Pages

Thursday, February 09, 2012

டைரி.... பக்கம் ஒன்று

டைரி.... விருப்பமில்லாதவர்கள் தொடர வேண்டாம்.

எனக்கு சில பழக்க வழக்கங்கள் இருக்கின்றது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலோ இல்லை துக்கம் தொண்டையை அடைத்தாலோ நான் சிலவற்றைத் தவறாமல் செய்வேன்.

1. தனிமையில் சில மணித் துளிகள் செலவிடுவேன். கொஞ்ச தூரம் நடந்து செல்வேன் என்னுடன் பேசிக் கொண்டே.

2. தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தாலும் என் மடிக்கணினியில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பேன்.

3. கல்லூரி விடுதியில் சேர்ந்த நாள் முதல் எனக்கு பிடிக்காத ஒன்று துவைப்பது. ஆனால், என் ஆடைகளைத் துவைக்க ஆரம்பிப்பேன்.

4. ஐஸ் க்ரீம் சாப்பிடுவேன் தனியாக அமர்ந்து.

5. நிலவை ரொம்ப நேரம் வேடிக்கை பார்ப்பேன்.

6. பைக்கில் வெகு தூரம் செல்வேன்.

7. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் பதிவு எழுதுவேன்.

இந்த வாரம் முழுக்க இவை எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கின்றேன். இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியான தருணங்களில் இவற்றை செய்ய எனக்கு சந்தர்ப்பம் அமைவது இல்லை.

என் நண்பர்களிடமும் டைரியிடமுமே இவ்வாறான புலம்பல்களை புலம்புவது வழக்கம். சில வருடங்களாக டைரி எழுதுவதுமில்லை. புலம்பல்களை கேட்கும் நிலையில் நண்பர்களும் தற்போது இல்லை.

வாழ்க்கையைப் பற்றி யோசித்து யோசித்தே எப்படி வாழப் போகிறேன் என்ற பயம் நிறைய வந்துவிட்டது. என்னுடன் நன்றாக பழகிய சில நாட்களிலேயே என்னைப் பற்றி கூறிவிடுவர் என் நண்பர்கள் நான் ஒரு Sentimental Idiot என்று. அந்த குணத்தால் பல நெருங்கிய நண்பர்களை அடைந்திருக்கின்றேன். அடைந்த அதே நண்பர்களையும் இழந்திருக்கிறேன்.

என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று ஏன் சில மனிதர்களை நான் சந்திக்கிறேன். நன்றாக பழகுகிறேன். என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் ஏன் திடீரென்று அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள் என்று. இப்படி ஒவ்வொரு நபரும் என்னை விட்டுப் பிரிந்து செல்லும் போது நான் எடுக்கும் ஒரே முடிவு அடுத்து யாரிடமும் senti, emotional லா இருக்கக் கூடாதென்று. ஆனால், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை அல்லவா. மீண்டும் பழகி என்னை நானே வருத்திக் கொள்கிறேன். என்னால் பிறரை சாராமல் வாழவே முடியாதா என்ற பயம் தான் என்னை சில நாட்களாக வாட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூட இவற்றை எல்லாம் என் மனதினுள் அடைத்து வைக்க முடியவில்லையே :-(

என்னை நான் மாற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால் என் சுயத்தை நான் இழந்து விடுவேனோ என்று தோன்றுகிறது. அதன் பின் எனக்கென்று இருந்த எல்லா அடையாளங்களும் காணாமல் போய் விடுமே. ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கின்றது. பிறரைச் சாராமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சரி போதும் என் சோகக் கதை. சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அவற்றை படித்து முடிக்க வேண்டும்.

1. நான் எல்லாம் ஆங்கில புத்தகங்கள் படிப்பேன் என்று என் கனவிலும் நினைக்கவில்லை. ஆங்கில புத்தகங்களை படிக்காதமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, புக் ஸைஸ் பார்த்தாலே ஒரு அலர்ஜி. இரண்டு, தமிழில் படிக்கும் போது கிடைக்கும் ஒரு ஃபீல் மிஸ் ஆகும். ஆனால், இவர் எழுதிய புத்தகங்கள் அப்படி இல்லை. படம் பார்த்து மட்டும் தான் நான் அழுகிற டைப் என்று நினைத்தேன். ஆனால், இவர் புத்தகங்கள் படித்து முதல் முறை கண் கலங்கினேன். இவர் இது வரை எழுதிய நான்கு புத்தகங்களை படித்து விட்டேன். இவரது சமீபத்திய புத்தகத்தை வாங்கி இருக்கிறேன். விரைவில் படிக்க வேண்டும். நான் சொல்லும் எழுத்தாளர் Chetan Bhagat.


அவரது புத்தகங்கள்,
  • Five Point Someone (2004)
  • One Night @ the Call Center (2005),
  • The 3 Mistakes Of My Life (2008)
  • 2 States (2009).
  • Revolution 2020(2011)

2. காதல் புத்தகங்கள் மட்டும் தான் மிக விரும்பிப் படிப்பேன். தத்துவ புத்தகங்கள் படிக்கும் அளவு எனக்கு பொறுமை இல்லை. அதான், தினம் தினம் வாழ்க்கையே பல தத்துவங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றதே :-) இவர்(Ravinder Singh) எழுதிய முதல் புத்தகத்தின் தலைப்பு தான் என்னை மிகவும் கவர்ந்தது, "I TOO HAD A Love Story". நேரம் கிடைத்தால் இப்புத்தகத்தை நீங்களும் படித்துப் பாருங்கள். காதலை இவரை விட யாரும் கண்டிப்பாக அழகாகச் சொல்ல முடியாது. இவரது இரண்டாவது புத்தகம் "Can Love Happen Twice". இம்முறையும் தலைப்பு தான் என்னை வாங்கத் தூண்டியது. முதல் புத்தகத்தைப் போல இதுவும் அட்டகாசமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த இரண்டு புத்தகங்களும் எப்பொழுது விற்பனைக்கு வந்தன என்று எனக்குத் தெரியவில்லை. Odyssey, Landmark அடிக்கடி போகும் பழக்கம் இல்லாததால். சமீபத்தில் Royal Meenakshi Mall சென்றேன். பார்த்ததும் வாங்கிவிட்டேன் இரண்டையும். "Can Love Happen Twice" படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். ஒரே நாளில் படித்து அதன் சுவாரஸ்யத்தை மிஸ் பண்ண விருப்பமில்லை. அதனால் ஆமை வேகத்தில் போய்க் கொண்டிருக்கின்றேன் :-)

அடுத்த பக்கத்தில் சந்திப்போம்....

Tuesday, January 03, 2012

ஆயுள் தண்டனை

உன்னை
காதலித்தது
என் இதயம்.
என் கண்ணீருக்கு
ஏன் விதித்தாய்
ஆயுள் தண்டனை!