Pages

Monday, July 19, 2010

காதலின்றி...

காதலை பற்றி யோசிக்காமல், பேசாமல், பார்க்காமல் ஒரு நாள் முழுவதும் காதலே இல்லாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். முடிவு மட்டும் செய்துவிட்டேன் ஆனால் எப்படி இருப்பது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் இஷ்டம் இல்லாமல் கஷ்டப்பட்டு "BGP" படித்தேன். முதல் பக்கத்தையே தாண்டவில்லை. டிவியில் இந்தியா-பாகிஸ்தான் லைவ் மேட்ச் வேறு ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், அதை என்னால் பார்க்க முடியாதே!! பார்த்தால் கிரிக்கெட் மீது உள்ள காதலால் பார்ப்பதாய் ஆகி விடுமே. வேறு ஒரு சேனலில் 'ஸ்பெயின்-ஜெர்மனி' football மேட்ச் இருக்க அதை பார்க்க ஆரம்பித்தேன். ஜெர்மனி கோல் அடிக்க, நான் கோல் என்று கூச்சலிட்டேன். ஆனால், நடுவரோ offside என்று சொல்லி கோல் இல்லை என்று அறிவித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. போஸ்டுக்குள்ள அடித்தால் கோல் தான என்று எனக்குள் பேசிக் கொண்டேன். சரி offside பத்தி பிரெண்ட்ஸ் யார்கிட்டயாவது கேட்டு இன்னும் கொஞ்சம் நேரத்தை ஓட்டலாம் என்று ராஜாவுக்கு கால் செய்தேன். அவனோ "என்ன டா அதிசயமா இருக்கு நீ football பார்க்கிறாயா?" என்றான். நான் என்னுடைய ஒரு நாள் சபதத்தை சொன்னேன். அவனிடம் இருந்து கெட்ட வார்த்தை எதுவும் வரவில்லை. சின்னப் பிள்ளைக்கு சொல்வது போல 'offside' பற்றி விளக்க ஆரம்பித்தான். அரை மணி நேரம் விவரித்த பின்னும் எனக்கு விளங்கவில்லை. "அப்பா சாமி ஆள விட்டுடு" என்று சொல்லி கட் செய்துவிட்டான்.

நோட்புக்கில் ப்ரௌஸ் பண்ண ஆரம்பித்தேன். தினமும் பார்ப்பது தானே என்ன புதிதாய் இருந்து விடப் போகிறது? shut down பண்ணப் போகிற நேரத்தில் எங்கள் department இன் Mr.Perfect ஐ ஆன்லைனில் பார்த்தேன். சரி இவனோட பேசுவது மட்டும் தான் நான் காதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று முடிவு செய்தேன். அவன் பெற்றோர் வைத்த பெயர் சரவணன். ஆனால், எங்கள் காலேஜுக்கு Mr.Perfect என்று தான் அவனை தெரியும். எதற்கு Mr.Perfect என்று நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பேரிலேயே புரிந்திருக்கும். படிக்கிற வயசுல இருக்க வேண்டிய எல்லா நல்ல பழக்கமும் அவன்கிட்ட மட்டும் தான் பார்க்க முடியும். எல்லா professors க்கும் பிடித்த ஒரே மாணவன். "Mechanical Engineering" தான் அவனுக்கு உலகமே. காதலை பற்றிய படங்களை கூட பார்க்க மாட்டான்(காதல் படங்கள் பார்ப்பவர்கள் Mr.Perfect ஆக இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லை). இப்படிப்பட்ட Mr.Perfect ஐ கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடந்து தான் வந்திருப்போம்.

இன்றைக்கு நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று அவனுடன் chat பண்ண ஆரம்பித்தேன்.

'Hello Mr.Perfect' என்று ping பண்ணினேன்.

"Hello cheater" என்று பதில் வந்தது.

'cheater ah!! cheater ah!! cheater ah!!' அதிர்ந்தேன். 'எதுக்குடா என்ன cheater ன்னு சொல்ற?'

"அப்புறம் என்ன Mechanical Engineerning படிச்சிட்டு இப்ப software ல குப்பை கொட்டுறல்ல? அதான் அப்படி சொன்னேன். நீ பண்ணது Mechanical Engineering க்கு துரோகம் தான?"

அவன் இன்னும் மாறவே இல்லை. Mechanical Engineering ஐ Mech என்று சொல்வது கூட அவனுக்கு பிடிக்காது. 'அப்படி எல்லாம் இல்ல சரவணன். Mechanical Engineers ம் software field ல ஜெயிக்க முடியும்னு நிரூபிக்க தான் நான் இந்த field ல இருக்கேன்' என்று சமாளித்தேன்.

"இந்த வாய் மட்டும் இல்லன்னா ஒரு பைசாவுக்கு கூட நீ தேரமாட்ட டா"

அட! என்ன இவனும் நம்மள கலாய்க்க ஆரம்பிச்சுட்டான் இவனையும் இந்த உலகம் கெடுத்திடுச்சா? மனதுக்குள் மிகச் சின்ன சந்தேகம் வந்தது. ரொம்ப damage ஆக வேண்டாம் என்று 'வொர்க் எப்படி போகுது சரவணன்?' என்று மட்டும் கேட்டேன்.

"ரொம்ப டைட்டா இருக்கு டா. CFD analysis பண்ணி ரிப்போர்ட் அனுப்புறது என்னோட வேலை. CFD analysis ஞாபகம் இருக்கா?"

CFD analysis பற்றிய theory தெரியவில்லை என்றாலும் அந்த 'CFD analysis' ஐ என்னால் எப்படி மறக்க முடியும்? இருந்தாலும் 'CFD analysis பத்தி கேள்விப்பட்டதே இல்லை டா. மறந்துட்டேன்னு நினைக்கிறேன்' என்றேன்.

"என்னது மறந்துட்டியா? கிளாஸ் கவனிச்சா தானடா ஞாபகத்துல இருக்கும். நீ தான் அன்னைக்கு உறங்கி நம்ம HOD கிட்ட மாட்டினியே. அவரு கூட உன்னை கழுத்தை பிடிச்சு தள்ளி விட்டாரே வெளிய. அதை கூட மறந்துட்டியா? தேதி கூட... hmm got it. ஆகஸ்ட் ஆறு டா"

அடப்பாவிங்களா நாம மறக்க நினைச்சாலும் இவனுங்க தேதியோட ஞாபகம் வச்சு இருப்பாங்க போலையே என்று நொந்து கொண்டேன். 'ஹ்ம்ம் ஹ்ம்ம்' என்று மட்டும் அனுப்பினேன்.

"அன்னைக்கு மட்டுமா? அதுக்கு அடுத்த வாரம் கூட நம்ம மேனகா மேடம் கிளாஸ்லயும்.."

அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டேன். 'போதும்டா சாமி. ஏதோ முடிவோட தான் இருக்க போல' என்றேன்.

"cool man. சும்மா தான் கலாய்ச்சேன்"

'நீ ரொம்ப மாறிட்ட சரவணன்'

"ஹ்ம்ம் எஸ். எல்லாம் அவளால தான்"

'அவளா!!! யாரு உங்க அக்கா பொண்ணா?? அந்த நாலு வயசு வாலு தான?'

"இல்லை டா. இவா... இவளை பத்தி நிறைய சொல்லலாம்"

'டேய் நீ இன்னும் பேரைக் கூட சொல்லலைடா'

"சொல்றேன் டா. நம்ம வாண்டுக்கும், வாசனுக்கும் மட்டும் தான் இதை சொல்லி இருக்கேன் டா. நீ யார்கிட்டயும் இப்ப சொல்ல வேணாம் டா. நானே சொல்லிக்கிறேன். சரியா?"

'will keep it personal saravanan. நீ சொல்லு'

"சுருக்கமா சொல்றேன். அவ பேரு மோகனா டா. My school mate from class 6th to 12th. கிளாஸ்ல எப்பவும் 2nd topper. ரொம்ப brilliant ஆன பொண்ணு. அழகும் அறிவும் ஒரே இடத்துல இருக்காதுன்னு சொல்றதை பொய்யாக்க இந்த உலகத்துல பிறந்தவடா. அவளுக்குன்னு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிர், அலட்டலான பேச்சு தான் எனக்கு அவகிட்ட பிடிச்சதே. டிரெஸ்ஸிங்ல அவளுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் இருக்கு. அவளை அடிச்சுக்க முடியாதுடா. நல்ல வாயாடி. அப்பா அம்மான்னா அவளுக்கு உயிர்டா. எங்க அம்மா அப்பாவை கூட அவ பேச்சால மயக்கி வச்சிருக்கா என்றால் பாரேன்.."

'ஹ்ம்ம்..என்ன நடந்துச்சுன்னு சொல்லு சரவணன்'

"12th exams முடிஞ்ச அன்னைக்கு என்னை லவ் பண்றதா சொன்னாள். இந்த வயசுல வர்றது லவ் இல்லை just infatuation தான்னு சொன்னேன். அதுக்கு என்னால இன்னும் வெயிட் பண்ணி சொல்ல முடியும். இது நாள் வரை நீ என் கண்காணிப்புல இருந்த. அதனால தைரியமா இருந்தேன் எவளும் உன்னை நெருங்க முடியாதுன்னு. நீ Mechanical Engineering சேரப் போற. நீயும் நானும் வேற வேற fieldல ஜெயிக்கணும். அதனால தான் நான் fashion designer படிக்கப் போறேன். ரொம்ப பயமா இருக்கு வேற யாராவது உன்னை என்கிட்ட இருந்து பறிச்சிடுவாங்களோன்னு. அதான் இப்பவே சொல்றேன். உனக்கு வேற யாராச்சும் propose பண்ணாலும் என் ஞாபகம் தான் வரணும். I will wait for you என்று சொன்னாள். Don't waste your time ன்னு நான் சொல்லிட்டேன். நாங்க பிரிஞ்சோம்"

'...'

"நான் அவளை மறந்தே போய் இருந்தேன். இரண்டு மாசத்துக்கு முன்னால என்னோட ஸ்கூல் பிரெண்ட் கார்த்திக் என்னை மீட் பண்ண வந்திருந்தான் என் ஆபீஸ்க்கு. எப்படி டா உனக்கு என்னோட contact details கிடைச்சதுன்னு கேட்டதுக்கு மோகனா தந்தான்னு சொன்னான். மோகனா இன்னும் என்னை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கான்னு சொன்னான். ஸ்கூல்ல எப்பவும் நான் தான் topper ஆக இருக்கணும்னு அவா எப்பவும் வேணும்னே சில questions தப்பா answer பண்ணுவாளாம். மோகனா என்னை லவ் பண்றது எங்க அக்காவுக்கு தெரியுமாம். அவங்க கூப்பிட்டு மிரட்டி இருக்காங்க நாங்க வேற சாதி என்பதால. அவா அவங்க அம்மாகிட்ட போய் அழுது இருக்கா, எப்படி மா நான் அந்த வீட்ல போய் இருக்கப் போறேன். அவன் அக்காவை பார்த்தலே நடுக்கம் வருதும்மா. சரவணனும் என்னை புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை. நீங்க பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று. அதுக்கு அவங்க அம்மா என்னடி லூசு மாதிரி பேசுற மனசுல ஒரு பையனை வச்சுட்டு எப்படி இன்னொருத்தர் கூட உன்னால வாழ முடியும். நீ தான் உன் லவ், வாழ்க்கைக்காக போராடனும். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை வேணும்னா சும்மா கிடைச்சிடுமா? என்ன ஆனாலும் சரி அந்த பையன் கூட தான் உன் வாழ்க்கை இருக்கணும்னு சொல்லி இருக்காங்க. இதை எல்லாம் என்கிட்ட சொல்ல கூடாது என்றும், எப்படியாவது என்னை துரத்தி துரத்தி லவ் பண்ண வைக்கிற ப்ளான்ல மோகனா இருக்கா என்று கார்த்திக் சொன்னான்."

'அப்புறம் என்னடா ஆச்சு. திரும்பவும் அவா தான் propose பண்ணாளா?'

இரண்டு நிமிஷம் டா. அவா கால் பண்றா பேசிட்டு வந்திடுறேன் என்று சொல்லிப் போனவன் பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்து தொடர்ந்தான்.

"இல்லை டா. என் மேல பைத்தியமா இருக்கிற என் மோகனாவை விட்டுட்டு நான் எதுக்கு வேற யாரு கூடவோ வாழனும்னு நான் 'Can you share your life with me' ன்னு சொல்லி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தந்தேன் டா. அவா கண்ணுல அப்படி ஒரு சந்தோஷம் டா அன்னைக்கு"

'Awesome. நம்பவே முடியலை சரவணன். நீ...'

"இப்படி நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது தான் லைப் டா. அவா என் லைப் ல வந்த பிறகு ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கிறேன். வாழ்க்கையை புரிஞ்சுகிட்டேன். நான் ரசிக்கிறேன் டா என்னோட வாழ்க்கையை அவா கண்களால"

'great da. எப்ப கல்யாணம்? உங்க அக்கா ஒத்துக்கிட்டாங்களா?'

"வீட்ல சொன்னேன் அவா இல்லாம என்னால வாழ முடியாதுன்னு. வேற சாதின்னு பிரச்சனை வந்துச்சு. காதலிச்சா எங்க இருந்து தைரியம் வரும்னு தெரியலை டா. பிரிட்டிஷ் கிட்ட போராடி நம்ம தலைவர்கள் சுதந்திரமே வாங்கிட்டாங்க. நம்ம வீடு டா. அவங்கள்ட்ட போராடி சம்மதிக்க வைக்கிறது பெரிய விசயமா என்ன?"

சிரித்தேன்.

"கல்யாண தேதி முடிவானதும் நம்ம பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு இருக்கேன் டா. ஆனால், என்னால சொல்லாம இருக்க முடியலை. அதான் என்னோட நெருங்கிய பிரெண்ட்ஸ் கிட்ட உளறிடுறேன்"

'congrats டா. wish u a happy married life in advance. தங்கச்சி மோகனா கிட்டயும் சொல்லிடு"

போன் வந்தது. என்னடா chat பண்ணிட்டு இருக்கிறவன் கால் பண்றான்னு நினைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தேன். எதிர்முனையில் பயங்கர சிரிப்பொலி. சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தான். "நான் சொன்னதை எல்லாம் நம்பிட்டியாடா?" என்றான். 'என்னடா சொல்ற' என்றேன். "நாம காலேஜ் படிக்கும் போது ஏதாச்சும் படம் பார்த்துட்டு வந்து அந்த கதையை உல்டா பண்ணி என்கிட்ட எவ்வளோ படம் ஒட்டி இருப்ப. அதான் இந்த டைம் நான் சும்மா ட்ரை பண்ணிப் பார்த்தேன். போன்ல சொன்னா நானே சிரிச்சு காட்டிக் கொடுத்திடுவேன்னு தான் chat பண்ணேன். கண்டிப்பா நீ நம்ப மாட்டன்னு தான் நினைச்சேன். ஆனால், நீ எல்லாத்தையும் நம்பிட்ட. என்கிட்ட ஏமாந்த முதல் ஆள் நீ தான்டா. இதை வாண்டுக்கும், வாசனுக்கும் முதல்ல சொல்லணும்" என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். நானோ வாயடைத்துப் போய் இருந்தேன். "என்ன டா எதுவும் பேச மாட்டேங்கிற? ஏமாந்த சோகத்துல இருக்கியா... ஐயோ டைம் ஆச்சு டா. நான் போய் வேலை பார்க்கிறேன். ரிப்போர்ட் முடிக்கலை இன்னும். நைட் கால் பண்றேன் டா. bye" என்றான். 'bye' என்று முடித்தேன்.

'என்னக் கொடுமை சரவணன் இது' என்று என் தலையில் அடித்துக் கொண்டேன். என்னைய ஏமாத்த எவ்வளவோ வழி இருக்கும் போது எதுக்கு இன்னைக்கு இப்படி ஒரு காதல் கதையை நான் கேட்டேன். அதுவும் சொன்னது எங்க department Mr.Perfect சரவணன்.

என்னைச் சுற்றி நடப்பவை ஏதும் புரியாதவனாய் என்னையும் அறியாமல் காதலை பற்றி கிறுக்க ஆரம்பித்திருந்தேன்....

Thursday, July 15, 2010

மதராசப்பட்டிணம் - பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே



மதராசப்பட்டிணம் - இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்ய நான் தகுதியான ஆள் இல்லை. A class movie. இந்த பாட்டின் மீது எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. பாட்டிற்கு முன்
வருகின்ற சீனைப் பற்றி சொல்ல வார்த்தை இல்லை. எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை தந்தது. பாடலைப் பாடியவர் எனக்கு மிகவும் பிடித்த ரூப் குமார் ரத்தோட். "வெண்மதி வெண்மதியே நில்லு - மின்னலே", "ஒரு தேவதை - வாமனன்" பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர். 'விஜய்' என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி ஒரு அழகான காவியத்தை தந்த இயக்குனருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்குள்.

பாடல் வரிகள் இதோ,

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே...

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......

ohh where would I be
without this joy inside of me
it makes me want, to come alive
it makes me want to fly
into the sky...
ohh where would I be
if I didn't have you next to me
ohh where would I be
ohh where...
ohh where...

எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....

பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
என்ன புதுமை.
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
இது எதுவோ...

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார் ரத்தோட், ஹரிணி, ஆண்ட்ரியா

Monday, July 05, 2010

அடைமழை காதல்

"வாழ்க்கை இதோட முடியப் போறது இல்லை, இன்னும் எவ்வளவோ இருக்கு. காலம் தான் உனக்கு பதில் சொல்லும். கடவுள் எல்லாமே உன் நல்லதுக்கு தான் பண்ணுவாரு. கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு வாழ்க்கையை வாழு. வாழ்க்கையில அடுத்து என்ன தான் நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம். உன்னோட மனசை பக்குவப் படுத்த தான் கடவுள் இப்படி எல்லாம் பண்றாரு. Whatever Happens, Life has to go on......" இவை எல்லாம் கடந்த நான்கு மாதங்களில் எனக்கு கிடைத்த சொற்பொழிவுகள். என்னோட நண்பர்களில் யாராவது என்னோட நிலைமையில் இருந்திருந்தாலும் கண்டிப்பாக நானும் இப்படி தான் இலவசமாய் உபதேசம் செய்திருப்பேன். காசா? பணமா?

காதல். இந்த வார்த்தைக்கு என்னோட அகராதில பொருள் தேடினால் அவளோட பேரு மட்டும் தான் இருக்கும். எங்க ரெண்டு பேருக்கும் இருந்த காதலை மத்தவங்களுக்கு புரிய வைக்க முடியுமா என்ன? என் மேல எவ்வளவு பைத்தியமா இருந்தான்னு அவளுக்கே தெரியாது. 'ஏன்டி இப்படி என்னைத் தனியா விட்டுட்டு போன?' என்று எனக்குள் இருக்கும் அவளிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அவளை மட்டுமே நினைத்தபடி என் வாழ்நாளில் இன்னொரு பக்கத்தை புரட்டி முடித்தேன். நள்ளிரவு 12 மணி. கேப் டிரைவர் அண்ணா கால் பண்ண வீட்டுக்கு கிளம்பினேன். எப்பொழுதும் என்னோடு பயணம் செய்யும் வெண்ணிலவைத் தேடினேன். காணவில்லை. கண்களை மூடினேன் அவளோடு மட்டும் பேசுவதற்காக. கடந்த ஆண்டு இதே நாளில் என் வாழ்க்கை என்னும் நாட்குறிப்பில் அவள் எழுதிய பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தாள்.


"என்ன மா பண்ணிட்டு இருக்க? உறங்கிட்டு இருக்கியா?"

'உனக்கே இது நல்லா இருக்காடி? நைட் இரண்டு மணிக்கு கால் பண்ணிட்டு உறங்கிட்டு இருக்கியான்னு கேட்குற? என்னாச்சு இப்ப தான போன் பேசிட்டு உறங்கப் போறேன்னு சொன்ன?'

"இல்ல மா. நாளைக்கு நான் ஊருக்குப் போறேன்ல. இரண்டு நாள் உன்னோட குரலைக் கேட்க முடியாது. அதான் மா. உன்னை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு மா"

'ஹே லூசு, just 2 days. போயிட்டு வா. நான் Mondayக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'

"காலண்டர்ல சனி, ஞாயிறு இல்லாம இருந்து இருக்கலாம்ல மா?"

'உலகத்துல இருக்கிற எல்லா software engineers சேர்ந்து உன்னை கொல்லப் போறாங்க நீ பேசுறத மட்டும் கேட்டா'

சிரித்தாள்.

"என்னைய மாதிரியும் யாராச்சும் இருப்பாங்க மா. சனி, ஞாயிறு வேணாம்னு"

'மேடம்க்கு என்னாச்சு இன்னைக்கு? என்னை அவ்வளோ மிஸ் பண்றியா?'

"எஸ் மா. என்கிட்ட வார்த்தை இல்லை எவ்வளோன்னு சொல்ல"

'இங்க பாரு லூசு, இப்ப என் கூட பேசிட்டு இருக்க. நான் அதை மட்டும் தான் நினைக்கிறேன். நீ ஊருக்குப் போறதை யோசிச்சா நானும் மூட் அவுட் ஆகி எதுவுமே பேச முடியாது'

"ஆமால்ல. சரி இப்ப நான் நல்லாப் பேசுறேன் மா. பையா படத்துல பாட்டு கேட்டியா மா? ஒரு பாட்டுல இந்த இரண்டு வரி வரும்..

என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும். என் அந்திமாலை என் அந்திமாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்"

பாடியே காண்பித்தாள். அந்தப் பாடலை அழகான பெண் குரலில் கேட்ட ஒரே ஆள் நானாக மட்டும் தான் இருப்பேன். அவளே தொடர்ந்தாள்.

"இந்த பாட்டுல வர்ற மாதிரி என் லைப் இருக்கணும் மா. சந்தோசம்னா என்னன்னு என்கிட்ட யாராச்சும் கேட்டா நான் இதை தான் சொல்லுவேன்"

எனக்கான அவள் காதலை ரசித்தேன்.

'ஆனால் இந்த பாட்டை நமக்காக கொஞ்சம் மாத்த வேண்டி இருக்கே'

"என்னான்னு?"

'நீயே யோசிச்சு பாருடி. நாம உறங்கப் போறது எல்லாரும் எழுந்த பிறகு. முழிக்கிறது எல்லாரும் உறங்கும் போது. அதனால..'

செல்லமாக சிணுங்கினாள்.

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அதை சொன்னேன் மா"

'அப்ப கல்யாணம் முடியுற வரை இப்படி நைட் ஷிப்ட் தானா?'

"எப்படினாலும் காலைல ஆபீஸ்ல ஒன்னும் வெட்டி முறிக்கப் போறது இல்லை. அதனால என்கிட்ட பேசுறதுல ஒன்னும் குறைய மாட்ட. பேசப் பிடிக்கலைன்னா வச்சுட்டு போகலாம்"

சின்னதாய் கோபித்தாள்.

'சரி கோபப்படாதடி'

"கோபமா தான் இருக்கேன். என் கோபம் குறைய ஏதாச்சும் சொல்லு. என்னை எவ்வளோ பிடிக்கும் உனக்கு?"

'எவ்வளவுன்னு சொல்லத் தெரியல. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ..'

"பிடிக்கலையா?"

'பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்டி. உன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்கிறது இல்லை'

"அதான பார்த்தேன். இந்த weekend என்ன மா பண்ணப் போற?"

'football விளையாடப் போவேன். வேற... பிரண்ட்ஸ் கூப்பிட்டால் படத்துக்குப் போவேன்'

"வெளிய போனா சீக்கிரம் ரூம் வந்திடு மா. லேட் நைட் வெளிய சுத்தாத ப்ளீஸ். அப்புறம் இந்த football விளையாடப் போறது எல்லாம் கல்யாணம் வரை தான். அதுக்கப்புறம் உன்னை எங்கேயும் போக விடமாட்டேன். எப்பவும் என்கூட தான் இருக்கணும். நானும் எப்பவும் உன்கூட தான் இருப்பேன். என்னைத் தனியா விட்டுட்டு போயிடக் கூடாது. உன்னை விட்டுப் பிரிந்து என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது மா"

'சரிங்க மேடம். வேற ஏதாச்சும் இருக்கா? நம்ம வீட்டுக்கு நானே கள்ளச் சாவி ரெடி பண்ணனும் போலையே'

"அப்படி மட்டும் நீ என்னை ஏமாத்திட்டு விளையாடப் போனா உன்னை groundல விரட்டி விரட்டி அடிப்பேன்"

சிரித்தேன்.

'இப்படி தனியா மாடியில நின்னு பேசுறியே உனக்கு பயமா இல்லையா?'

"எதுக்கு பயப்படனும்? போன்ல நீ இருக்க. நம்ம ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா நிலா இருக்காங்க. நிலாவுக்கு இந்தப் பக்கம் நான் இருக்கேன். அந்தப் பக்கம் நீ மா.நான் எப்பவும் இப்படி தான் நினைப்பேன். ஊருக்குப் போறப்ப எல்லாம் நிலா வர்றதுக்காகத் தான் காத்துகிட்டு இருப்பேன். நிலாவை பார்த்தா நீ என்கூட இருக்கிற மாதிரியே இருக்கும் மா"

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

'என்னை இவ்வளோ லவ் பண்றியே.. do i really deserve ur love pa?'

"இப்படி எல்லாம் கேட்டு என்னை கஷ்டப் படுத்தாத மா. நான் எல்லாத்தையும் சொல்றேன். நீ சொல்லமாட்ட. நீ என் மேல எவ்வளோ பைத்தியமா பாசமா அக்கறையா காதலா இருக்கன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நம்மளை மாதிரி யாருமே இந்த உலகத்துல இருக்க முடியாது மா"

'கரெக்ட் தான் நீ சொல்றது. எல்லாரும் வாசல் தெளிச்சு கோலம் போட ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம இரண்டு பேரு மட்டும் தான் இன்னும் உறங்கவே இல்லை. நம்மளை மாதிரி யாருமே இருக்க முடியாது'

"ச்சி போடா கிண்டல் பண்ணாத. இன்னும் 5 mins பேசிட்டு உறங்கப் போலாம். ஒகே வா?"

'இல்லை இன்னும் 10 mins பேசிட்டுப் போலாம். ஒரு நிமிஷம்டி சமையல் பண்ற அக்கா வந்துட்டாங்க. என்ன சமையல் பண்றதுன்னு சொல்லிடுறேன் அவங்கள்ட்ட'

"நீ எதுவும் சொல்ல வேணாம். போனை அவங்க கிட்ட கொடு நான் சொல்லிக்கிறேன் என்ன சமைக்கணும்னு. எப்ப பார்த்தாலும் ஒரே மெனு தான், இன்னைக்காவது வேற ஏதாச்சும் சாப்பிடு"

போனை அக்காவிடம் கொடுக்க 5 நிமிடங்கள் பேசினாள். இது எல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு சமைக்கணுமா என்று அந்த அக்கா கேட்டது என் காதில் விழுந்தது. அக்கா முகத்தில் கவலை தெரிந்தது, சமைத்து விட்டு இன்று சீக்கிரம் போக முடியாதே என்று.

'என்னடி சொன்ன அந்த அக்கா இவ்வளோ சோகமா ஆயிட்டாங்க'

"எப்ப பார்த்தாலும் லெமன் சாதம், தக்காளி சாதம், வெஜ் ரைஸ் இதான் சமைக்கிறாங்க. அதான் இன்னைக்கு டிபனுக்கு சப்பாத்தி, தக்காளி சட்னி, மதியத்துக்கு சாம்பார், இரண்டு பொறியல், ரசம், அப்புறம் இப்ப உனக்கு பால் சூடு பண்ணி தரச் சொன்னேன், உன்னோட லஞ்ச் பாக்ஸை நல்லா கழுவச் சொன்னேன், உன்னோட ட்ரெஸ்ஸ ஊற வச்சு துவைக்கச் சொன்னேன் நீ ஊற வைக்கவும் மறந்திடுவன்னு, உன் ரூம்ம கிளீன் பண்ணச் சொன்னேன் சாயங்காலம். இவ்வளவு தான் சொன்னேன். அப்புறம் நம்ம கல்யாணத்துக்குப் பிறகு அவங்களை வரவேணாம்னு சொல்லிட்டேன் மா"

'உனக்கும் சமைக்கத் தெரியாதே!'

"தெரியுமோ தெரியாதோ நான் சமையல் பண்றத தான் நீ சாப்பிடனும்"

'நல்ல சாப்பாடு என்னைக்கு கிடைக்கும்னு தெரியலையே'

"அடிங்க. இங்க தூறல் விழ ஆரம்பிக்குது மா திடீர்னு... ஹையா மழையும் வருது"

'நனையாத. கீழ இறங்கி ரூம்க்கு போடி. உன் உடம்புக்கு ஏதாச்சும் ஆயிடப் போகுது. ப்ளீஸ் பா'

"நோ மா. நனையப் போறேன். போன்ல நீ. என்னை நனைச்சுக்கிட்டு மழை. எப்படி இருக்கு தெரியுமா? இப்படி ஒரு மழைக்க்காகத் தான் இவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் வந்திருக்கு. I am soooooooo soooooo happy"

'இப்பவே இந்த மழைல எல்லாம் நனைஞ்சுக்கோ. கல்யாணத்துக்குப் பிறகு குடையை எடுத்துட்டு ஓடி வந்திடுவேன்'

"ha ha ha. உன் குடையை வீசி எறிஞ்சிடுவேன் மா. உன்னோட சேர்ந்து நனையனும் அப்ப தான் என்னோட முழுக் கனவும் நனவாகும்"


"சார் 100 Feet Road வந்திடுச்சு, எந்த கட்ல திரும்பனும் உங்க வீட்டுக்கு" - டிரைவர் அண்ணா.

'நான் இங்கயே இறங்கிக்கிறேன் அண்ணா'.

"சார் மழை பயங்கரமா பெய்யுது. லேட் நைட் வேற. எப்படி போவீங்க தனியா?"

'நான் தனியா இல்லை அண்ணா. என் துணையோட தான் இருக்கேன்' என்று சொல்லிவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.


'இதோ நானும் நனைய வந்துட்டேன்டி...'

நாங்கள் இருவர் மட்டுமே நனைந்து கொண்டிருக்கும் இந்த மழை என்றுமே நிற்கப் போவது இல்லை.

ஓட்டுனர் உரிமம்

நான் இன்னும் ஓட்டுனர் உரிமம்
எடுக்கவில்லை என்று
நண்பர்கள் கேலி பேசுகிறார்கள்.
அவர்களிடம் எப்படி சொல்வேன்,
உன்னை வட்டமடித்தால்
உரிமம் கிடைக்கும் என்று
விதிமுறை இருந்திருப்பின்,
உன்னைச் சுற்றி எட்டு என்ன,
என் இதயத்தையே போட்டுக்
காண்பித்து என்றோ உரிமை
பெற்றிருப்பேன் என்று...!

உன் பிறந்தநாள்

உலகத்தில் கொண்டாடப்படும்
ஒரே பெண் தெய்வத்தின்
பிறந்தநாள் உன்னுடையது
மட்டும் தான்...!

'பிள்ளை வரம்' வேண்டி
அம்மனை வழிபடுவார்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த அம்மனையே வரமாய்
பெற்றது எப்படி என்று
உன் தாய் தந்தையிடம்
கேட்டுச் சொல்வாயா?