த ஊர்ல இருக்க வேணாம்'
"எங்க அப்பவ எதிர்த்திட்டு ஓடிப் போய் வாழ முடியாது கார்த்திக். எப்படியாவது நம்மள தேடிப் பிடிச்சிடுவாங்க. எங்க அப்பா உன்னை உயிரோட விட மாட்டாரு. பெத்த மகளை மட்டும் கொல்ல மனசு வராம என்னை வேற எவனுக்காது கட்டி வச்சிடுவாரு. அவனோட வாழ்ந்திட்டு நான் தினம் தினம் சாகுறதுக்கு ஒரேடியா செத்துப் போறது எனக்கு பிடிச்சிருக்கு. நீ இல்லாம என்னால வாழ முடியாது கார்த்திக்"
'மீரா.... நம்மள ஒன்னா வாழ தான் விடமாட்டாங்க சாக விடுவாங்கல்ல'
"நீ எதுக்கு கார்த்திக்....."
'எப்ப நீ மட்டும் சாகனும்னு முடிவு பண்ணிட்டியோ அப்பவே நானும் முடிவு பண்ணிட்டேன் மீரா'
"கார்த்திக்...."
'நம்மளோட மரணம் ஒரு நாலு பெற்றோர்களையாவது திருத்துனா நம்ம மரணத்திற்கு வெற்றி தான் மீரா'
"இன்னைக்கு எல்லோருக்கும் காதலர் தினம். நம்ம காதலுக்கு மட்டும் நினைவு நாள் கார்த்திக்"
'....'
"கார்த்திக். நாம ரெண்டு பேரும் வாழ, காலமும் இருக்கு காதலும் இருக்கு. ஆனால், நாம தான் வாழாம சாகப் போறோம்"
'அடுத்த ஜென்மத்துல வாழலாம் மீரா'
மறுநாள் எங்கள் காதல் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெறும் செய்தியாய் மற்றும் மாறிப் போனது.
கடவுளிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். "அடுத்த பிறவியிலும் நீங்கள் மனிதர்களாகத் தான் பிறக்கப் போகிறீர்கள். உனது ஆசை என்ன? ஒன்றுக்கு மட்டுமே அனுமதி" என்றார் என்னிடம்.
'எல்லோருமே நல்லவங்களா இருக்கிற உலகத்துல எங்க காதல் பிறக்கணும்' என்றேன்.
"எல்லோருமே நல்லவங்களா இருக்கனுமா!!! புரியல தெளிவாகச் சொல்லு" என்றார்.
"இந்த உலகத்துல மனிதர்களுக்குள்ள எந்தப் பிரிவும் இருக்கக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோட உணர்வுகளை மதிக்கணும். பணத்தால நடக்கிற காரியம் எல்லாம் அன்பால நடக்கணும். அப்படி ஒரு உலகத்துல எங்கள் காதல் பிறக்கணும்' என்றேன்.
"உன்னோட ஆசையும் இது தானா மீரா?" என்று கடவுள் வினவ மீரா "ஆமாம்" என்றாள்.
கி பி 05-07-3403
கோவை, காலை 10.57
'அங்கிள், நானும் உங்க பொண்ணு மீராவும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறோம்' என்றேன்.
"மீரா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா மாப்ள. எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்" - மீராவின் அப்பா, என் மாமா.
'வேலை விஷயமா அமெரிக்காவுக்கு அடுத்த மாசம் போறேன் அங்கிள். அம்மாவும் அப்பாவும் அதுக்கப்புறம் வச்சுக்கலாம்ன்னு சொன்னாங்க'
"சரி மாப்ள. அப்பவே வச்சுக்கலாம். முதல் முறை நம்ம வீட்டுக்கு மாப்ள வந்திருக்காரு போய் குடிக்க ஏதாச்சும் எடுத்திட்டு வா மீரா"
"கார்த்திக் நீ தான் நல்லா காபி போடுவல்ல. உனக்கு போட்டுட்டு எனக்கும் சேர்த்து ஒரு கப் எடுத்திட்டு வர்றியா? கிச்சன் வலது பக்கம் இருக்கு" என்றாள் மீரா.
'கல்யாணத்துக்கு முன்னாடியும் நான் தான் சமையலா????' என்று நான் சொல்ல மாமா புன்னகைத்தார்.
'சரி மாமா நான் கிளம்புறேன். நீங்க, மீரா, அத்தை எல்லாரும் கண்டிப்பா சென்னைல எங்க வீட்டுக்கு வரணும் நான் வெளிநாடு கிளம்புறதுக்குள்ள' என்றேன்.
"கண்டிப்பா மாப்ள" என்றார்.
அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன்.
"கார்த்திக்"
'சொல்லு டி'
"கண்டிப்பா நீ இந்த onsite ட்ரிப் போனுமா"
'நான் ஆசைப்பட்டா போறேன். உனக்கே தெரியும்ல நான் ஏன் இப்ப போறேன்னு! நம்ம நாட்டை விட்டுப் போறதுக்கு யாரும் ஆசைப்படுறது இல்லை. செந்தில் போய் இரண்டு வருஷம் முடியப் போகுது. அவனும் ஒரு வருஷமா இந்தியா வரணும்ன்னு புலம்பிட்டே இருக்கான். நாம டீம் மீட்டிங்ல முடிவு பண்ண படி ஆறு மாசத்துக்கு மட்டும் தான் இனிமேல onsite ல இருக்கணும். அதுக்கப்புறம் போகத் தேவை இல்லை. நான் இப்ப போயிட்டு வந்திட்டா இனிமேல் உன்னை எப்பவும் பிரியப் போறது இல்லைல'
"புரியுது டா. ஆனாலும் உன்னைய பிரிஞ்சு ஆறு மாசம் எப்படி இருக்கிறது?"
'எப்ப ஆறு மாசம் முடியும்னு நாம ரெண்டு பேரும் காத்துக்கிட்டு இருக்கப் போறோம். காதல்ல காத்திருப்பும் ஒரு சுகம் தான'
"போடா.. எனக்கு கோபமா வருது. பேசுறதுக்கு தான் அது எல்லாம் நல்லா இருக்கும். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா"
'எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா'
"போஜனம் சேஸேஸி போன் மாட்லாடு" என்று அம்மா குரல் கேட்டது. "அம்மா ஏதோ சொல்றாங்க டா" என்றாள். 'ஐது நிமிஷன்லோ ஒஸ்துன்னா மா ' என்று அம்மாவிற்கு பதில் அளித்துவிட்டு' சாப்பிட்டு போன் பேச சொல்றாங்க டி' என்றேன் மீராவிடம்.
"கார்த்திக், வீட்ல எப்பவும் தெலுங்குல தான் பேசுவீங்களா"
'அப்படி எல்லாம் இல்லை டி. வீட்ல நான் மட்டும் இருந்த அம்மா தெலுங்குல பேசுவாங்க.தமிழ் அம்மாவுக்கு அவ்வளவு வேகமா பேசத் தெரியாது'
"நானும் தெலுங்கு கத்துக்கணும் டா. அப்ப தான் அம்மாவுக்கு என்னை சீக்கிரமா பிடிக்கும்"
'இதையே தான் அம்மாவும் சொன்னாங்க. தமிழ் நல்லா பேசக் கத்துக்கணும் அப்ப தான் மருமகள்ட்ட நிறைய பேச முடியும்னு'
"நீ தான் தெலுங்கு சொல்லிக் கொடுக்கனும் கார்த்திக்"
'அம்மா என்னன்னா தமிழ் சொல்லித்தான்னு சொல்றாங்க நீ தெலுங்கு. நடுவுல நான் தான் மாட்டிக்கிட்டேன்'
சிரித்தாள்.
"சரி கார்த்திக் சாப்பிட போ. நானும் சாப்பிட்டு நைட் கால் பண்றேன்"
இருவரும் அழைப்பை துண்டித்தோம்.
அடுத்த வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி:
"கார்த்திக் யாரு வந்திருக்கான்னு பாரு" - அம்மா
'யாரும்மா?'
'ஹே மீரா நீ இங்க.. என்கிட்ட கூட சொல்லாம திடீர்னு வந்திருக்க. ஊருக்கு போறேன்னு சொன்ன?'
"சேரன் எக்ஸ்பிரஸ் 10.10 க்கு தான் கார்த்திக். அதுக்கு முன்னால உன்னையும் அம்மாவையும் பார்த்துட்டு போலாம்னு தான்"
'இப்பவே மாமியாருக்கு ஐஸ் வைக்கிறியா?'
அம்மா எங்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். "நீங்க பேசிட்டு இருங்க நான் போய் சாப்பாடு ரெடி பண்றேன் நைட்டுக்கு" என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தார்கள்.
"கார்த்திக் நான் தெலுங்கு கத்துக்கிட்டு வர்றேன். நீ ஏதாச்சும் சொல்லு நான் அதை தெலுங்கு ல சொல்றேன்"
'"கார்த்திக், எனக்கு ஒரு கிஸ் வேணும்" இதை தெலுங்கு ல சொல்லு. தெலுங்கு ல தான் சொல்லனும்னு இல்ல. நீ உனக்கு தெரிஞ்ச எந்த மொழியிலனாலும் சொல்லு நான் பதில் சொல்லுவேன் பாரேன்'
"உனக்கு.... இரு அம்மாகிட்ட சொல்றேன். அம்மா...." என்று மீரா எனக்கே கேட்காதவாறு அம்மாவை கூப்பிட்டாள்.
'என்ன மீரா, அம்மாவை கூப்பிட பயமா இருக்கா. இரு நானே கூப்பிடுறேன்' என்று நான் வாயைத் திறக்க நொடிப்பொழுதில் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு ஓடிப் போய் நல்ல பிள்ளையாய் அவளிடத்தில் அமர்ந்திருந்தாள்.
"அம்மாவை இப்ப கூப்பிடு கார்த்திக்" என்றாள்.
'அம்மா....' எனக்கு வெறும் காற்று தான் வந்தது.
"கார்த்திக், வேற கேளு"
நான் மறு கன்னத்தை காண்பித்தேன்.
"ஐயோ கார்த்திக் இன்னைக்கு ஒன்னு போதும், தமிழ்ல நீ ஏதாச்சும் சொல்லு நான் தெலுங்கு ல சொல்றேன். கொஞ்சம் ஈஸியா சொல்லு"
'ஓ அதுவா..' சிறிது நேரம் யோசித்தேன் 'என்னை ஹாலுக்கு போகச் சொல்லு தெலுங்குல'
ஐந்து நிமிடம் யோசித்தாள்.
'என்ன டி ஊருக்கு போயிட்டு வந்து சொல்லிடுவியா?'
சிரித்தாள். எழுந்து ஹாலுக்குச் சென்றாள்.
'எங்க டி அங்க போற?'
"இக்கட ரா கார்த்திக்" என்றாள்
'அடிப்பாவி "என்னை ஹாலுக்கு போ" ன்னு சொல்லச் சொன்னா ஹால்ல போய் நின்னுட்டு "இங்க வா" அப்படின்னு சொல்ற. இப்படியே போச்சுன்னா இன்னும் ஒரு இருபதே வருசத்துல நீ தெலுங்கு கத்துக்கிடலாம்'
"போ லூசு" சிணுங்கினாள்.
"சாப்பிட வாங்க ரெண்டு பேரும்" என்று அழைத்தாள் அம்மா. மூவரும் சாப்பிட்டு முடித்தோம்.
'அம்மா, நான் போய் மீராவை ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்திடுறேன்'
"சரி டா. பார்த்து பத்திரமா போங்க. அவளை விட்டுட்டு உன் பிரண்ட்ஸ் வீடுன்னு சுத்திட்டு இருக்காத. வீட்டுக்கு வரணும்"
'சரிம்மா'
"சரி அத்தை நான் போயிட்டு வர்றேன்"
"சரி மீரா. அம்மா அப்பாவை ரொம்ப கேட்டதா சொல்லு"
'மீரா பைக்கா?? காரா??' என்று நான் கேட்க "எப்படி நல்லவன் மாதிரி கேட்குறான். கார்லயே போலாம் கார்த்திக்" என்றாள் மீரா.
நானும் மீராவும் பைக்கில் கிளம்பினோம். என் தோள்களை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.
"கார்த்திக், நான் ஊருக்கு போனுமா?"
'சரி போலையா. உன்னை ஹாஸ்டல்ல விட்டுடுறேன்'
"என்னைய ஸ்டேஷன்ல விட்டுட்டு போயிடாத கார்த்திக். என் கூடவே இரு"
'சரி உன்னோடவே இருக்கேன். உன்னைய தனியா விட்டுட்டு போகல'
இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். கார்த்திக் அம்மா கால் பண்றாங்க என்று போனை எடுத்தவள் அப்பொழுது தான் மணியைப் பார்த்தாள்.
"டேய் மணி 11 டா. இன்னுமா நாம ஸ்டேஷன் போய் சேரல. எங்க டா போயிட்டு இருக்கோம்? முதல்ல அம்மாகிட்ட பேசு. அப்புறம் கவனிச்சுகிறேன் உன்னை"
"கார்த்திக் எங்க டா இருக்க. இன்னும் வீட்டுக்கு வரலை" - அம்மா
'இல்லம்மா. மீரா தனியா ஊருக்கு போகப் பயந்தா. அதான் நானும்....'
"அவா கூடவே சேரன்ல ஏறிட்டியா????"
'இல்லம்மா. கோயம்பத்தூர்ல போய் அவளை விட்டுட்டு வந்திடுறேன் மா பைக்கில'
"கார்த்திக்!!!! உங்க அப்பா வரட்டும். அவர்ட்ட பேசிக்கிறேன்"
'என் செல்ல அம்மால்ல. கோச்சுக்காதம்மா. நாளைக்கு சாயந்திரம் வந்திடுவேன். எனக்கு பிடிச்ச மீன் குழம்பு பண்ணி வச்சிடு'
"உன்னைய ஒன்னும் சொல்றதுக்கில்ல. உங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன். என் மருமகளை பத்திரமா கூட்டிட்டு போடா" போனை கட் செய்தாள்.
"ஏன் கார்த்திக் என்னைய கோயம்பத்தூர் வரை விட வர்ற? என்னைய உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கா கார்த்திக்"
'இல்லடி உன் தங்கச்சிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அதான் பாத்துட்டு போலாம்னு'
"போடா எவ்வளோ பீல் பண்ணி கேட்டேன். எல்லாம் போச்சு" கோபித்துக் கொண்டாள்
'அவ்வளவு தூரம் வர்றேனே எனக்கு எதுவும் கிடையாதா?'
"என் தங்கச்சிய தான பார்க்க வர்ற அவகிட்டயே வாங்கிக்கோ"
'சரி' என்று மட்டும் சொல்லிவிட்டு அதன்பின் ஏதும் பேசவில்லை. NH 45ல் 100 KMPH இல் பைக் சென்று கொண்டிருந்தது.
"சாருக்கு கோபம் வந்திடுச்சு போல"
நான் எதுவும் பேசவில்லை.
"கார்த்திக், நீ வீட்ல கேட்டல்ல. அதை இப்ப தெலுங்குல சொல்ல ட்ரை பண்றேன். கரெக்டான்னு சொல்றியா?"
'ஹ்ம்ம்.... அந்த ஹாலுக்கு போ தான....சொல்லு'
"கார்த்திக் நாக்கு ஒக்க முத்து காவாளி"
'என்னது! வீட்ல மட்டும் தெரியாத மாதிரி நடிச்ச'
"அம்மா இருந்தாங்க. அதான்"
'அப்ப....'
பைக்கை நிறுத்தினேன்.
"கார்த்திக் நான் ஒன்னு தான் கேட்டேன் இதோட முப்பத்தி நாலு ஆச்சு"
'இதை ரெண்டாவது கொடுக்கும் போதே நீ சொல்லி இருக்கலாம்ல'
"...."
'ஆனாலும் டி, எது முக்கியமோ அதை எல்லாம் சீக்கிரமா தெலுங்கில கத்துக்கிட்ட'
"சீ போடா லூசு.." அந்த நிலவொளியில் அவள் வெட்கம் நட்சத்திரமாய் மின்னியது.
காலை ஆறு மணி. கோயம்பத்தூர் வந்து சேர்ந்தோம். சேரன் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது.
'உங்க அப்பா ஸ்டேஷன்க்கு வெளிய தான நிப்பாரு?'
"ஆமா கார்த்திக். நீ வீட்டுக்கு வாயேன்"
'இல்லடி சேரன் வந்ததும் நான் கிளம்புறேன். நீ ரயில்ல வந்ததாகவே இருக்கட்டும். மாமாட்ட கல்யாணத்துக்கு அப்புறமா இந்த உண்மைய சொல்லிக்கலாம்'
"கார்த்திக். ஒரு கன்னத்துல கொடுத்தா இன்னொரு கன்னத்துலயும் கொடுக்கணும்னு எங்கேயோ படிச்சு இருக்கேன்....அதனால"
'அதனால'
"அதனால"
'ரயில்வே ஸ்டேஷன் டி'
"என் புருசனுக்கு நான் கொடுக்கிறேன்"
....
'ஆனாலும்.... சரியான fraud டி நீ. பார்க்க மட்டும் ரொம்ப அமைதியா சாதுவான பொண்ணு மாதிரி முகத்தை வச்சுக்கோ'
"என்னைய ஆறு மாசம் தனியா விட்டுட்டு போறல்ல அதுக்குத் தான் இந்த முத்த தண்டனை"
அவள் சொல்லி முடிப்பதற்கும் சேரன் எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றில் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.
'நான் இந்த சன்டே கிளம்புறேன் டி US க்கு'
"நீயேன் இதை முன்னாலேயே சொல்லலை. நான் send off பண்ண சென்னைலயே இருந்து இருப்பேன்ல. ஏன்டா இப்படி பண்ண"
'நீ அழுறதை என்னால தாங்கிக்க முடியாது மா. அதான் சொல்லலை. நீ ரொம்ப கஷ்டப்படுவ. அம்மா அப்பா கூட இருந்தா கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ. அதான்'
"போ லூசு. எத்தனை மணிக்கு பிளைட்?"
'நாளைக்கு அதிகாலை நாலு மணிக்கு டா. நான் போய் சேர்ந்ததும் உனக்கு தான் முதல்ல போன் பண்ணுவேன். சரியா? என் புஜ்ஜு குட்டில கொஞ்சம் சிரிமா. ப்ளீஸ்'
எனக்காகச் சிரித்தாள்.
'சரி டி. நான் கிளம்புறேன். நீ உடம்பை பார்த்துக்கோ. அடிக்கடி வீட்டுக்கு போ. உன் அத்தையை கவனிச்சுக்கோ. அப்பா ஆபீஸ் ட்ரிப் ன்னு போயிடுறாரு. அம்மா தனியா இருப்பாங்க"
"நான் பாத்துக்கிறேன் டா. நீ பத்திரமா போயிட்டு வா. இருந்தாலும் நாளைக்கு உன்னை send off பண்ண நான் இல்லைன்னு கஷ்டமா இருக்கு டா"
'ப்ளீஸ் மா. ஆறு மாசம் சீக்கிரமா முடிஞ்சிடும். பிப்ரவரி 14 நான் உன்னை பார்க்க வரப் போறேன். இப்ப இருந்தே நாட்களை எண்ண ஆரம்பிச்சிட்டேன்'
பிரிய மனமில்லாமல் இருவரும் பிரிந்தோம். மீராவையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவள் கண்கள் கலங்கி இருந்தன. என் கண்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன????
US போய் சேர்ந்ததும் மீராவுக்கு போன் செய்தேன். 'என்ன டி இன்னும் உறங்காம இருக்க?'
"நான் இப்ப தான் டா வேலைக்கு வந்தேன்"
'என்ன டி சொல்ற?'
"ஆமா கார்த்திக், நான் இந்தியா டைம் ல வொர்க் பண்ணா உன்னோட நல்லா பேச முடியாது. அதான் நைட் ஷிப்ட் கேட்டு வாங்கிட்டேன் இந்த ஆறு மாசத்துக்கு. நீ வேலை பார்க்கிற நேரம் நானும் வேலைல இருப்பேன். அப்ப தான் மத்த நேரம் உங்கிட்ட நிம்மதியா பேச முடியும்"
'உன் உடம்புக்கு ஏதாச்சும் ஆகிடப் போது டி நைட் ஷிப்ட் வர்றதுனால'
"அதெல்லாம் ஒன்னு ஆகாது டா. நீ இருக்கல்ல என்னைப் பார்த்துக்க" சிரித்தாள்.
'உனக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா நான் இங்க ரொம்ப துடிச்சுப் போயிடுவேன் டி. நான் உன் பக்கத்துலயும் இல்ல. ஒரு வாரம் வந்து பாரு உடம்பு ஒத்து வரலைன்னா நார்மல் டைமிங் ல வரனும். சரியா?'
"சரிங்க புருஷா"
இருவரின் வேலைப் பளுவும் அதிகமாகிக் கொண்டே சென்றது. நாட்கள் போகப் போக மீரா என்னோடு பேசுவது குறைந்தது. தினமும் ஒரு மின்னஞ்சலாவது அனுப்பியவள், மெயில் அனுப்புவதையும் நிறுத்தி இருந்தாள்.
'ஏன் மீரா, இப்பொழுதெல்லாம் நீ சரியாகப் பேசுறதே இல்லை? உன் உடம்புக்கு எதுவும் இல்லைல? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?'
"எல்லாரும் நல்லா இருக்காங்க டா. உனக்கு வேலை ரொம்ப அதிகமாயிடுச்சுன்னு மேனேஜர் சொல்லிட்டு இருந்தாரு. வேலை முடியலன்னா நீ வர்றது லேட் ஆனாலும் ஆயிடும்னு சொன்னாரு. நீ சீக்கிரம் இந்தியா வரனும்ல. அதனால தான் என் காதலை சேர்த்து வச்சு உன்கிட்ட மொத்தமா காட்டுற நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன் டா. அந்த நாள் எப்ப வரும்ன்னு தான் தெரியலை"
'பிப்ரவரி ல தான் நான் வர்றேன் ல....'
"பிப்ரவரி ல நீ என்னை பார்க்க வருவல்ல?"
'என்னடி என்னமோ மாதிரி பேசிட்டு இருக்க? உனக்கு என்ன ஆச்சு? நான் சொன்ன மாதிரி பிப்ரவரி ல வருவேன் என் செல்லத்தை பார்க்க'
"வராம இருந்திடாத டா. உனக்காக நான் எப்பவும் காத்துக்கிட்டு இருப்பேன்"
'நானும் தான் டி. உன் கை பிடிக்கப் போற நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்'
சிரித்தாள்.
நாட்கள் மிகவும் மெதுவாகச் சென்றன. ஒரு வழியாக இந்தியா செல்லும் நாளும் வந்தது.
கி பி 14-02-3404
காலை 6 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன்.
"கார்த்திக், மீரா இதை உங்கிட்ட கொடுக்கச் சொன்னா" என்று ஒரு லெட்டரை என்னிடம் கொடுத்தாள் அம்மா.
"என் காதலுக்கு,
வந்திட்டியா கார்த்திக்? உன்கிட்ட இருந்து நான் ஒரு உண்மைய மறைச்சிட்டேன். US போறதை என்கிட்ட மறைச்சல்ல எனக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவேன்னு நானும் அதையே தான் டா பண்ணேன் நீ கஷ்டப் படக்கூடாதுன்னு. தப்பா? நான் உன்னை விட்டு நிரந்தரமா போகப் போறேன். ஒரு விதத்துல நீ இங்க இல்லாததும் நல்லது தான் டா. இங்க இருந்திருந்தா என்னைப் பார்க்கும் போதெல்லாம் நான் சாகப் போறேங்கிற நினைப்பு தான் உனக்கு இருந்திட்டே இருந்திருக்கும். என் செல்லத்துக்கு எப்பவும் என்னோட சிரிச்ச முகம் மட்டும் தான் ஞாபகம் இருக்கணும். நம்ம கல்யாணத்துக்கு தான் நாள் குறிப்பாங்கன்னு நினைச்சேன் ஆனால் என் சாவுக்கு நாள் குறிச்சிட்டாங்க. எனக்கு blood cancer இருக்காம். இருந்தாலும் நான் அதிர்ஷ்டக்காரி டா. உன் காதல் எனக்கு கிடைத்த காதலர் தினம் அன்னைக்கு தான் என்னோட நினைவு நாள். நான் என்ன டா பாவம் செய்தேன்? உன்கூட வாழணும்ன்னு அவ்வளவு ஆசையா இருக்கு. ஆனால், எனக்கு வாழ்றதுக்கு காலம் இல்லாம போச்சு டா. ஒரு நாளாவது உன் பொண்டாட்டியா வாழுற பாக்கியம் கூட எனக்கு கிடைக்கலைடா. என்னைப் பார்க்க வர வேணாம் கார்த்திக். நீ அழுதா என்னால தாங்கிக்க முடியாது டா.
இ ஜென்மன்லோ நீத்தோ லேனா ரோஜுலு அண்ணி சேர்ச்சி ஒச்சே ஜென்மன்லோ நீத்தோ நா ஜீவிதம் உண்டலாணி ஆஷிஷ்துன்னான்னு... நீ செய் பேட்டே தினானிக்காக காசுகொனி உன்னானு.....
முத்தங்களுடன்
உன் காதல்,
மீரா"
'இந்த ஜென்மத்தில் உன்னுடன் வாழாத நாட்களை எல்லாம் சேர்த்து இனிவரும் ஜென்மங்களில் வாழ வேண்டும். உன் கை கோர்க்கப் போகும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பேன்" என்பதை தெலுங்கில் எழுதி இருந்தாள் மீரா.
என் மீராவைப் பார்க்க புறப்பட்டேன். உலகமே எனக்கு இருட்டானது.
இதோ மீண்டும் என் பக்கத்தில் என் மீரா. "அடுத்த பிறவியிலும் நீங்கள் மனிதர்களாகத் தான் பிறக்கப் போகிறீர்கள். உங்கள் ஆசை என்ன?" - எங்களிடம் கேட்டார் கடவுள்.
எங்கள் இருவரின் காதலுக்கு மட்டும் கிடைத்த வரமா சாபமா என்று தெரியவில்லை....
Thursday, January 20, 2011
காதல் காலம்
எல்லோருக்கும் இறந்த காலம்,
நிகழ் காலம்,
எதிர் காலம்
என்று மூன்றிருக்க
எனக்கு மட்டும்
எல்லாமே ஒன்றாய்
'உன் காதல்' காலம்.
Tuesday, January 18, 2011
என் டைரி பக்கங்களில் சில....
'எப்படி டி இருக்க?' காலம் இப்படி ஒரு கேள்வியை உன்னிடம் கேட்க வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. 'பிரிவு' - வாழ்வில் எத்தனையோ பிரிவுகளை சந்தித்து இருக்கிறேன். பள்ளிப் படிப்பு முடிந்து நண்பர்களை பிரிந்தது, முதன் முதலாக அம்மாவை விட்டு பிரிந்து சென்று கல்லூரி விடுதியில் சேர்ந்தது, கல்லூரி முடிந்து மீண்டும் பிரிவு, பணியில் ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாததால் மீண்டும் மீண்டும் நட்பின் பிரிவு.... இப்படி பிரிவுகள் தான் வாழ்க்கை என்றாலும் அவை அனைத்தையும் காலத்தின் கட்டாயம் என்று என் மனம் ஏற்றுக் கொள்கிறது உன் காதல் தந்த பிரிவைத் தவிர. அவர்கள் அனைவருடனும் தினமும் அல்லது என்றோ ஒரு நாள் பேசுகிறேன் அல்லது பார்க்கிறேன். இப்படி டைரியில் மட்டும் 'எப்படி இருக்க' என்று விடை கிடைக்காத கேள்வியை கிறுக்கும் நிலைமை வந்தது இல்லையே...
உனக்கு தெரியுமா இப்பொழுதெல்லாம் தினமும் டைரி எழுதுவதில்லை. என் மனச் சுமையை என் டைரியும் ஏன் சுமக்க வேண்டும்? எழுதாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது உன் பிரிவு தரும் வலியை சரியாக என் டைரியிடமாவது சொல்ல எந்த மொழியிலும் எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை...
நீ ஆசைப்பட்ட மாதிரி பைக் வாங்கிட்டேன் லூசு. Honda unicorn. இதை உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு அந்த ஒரே காரணம் தான் இன்னைக்கு என் டைரியை திறந்தேன். பைக் வாங்கிட்டேங்கிற சந்தோசத்தை விட, நீ என் கூட இல்லையே இந்த சந்தோசத்தை பகிர்ந்துக்க அப்படிங்கிற கஷ்டம் தான் அதிகமா இருக்கு....
பைக் வாங்கியதும் உன்னைத் தான் மனசுல நினைத்தேன். உங்கிட்ட சொல்லிட்டே தான் முதல் முறை பைக்கை ஸ்டார்ட் பண்ணேன். ஓட்டினேன். இந்த சந்தோஷம் போதும்ல!!!! சத்தியமா போதாது பா. நீ பின்னால உட்காரனும் உன்கூட ஊரை சுற்றனும் என் பைக்ல.. போ டி.. என் வாழ்க்கையில் எல்லாம் எப்பவுமே கனவா தான் இருக்கு 'நீ என்னைக் காதலித்ததை' தவிர....
'Life goes on' ன்னு சொல்லுவ அடிக்கடி. 'Yes, Life is going on and on'... ஆனால், வாழ்க்கையில நல்லதோ கெட்டதோ ஏதாச்சும் ஒன்னு நடக்கும் போது நீ என் பக்கத்துல இல்லன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு லூசு.
08-12-2009
'ஆபீஸ் பஸ் இன்னைக்கு மிஸ் பண்ணிட்டேன். லோக்கல் பஸ்ல ஆபீஸ் வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு டி'
"பேசாம ஒரு பைக் வாங்கலாம்ல. நீ நினைச்ச நேரத்துக்கு ஆபீஸ் வரலாம் எந்த கஷ்டமும் இல்லாம"
'லைசென்ஸ் இன்னும் எடுக்கலை டி'
"முழுசா சொல்லு டா. உனக்கு பைக் ஓட்ட தெரியாது அதனால இன்னும் லைசென்ஸ் எடுக்கலைன்னு" சிரித்தாள்.
'பைக் ஏதோ ஓட்டுவேன். வண்டி வாங்கணும்ன்னு இதுவரை தோனலை. லைசென்ஸ் எடுக்கலை. ஆனால் எப்ப உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ அன்னைல இருந்து வாங்கனும்னு தோனுது'
"நல்லா வேளை டா சாமி நீயும் நானும் ஒரே ஊர்ல இல்லை"
'ஏன்?'
"ஒரே ஊர்ல மட்டும் இருந்திருந்தோம் என்னை பின்னால வச்சுக்கிட்டு சுத்துறதுக்காகவே எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நல்லா பைக் ஓட்டக் கத்துக்கிட்டு லைசென்ஸ் எடுதிருப்பல்ல.. உடனே ஒரு பைக்கையும் வாங்கிட்டு வந்து என் ஹாஸ்டல் முன்னால வந்து நின்னுருப்ப"
'இவ்வளவு நாளா இது எனக்கு தோனாம போயிடுச்சே. வர்றேன் டி உன் ஹாஸ்டலுக்கு. உன்னை என் பைக்கில தூக்கிட்டு போகப் போறேன் பாரு'
சிரித்தாள்.
'எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு டி'
"என்ன?"
'நீ என் பின்னால உட்கார்ந்து வர்ற மாதிரி உன்னோட வண்டியில உன் பின்னால உட்கார்ந்து நான் வரனும் உன்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு'
"ஆசையைப் பாரு" வெட்கத்தோடு சிணுங்கினாள்.
ஒரு காமெடி டி. உன்கிட்ட பேசிட்டு போன பிறகு நடந்துச்சு.
'மேடம் டூ வீலர் பார்கிங் ஸ்டிக்கர் வேணும்'
"வண்டி நம்பர் சொல்லுங்க சார்"
'வண்டி இனிமேல் தான் வாங்கணும்'
"சார், வண்டிய வாங்குங்க முதல்ல. அப்புறமா ஸ்டிக்கர் வாங்கிக்கோங்க"
'அசிங்கப்படேன் டி'
"உன் பைக் ஆர்வத்துக்கு அளவே இல்ல டா. தேவையா இப்படி அசிங்கப்படுறது" அவளின் சிரிப்பு நிற்கவே இல்லை.
மார்கழி மாதம் முதல் நாள். காலை எழுந்ததும் என் காதல் பொக்கிஷங்கள் அடங்கிய பேக்கை எடுத்தேன். உள்ளிருந்து ஒரு அட்டைப் பெட்டியை பிரித்தேன். குளிரைத் தாங்க ஒரு ஜாக்கெட் இருந்தது. கொடுக்கப்பட்ட தேதியைப் பார்த்தேன் 16-12-2009. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முதல் முறை இன்று தான் அதை அணியப் போகிறேன். எனக்கு அதை அணிய மனமில்லை. காரணம் ஒன்று தான் எங்கே அது பழதாகி விடுமோ என்று. உன்னிடம் இருந்து எனக்கு காதல் பரிசு எதுவும் இனி கிடைக்கப் போவது இல்லையே. நான் இப்பொழுது பாதுகாக்கும் சொத்தே நம் காதல் தான டி.
இருந்தாலும் அதை அணிய முடிவெடுத்தேன். அதை அணியும் போது ஏதோ நீ என்னுடன் இருப்பது போல ஒரு உணர்வு. நீ கொடுத்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டு இன்று தான் முதல் முதலாக என் பைக்கில் செல்கிறேன். பைக்கை ஸ்டார்ட் செய்தேன் நீ என் பின்னால் ஏறி அமர்ந்தது போல இருந்தது....
16-12-2009
'ஹே லூசு எங்க டீம் ல நாங்க சீக்ரட் ஏஞ்சல் கேம் விளையாடுறோம்'
"ஓ.. சரி நீ யாருக்கு கிப்ட் தரணும்?"
அவளிடம் இந்த கேள்வியைத் தான் எதிர்பார்த்தேன். அவள் கோபமாக கேட்பது போல இருந்தது.
அவளை மேலும் கோபப்படுத்தி பார்க்கலாம் என்று தோன்றியது எனக்கு.
'நான் எங்க டீம் ல சரண்யா க்கு தரணும் டி.. என்ன டி வாங்கித் தரலாம்'
"டேய் என்ன கொலைகாரியா மாத்திடாத. உனக்கு என்ன தைரியம் என்கிட்ட அவளுக்கு என்ன வாங்கித் தரலாம்னு கேட்ப?"
'கேம் தான டி. ஏன் கோச்சுக்கிற?'
"ஆமா கேம் ல. இதையே சாக்கா வச்சுக்கிட்டு உன் டீம் ல இருக்கிற எல்லாவளுக்கும் ஏதாச்சும் வாங்கிக்கொடு ராசா. இன்னைக்கு சாயங்காலம் என்னைய கூட்டிட்டு போ நானே செலக்ட் பண்ணித் தரேன். போதுமா?"
எனக்கு மனதுக்குள் சிரிப்பு தான் வந்தது.
மாலை நான்கு மணிக்கு எனக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாக கால் வந்தது. உள்ளே ஒரு அழகான கருப்பு ஜாக்கெட் இருந்தது. என் டீம் நண்பர்களிடம் காண்பித்தேன் மிகவும் அழகாக இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள்.
"உனக்கு இன்னைக்கு என்ன கிப்ட் டா கிடைச்சது?"
'என்னோட ஏஞ்சல் கிட்ட இருந்து எனக்கு ஜாக்கெட் கிடைச்சிருக்கு டி. நான் தான் இன்னும் வாங்கித் தரணும். என்னோட ஏஞ்சல் யாருன்னு தெரியலை டி. ரொம்ப நல்லா இருக்கு ஜாக்கெட். வாங்கித் தந்தது யாருன்னு தெரிஞ்சா அவங்களுக்கு ஏதாச்சும் பண்ணனும் டி'
"போ போடா ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் ஏதாச்சும் பண்ணு. போய் தங்கத்துல ஏதாவது வாங்கிக்கொடு சரியா. நான் ஒரு லூசு. எங்க டீம் லயும் இந்த கேம் இருக்கு ஆனால் உன்னைத் தவிர வேற யாருக்கும் எதுவும் வாங்கித் தரக் கூடாதுன்னு நான் அதுல சேரவே இல்லை. ஆனால் நீ...."
'கோபம் எப்ப மேடம் குறையும்?'
அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.
'நீ தான் இதை வாங்கினேன்னு எனக்கு தெரியும்'
"எப்படி?"
'நானும் அந்த கேம்ல சேரவே இல்லையே'
"ஏன்"
'எது பண்ணாலும் என் ஏஞ்சலுக்கு தான் பண்ணனும்'
"இப்ப தான் சந்தோசமா இருக்கு. போட்டுப் பார்த்தியா? கரெக்டா இருக்கா? வாங்கும் போது நான் போட்டுப் பார்த்து தான் வாங்கினேன். எனக்கு கொஞ்சம் பெருசா இருந்துச்சு அப்ப உனக்கு சரியா இருக்கும்னு எடுத்துட்டேன்"
'எனக்கு கரெக்டா இருக்கு டி. உலகத்துல எங்க தேடுனாலும் இப்படி ஒரு ஜாக்கெட் என்னால வாங்க முடியாது'
"ஏன்?"
'நீ முதல்ல போட்டுப் பார்த்ததுல்ல'
"நீ.... நீ.... போடா...." சிணுங்கினாள்.
சிறிது நேரத்தில் என் டீம் லீட் வந்தார்.
"ஜாக்கெட் நல்லா இருக்கு டா"
'என் ஏஞ்சல் வாங்கிக் கொடுத்தது அண்ணா....'
அவர் அதை போட்டுப் பார்க்க எடுக்க, 'அண்ணா ஏஞ்சல் வாங்கிக் கொடுத்ததை வேற யாரும் போட்டுப் பார்த்தா ஏஞ்சல் குற்றம் ஆயிடும்' என்றேன். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.
31-12-2010
நாளை புத்தாண்டு. சென்ற வருடம் உனக்கு தான் முதன் முதலில் வாழ்த்தினேன். எனக்கு கிடைத்த முதல் வாழ்த்தும் உன்னுடையது தான். இப்பொழுதெல்லாம் பண்டிகை, விழா வருகிறது என்றால் கோபம் தான் வருகிறது. யாருக்கும் வாழ்த்து சொல்லவும் பிடிக்கவில்லை வாழ்த்து பெறவும் விருப்பமில்லை. என் மொபைலை ஆப் செய்தேன். வாழ்த்தில் 'happy' வெறும் சொல்லளவில் மட்டுமே இருப்பதில் எனக்கு பிடிக்கவில்லை.
ஏன் 2009 முடிந்து 2010 பிறந்தது என்று இருக்கிறது இப்பொழுது 2011 ம் பிறக்கப் போகிறது. ஆனால் என் மனமோ 2009 வருடத்தில் நான் வாழ்ந்த வாழ்வை திரும்பி வாழவே ஆசைப்படுகிறது. அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்கும் பொழுது தான் மீண்டும் டைரி எழுதுவேன். "அப்படியென்றால் நீ எழுதப் போறதே இல்லையா" என்று என் டைரி கேட்டது. முற்றுப் பெறாத டைரி பக்கங்களுக்கு என் கண்கள் முற்றுப்புள்ளி வைத்தது கண்ணீரால்.

