Pages

Thursday, October 27, 2011

ஏதாச்சும் எழுதனும்ல!

பதிவு எழுதி ரொம்ப நாள் ஆயிடுச்சு. நானும் ஏதாச்சும் எழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன் வெறும் காத்து தான் வருது. சரி நம்மள பத்தி ஏதாச்சும் எழுதலாம்னு பார்த்தா இப்படி மொக்கையா வந்து நிக்குது. அப்ப மத்த பதிவெல்லாம் மொக்கை இல்லையான்னு யாரும் கேட்கப்புடாது :-)

பாட்டு, பைக், ஆபீஸ் :
முன்பு போல இப்பொழுது பாடல்கள் கேட்பதில் எந்த ஆர்வமும் இல்லை. முன்பெல்லாம் வேலை பார்க்கும் போதோ, பயணம் செய்யும் போதோ இல்லை வீட்டில் வெட்டியாக இருக்கும் போதோ பாடல்கள் கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்பொழுது சும்மா இருந்தாலும் பாடல்கள் கேட்கும் ஆர்வம் இல்லை. ஏன் இப்படி மாறிப் போனேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் தற்போது இரண்டு பாடல்களை மட்டும் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

1. யம்மா யம்மா காதல் பொன்னம்மா - ஏழாம் அறிவு. முன்பு உறக்கம் வரவில்லை என்றால் தென்றலே தென்றலே(காதல் தேசம்) பாட்டை கேட்டுக் கொண்டே தான் உறங்குவேன். இப்பொழுது இந்தப் பாடல் தான். Addicted to SPB sir's voice.

2. உன் பேரே தெரியாது - எங்கேயும் எப்போதும். இந்தப் பாடல் என்னைக் கவர்ந்த காரணம். எனக்கு தெரியல. இப்பொழுதெல்லாம் எனக்கே தெரியாம தான் எல்லாமே நடக்குது! இந்த வருடம் என்னை மிகவும் கவர்ந்த படம் இதுவாகத் தான் இருக்கும். படம் பார்க்கும் போதே கண்டிப்பாக இரண்டாவது முறை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுவும் சென்னையில் தான் பார்க்கணும் என்று. ஆனால், சென்னை போக வாய்ப்பு அமையவில்லை. அதனால் இதுவரை பார்கவில்லை ஒரு முறைக்கு மேல் :-(

நான் ஆபீஸ் போகும் போது மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல. Infosys இல் வேலை பார்க்கும் போது Hosur ரோட்டில் 9 கி.மீ நீண்ட flyover க்காக ரோட்டை பெயர்த்து வைத்து இருந்தனர். 2 வருடங்கள் ஆபீஸ் சென்று வருவதே செம கடியாக இருந்தது. நான் பேப்பர் போட்ட நேரமும் flyover திறந்த நேரமும் சரியாக இருந்தது. இப்பொழுது என் ஆபீஸ் வேறு இடத்தில் அமைந்துள்ளது. flyover construction, kaveri water pipeline என்று இந்த ரோட்டையும் ஒரு வருடமாக தோண்டிப் போட்டிருக்கின்றனர். மழை வந்துவிட்டால் சேறும் சகதியுமாக வண்டி ஓட்டுவதே மிக சிரமமாக இருக்கின்றது. அநேகமாக நான் இந்த ஆபீசில் பேப்பர் போட்டால் தான் இந்த flyover திறக்கப்படும் என்று நினைக்கிறேன். வேற ஆபீஸ் போய் அந்த ரோட்டையும் தோண்டிட்டா???? என்ன கொடுமை சரவணன் இது!

Infosys ல் ஆபீஸ் பஸ்ஸில் சென்று வந்தேன். ஏதாவது பாட்டு கேட்டுக் கொண்டே சென்றதால் ரொம்ப நேரம் பயணித்தது போல இருக்காது. இப்பொழுது பைக்கில் சென்று வருவதால் பாட்டு கேட்காமல் சென்று கொண்டிருந்தேன். ஆனால், சில நாட்களாக இந்த இரண்டு பாடல்களை கேட்டுக் கொண்டே பைக்கில் பயணிக்கிறேன். இந்தப் பாடல்களை கேட்காமல் இருக்க முடியவில்லை.

நான் பட்ட அவமானங்கள் : :-)
1. சில நாட்களுக்கு முன்பு நான் காய்ச்சலில் படுத்திருந்தேன். என் கல்லூரி நண்பனும், அவன் மேனேஜரும் தண்ணி அடிக்க வந்திருந்தனர். அவரை அண்ணா என்று தான் அழைப்போம் என் கல்லூரி நண்பன் அங்கே இருந்த plain cake ஐ எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். அதைப் பார்த்த அண்ணா,

அண்ணா : 'டேய் அவனே உடம்பு சரி இல்லைன்னு சாப்பிட வாங்கி வச்சு இருக்கான். அதைப் போய் நீ சாப்பிட்டுட்டு இருக்க. வை டா' என்று திட்டினார்.

நண்பன் : அண்ணா, நீங்க வேற அவன் காய்ச்சல்ல படுத்து இருக்கிறதுனால தான் சாப்பிட முடியாம மிச்சம் வச்சு இருக்கான். இல்லை எப்போவோ சாப்பிட்டு முடிச்சி இருப்பான்.

காய்ச்சலில் என்னால் பதிலுக்கு எந்த counter உம் தர முடியவில்லை.

2. கிரிக்கெட் ஆடி முடித்து விட்டு எல்லாரும் பேக்கரியில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தோம். மிகவும் களைப்பாக இருந்ததால் நான் 3 ஜூஸ் குடித்து முடித்து விட்டேன். அப்பொழுதும் தாகம் அடங்கிய பாடில்லை. நண்பன் ஒருவனிடம் இன்னொன்னு டா என்றேன். எத்தனை டா குடிப்ப, சரி என்ன ஜூஸ் வேணும் என்று கேட்டான்.

நான் பதிலுக்கு விலை ரொம்ப கம்மியா இருக்கணும், குடிக்க குடிக்க வந்துட்டே இருக்கணும், தீரவே கூடாது. அப்படி எதாச்சும் சொல்லு டா என்றேன்.

அவன் பதிலுக்கு 'அப்ப நீ வீட்டில போய் தண்ணி தான் குடிக்கணும்' என்றான்.

எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விட்டோம். படம் பார்த்து நிறைய அசிங்கப் படுத்துறாங்கப்பா!

தீபாவளி :
இந்த முறை வீட்டிற்கு போகவில்லை. பெங்களூரில் தான் இருந்தேன். இரண்டு மாதத்திற்கு முன்பு எடுத்த சட்டை ஒன்று அணியாமல் வைத்து இருந்தேன் அதை மட்டும் போட்டுக் கொண்டேன். பட்டாசு போட சுத்தமா விருப்பமில்லை. சிறுவயதில் பக்கத்து வீட்டினர் பல வகையான பட்டாசு போடும் போது நான் பெரியவனாகி இந்த மாதிரி பட்டாசு வாங்கணும் என்று நிறைய கனவு காண்பேன். இப்பொழுது வாங்க பணம் இருந்தும், மனம் இல்லை தீபாவளியைக் கொண்டாட. பேசாமல் சின்னப் பையனாவே இருந்து இருக்கலாம் என்று இப்பொழுதெல்லாம் நிறைய முறை யோசிக்கிறேன்.

சரி இதோட என் மொக்கையை நிறுத்திக்கிறேன். அப்புறம் என் blog பக்கம் வர்ற ரெண்டு மூணு பேரும் வராம போய்டுவீங்க:-)

சந்திப்போம் விரைவில் ....