Pages

Wednesday, September 29, 2010

காதல் பரிசு

எவ்வளவோ முகங்களை பார்க்கிறேன்
உன் முகம் பார்ப்பதோ
நிழற்படங்களில் மட்டுமே..

எத்தனையோ பேருடன் உரையாடுகிறேன்
உன் குரல் கேட்பதோ
திருட்டுத்தனமாய் பதிவு செய்த
நம் அலைபேசி
உரையாடல்களில் மட்டுமே..

உன்னுடன் வாழப் போகும்
கனவுகள் பல கண்டேன்
இப்பொழுது உன்னோடு வாழ்வது
கனவுகளில் மட்டுமே..

காலம் எனக்கு தந்தது
‘உன் காதல் என்ற பரிசை’
காதல் எனக்கு அளித்ததோ
‘உன் நினைவுகளில் வாழ்கின்ற
காலப் பரிசை’….

Tuesday, September 14, 2010

(செல்போன்) நினைவுகள்

என்னவளின் Nokia 6300, என் Sony Ericsson K750i மொபைல்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்...


அன்று :

மொபைல் போன் அப்பொழுது தான் பிரபலம் அடைய ஆரம்பித்திருந்தது. எங்கள் ஹாஸ்டலில் மொத்தம் நான்கு பேர் தான் மொபைல் வைத்து இருந்தனர். எங்கள் கேங்கில் குமாரிடம் மட்டும் இருந்தது வீட்டிற்கு மிகவும் செல்லப் பிள்ளை என்பதால். Nokia 1100 மாடல். அவனது பந்தாவிற்கு குறைவே இருக்காது. "ஜீவா, நம்ம ஹாஸ்டல்ல எங்கயுமே டவர் கிடைக்க மாட்டேங்குது டா. என்ன பண்ணலாம்" என்றான் குமார். "டேய் அதுக்கு பேரு டவர் இல்ல, சிக்னல் டா.. படிச்ச பையன் தான நீ' என்று கிண்டல் அடித்தேன். "நாம எப்ப டா போன் வாங்குவோம்?" என்று என்னிடம் கேட்டான் பிரேம். 'நான் என்னோட போனை பத்தி ஒரே ஒரு கனவு வச்சு இருக்கேன் டா. என்னோட முதல் மாச சம்பளத்துல தான் வாங்க வேண்டும்னு. எல்லாருகிட்டயும் Nokia தான் இருக்கு அதுனால நான் அது வாங்க மாட்டேன். வேற ஏதாச்சும் பிராண்ட் தான் வாங்குவேன். நினைச்ச நேரம் அம்மா அப்பாகிட்ட பேசத் தான போன், அதனால சிம்பிள் ஆக இருந்தா போதும் டா. நம்ம குமார் மாதிரி பந்தா பண்றதும் எனக்கு பிடிக்காது' என்றேன். "பார்க்கத் தான்டா போறேன் நீ புதுசா மொபைல் வாங்கினதும் என்னல்லாம் சீன் போடுறன்னு" என்றான் குமார். நல்லா படிச்சு சீக்கிரமா வேலைக்கு போகணும். முதல் மாதம் சம்பளம் வந்த உடனே மொபைல் வாங்க வேண்டும் என்றும் முடிவு எடுத்தேன்.

இன்று :

எல்லோரும் கடைசி செமஸ்டரில் ஐந்து பேப்பர் எழுத நான் மட்டும் நன்றாகப் படித்ததால் ஐந்து பிளஸ் ஏழு பன்னிரண்டு பேப்பர் எழுத வேண்டி எனக்கு விண்ணப்பம் வந்திருந்தது. கல்லூரி முடிந்து மூன்று மாதம் கழித்து தான் எனக்கு HCLல் வேலை கிடைத்தது. நண்பர்கள் அனைவருக்கும் மெயில் பண்ண மட்டுமே முடிந்தது. எப்ப வேலையில் சேருவோம், எப்ப முதல் மாதம் சம்பளம் வரும், வந்ததும் எப்ப மொபைல் வாங்குவோம் என்ற ஆவலில் காக்க ஆரம்பித்தேன் அக்டோபர் 21க்காக. அக்டோபர் மாதம் முடிந்தும் எனக்கு சம்பளம் வரவில்லை பதினைந்தாம் தேதிக்கு பின்னால் சேர்ந்ததால். மேலும் ஒரு மாதம் காக்க வேண்டி இருந்தது. 'உனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை ஜீவா!!!'

டிசம்பர் 7, 2006. 'வைஷ்ணவி, நீ தான் மொபைல் செலக்ட் பண்ணித் தரனும் இன்னைக்கு. ஒரே ஒரு கண்டிஷன் Nokia தவிர வேற எந்த மாடல்னாலும் செலக்ட் பண்ணித் தா ' என்று அவளை கடைக்கு அழைத்துச் சென்றேன். எல்லா மாடல்களும் எனக்கு காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு மாடலிலும் ஏதோ ஒரு குறை சொல்லிக் கொண்டே இருந்தேன் இது பார்க்க நல்லா இல்லை, இது ரொம்ப விலை ரொம்ப அதிகமா இருக்கு, இதுல கேமரா இல்லை, மியூசிக் பிளேயர் இல்லை, ரெண்டுமே இருக்கணும், கலர் நல்லா இல்லை என்று. நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் "Sony Ericsson K750i" வாங்குவது என்று முடிவு செய்தோம். "டேய், உங்கிட்ட பொண்ணுங்க தோத்துப் போய்டுவாங்க, இனிமேல் என்னைக்காது நான் தான் ஷாப்பிங் பண்ண ரொம்ப டைம் ஆக்குறேன்னு சொல்லு அப்புறம் தான் டா உனக்கு இருக்கு கச்சேரி" என்றாள். மொபைல் வாங்கியதும் சிம் போட்டு நான் செய்த முதல் கால், அனுப்பிய முதல் எஸ்எம்எஸ், கொடுத்த முதல் missed கால் எல்லாமே அவளுக்குத் தான். அதே போல எனக்கு வந்த முதல் கால், முதல் missed கால், முதல் மெசேஜ், நான் எடுத்த முதல் போட்டோ, வீடியோ எல்லாம் அவளுடையது தான்... மொபைலை தரையில் கூட வைக்காமல் பார்த்துக் கொண்டேன். என் நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்தனர் நான் மொபைலை பாதுகாக்கும் விதத்தைப் பார்த்து. 'உங்களுக்கெல்லாம் என் மொபைலை பார்த்து பொறாமை' என்று தான் அனைவரிடமும் சொல்லுவேன். எனக்குப் பிடித்த பாடல்கள், போட்டோக்கள் என்று நிறைய சேர்த்து வைத்தேன். யாரு கண்ணும் பட்டுவிடக் கூடாது என்று திருஷ்டி கூட கழிப்பேன். ஒரு நாள் தவறுதலாக நண்பன் ஒருவன் மொபைலை கீழே போட்டு விட பாத்ரூமில் போய் அழுதது தனிக் கதை.

அன்று :

எங்கள் கிளாஸ் படிப்பாளிகள் இரண்டு பேர், சென்னை Anna University இல் "Paper Presentation" இல் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கி இருந்தனர். கிளாஸ் முடிந்ததும் எங்கள் அனைவரையும் கேன்டீன் வரச் சொன்னார்கள் அவ்விருவரும். அவர்கள் இருவரைத் தவிர எங்கள் கிளாஸில் மிச்சம் இருக்கும் 61 பேரும் வெளுத்து வாங்கினோம். 'அண்ணா, சப்பாத்தி ஒரு ப்ளேட்' என்று கேட்க, அவரோ,"சார் நீங்க நாலாவதா வாங்கிட்டுப் போனீங்களே அதோட சப்பாத்தி ஓவர் ஆயிடுச்சு" என்று அவமானப் படுத்தி விட்டார். நான் சாப்பிட்டுக் கொண்டே ப்ரேமிடம் கேட்டேன், 'மச்சான் இதுக்கெல்லாமா ட்ரீட் தருவாங்க' என்று. 'எதுக்கு தந்தா என்ன டா நமக்கு? அடுத்த ப்ளேட் என்ன சொல்லலாம்னு யோசி" என்றான். 'நம்ம கேன்டீன்ல எந்த ஜூஸ் விலை ரொம்ப அதிகமோ அதை இன்னைக்கு குடிச்சிடனும் டா' என்றேன்.

இன்று :

போன் வாங்கியதற்கு என் நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுத்தேன். என் மொபைலில் போட்டோஸ் எடுத்துக் கொண்டோம். "மச்சி போன் ரொம்ப சூப்பரா இருக்கு டா" என்று பாலு சொல்ல, 'நல்லா சாப்பிடு மச்சி' என்று இரண்டு லெக் பீஸ்களை எடுத்து வைத்தேன் அவனுக்கு. ப்ரேம், "மச்சி சிக்கன், மட்டன் போர் அடிச்சுப் போயிடுச்சு. prawn தான் இந்த ரெஸ்டாரன்ட்ல ரொம்ப காஸ்ட்லி, இன்னைக்கு நாம சாப்பிடுறதுல prawn நமக்கு வெறுத்தே போயிடனும்' என்று செந்திலிடம் மெதுவாகச் சொன்னது என் காதில் விழாமல் இல்லை. செந்திலும் உடனே "prawnல என்னன்ன இருக்கோ அது எல்லாத்துலயும் ஒரு ப்ளேட்" என்று ஆர்டர் கொடுத்தான் "prawn சாப்பிட்டு பாரு டா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்" என்று என்னிடம் கூறிக் கொண்டே.

அன்று :

"ஜீவா மொபைல வச்சு என்ன டா பண்ணிட்டு இருக்க?" கேட்டான் குமார். 'snake கேம் விளையாடிட்டு இருக்கேன் டா' என்றேன். 'கேம் விளையாடாத டா, பேட்டரி நிக்குறது இல்ல. நிறையா சாப்ட்வேர் ப்ராப்ளம் வேற வருமாம். அப்பா ஆசையா வாங்கி கொடுத்த போன் மச்சி, ஏதாச்சும் பிரச்சினை வந்திடுச்சுன்னா நான் ரொம்ப பீல் பண்ணுவேன்" என்றான். 'சாரி டா' என்றேன். 'அப்படி என்ன பீலிங்க்ஸ்?' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன். பின்னொரு நாள் 'குமார், உன் மொபைல் தர்றியா என் ஸ்கூல் ப்ரெண்டுக்கு மெசேஜ் அனுப்பிட்டு தர்றேன்' என்றேன். "ஜீவா மெசேஜ் ஒன்னுக்கு 50 பைசா டா, அதனால 4 மெசேஜ் மட்டும் அனுப்பிக்கோ. சரியா?" என்றான். 'சரிடா. தேங்க்ஸ்' என்றேன். என் பள்ளித் தோழனுடன் பேச வேண்டியதை எல்லாம் 4 மெசேஜ்களில் பேச வேண்டிய கட்டாயம். முதல் முறை டைப் பண்ணும் போது மெசேஜ் சைஸ் அளவுக்கு அதிகமாக இருந்தது. மூன்று மெசேஜ்களாக டைப் அடித்து இருந்தேன். இப்படியே போனா 12 மெசேஜ் ஆயிடுமே என்று கஷ்டப்பட்டு தேவை இல்லாத வார்த்தைகளை எடுத்துவிட்டு வார்த்தைகளை சுருக்கி விட்டு ஒரு மெசேஜ் ஆக மாற்றினேன். எப்படியோ நான் அவனிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் நான்கு மெசேஜ்களில் சொல்லி முடித்தேன். 'தேங்க்ஸ் குமார்' என்று மொபைலை அவனிடம் கொடுத்தேன். மொபைலை வாங்கியவன் balance செக் பண்ணியது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது. 'மச்சான், நான் வேணா நான் அனுப்புற மெசேஜ்க்கு காசு தந்திடவா?' என்று நூறாவது முறையாக கேட்டேன் என்றேன். "நீயா, எப்ப டா நல்லவனா மாறின? இந்த மொபைலுக்கு டாப் அப் போட்ட பணத்தை சேர்த்து வச்சு இருந்தா எங்க அப்பா அடுத்த செமஸ்டர் பீஸ் கட்டி இருப்பாரு டா" என்றான்.

இன்று :

ஏப்ரல் 27 2009. வைஷ்ணவிக்கு முப்பத்தி நான்காவது முறையாக கால் செய்து முடித்தேன். சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு இருக்கிறது என்ற பதிலே திரும்பத் திரும்ப கிடைத்தது. அவளுக்கு மெயில் அனுப்பினேன் 'எங்க இருக்க? மொபைலுக்கு என்ன ஆச்சு?' என்று. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரலை. ஆபீஸில் எந்த வேலையும் ஓடவில்லை. இரவு 7 மணிக்கு அவள் வீட்டு நம்பரில் இருந்து போன் வந்தது. 'வைஷு லூசு எருமை பண்ணி எங்கடி போய் தொலைஞ்ச, மொபைல்ல ஏன் ஆப் பண்ணி வைச்ச? எப்படி பதறிப் போயிட்டேன் தெரியுமா?' என்றேன். அவள் பதில் ஏதும் பேசவில்லை. 'பேசுடி' என்றேன். "ஜீவா, என்னோட போன்.. " அவளுடைய குரல் தடுமாறியது. 'என்ன டி ஆச்சு போனுக்கு?' என்றேன். "போன் தொலைஞ்சிடுச்சு. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ரொம்ப ஆசையா வாங்கின மொபைல் தெரியுமா? நீயே பார்த்து இருக்குல்ல புதுசு மாதிரியே வச்சு இருப்பேன். Nokia 6300 மாடல். அந்த மொபைல் எனக்கு ரொம்ப பிடிக்க இன்னொரு காரணம் உங்கிட்ட என்னோட காதலை சொன்னது அந்த போன்ல தான். இன்னைக்கு ஆபீஸ் போகப் பிடிக்கலை. ஒரே அழுகையா வந்தது அதான் வீட்லயே இருந்துட்டேன்" சிறு குழந்தையைப் போல அழ ஆரம்பித்தாள். 'இங்க பாருடி செல்லம், என் கண்ணுல்ல, இப்ப அழக் கூடாது. உன் நிலைமை புரியுதுமா. உன்னோட போன் உன்கிட்டே திரும்ப வந்திடும் பாரு' என்று ஆறுதல் படுத்த முயற்சித்தேன். பதில் இல்லை அவளிடம் இருந்து. 'சரி இதுக்கு பேரு தான் ரூம் போட்டு அழுறதா?' என்றேன். சிரித்தாள்.

மறுநாள், 'புது மொபைல் வாங்கிற ஐடியாவே இல்லையா?' என்றேன். "வேற மொபைல் வாங்க இஷ்டமே இல்லை ஜீவா. என்ன தான் புது மொபைல் வாங்கினாலும் என்னோட அந்த மொபைல் மாதிரி வராது" என்றாள். 'உன் கூட நான் எப்படி பேசுறது? வா இன்னைக்கு கடைக்குப் போகலாம். உன்னோட பழைய மொபைல் மாதிரி இல்லைன்னாலும் நான் வாங்கித் தர்றதுனால கொஞ்சம் ஸ்பெஸலா இருக்கும்' என்றேன். "சாரி ஜீவா, அம்மா இன்னைக்கு நைட் வரும் போது மொபைல் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிருக்காங்க. Latest 3G மாடல் பார்த்து வச்சு இருக்கிறதா சொன்னாங்க" என்றாள். எனக்கு கோபம் வந்தது இருந்தாலும் அம்மா தானே வாங்கித் தருகிறார்கள் என்று பொறுத்துக் கொண்டேன். அவளை கடைக்கு கூட்டிட்டு போய் அவளுக்கு பிடித்த மாதிரி ஒரு மொபைல் வாங்கித் தர வேண்டும் என்று நான் கட்டி வைத்து இருந்த கனவுக் கோட்டை இடிந்ததை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 'ஹ்ம்ம் சரிடி. மொபைல் வந்ததும் எனக்கு தான் முதல்ல கால் பண்ணனும்' என்றேன்.

அன்று :

மதியம் 12.30 மணி. 'அம்மா பசிக்குது. அம்மா பசிக்குது சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா மா' என்று கத்திக் கொண்டே இருந்தேன். "டேய் ஏன்டா இப்படி கத்தி மானத்தை வாங்குற? என்னால நிம்மதியா டிவி பார்க்க முடியல. இப்படி கத்துறதுக்கு பதிலா ஒவ்வொரு வீடா போய் அம்மா பசிக்குது, அம்மா பசிக்குது ன்னு பாட்டு பாடு சீக்கிரம் உனக்கு சோறாவது கிடைக்கும்" என்றாள் என் தங்கை ஜோ . சமையலறையில் இருந்து அம்மா "என்னடி உனக்கு அவனை பார்த்தா கிண்டலா போச்சா? என் பிள்ளை பசி தாங்க மாட்டான்டி. கொஞ்சம் பொறுத்துக்கோ கண்ணு" என்றாள் என் அம்மா.

இன்று :

நைட் ரூமில் சாப்பிட ஆரம்பித்தோம். 'நைட் பத்து மணிக்கு கால் பண்றேன்னு சொன்னேனே! இன்னும் 2 நிமிஷம் தான இருக்கு'. எவ்வளவு வேகமாக சாப்பிட முடியுமோ அவ்வளவு வேகமாக சாப்பிட்டு முடித்து போனை எடுத்தேன் . "மச்சி இந்த உலகத்துலேயே போனை வச்சு உயிர் வாழுறவன் நம்ம ஜீவா மட்டும் தான் டா" என்று கமெண்ட் அடித்தான். 'நீயும் இப்படி அவசர அவசரமா சாப்பிட நாள் சீக்கிரம் வரும் டா' என்று கூறிக் கொண்டே மாடிக்கு ஓடினேன். "சாப்பிட்டு முடிச்சாச்சா?" என்றாள் வைஷ்ணவி. 'சாப்பிட்டேன்' என்றேன். "இன்னைக்கும் அவசர அவசரமா சாப்பிட்டியா? போய் நல்லா சாப்பிட்டு வா. அப்ப தான் நான் பேசுவேன்" என்று கோபித்துக் கொண்டாள். 'வைஷு, 'orkutல "Five things you can't live without" என்று ஒரு கேள்வி இருக்கும் தெரியுமா? அதுக்கு என்னோட பதில் போன்ல உன்கூட பேசாம இருக்கிறது' ன்னு தான் இருக்கும் என்றேன். சிரித்தாள்.

சில நாட்களுக்குப் பிறகு, 'டேய் KFC ல இருந்து எப்படா சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க? எப்ப முடிச்சீங்க?' என்றேன் ப்ரேமிடமும் பாலுவிடமும். "இல்ல மச்சி, உன்னைக் கூப்பிடலாம்னு தோனுச்சு, அப்புறம் உனக்கு சிக்கனா போனா ன்னு கேட்டா நீ என்ன பதில் சொல்லுவன்னு யோசிச்சுப் பார்த்தோம். உன் பதில் கண்டிப்பா சிக்கன் வேண்டாம் ன்னு தான் இருக்கும் அதான் கூப்பிடலை" என்றான் பாலு. அவன் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை தான். என் உலகமே அந்த மொபைல் போன் தான் என்று மாறிப் போனது.

அன்று :

ராகம் தியேட்டர். சிவகாசி படம் பார்க்க நண்பர்களுடன் சென்று இருந்தேன். பிரேமும் அருளும் வர நேரம் ஆகி விட்டது. 'டேய் படம் ஆரம்பிச்சு 5 நிமிஷம் ஆயிடுச்சு. 'இப்படி லேட்டா தான் வருவீங்கன்னா அடுத்து உங்களுக்கு டிக்கெட் எடுக்க மாட்டேன், நீங்களே எடுத்துட்டு வந்துக்கோங்க' என்றேன். "சாரி மச்சி சாப்பிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. நீ இரண்டாவது தடவை தான டா பார்க்கிற. அப்புறம் என்ன?" என்றான் அருள். 'எப்ப பாரு சாப்பிடுறதுலையே இருங்க டா' என்றேன். "டேய் ஜீவா தயவு செய்து நீ மட்டும் சாப்பாட பத்தி பேசாத" என்றான் சங்கர்.

இன்று :

PVR cinemas. அவதார் முதல் நாள் முதல் ஷோ. நண்பர்களுடன் சென்று இருந்தேன். படம் பார்ப்பதை விட வைஷ்ணவியிடம் பேசுவது தான் எனக்கு பிடித்து இருந்தது. அவளிடம் பேசிக் கொண்டு இருந்தேன். இன்டர்வலில் என் நண்பர்ள் பட்டாளமே வெளியே வந்தது. என்னைப் பார்த்த அருள் "டேய் இவனும் நம்மளோட படம் பார்க்க வந்து இருந்தானா?" என்று தெரியாத மாதிரி கேட்டான் மற்ற நண்பர்களிடம். "டேய் அடுத்த பாதியாது வருவியா?" என்று சங்கர் கேட்க 'வாங்க டா உள்ள போகலாம்' என்று அவர்களுடன் இரண்டாவது பாதி பார்க்க ஆரம்பித்தேன். 'இந்த கொசுங்க தொல்லை தாங்க முடியலை. சொல்லுடி' என்று அவளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி என் அடுத்த பாதியை தொடர்ந்தேன்.

அன்று :

நானும் என் நண்பர்கள் நாலு பேரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தியா vs பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் லைவ். அருள் வந்து "டேய் நாளைக்கு செமஸ்டர் டா. ஜீவா உனக்கு Thermodynamics அரியர் பேப்பர் வேற மதியம் இருக்கு, படிக்கலையா?" என்றான். 'இந்தா கிளம்பிடுவோம் மச்சி. டிராவிட் 120 ரன் ல இருக்கான். 200 அடிச்சதும் படிக்க ஆரம்பிச்சிடுவோம்' என்றேன். "டேய் டெஸ்ட் மேட்ச் தான.. Hightlights பார்த்துக்கோங்க டா" என்றான். 'இல்லை மச்சி, லைவ்வா பார்க்கிற அந்த பீல் கிடைக்காது. நீ போய் படி, அப்ப தான் எங்களுக்கு சொல்லித் தர முடியும்' என்று சொல்லிவிட்டு நாங்கள் அனைவரும் மேட்சை தொடர்ந்தோம்.

இன்று :

சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் க்கும் 20-20 மேட்ச் நடந்து கொண்டிருந்தது. முரளி விஜய் வெளுத்துக் கொண்டிருந்தான். என்னவளிடம் இருந்து கால் வந்தது. போனை எடுத்தேன். அருள் "டேய் மேட்ச் பார்க்கலை?" என்று கேட்டான். 'Hightlights பார்த்துக்கிறேன் மச்சி' என்றேன். "டேய் புல் மேட்ச்சும் Hightlights மாதிரி தான்டா இருக்கு" என்று கிண்டல் அடித்தான். 'சொல்லு டி' என்றேன். "மேட்ச் பார்க்கலையா? உனக்கு பிடிச்ச டீமாச்சே" என்றாள். 'உன்கூட பேசுறதை விட வேற எதுவும் முக்கியம் இல்லடி. ஒன்னு சொல்லட்டுமா வைஷு, இந்த போன்லயே உன்கூட குடும்பம் நடத்தனும்னு சொன்னா கூட நான் ஒத்துக்குவேன் டி' என்றேன். "என்கூட பேசுறதுல அப்படி என்ன டா இருக்கு?" என்றாள். எனக்கு அதற்கு மட்டும் பதில் தெரியவில்லை.

அன்று :

ஜூன் 1, 2006. நேற்றோடு எங்கள் கல்லூரி முடிந்து விட்டது. உடனே கிளம்ப மனம் இல்லாமல் நண்பர்கள் அனைவரும், கூட ஒரு நாள் ஹாஸ்டலில் தங்கிவிட்டு கிளம்பத் தயாரானோம். ஒவ்வொருத்தரிடமும் அவர்களுடைய போன் நம்பரை வாங்கினேன். ஒவ்வொருத்தராக கிளம்ப கிளம்ப எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அழ ஆரம்பித்து விட்டேன். யாரெல்லாம் அழ மாட்டார்கள் என்று நான் கணித்து வைத்து இருந்தேனோ அவர்களும் சிறு குழந்தை போல கண் கலங்க ஆரம்பித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் நெருங்கிய நண்பர்களும் கிளம்ப நான் கதற ஆரம்பித்து விட்டேன். என் நான்கு வருட ரூம்மேட் ராஜா என்னிடம் வந்து "டேய் அழாத டா. அப்புறம் நானும் அழ ஆரம்பிச்சிடுவேன். நாம பிரிஞ்சு போல டா. கண்டிப்பா அடிக்கடி ஒவ்வொருத்தரை பார்த்துக்குவோம். சென்னைலயோ இல்ல பெங்களுர்லயோ தான் இருக்கப் போறோம் எல்லோருமே. மறுபடியும் நாம ரூம்மேட்ஸ் தான் டா" என்றான். என்னிடம் அவன் சமாதானம் செய்தாலும் அவன் கண்களில் நீர் இருக்கத் தான் செய்தது. கல்லூரி நாட்கள் திரும்ப கிடைக்கப் போறது இல்லையே. நினைவுகள் மட்டும் தான் இருக்கும். புது உலகம், நிறைய பொறுப்புகள். எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்??

இன்று :

மார்ச் 11,2010.

"ஜீவா நீ என்னை மறந்திடு. எனக்கு பிடிச்ச மொபைல் போனும் என்கிட்ட இருந்து போயிடுச்சு. இப்ப என் வாழ்கையும். புதுசா ஒரு மொபைல் வாங்கித் தந்த மாதிரி என்னோட வாழ்க்கையையும் முடிவு பண்றது என்னோட அம்மா தான். என்னால அவங்கள எதிர்த்து ஏதும் பண்ண முடியலை"

'நான் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியுமா வைஷு? மொபைல் போனை தொலைச்சிட்டு அவ்வளவு கஷ்டப்பட்ட இப்ப என்னையும் தொலைச்சிட்டு எப்படி இருப்ப?'

"தெரியலை. இதை எல்லாம் பார்க்கக் கூடாதுன்னு தான் என் மொபைல் அப்பவே தொலைஞ்சு போயிடுச்சுன்னு நினைக்கிறேன். அதுவும் நல்லதுக்கு தான். இதே மாதிரி நடக்கிற எல்லாமே நல்லதுக்கு தான் ஜீவா. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். கொஞ்ச காலம் போச்சுன்னா உன்னோட மனசு மாறும். உன் நல் மனசுக்கு என்னைய விட ஒரு நல்ல பொண்ணு உனக்கு கிடைப்பா ஜீவா.." அழ ஆரம்பித்தாள்.

அந்த நிமிடம் எனக்கு செத்துப் போய் விட வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை அப்பொழுது. என்னுடைய காதலைப் போலவே என் போனும் உடைந்து போய் தரையில் கிடந்தது. அழுது கொண்டே உடைந்து போன பாகங்களை பொறுக்க ஆரம்பித்தேன்.

April 27, 2010. வடபழனி Univercell ஷோ ரூம்.

"சார் அந்த ரேட்டுக்கு இந்த மாடல் நீங்க வாங்கிக்கலாம். புது மாடல். நீங்க கேட்குற மாடல் இப்ப production ஸ்டாப் பண்ணிட்டாங்க. இது பார்க்கிறீங்களா?" என்றார் சேல்ஸ்மேன்.

'எனக்கு அந்த மாடல் தான் வேணும். கிடைக்குமா கிடைக்காதா அண்ணா?' என்றேன்.

"நைட் 7 மணிக்கு வர்றீங்களா சார். எங்களோட இன்னொரு ஷோ ரூம்ல ஒரு பீஸ் இருக்காம். பையன் போய் எடுத்திட்டு வரணும்" என்றார்.

இரவு 7.34 மணி. 'உனக்கு தெரியுமா வைஷு.. நான் என் காலேஜ் டேஸ்ல எவ்வளவு சந்தோசமா இருந்தேனோ அதை விட சந்தோசத்தையும் அன்பையும் உணர்ந்தேன் நீ என்னை காதலிக் ஆரம்பிச்ச பிறகு. ஆனால் இப்ப உன்னோட காதலுக்குப் பதிலா உன் நினைவுகள் மட்டும் தான் என்கிட்ட இருக்கு. உன்னோட நினைவுகள் என்னைக்குமே குறையப் போறது இல்லை வைஷ்ணவி. இப்ப வாங்கி இருக்கிற இந்த போனும் உன்னை ஞாபகப் படுத்திட்டே இருக்கும். நீ தொலைச்ச போன் எங்கயும் போகல. என்கிட்ட தான் இருக்குன்னு நினைச்சுக்கோ வைஷ்ணவி. என்னோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் வெறும் நினைவுகளா மட்டும் தான் இருக்கப் போறாங்களோன்னு பயந்தேன் ஆனால் என்னை விட்டு பிரியாத மாதிரி எனக்கு வரம் கிடைச்சது. அதே மாதிரி காலம் முழுவதும் நீ என்னோட இருக்கிற வரம் கிடைக்குமா?' என்று புதிதாய் வாங்கிய Nokia 6300ல் இருந்து இப்பொழுது உபயோகத்தில் இல்லாத வைஷுவின் நம்பருக்கு கால் செய்து பேசிக் கொண்டிருந்தேன்..

Sunday, September 05, 2010

இது ஒரு காதல் (தொடர்)கதை


புதன்கிழமை என்பதால் 2.30 மணிக்கு "வீக்லி டீம் மீட்டிங்" இருந்தது. ரிபோர்டிங் மேனேஜர் வாரா வாரம் தவறாமல் பாடுகின்ற பாட்டை பாட ஆரம்பித்தார். என் நண்பன் கதிர் இதோடு நான்கு முறை கால் செய்துவிட்டான். ஏதாவது அவசர கால் ஆக இருக்கலாம் என்று மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்தேன். கதிருக்கு போன் செய்தேன்.

'சொல்லு கதிர். ஏதாவது முக்கியமான விசயமா?'

"ஆமா ஜீவா. அப்பாகிட்ட ஷாலினியை பத்தி பேசிட்டேன்டா. அப்பா வேற சாதில ஒருத்திய வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடாதன்னு சொல்லிட்டாரு"

'டேய் எந்த வீட்டுலடா லவ் பண்றேன்னு சொன்னதும், சரி நீ லவ் பண்ற பையன் பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க? நான் ஏதோ எமெர்ஜென்சி கால்னு நினைச்சேன். பார்த்தா காலம் பூரா நடக்கிற விசயத்துக்கு நீ கால் மேல கால் பண்ற. சரி நான் மீட்டிங் போறேன்'

"ஜீவா, ஷாலினியும் அவா வீட்ல பேசிட்டா டா"

'கண்டிப்பா அவங்க அப்பாவும் முடியாதுன்னு சொல்லி இருப்பாரே'

"எப்படிடா கரெக்டா சொல்ற?"

'ஏன்டா தறுதலையா சுத்திட்டு இருக்கிற நம்ம பையனுக்கும் ஒரு பொண்ணு கிடைச்சிடுச்சுன்னு உங்க அப்பா சந்தோசப்படாம இவ்வளோ பேசும் போது அவங்க அப்பா பேச மாட்டாரா டா?'

"ஜீவா, உனக்கு எல்லாமே விளையாட்டா இருக்குல்ல. ப்ளீஸ் பீ சீரியஸ். இது என் வாழ்க்கை டா"

அவன் குரல் தளுதளுத்தது. அவனே தொடர்ந்தான்.


"வீ போத் ஆர் வெரி சீரியஸ் அபௌட் அவர் லவ். எனக்கு வேற யாருகிட்ட பேசுறதுன்னு தெரியல அதான் உனக்கு கால் பண்ணேன் நீ ஏதாச்சும் உதவி பண்ணுவ அப்படிங்கிற நம்பிக்கையில. ஆனால் நீ.... பரவா இல்லடா. நானே பார்த்துக்கிறேன்"

'டேய் கதிர், ஐ யம் சாரி. என்னை பத்தி தெரியும்ல நான் எப்பவும் இப்படி தான் பேசுவேன்னு. நான் என்ன பண்ணனும்னு சொல்லுடா. பண்றேன்'

"நாம எல்லாரும் சேர்ந்து யோசிப்போம். ஏதாச்சும் முடிவு பண்ணலாம். ஷாலினியும் உன்னை மீட் பண்ணனும்னு சொன்னா. வர்ற சனிக்கிழமை வடபழனி முருகன் கோவிலுக்கு ஏழு மணிக்கு உன்னால வர முடியுமா?"

'சரி வந்திடுறேன் டா. ரொம்ப யோசிச்சு மனச போட்டு குழப்பாத. எல்லாமே நல்லதா நடக்கும்' என்று சொல்லி கட் செய்தேன்.

செப்டம்பர் 5, சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு முருகன் கோவிலை அடைந்தேன் கதிருடன். ஷாலினி எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தாள். கூடவே இன்னொரு பெண்ணும் இருந்தாள். கதிர் அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்தான். "ஜீவா, வீணா. நாம எப்படி சின்ன வயசுல இருந்து ப்ரண்ட்ஸோ, அதே மாதிரி தான் ஷாலுவும் வீணாவும்" என்றான். இருவரும் ஹாய் மட்டும் பரிமாறிக் கொண்டோம். 'டேய் கதிர் நாயே, என்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவியே.. ஏன்டா ஷாலினிக்கு இப்படி ஒரு ப்ரண்ட் இருக்கிறத மட்டும் நீ சொல்லல? உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்' என்று மனதுக்குள் கதிரை திட்டினேன். அவர்கள் மூவரும் பொதுவான விசயங்களை பேச ஆரம்பிக்க நான் என் கடமையில் கண்ணாக இருந்தேன். வீணா மெரூன் கலர் சுடிதார் அணிந்து இருந்தாள். 12*2 mm அளவில் குங்குமம். அவளது கண்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு. என்னை மிகவும் கவர்ந்தது அவளது சிரிப்பு தான். அழகான பல்வரிசைத் தெரிய சிரித்தாள். காதில் அழகான தோடு. துப்பட்டாவை துப்பட்டாவாக உபயோகப் படுத்தும் ஒரு சில பெண்களில் இவளும் ஒருத்தி. கோவிலில் இன்று ஆண்கள் கூட்டம் வழக்கத்தை விட இன்று மிகவும் அதிகமாக இருப்பதை போல உணர்ந்தேன்.

"ஜீவா! என்ன யோசிச்சிட்டு இருக்க??" - ஷாலினி

'இதே முருகன் கோவில்ல வச்சு உங்க கல்யாணத்தை முடிச்சிடலாமா? எனக்கு வேற வழி எதுவும் தெரியல. சாட்சி கை எழுத்து போட ப்ரண்ட்ஸ் இருக்காங்க' என்றேன்.

"என்னது? ஓடிப் போய் கல்யாணம் பண்றதா? இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். ஷாலினி பெத்தவங்கள கஷ்டப் படுத்திட்டு உன்னால சந்தோசமா இருக்க முடியுமா?"

ஷாலினியிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.

நான் பேசினேன். 'அப்ப என்ன தான் பண்றது. ரெண்டு பேரை பெத்தவங்களும் தான் சம்மதிக்க மாட்டேன்கிறாங்களே?'

"நாம ப்ரண்ட்ஸ் இருக்கோம்ல. அவங்கள்ட்ட பேசி சம்மதிக்க வைப்போம். ஏன் ப்ரண்ட்ஸால லவ் பண்றவங்களுக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு கல்யாணம் பண்ண தான் முடியும்னு இருக்கா? அப்படி பண்றதுனால காதலுக்கு மட்டும் இல்ல நட்புக்கும் தான் கெட்ட பேரு." - வீணா.

வீணா சொல்வதும் சரி தான். பார்க்க ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருக்கிறா ஆனால் அவள் உதிர்க்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள்!! என் பூட்டிய இதயத்தின் கதவை யாரோ தட்டுவது போலத் தெரிந்தது.

'சரி வீணா. நாம பேசுவோம் அவங்கள்ட்ட. அவங்க சம்மதிக்கலைன்னா என்ன பண்றது?'

"அவங்கள சம்மதிக்க வைக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவங்கள்ட்ட என்ன பேசுறது எப்படி பேசுறதுன்னு நாம முடிவு பண்ணுவோம் இரண்டு நாளுல. ஏழாம் தேதி ஷாலு அப்பாகிட்ட பேசுறோம். சரியா?"

ஒரு வேளை இவ காதலுக்கு யாரும் இப்படி உதவி பண்ணி இருப்பாங்களோ!! பாய் ப்ரண்ட் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஒரு கொக்கி போட்டு பார்ப்போம் என்று நினைத்து 'வீணா, உன்னோட காதலுக்கு உன் ப்ரண்ட்ஸ் இப்படி தான் பண்ணாங்களா?' என்று கேட்டேன்.

வீணா என்னை எரித்து விடுவது போல பார்த்தாள்.

"ஏன் நான் என் வேற ப்ரண்ட்ஸ் ஒருத்தருக்கு இப்படி பண்ணி இருக்கலாம்ல. ஷாலு வீட்டுக்கு போலாம்ல திங்கள்கிழமை?' என்றாள்.

வீணா கண்டிப்பாக பேசி சம்மதம் வாங்கி விடுவாள் என்ற நம்பிக்கை இருந்ததால் 'சரி' என்றேன். 'டேய் ஏதோ எங்க லவ்வுக்கு நாங்க போராடுற மாதிரி இருக்கு. ஏதாச்சும் சொல்லுங்க' என்றேன். வீணா முறைத்தாள். இவ்வளவு அழகாக முறைக்க முடியுமா? "அதான் எல்லாமே நீங்களே பேசியாச்சே. எனக்கு நம்பிக்கை இருக்கு உங்க ரெண்டு பேரு மேலயும்" என்றான் ஜீவா.

வீணா மொபைல் நம்பர் எப்படி வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். 'வீணா உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க?' என்றேன். "எதுக்கு?" என்றாள். 'நாம ஷாலு வீட்ல என்ன பேசப் போறோம்னு முடிவு பண்ண.' என்றேன். "ஹ்ம்ம்.. நோட் பண்ணிக்கோங்க" என்று எண்ணைக் கூறினாள். "உங்க நம்பர்ல இருந்து ஒரு கால் பண்ணிடுங்க இப்ப. நான் தெரியாத நம்பர்ல இருந்து வந்தா எடுத்து பேசுறது இல்ல" என்றாள்.

நாங்கள் அனைவரும் கிளம்பத் தயாரானோம். ஷாலுவை கதிர் ஏற்றிக் கொள்ள, நான் வீணாவைப் பார்த்தேன். வீணாவோ, "என்னோட ஹாஸ்டல் பக்கத்துல தான் இருக்கு நான் நடந்து போயிடுவேன்" என்றாள். "ஹே ஜீவா அது காரணம் இல்லை, அவளை கட்டிக்கப் போறவரு கூட மட்டும் தான் பைக்கில போகணும்னு சொல்லுவா. நீ கிளம்பு ஜீவா" என்றாள் ஷாலினி. "பை" சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள் எனக்க்கான என் தேவதை. என் இதயக் கதவுகளின் சாவியை வீணாவிடம் தந்துவிட்டு பைக் சாவியை வைத்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

ஞாயிறு, காலை பத்து மணி அளவில் வீணாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன், நாளை ஷாலினி அப்பாவிடம் என்ன பேசப் போகிறோம் என்று கேட்டு. உடனே கால் பண்ணினாள். பேச வேண்டிய முக்கியமான விஷயத்தை தவிர எல்லாவற்றையும் பற்றி அவளிடம் கேட்க ஆரம்பித்தேன். எங்கே வேலை பார்க்கிறாள், குடும்பம் பற்றி, அவளது பொழுதுபோக்கு, அவளுக்கு பிடித்த விஷயங்கள், பிடிக்காதவை இவை எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டேன். ஒரு மணி நேரம் முடிந்தது. "ஹே உனக்கு தெரியுமா? நான் எந்த பையன்கூடையும் இவ்வளவு நேரம் பேசுனது இல்ல. உங்கிட்ட தான் இவ்வளவு நேரம் பேசுறேன்" என்றாள். அவள் திடீரென்று அப்படி சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவளுக்கு பாய் ப்ரண்ட் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கை பிறந்தது. 'எப்படி என்கிட்ட மட்டும் இவ்வளவு நேரம் பேசணும்னு தோனுச்சு' என்றேன். "தெரியல, பார்க்க கொஞ்சம் நல்ல பையனா இருக்க. அதனால இருக்கும்" என்றாள். 'எதை வச்சு நல்ல பையன்னு முடிவு பண்ண, நீ ஒரு டைம் தான் என்னை பார்த்து இருக்க' என்றேன். 'ஒரு மீட் போதும், ஒரு பொண்ணால ஒரு பையன் நல்லவனா கெட்டவனான்னு கண்டு பிடிச்சிட முடியும்" என்றாள். ஒரு அழகுப் பதுமையின் வாயால் நல்ல பையன் என்ற சர்டிபிகேட் கிடைத்தது அளவில்லாத சந்தோசத்தை தந்தது. 'சரி நாளைக்கு நாம என்ன பேசப் போறோம்' என்று நான் கேட்க, இருவரும் கலந்து பேசி ஒரு திட்டம் தீட்டி முடித்தோம். "சரி நாளைக்கு ஷாலினி வீட்ல மீட் பண்ணலாம். ஏதாச்சும் கேட்க வேண்டி இருக்கா நம்ம ப்ளான் பத்தி" என்றாள் வீணா. 'நம்ம ப்ளான் பத்தி இல்லை. இன்னொரு கேள்வி இருக்கு' என்றேன். "ஹ்ம்ம்..கேளு" என்றாள். 'உனக்கு நிறைய பேரு ப்ரொபோஸ் பண்ணி இருப்பாங்களே கண்டிப்பா' என்றேன். "பண்ணி இருக்காங்க. ஆனால் எனக்கு பிடிக்கனும்ல. எனக்கு பிடிச்ச மாதிரி இதுவரை யாரையும் பார்க்கலை. அப்படி பார்த்தா கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன் லைப்ல" என்றாள். 'எந்த மாதிரி பையனா இருக்கணும்? சும்மா தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்' என்றேன். "நிறையா இருக்கு. ஒன்னே ஒன்னு சொல்றேன். நான் தான் முதல்ல லவ்வ சொல்லணும். அவனா இருக்க கூடாது. ஓகே வா? பை" என்றாள். 'போச்சுடா' என்று என் தலையில் கையை வைத்தேன்.

செப்டம்பர் ஏழு மாலை 8 மணி. நானும் வீணாவும் ஷாலினி வீட்டை அடைந்தோம். "இங்க பாரு ஷாலினி அப்பாகிட்ட சம்மதம் வாங்குறது என் பொறுப்பு. நீ தான் கதிர் பக்கம் பார்த்துக்கணும்" என்று என் காதில் கிசுகிசுத்தாள் வீணா. "வாம்மா வீணா? எப்படி இருக்க? யாரு இந்தப் பையன்?" என்று நலம் விசாரிப்புடன் என்னையும் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் ஷாலினியின் அப்பா பிரகாசம்.

"ரொம்ப நல்லா இருக்கேன் அங்கிள். இவரு ஜீவா. கதிர் ப்ரண்ட். உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. கதிரைப் பத்தி" - வீணா.

"அதுல பேசுறதுக்கு இனி எதுவுமே இல்லம்மா. என்னால ஒத்துக்க முடியாது. அப்படி நான் ஒத்துக்கிட்டா என் சொந்தக்காரங்க சுத்தி இருக்கிறவங்க எல்லாம் என்ன பேசுவாங்கன்னு யோசிச்சு பார்த்தியா?"

"ஷாலினி சந்தோசத்த பத்தி யோசிச்சு பாருங்க அங்கிள்"

"அப்படி நான் சம்மதிச்சு என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணா என்னோட சொந்தக்காரங்க எங்க குடும்பத்தையே ஒதுக்கி வச்சிடுவாங்க. ஒரு சபையில போய் என்னால தலை காட்ட முடியாது மா"

"காலம் ரொம்ப மாறிப் போயிடுச்சு அங்கிள்"

"ஆனால் எல்லாரும் மாறலையே மா. உனக்கு இதெல்லாம் புரியாது மா. நீ சின்னப் பொண்ணு. உன் ப்ரண்ட் தான இவளும். நீ எவ்வளோ நல்ல பொண்ணா இருக்க காதல் கத்திரிக்கைன்னு எதுவும் இல்லாம"

நான் குறுக்கிட்டேன்.

'காதல் எப்ப எப்படி வரும்னு சொல்ல முடியாது அங்கிள். எந்த நேரத்துலயும் வரலாம் யாருக்கும். ஏன் நாளைக்கே நம்ம வீணா ஒரு பையன பிடிச்சிருக்குன்னு சொல்லலாம்'

வீணா என்னை கோபமாய் பார்த்தாள்.

"திருட்டுக் கல்யாணம் பண்ணாம உங்க சம்மதம் தான் முக்கியம்னு உங்க முன்னால வந்து நிக்குறோம் பார்த்தீங்களா நாங்க இன்னும் சின்னப் பொண்ணு தான் அங்கிள். நீங்க காண்பிக்கிறதும் அன்பு தான் கதிர் இவ மேல வச்சு இருக்கிறதும் அன்பு தான். அவளுக்கு ரெண்டு அன்புமே வேணும் அங்கிள். ஏன் ஒன்ன மட்டும் பிரிக்க பார்க்கிறீங்க?"

வீணா பேச ஷாலினியின் அப்பா எதுவும் பேசாமல் இருந்தார். "ப்ளீஸ் அங்கிள் ஷாலினி காதலை ஏத்துக்கோங்க" என்றாள் வீணா.

"இல்லம்மா சொந்தக்காரங்க" என்று அதே பாட்டை பாட ஆரம்பித்தார்.

"சரி அங்கிள் உங்களுக்கு சொந்தக்காரங்க தான் முக்கியம்னா அவங்கள வச்சு ஷாலினி கல்யாணத்த முடிச்சிடுங்க வேற ஏதோ ஒரு பையனோட. கதிருக்கு மட்டும் நீங்க அவளை கட்டித் தரலைன்ன நாங்க இவ கல்யாணத்துக்கு வரமாட்டோம். ப்ரண்ட்ஸ் ஒருத்தர் கூட இல்லாம ஒரு கல்யாணத்தை யோசிச்சு பாருங்க. உங்களுக்கு அப்படி ஒரு கல்யாணம் நடந்திருந்தா எப்படி பீல் பண்ணி இருப்பீங்க? அது மட்டும் இல்ல. நாங்க ப்ரண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து உங்க, ஷாலினி வீட்டுல நடக்கிற எந்த பங்சன்லயும் கலந்துக்க மாட்டோம். சொந்தக்காரங்க மட்டும் தான் ஒதுக்கி வைப்பாங்களா? எங்களாலயும் ஒதுக்கி வைக்க முடியும்" என்றாள் வீணா.

"என்னம்மா என்னலாமோ பேசுற? நீயும் என் பொண்ணு தான் மா. சாதிய நினைச்சா தான் மா ரொம்ப பயமா இருக்கு"

"நீங்க மட்டும் ஷாலினிக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா, சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ண சம்மதிச் லிஸ்ட்ல உங்க பேரு டாப் டென்ல இடம் பெற வாய்ப்பு அதிகமா இருக்கு. எல்லாருக்கும் நீங்க உதாரணமா இருப்பீங்க. மனிதத்துவம் தான் முக்கியம்னு உங்களை பார்த்து நிறைய பேரு திருந்த வாய்ப்பு இருக்கு அங்கிள். ப்ளீஸ் அங்கிள் சரின்னு சொல்லுங்க"

அங்கிள் சிரித்தார். அதுவே அவர் சம்மதத்தை காட்டிக் கொடுத்தது.

"கதிர் வீட்லயும் சம்மதிச்சா நானும் இவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்" என்றார். "தேங்க்ஸ் அங்கிள். அவங்க வீட்டுல பேச வேண்டியது ஜீவா பொறுப்பு" என்று என்னைக் காண்பித்தாள் வீணா.

"எல்லாம் ஒரு ப்ளான் படி தான் நடக்குது போல. ப்ரண்ட்ஸ்னா திருட்டுத் தனமா கல்யாணம் பண்ணி வைக்காம பெத்தவங்க சம்மதம் முக்கியம்னு எங்க முன்னால நிக்கிறீங்க பாருங்க அதுக்குத் தான்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்க புரிஞ்சுகிட்ட என் பொண்ணோட காதலை நான் மட்டும் புரிஞ்சுக்காம இருந்தா என் பொண்ணு மேல நான் வச்சு இருக்கிற அளவு கடந்த பாசத்துக்கு அர்த்தமே இல்லாம போயிடும். கதிர் அப்பா பிரச்சினை பண்ணா சொல்லுங்க நான் பேசுறேன்" என்று சிரித்தார் ஷாலினியின் அப்பா.

"வீணா, ஜீவா - நீங்க பண்ண இந்த உதவிக்கு நான் பதிலுக்கு என்ன பண்ண போறேன்னு தெரியல" என்றாள் கண்களில் நீருடன் ஷாலினி.

'ரொம்ப பசிக்குது இப்ப சாப்பாடு போடு. அது போதும்' என்று நான் சொல்ல அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். சாப்பிட ஆரம்பித்தோம். "இந்தப் பையன் முழியே சரி இல்லம்மா. கொஞ்சம் விலகியே இரு" என்று வீணாவிடம் ஷாலினி அப்பா கூற அவள் என்னை பார்த்து புன்முறுவல் செய்தாள். "அப்படி இல்லை அங்கிள். அவனுக்கு ரொம்ப பசிக்குது. அதான் அப்படி முழிக்கிறான், எப்படி இன்னொரு தோசை கேட்குறதுன்னு தெரியாம" என்றாள் என்னைப் புரிந்து கொண்டவளாய்.

ஆட்டோ பிடித்து வீணாவை வழி அனுப்பினேன். என் ரூம் சென்றதும் அவளுக்கு கால் பண்ணினேன். 'கலக்கிட்ட வீணா. 50% முடிச்சிட்டோம். இன்னும் பாதி வேலை தான் இருக்கு. ஆனால் கதிர் அப்பா ரொம்ப கண்டிப்பானவர். என்ன பண்ணப் போறோம். அடுத்து நம்ம ப்ளான்? எப்ப டிஸ்கஸ் பண்ணலாம்' என்றேன். "நேர்ல பேசுவோம் அதை பத்தி. நாளைக்கு சாயுங்காலம் எட்டு மணிக்கு உன்னால வடபழனி சரவணா பவனுக்கு வர முடியுமா?" என்றாள். 'சரி அங்க பார்க்கலாம்' என்றேன்.

எனக்கு முன்னதாகவே அங்கு நின்று கொண்டிருந்தாள். கோவிலுக்குப் போய் விட்டு அவள் வந்து இருந்ததை அவளது விபூதியும் குங்குமமும் காட்டிக் கொடுத்தது. ஆர்டர் பண்ணினோம். இன்று தான் அவளது செய்கையை கவனித்தேன். சாப்பாடு வந்ததும், கொஞ்சம் கையில் எடுத்து சாப்பிடாமல் கண்களை மூடி இறைவனை வணங்கி விட்டு, அவள் கையில் இருந்த உணவை ஒரு ஓரமாக தட்டில் வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தாள். 'இவ்வளவு நல்ல பொண்ணா இருக்காளே இவளுக்கு எப்படி என்னை பிடிக்கும்?' என்று என் மனதிற்குள் ஒரு அச்சம் வந்தது. இருந்தாலும் ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் என் காதல் தானே வளரும் என்ற நம்பிக்கை இருந்தது. சாப்பிட்டுக் கொண்டே இருவரும் கதிரின் அப்பாவிடம் பேச வேண்டிய விசயங்களை பேசி முடித்தோம். கதிர் வீட்டுக்கு வரும் வெள்ளிக்கிழமை போவது என்று முடிவு செய்து புறப்பட்டோம்.

வெள்ளி, கதிர் வீடு. "அப்பா ஜீவா வந்து இருக்கான் பா. இது என்னோட ப்ரண்ட் வீணா" என்றான் கதிர். "வாப்பா, வாம்மா. உட்காருங்க" என்றார் கதிரின் அப்பா சேகர் ஒரு சோபாவை காண்பித்த படி. எனக்கு எப்படி அவரிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை அமைதியாக இருந்தேன். வீணாவிடம் பேசிக் கொண்டு இருந்தார். அவரே ஆரம்பித்தார். "ஏன்பா ஜீவா உன் ப்ரண்ட் பண்ண காரியம் உனக்கு தெரியுமா? உனக்கு எப்படி தெரியாம இருக்கும்" என்றார். 'அது வந்து அங்கிள்..' முழித்தேன். "பேசு பேசு" என்றாள் வீணா மிக அமைதியான குரலில்.

'அவன் பண்ணதுல தப்பு ஏதும் இல்லையே அங்கிள்' என்றேன். "நீயும் என்னப்பா அவனுக்கு சப்போர்ட் பண்ற. வேற ஒரு சாதி......" என்று ஆரம்பித்தார். அது எப்படி எல்லா பெற்றோருக்கும் இதே பாட்டு தெரிந்தது என்று தெரியவில்லை. 'அங்கிள், உங்கள நான் எவ்வளோ பெருமையா என் மனசுல நினைச்சிட்டு இருக்கேன் தெரியுமா? எப்படி இவ்வளோ ப்ரண்ட்லியா எல்லார்கிட்டயும் பழக முடியுதுன்னு நான் உங்கள பார்த்து வியந்து இருக்கேன். கதிருக்கு மட்டும் இல்லை எங்க எல்லாரையுமே உங்க பையனா நினைச்சு எங்களுக்கு நிறையா பண்ணி இருக்கீங்க. எங்க ப்ரண்ட்ஸ் எல்லாரும் உங்க மேல ரொம்ப மரியாதையை வச்சு இருக்கோம். ஆனால் நீங்க இப்படி சாதி தான் முக்கியம்னு சொல்றவர்னு தெரிஞ்சா எங்க எல்லாருக்குமே ரொம்ப கஷ்டமா இருக்கும். நாங்க வேற சாதின்னு உங்களுக்கு முதல்ல தெரிஞ்சு இருந்தா நீங்க எங்களை முன்னாலயே ஒதுக்கி வச்சு இருப்பீங்களோன்னு தோனுது அங்கிள்' என்றேன்.

"என்ன ஜீவா சொல்ற, நான் உங்க கிட்ட சாதி பார்த்து பழகலை பா. ஆனால், கதிர் வாழ்க்கைன்னு வரும் போது என்னால சாதியை தூக்கிப் போட முடியல. சில விஷயங்கள் உங்க இள ரத்தத்துக்கு இப்ப புரியாது பா"

'எங்களுக்கு எல்லாமே புரியுது அங்கிள். நீங்க தம்மு தண்ணி அடிக்கக் கூடாது, அது கெட்டதுன்னு சொல்லி வளர்த்தீங்க. நாங்க அது படி நடந்தோம். வம்புச் சண்டைக்கு போகக் கூடாதுன்னு சொன்னீங்க, எங்களுக்கு அதுல இருக்கிற நல்லது புரிஞ்சது. லேட் நைட் வெளிய சுத்தக் கூடாதுன்னு சொன்னீங்க, அதுல இருக்கிற ரிஸ்க் தெரிஞ்சது. ஆனால் என்னைக்குமே லவ் பண்றது தப்புன்னு சொல்லி எங்களை வளர்க்கலையே அங்கிள்' என்றேன்.

கதிர் அப்பா எதுவும் பேசாமல் இருந்தார். நானே தொடர்ந்தேன்.

'நீங்க கூட எத்தனை தடவை சொல்லி இருக்கீங்க எங்களை பார்த்து, சாதி மத பேதம் இல்லாம இப்படி நாங்க ஒற்றுமையா இருக்கிறதா பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்குன்னு. அப்புறம் ஏன் அங்கிள் காதல்னு வரும் போது மட்டும் பிடிக்கலைன்னு சொல்றீங்க. உங்க சம்மதம் எங்களுக்கு ரொம்ப முக்கியம் அங்கிள். கதிருக்கு நீங்களும் வேணும் ஷாலினியும் வேணும். ப்ளீஸ் அங்கிள் சரின்னு சொல்லுங்க. ப்ளீஸ்'

"இந்த காலத்து பிள்ளைங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க. என் பையன் சந்தோசத்துக்காகவும் உங்க நட்புக்காகவும் நான் ஒத்துக்கிறேன் பா. ஓடிப் போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணாம அப்ப அம்மா சம்மதம் முக்கியம்னு எங்கள்ட்ட வந்து பேசுறீங்களே அது ரொம்ப பிடிச்சிருக்கு பா. ஷாலினி அப்பா இதுக்கு சம்மதிக்கணுமே. நான் பேசட்டுமா அவருகிட்ட?" என்றார்.

'ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். ஷாலினி அப்பாகிட்ட பேசி நம்ம வீணா அவரை சம்மதிக்க வச்சுட்டா. ப்ரண்ட்ஸ் நாம போய் பேசலாம்னு ஐடியா கொடுத்ததே வீணா தான் அங்கிள்' என்றேன்.

"பார்க்க ரொம்ப அமைதியான பொண்ணு மாதிரி இருக்கா ஆனால் நல்லா பேசுவா போலையே. காதல்ல அப்பா அம்மா சம்மதமும் முக்கியம்னு நினைக்கிற உனக்கு ரொம்ப நல்லா வாழ்க்கை அமையும்மா" என்று வாழ்த்தினார்.

"தேங்க்ஸ் அங்கிள்" என்றாள் வீணா.

"அப்புறம் ஜீவா இவ்வளவு பேசுறீயே உன் ப்ரண்ட் காதலுக்காக, ஆனால் உனக்கு காதல் பிடிக்காதுன்னு கேள்விப்பட்டேன்" என்றார்.

நான் எப்ப அப்படி சொன்னேன் என்று முழித்துக் கொண்டிருக்க வீணா பதிலளித்தாள்.

'காதல் எப்ப எப்படி வரும்னு சொல்ல முடியாது அங்கிள். எந்த நேரத்துலயும் வரலாம் யாருக்கும். ஏன் நாளைக்கே நம்ம ஜீவா ஒரு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லலாம்' என்றாள்.

கதிர் அப்பா என்னிடம் "ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா ஜீவா. இவளை மிஸ் பண்ணிடாத" என்று மெதுவாகக் கூறினார். 'என்ன ஒரே நாளில் இப்படி மாறிப் போனார்' என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் நான் வீணாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு உணவை முடித்து விட்டு வீணா புறப்பட்டு போக நானும் என் பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

ஞாயிறு, நாங்கள் நால்வரும் மீட் பண்ணினோம். ரொம்ப நாளுக்குப் பிறகு கலகலப்பாக இருந்தது அன்றைய தினம். ஷாலினியும் கதிரும் "உங்க ரெண்டு பேருக்கும் நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம். இன்னைக்கு நைட் ஸ்டார் ஹோட்டல்ல உங்களுக்கு எங்க ட்ரீட்" என்றனர். அதற்கு நான் 'ஒரு அனாதை இல்லத்துக்குப் போகலாம். அங்க இருக்கிற குழந்தைங்களுக்கு சாப்பாடு போடுவோம். நம்ம மனசுக்கு இன்னும் சந்தோசத்தை தரும்' என்றேன். வீணாவும் "ஜீவா சொல்றது தான் எனக்கு சரின்னு படுத்து. நீங்க செய்ற இந்த தருமம் உங்க வாழ்க்கைக்கு இன்னும் புண்ணியம் சேர்க்கும்" என்றாள். நாங்கள் நால்வரும் அருகில் இருக்கும் 'உதவும் இதயங்கள்' இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றோம்.

டிசம்பர் 6, ஞாயிறு. இன்று கதிருக்கும் ஷாலினிக்கும் திருமணம். நண்பர்கள் , உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். கதிரின் அப்பாவும் ஷாலினியின் அப்பாவும் என்னையும் வீணவைப் பற்றியும் எல்லாரிடமும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர். கதிர் அப்பா "என்ன ஜீவா கொஞ்சம் சோர்வா தெரியுற, என்னாச்சு?" என்றார். ஒன்னும் இல்ல அங்கிள் நல்லா தான் இருக்கேன் என்று அவரிடம் பொய் சொன்னாலும் என் மனதில் ஒரு தவிப்பு இருக்கத் தான் செய்தது, அடுத்து எப்ப வீணாவைப் பார்ப்பேன் என்று. அவளை என் வாழ்க்கையில் இழந்து விடக் கூடாது. நான் வீணாவைத் தேடினேன். லாவண்டர் கலர் சாரியில் தேவதையாக காட்சி தந்தாள். வீணாவிடம் நேராகச் சென்றேன். 'வீணா உங்கிட்ட ஒன்னு இன்னைக்கு கண்டிப்பா சொல்லியே ஆகணும்' என்றேன். "சொல்லு ஜீவா"என்றாள். 'இன்னைக்கு சாரில நீ ரொம்ப அழகா இருக்க' என்று மட்டும் கூறினேன். புன்னகைத்தாள். "என்ன ஜீவா நீ டல்லா இருக்கிற மாதிரி இருக்கு" என்றாள். எல்லாம் தெரிஞ்சுட்டு தான் கேட்கிறாளா இல்லை உண்மையிலேயே என் மனசு இவளுக்கு புரியலையா என்று ஒரே குழப்பமாக இருந்தது. 'உன் ப்ரண்ட்ஸ் வேற யாராச்சும் லவ் பண்றாங்களா வீணா?' என்று மட்டும் கேட்டேன். அவள் ஏதோ பேச முயல ஷாலினியும் கதிரும் எங்கள் இருவரையும் கூப்பிட சரியாக இருந்தது.

திருமணம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. மிகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பர்களை சந்தித்ததால் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். வீணாவும் அவள் நண்பர்களுடுன் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கத் தவறவில்லை நிமிடத்திற்கு ஒரு முறை. புதுமணத் தம்பதிகளுடன் நானும் வீணாவும் சாப்பிட அமர்ந்தோம். நான் முதல் வாய் சாப்பிடாமல் கடவுளுக்கு எடுத்து வைத்ததை கதிர் பார்த்து விட்டான். "டேய் ஜீவா இது என்ன புது பழக்கம்" என்றான். 'நல்ல பழக்கம் தான. ஒரு பொண்ணுகிட்ட இருந்து கத்துக்கிட்டேன்' என்று நான் கூற என்னை வீணா பார்த்தாள்.

வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் கிளம்பிக் கொண்டு இருக்க எங்கள் இருவரை மட்டும் கதிரும் ஷாலினியும் விடவில்லை. "இன்னும் கொஞ்ச நேரம் கண்டிப்பா எங்க கூட இருந்தே ஆகணும்" என்று அன்புக் கட்டளை இட்டனர். இதற்கப்புறம் வீணாவை நான் பார்க்க மாட்டேனோ என்ற உணர்வு மட்டும் தான் என்னிடம் இருந்தது. பேசாமல் வீணாகிட்ட பொய் என் காதலை சொல்லிடலாமா என்று நான் யோசித்தேன். ஆனால் அவளுக்கு பையன் வந்து காதலை சொனனால் பிடிக்காதுன்னு சொல்லி இருக்காளே என்பதால் நான் அவளிடம் எதுவும் சொல்லாமல் இருந்தேன். நேரம் ஆக ஆக என் முகம் வாடிக் கொண்டு போவதை வீணா கவனிக்காமல் இல்லை. என்னிடம் வந்தாள் வீணா. அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'சொல்லு வீணா' என்றேன். "கிளம்பலாமா ஜீவா. டைம் ஆயிடுச்சு" என்றாள். ஏமாந்தவனாய் 'சரி வீணா நான் போய் ஆட்டோ பிடிச்சிட்டு வந்திடுறேன்' என்றவாறே என் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். வீணா என் அருகில் வந்தாள். பைக்கில் ஏறி அமர்ந்து என் தோளைப் பற்றிக் கொண்டாள்.




நான்கு மாதங்கள் முப்பத்தி நான்கு நாட்களுக்குப் பிறகு..


'சொல்லு ஜீவா. ஏதாவது முக்கியமான விசயமா?'

"ஆமா கார்த்திக். அப்பாகிட்ட வீணாவை பத்தி பேசிட்டேன் டா. அப்பா வேற சாதில ஒருத்திய வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடாதன்னு சொல்லிட்டாரு"

"'..................................'"

பெற்றோர் எதிர்ப்புகளும் காதல் திருமணங்களும் தொடரும்....