Pages

Friday, November 29, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 9

நிலா அவள் பாட்டி வீட்டிற்கு சென்று விட்டாள். எப்பவும் வரும் விடுமுறை தான் ஆனால் அவளை இந்த முறை மிகவும் மிஸ் பண்ணினேன். அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.. அவள் பாட்டி வீட்டு நம்பர் தெரியாது. அவள் வீட்டிற்கு போன் செய்து அவள் அம்மாவிடம் நம்பர் வாங்கி விடலாமா என்று தோன்றியது. ஆனால், அவள் பாட்டி வீட்டில் போன் இருக்காது என்று நினைக்கிறேன். இருந்திருந்தால் கண்டிப்பாக கொடுத்து விட்டு தான் சென்று இருப்பாள். பகல் பொழுது முழுவதையும் கிரிக்கெட் ஆடியே கழித்தேன். மாலை டிவி பார்க்கலாம் என்றால் அம்மா சீரியலாக பார்த்து என்னையும் சீரியல் பைத்தியம் ஆக்கிவிடுவார் என கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடினேன். இப்படியே நாட்கள் சென்றது.

ஒரு வியாழக்கிழமை கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தேன். வந்ததும் வராததுமாய் அம்மா 'எங்கடா போய் இருந்த? நிலா கால் பண்ணிருந்தா' என்றார். "அடுத்து எப்பம்மா கால் பண்றேன்னு சொன்னா?" என்று கேட்க 'அதை பத்திலாம் ஏதும் சொல்லல டா அவ பாட்டி வீட்டுல இருக்கா போல வெளிய வந்தாளாம் அதான் கால் பண்ணாளாம்.. ரிசல்ட் எப்ப வருதுன்னு கேட்டாள்' என்றார். ஹ்ம் சரி மா என்று பதில் அளித்துவிட்டு என் அறைக்குச் சென்றேன். ச்ச மிஸ் செய்து விட்டோமே என்று மிக வருத்தமாக இருந்தது.

மறுநாள், நண்பர்கள் வந்து என்னை விளையாட அழைக்க “எனக்கு தலை வலி அதனால நான் வரலை” என்றேன். அதற்கு சந்தோஷ ‘டேய் போன வாரம் கால்ல அடிபட்டு ஓட முடியாத நிலைமைல இருந்த… அப்பவே விளையாட வந்த.. இப்ப என்னாச்சு? சாதாரண தலை வலிக்கு வரலன்னு சொல்ற’ என்றான். ‘நான் விளையாடப் போறேன்னு தான் சொன்னேன்டா அம்மா தான் தலை வலி அதனால இன்னைக்கு ஒரு நாள் வெயில்ல விளையாடப் போகாம வீட்ல இருன்னு சொல்லிட்டாங்க’ என்றேன். ‘நான் வேணா அம்மாகிட்ட பேசிப் பார்க்கிறேன் டா’ என்று ராஜா உள்ளே நுழைய முயற்சிக்க “அம்மா கோவிலுக்குப் போய் இருக்காங்க. அவங்க வந்ததும் நான் கேட்டு வர முயற்சி பண்றேன் டா” என்றேன். ‘சீக்கிரம் வந்து சேரு’ என்று சொலிவிட்டு எல்லாரும் கிளம்பிச் சென்றனர்.

நான் என் அறைக்குப் போய் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளயாட ஆரம்பித்தேன். அம்மா சமையல் வேலையை முடித்து விட்டு என் அறையை சுத்தம் செய்ய வந்தார். என்னைப் பார்த்ததும் ‘என்ன அதிசயமா இருக்கு! விளையாடப் போகாம இருக்க?’ என்றார்.  ஏதாச்சும் உளறினால் மாட்டிப்பேன் என்று “நான் விளையாடக் கூப்பிட்டேன் மா பசங்களை. ரொம்ப வெயில் அடிக்குதாம் இன்னைக்கு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு லீவுன்னு சொல்லிட்டாங்க.. என்ன பசங்களோ இந்த வெயிலைக் கூட தாங்கிக்க முடியல.அடுத்து என்னைக் கூப்பிடும் போது நான் வரலன்னு சொல்லிடப் போறேன்.. ஆனால் என்னால தான் விளையாடாமல் இருக்க முடியாது நான் அவங்க கூப்பிட்ட உடனே போயிடுறேன்” என்றேன். ‘ஒரு நாள் தான. நான் ஏற்கனவே உன்னை தினமும் போகாதன்னு திட்டிட்டு இருக்கேன். என்னால 5 நிமிஷம் கூட வெயில்ல நடந்து போக முடில. ஆனால் நீ ஏதோ நிலாக் குளியல் எடுக்கிற மாதிரி அந்த வெயில்ல ஆடிட்டு வர்ற! பாரு வெயில்ல விளையாடி எப்படி கறுத்துப் போய்ட்டன்னு. இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கலாம்னு சொன்ன பசங்கள கூட்டிட்டு வா அவங்களை பாராட்டனும்’ என்றார். “போங்கம்மா நானே இன்னைக்கு விளையாட முடியலயேன்னு பீலிங்க்ஸ்ல இருக்கேன்’ என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டேன்.

நான் ஏன் விளையாடப் போகாமல் இருக்கிறேன் என்று இனி நான் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கே புரிந்திருக்கும் இப்பொழுது. கேம்ஸ் ஆடிக் கொண்டிருந்தேன் மனமே இல்லாமல். சிறிது நேரத்தில் போன் மணி அடிக்க பதறி அடித்துக் கொண்டு ஓடினேன். அம்மாவும் கிச்சனில் இருந்து வர “இவ்வளோ நேரமா ரிங் அடிக்குது என்ன மா பண்ற எடுக்காம” என்றேன். ‘என்ன டா சொல்ற.. இப்ப தான் போன் வந்த மாதிரி இருக்கு. ஒரு ரிங் கூட முடியலையே’ என்றார். “இல்லம்மா நிறைய ரிங் வந்துச்சு உனக்கு கேட்கல போல கிச்சன்ல பிசியா இருந்திருப்பீங்க” என்றேன். ‘இல்லையே போன் சத்தம் எப்பவும் எனக்கு கேட்குமே’ என்றார். “அம்மா எங்கிட்ட பேசினது போதும் முதல்ல போன்ல யாருன்னு பாருங்க” என்றேன். ‘பாரு உன்னோட பேசிட்டே நான் அதை மறந்துட்டேன்’ என்று சொல்லிவிட்டு போனை எடுத்து பேச ஆரம்பித்தார். அம்மா பேசுவதில் இருந்து அவர் அத்தையுடன் பேசுகிறார் என்று தெரிந்தது. நான் போய் டிவி பார்க்க ஆரம்பித்தேன். பேசி முடித்துவிட்டு அம்மா என்னிடம் வந்து ‘டேய் டிவி தான பார்த்துட்டு இருக்க அடுத்து போன் ஏதாச்சும் வந்தா அட்டென்ட் பண்ணு. கிச்சன்ல இருக்கிறதுனால கேட்காம போயிடப் போகுது எனக்கு’ என்றார். அதுக்கு தான இங்க உட்கார்ந்திட்டு இருக்கேன் என்று மனதில் நினைத்தவன் “சரி மா” என்றேன்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் போன் ஒலித்தது. மீண்டும் வேகமாக ஓடிச் சென்று போனை எடுத்தேன் நல்ல வேலை அம்மா பார்க்கவில்லை. “ஹலோ” என்றேன். ‘சார் இது பாலாஜி எலெக்ட்ரிகல்ஸா’ என்று குரல் எதிர்முனையில் இருந்து.”ராங் நம்பர்” கடுப்பில் போனை வைத்தேன். டிவி போர் அடிக்கவே ‘five point someone’ கதை புக்கை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். பாதி புக் படித்து முடிக்கும் போது மீண்டும் போன் வந்தது. இந்த முறையும் வேறு யாராச்சும் இருக்கும் என்று எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாகப் போனேன். ‘போனை எடுக்காம என்னடா பண்ற?’ என்று அம்மாவின் குரல் கேட்டது. அட்டென்ட் பண்ணிட்டேன் மா என்று பதிலளித்துவிட்டு “ஹலோ” என்றேன்.

‘போனை எடுக்க இவ்வளோ நேரமா டா?’ என்று ஒரு பெண் குரல்.

“ஹே நிலா.. எப்படி இருக்க?”

‘நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. ஏன் இவ்வளோ நேரம்? சார் அவ்வளோ பிசியா?’

“இல்ல.. ரூம்ல புக் படிச்சிட்டு இருந்தேன் அதான்”

‘என்னை விட புக் தான் உனக்கு முக்கியமா?’

“உன்னோட கால்னு எனக்கு தெரியாதுல்ல”

‘நான் இன்னைக்கு கால் பண்ணுவேன்னு உனக்கு தெரியாது?’

“தெரியும் நீ கண்டிப்பா பண்ணுவன்னு”

‘எப்படி?’

“நான் எப்படி இன்னைக்கு விளையாடப் போக மாட்டேன்னு தெரியும் உனக்கு? வீட்டுல தான் கண்டிப்பா இருப்பேன்னு கால் பண்ணல்ல அப்படி தான்” என்றேன்.

சிரித்தாள்.

‘ஆமா ஏன் இன்னைக்கு நீ விளையாடப் போல?’

“ஒரு லூசு கால் பண்ணும்னு தான். இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா?”

‘இல்ல டா. பாட்டி வீட்ல போன் இல்ல. பக்கத்து ஊருக்கு நேத்து வந்தோம். அதான் உனக்கு போன் பண்ணேன். ஆனால் அம்மா எடுத்தாங்க என்ன சொல்லன்னு தெரியலை அதான் 10த் ரிசல்ட் பத்தி கேட்க போன் பண்ணேன்னு சொன்னேன். இன்னைக்கு உன் மேல நம்பிக்கை நீ என் போனுக்காக காத்திட்டு இருப்பன்னு. பாட்டிட்ட ரிசல்ட் எப்ப வரும்னு ஸ்கூலுக்கு போன் பண்ணி கேட்கனும்னு சொல்லிட்டு இன்னைக்கு வந்திருக்கேன் டா’

“என்னை ரொம்ப மிஸ் பண்ணியா?”

‘என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் நீ உன்னை மிஸ் பண்ணாம இருப்பேனா? எப்ப ரிசல்ட் வரும்னு இருக்கு டா. உன்னை பார்க்கணும்’

“ரிசல்ட் மே 18 வர்றதா சொல்றாங்க. அதனால நீ 15 கிட்ட வந்திடு”

‘சரி டா பாட்டி வந்துட்டாங்க. நான் வைக்கிறேன் ஊருக்கு வந்துட்டு பேசுறேன்’ என்று சொல்லிவிட்டு கட் செய்தாள்.

நிலாவின் குரல் கேட்டது எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது.

மே 18 – பதம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தது.

நானும் நிலாவும் ரிசல்ட் பார்க்கச் சென்றோம். நிலா எதிர்பார்த்தது போல நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். 1100க்கு 1047. ஆனால் அன்று எதிர்பாராத ஒன்றும் நடந்தது நான் 1002 எடுத்திருந்தேன். என்னை விட மிகவும் சந்தோசப்ட்டவள் நிலா தான்.

பின் ஸ்கூலுக்குச் சென்றோம். நிலா மெட்ரிக் தேர்வில் எங்கள் மாவட்டத்தில் முதலாவதாக வந்திருந்தாள். அளவில்லா மகிழ்ச்சி எனக்கு. அவளுக்கு வாழ்த்துக்‌களாக குவிந்தது. அனைத்து ஆசிரியர்கள் நண்பர்களின் பாராட்டு மழையில் நனைத்து கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் நான் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னிடம் வந்து தலைமை ஆசிரியர் வாழ்த்துக்களைக் கூறினார். எதுக்கு சார் என்று நான் கேட்க நீ தான்பா ஸ்கூல் செகன்ட் என்றார். “சார் என்னால நம்ப முடியல” என்றேன். ‘எங்களாலையும் தான்பா’ என்றார் சிரித்தவாறே. ‘12 ல இதை விட நல்லா ஸ்கோர் பண்ணனும். நிலா உனக்கு ஒரு போட்டி வந்தாச்சு. ரொம்ப நல்லா படிக்கணும் இனிமேல’ என்று எங்கள் இருவரையும் வாழ்த்தி விட்டுச் சென்றார்.

நிலா ‘டேய் சூப்பர் டா. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா நீ ஃபர்ஸ்ட் வந்திருக்கலாம். 12 ல நீ ஃபர்ஸ்ட்டா வரனும்’ என்றாள்.

“முதல் இடம் எப்பவும் உனக்கு தான் சொந்தம். அதை யாரும் அசைக்க முடியாது. எனக்கு நல்ல ஸ்கோர் எடுத்தாப் போதும்” என்றேன்.

‘நீ நல்லா படிச்சு முதலா வருவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்றாள் நிலா.

பதினொன்றாம் வகுப்பு அட்மிசன் இரண்டு நாட்களில் நடந்தது. நான் நிலா வித்யா அஷோக் கார்த்திக் அனைவரும் முதல் க்ரூப் எடுத்தோம்.

நிலாவிடம் தமிழ் சாரிடம் ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்ததை சொல்லிவிட்டு வா என்றேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு வந்தாள். நானும் சென்று “சார் நானும் முதல் க்ரூப் எடுத்திருக்கேன்” என்று சொல்ல ‘வாழ்த்துக்கள்’ என்றார். “சார் முதல் க்ரூப்லயும் ரெண்டு செக்சன் இருக்குமா?” என்று நான் கேட்க அவர் கோபத்தில் ‘தெரியாது. எனக்கு ஸ்பெசல் க்ளாஸ்க்கு நேரம் ஆச்சு’ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

‘ஏன்டா அவர்ட்ட போய் வம்பிழுத்திட்டு வர்ற?’ என்றாள் நிலா.

“அப்புறம் என்ன நம்மள போன வருஷம் பிரிச்சாருல்ல. இனி என்ன பண்றாருன்னு பார்க்கிறேன்” என்றேன்.

‘அனால் நீயே ஐடியா கொடுத்திட்டு வர்ற ரெண்டு செக்சனுக்கு’

“அய்யோ இருக்கிறது 25 பேரு. ஒன்னுக்கே வழியைக் காணோம் இதுல எங்க ரெண்டு பிரிக்கப் போறாங்க’ சிரித்தேன்.

‘எனக்கு பயமா இருக்கு டா. அவர் நமக்கு க்ளாஸ் எடுக்க வந்தா ஏதாச்சும் பிரச்சனை பண்ணுவாரு உங்கிட்ட’

“பயப்படாத நமக்கு தமிழுக்கு லக்ஷ்மி மேடம் தான் வர்றாங்க” என்றேன்.

‘ஹ்ம்ம்’ என்றாள். அவள் கண்களில் இருந்த பயம் போகவில்லை.

11ம் வகுப்பு முதல் நாள்,
தமிழ் சார் உள்ளே நுழைந்தார். என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே ‘XIth முதல் க்ரூப்புக்கு நான் தான் க்ளாஸ் டீச்சர். என்னால உங்களை விட்டுப் பிரிய முடியல. அதான் நானே கேட்டு வாங்கி இந்த செக்சனுக்கு க்ளாஸ் டீச்சர் ஆயிருக்கேன்’ என்றார்.

நிலா கண்களில் ஒரு பயம் தெரிந்தது என்னை ஏதும் செய்து விடுவார் என்று.


உறங்கச் செல்கிறேன்….

Friday, November 15, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 8

ஒரு வழியாக Block C 307 ஐ கண்டு பிடித்தேன். நிலா வெளியில் நின்று கொண்டிருந்தாள்.

எனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றாள் என்று தெரிந்தும், “என்ன நிலா ஹால் டிக்கெட் மறந்துட்டியா? எக்ஸாம் ஹாலுக்குள்ள போகாம வெளிய நின்னுட்டு இருக்க?” என்றேன்.

‘அதை விடுங்க சார். நீங்க இந்த Block ல என்ன பண்றீங்க? உங்க ஹால் டிக்கெட் பறந்து வந்திடுச்சா?’

சிரித்தேன்.

“எப்படி நான் வருவன்னு நினைச்ச?”

‘உன் மேல இருந்த நம்பிக்கைல. என்னை நீ இன்னும் புரிஞ்சுக்காம இருக்கமாட்ட அப்படிங்கிற நம்பிக்கைல’

“சாரி உன்னோட சண்டை போட்டதுக்கு”

‘விடு அதை. சீக்கிரம் சொல்லு டா. எக்ஸாம்க்கு நேரம் ஆயிடுச்சு. நீ உன் Block வேற போகணும்’ என்றாள் நிலா.

“என்னைப் பார்த்தால் போதாதா? நான் சொன்ன தான் நல்லா எழுதுவியா?”

‘அய்யோ. சொல்லுடா சீக்கிரம்’

“All the best. கண்டிப்பா நீ தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுக்கப் போற. உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”

‘நீ எடுத்தா நல்லா இருக்கும் டா’

“கனவுல கூட அப்படி நடக்காது”

‘நீ நினைச்சா கண்டிப்பா சாதிக்கலாம்’

“ஏன் காமெடி பண்ற இப்போ. நான் ஃபர்ஸ்ட் கிளாஸ் எடுக்கிறதே பெரிய விசயம்னு உனக்கும் தெரியும்ல”

‘டேய் ஃபர்ஸ்ட் க்ரூப் எடுக்கணும்னா நல்ல ஸ்கோர் வேணும். ப்ளீஸ் நல்லா எழுதுடா’

எதுவும் பதில் பேசாமல் சிரித்தேன்.

‘எருமை பன்னி பிசாசு. சரி நேரம் ஆச்சு நான் உள்ள போறேன். நீயும் கிளம்பு’ என்றாள்.

அப்பொழுது ஏதேச்சையாக வித்யாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்க்க அவளுக்கும் ‘Best of luck’ என்றேன்.

இதைப் பார்த்த நிலா ‘உங்களை வரச் சொன்னது எனக்கு வாழ்த்து சொல்ல மட்டும் தான். ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் இல்ல’ கோபித்துக் கொண்டாள்.

“நம்ம வித்யா தான?”

‘அப்படியா சரி அடுத்த எக்ஸாம்ல இருந்து நான் உங்க block வர்றேன்’

“என்னைய அலைய விட வேணாம்னு பார்க்கிறியா? சூப்பர்”

‘அப்படி இல்ல சார். நீங்க இங்க வந்து விதியாக்கு வாழ்த்து சொல்லுங்க. நான் போய் கௌதம்க்கு வாழ்த்து சொல்றேன். ஓகேவா?’

“சாரி. எக்ஸாம் முடிச்சிட்டு பார்க்கலாம். நல்லா பண்ணு” சொல்லிவிட்டு என் எக்ஸாம் ஹாலுக்கு விரைந்தேன்.

வந்து சேரும் போது மணி 10.05.

“excuse me sir”

‘you are late. not allowed inside’ என்று எக்ஸாம் சூப்பர்வைஸர் சொல்ல “சாரி சார். நான் இந்த ஸ்கூல் இல்ல. எக்ஸாம் ஹால் கண்டுபிடிச்சு வர நேரம் ஆயிடுச்சு” என்றேன்.

ஆனால் அவர் என்னை விட புத்திசாலி என்பதால் ‘உன் ஸ்கூல் பசங்க எல்லாரும் சரியான நேரத்துக்கு வந்துட்டாங்களே’ என்றார். உள்ளே இருந்து கார்த்திக்கும் அஷோக்கும் இப்ப என்ன சொல்லுவ என்பது போல என்னை பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘சார் முதல் பரீட்சை அதனால கோவிலுக்கு போயிட்டு வர்றேன். அடுத்த எக்ஸாம்ல இருந்து ஸ்கூல் பஸ்ல வருவேன் சார்’

‘சென்டிமென்ட்ல அட்டாக் பண்ணிட்டான் டா’ கார்த்திக் அஷோக்கிடம் சொன்னது எனக்கே கேட்டது. நல்ல வேளை அவருக்கு கேட்கவில்லை.

“கற்பக விநாயகர் கோவில் விபூதி எடுத்துக்கிறீங்களா சார்?”

‘இல்லை தம்பி வேணாம். நீ போய் எக்ஸாம் எழுது. நல்லா பண்ணு தம்பி. Answer sheet எடுத்துக்கோ. இந்தா question paper’ அவர் டோனே மாறியது.

“சாரி விநாயகா. சின்னதா பொய் சொல்ல வேண்டியது ஆயிடுச்சு” பாவமன்னிப்பு கோரிவிட்டு எழுத ஆரம்பித்தேன்.

எக்ஸாம் முடிந்ததும் எங்கள் கேங் மீட்டிங் ரொம்ப நாளுக்குப் பின் நடந்தது. என்னையும் நிலாவையும் விட நாங்கள் சேர்ந்தது மற்றவர்களுக்குத்  தான் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கார்த்திக்கும் அஷோக்கும் காலை எக்ஸாம் ஹாலில் நடந்த கூத்தை சொல்லி நாக்கள் அடித்துக் கொண்டிருந்தனர்.

‘அவர் மட்டும் விபூதி கேட்டிருந்தா இன்னும் கொஞ்சம் காமெடி ஆயிருக்கும்’ என்று என்னை கலாய்த்துக் கொண்டிருந்தான் அஷோக்.

அனைவரும் விடை பெற்றோம் வீட்டிற்கு. நிலா என்னிடம் வந்தாள் ‘அடுத்த எக்ஸாம்ல இருந்து சீக்கிரம் வா என்னைப் பார்க்க. என்னை மட்டும்’ அழுத்திச் சொல்லிவிட்டு அவளும் கிளம்பினாள்.

எக்ஸாம் என்றால் முன்பெல்லாம் பயமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் நிலாவிற்கு All the Best சொல்வதற்காகவே எப்பொழுது எக்ஸாம் வரும் என்று காத்துக் கிடக்க ஆரம்பித்தேன். எல்லாம் எக்ஸாமிற்கும் நிலாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தான் சென்றேன். எந்த டென்சனும் இல்லாமல் எக்ஸாம் எழுதுவது போல உணர்ந்தேன். ஒரு வழியாக எக்ஸாம் எல்லாம் முடிந்தது.

விடுமுறை தொடங்கியது. எக்ஸாம் முடிந்த சந்தோசத்தில் எல்லாரும் இருந்தோம். இருந்தாலும் அடுத்து XIth தொடங்கும் வரை பார்த்துக் கொள்ள முடியாது என்ற சோகம் எல்லார் முகத்திலும் இருந்தது. ‘happy holidays’ சொல்லி எல்லாரும் விடை பெற்றோம்.

வழக்கம் போல நிலாவும் நானும் சைக்கிளை உருட்டிக் கொண்டே சென்றோம்.

“நிலா அடுத்து உன்னை எப்ப பார்க்க முடியும். ஸ்கூல் தொடங்கிற அன்னைக்குத் தானா?”

‘ஆமா டா. நான் ஊர்ல இருக்க மாட்டேன். கிராமத்துல இருக்கிற எங்க பாட்டி வீட்டுக்குப் போறேன் டா’

என் முகம் வாடிப் போனதை கண்டிப்பாக அவள் உணர்ந்திருப்பாள். அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.

‘நீ எங்கேயும் போகலையா டா?’

“இல்ல நிலா. இங்க தான் இருப்பேன். கிரிக்கெட் டிவின்னு பொழுதைப் போக்க வேண்டி தான்”

‘ஹ்ம்ம்’

“உன்னைப் பார்க்க அவ்வளோ நாள் காத்துட்டு இருக்கனுமா?’

‘என்னடா ஆச்சு உனக்கு?’

“தெரியல”

‘எல்லா லீவுக்கும் நான் ஊருக்குப் போறது தான டா. அப்ப எல்லாம் நார்மலா தான இருப்பா. இப்ப என்னாச்சு?’

“ஒன்னும் ஆகலையே நான் நல்லா தான் இருக்கேன்” சிரித்தேன் அவள் சிரிப்பதற்காக.

‘ரொம்ப கஷ்டப்பட்டு சிரிக்காத. சரி உனக்காக எக்ஸாம் ரிசல்ட் வர்ற அன்னைக்கு நான் திரும்பி வந்திடுறேன். நாம ரெண்டு பெரும் சேர்ந்து போய் ரிசல்ட் பார்க்கலாம் ஓகேவா?  சந்தோசமா?’

“ஏதோ கொஞ்சம்”

சிரிப்பு மட்டும் பதிலாய் அவளிடம் இருந்து.

‘சரி டா நான் கிளம்புறேன் அம்மா தேடுவாங்க’ புறப்பட்டுச் சென்றாள்.

“Miss you Nila” என்றேன்.

சிறிது தூரம் சென்றவள் என்னைத் திரும்பி பார்த்தாள் ‘ஏதோ சொன்ன மாதிரி இருந்தது என்ன டா?’ என்றாள்.

“Happy journey. Enjoy the Holidays. Have fun ன்னு சொன்னேன்” என்றேன்.

‘ஓ ஓகே. நன்றி டா. வேற ஏதும் சொல்லலையே நீ?’

“இல்ல நிலா”

‘நிஜமா வேற ஏதும் சொல்லல?’

“இல்ல நிலா”

‘ஹ்ம்ம். நீயும் என்ஜாய் பண்ணு. வெயில்ல விளையாடி ரொம்ப கறுப்பாயிடப் போற. ஏற்கனவே நீ ரொம்ப கலர் வேற :-P டாடா’ விடை பெற்றாள் சிரித்துக் கொண்டே.

சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி பார்த்தவள்,

‘Miss you too da’ என்றாள். 

உறங்கச் செல்கிறேன்….

Saturday, November 09, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 7


நண்பனுக்கு,

நீ என்னை ரொம்ப நல்லா புரிந்து கொண்டவன் என்ற நம்பிக்கையோட இருந்தேன். ஆனால் அன்னைக்கு நீ என்னோட சண்டை போட்டதுல என்னோட நம்பிக்கை தவிடுபொடி ஆயிடுச்சு. அதாவது பரவாயில்லை அதுக்கப்புறமும் நான் உன்கிட்ட என்ன நடந்துச்சு என்று எடுத்துச் சொல்ல வந்தும் நீ கேட்கவே முடியாதுன்னு சொல்லிட்ட. அதனால தான் இப்படி லெட்டர் எழுத வேண்டிய நிலை வந்திடுச்சு.

அன்னைக்கு நீ லேப்ல இருந்த. நீ அப்ப தான் உள்ளே போனதா வித்யா சொன்னாள் அதனால நான் என் க்ளாஸிற்கு திரும்பப் போனேன் நீ எக்ஸாம் முடிச்சிட்டு வருவ என்று. உனக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது தான் கௌதம் வந்தான் என்னையும் சாப்பிடக் கூப்பிட்டான். நான் வரலை என்று எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தேன் அவன் கேட்கவே இல்லை. ரொம்ப வற்புறுத்திட்டு இருந்தான். அதனால தான் நான் அவன் கூடப் போனேன். ஆனால், அப்ப நான் சாப்பிடல. அவன் கேட்டான் ஏன் சாப்பிடல என்று. நான் எப்பவும் உன்னோட தான் சாப்பிடப் போவேன்னு சொன்னேன். அவன் சாப்பிட்டு முடிச்சப்புறம் நாங்க ரெண்டு பேரும் திரும்ப க்ளாஸ்க்கு வந்திட்டு இருந்தோம் அப்ப தான் நீ எங்க ரெண்டு பேரையும் பார்த்த. தப்பா புரிஞ்சுக்கிட்ட. அப்பவே என்னை நீ பேச விட்டிருந்தா இவ்வளோ பெரிய சண்டை ஆயிருக்காது. பத்தாம் வகுப்பு முழுதும் நாம ரெண்டு பேரும் பேச முடியாதபடி ஆக்கிட்டா. வேற செக்ஷன் போட்டப்ப நான் எவ்வளோ ஃபீல் பண்னேன்னு உனக்கு தெரியும். ஒரே செக்ஷன்ல இருந்து நீ சண்டை போட்டிருந்தா கூட பரவாயில்லை. நான் எவ்வளோ கஷ்டபபடுறேன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால சண்டை போட்டு விட்டுட்டுப் போக முடிஞ்சதுன்னு தெரியல. உனக்கு தெரியுமா? நானும் அன்னைக்கு சாப்பிடல நீ சாப்பிடலைல:-(

இப்பவாது என்னைப் பற்றி உனக்கு நல்லா புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன் எக்ஸாம் ஹாலுக்கு வெளியில். நான் பரீட்சை நல்லா எழுதுறது உன் கையில தான் இருக்கு. கிரிக்கெட் ஆடிட்டு டிவி பார்த்திட்டு இருக்காத லீவ்ல.. பரீட்சைக்கு நல்லா படி.

என்னடா லவ் லெட்டெர்ன்னு நினைச்சியா :-P படம் பார்த்து நீ ரொம்ப கெட்டுப் போய் இருக்க :-P

நட்புடன்,
நிலா


கடைசி  வரியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் நிலாவை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தததை நினைத்து மிக வருந்தினேன். எவ்வளோ பெரிய முட்டாள்தனம் பண்ணிருக்கிறேன் என்று என் மேலே எனக்கு கோபம் வந்தது. முதல் பரீட்சைக்காக காக்க ஆரம்பித்தேன்.. அன்று தான் நிலாவை அடுத்து பார்க்க முடியும் என்பதால்.

இங்கிலீஷ் I பேப்பர் அன்று. ஸ்கூலுக்குச் சென்றேன். எக்ஸாம் சென்டர் வேறு ஒரு பள்ளியில் என்பதால் எங்கள் ஸ்கூலில் இருந்து பஸ்ஸில் நாங்கள் அனைவரும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அஷோக், கார்த்திக் இருவரையும் பார்த்தேன் பஸ் அருகில்.

“அசோக், வித்யா எங்க டா பஸ்ல இருக்காளா?”

‘அசோக், இவன் வித்யாவை தேடுறான்னு நினைக்கிறியா?’ என்றான் கார்த்திக்.

“டேய் வித்யாவைத் தான் டா” என்றேன்.

‘இங்கிலீஷ் I பேப்பர் மேல சத்தியம் பண்ணு நாங்க வித்யா எங்க இருக்கான்னு சொல்றோம்’ என்றான் அஷோக்.

அடப்பாவிங்களா. முதல் பரீட்சை
யையே ஊத்திக்க வச்சிடுவீங்க போலியே என்று “நிலா எங்க?” என்றேன்.

‘இதை முதலிலேயே கேட்க வேண்டி தான’ – கார்த்திக்

“அது வந்து….” என்ன சொல்வதென்று தெரியாமல் இழுத்துக் கொண்டிருந்தேன்.

‘விடு கார்த்திக் பாவம் அவன். எப்படி தேடுறான் பாரு. மச்சி நம்ம தமிழ் சார் இருக்கிறார்ல?’

“அவருக்கு என்னாச்சு டா அஷோக்?”

‘அவருக்கு எப்பவும் ஒன்னும் ஆகாது டா. அவர் பொண்ணுங்க எல்லாரையும் ஒரு பஸ்ல அனுப்பி விட்டுட்டாரு டா’

“அவருக்கு எதுக்கு டா இந்த வேலை?”

‘யாருக்கு தெரியும்!! ஒரு வேளை பசங்க பிக்னிக் போறோம்ன்னு நினைச்சிடுவாங்கன்னு அப்படி பண்ணிருக்கலாம் டா’ என்றான் கார்த்திக்.

“சரி வாங்க டா நாமளும் கிளம்புவோம்” என்றேன்.

‘தம்பி எங்க போறீங்க? உனக்கு பஸ் ஓட்ட தெரிஞ்சா கிளம்பலாம்’ – அஷோக்

“ஏன்டா????”

‘இந்த பஸ் எடுக்க வேண்டிய ட்ரைவர் நேத்து ஃபுல் அடிச்சிட்டு மட்டை ஆயிட்டாராம். இப்ப தான் தெரிய வந்தது. அதான் வேற ட்ரைவரை வர சொல்லிருக்காங்க. அவர் இன்னும் 15 நிமிஷத்துல வருவாரு’ – அஷோக்.

“டேய் நாம போய் சேருரதுக்கும் எக்ஸாம் ஹாலுக்கு போறதுக்கும் சரியா இருக்கும் போல. நான் நிலாவை மீட் பண்ணனும் டா” என்றேன்.

‘எக்ஸாம் முடிச்சிட்டு மீட் பண்ணலாம்ல’  என்றான் கார்த்திக்.

“இல்ல டா அதுக்கு முன்னால பார்த்தே ஆகணும். அவங்க ஹால் எது? தெரியுமா உங்களுக்கு?”

‘அவங்க Block C Third Floor கிளாஸ் ரூம் 307 நாம Block A Third Floor கிளாஸ் ரூம் 307. ரெண்டும் வேற வேற Block டா. அவளை
ப் பார்த்திட்டு திரும்ப நம்ம ஹாலுக்கு வர்றது கஷ்டம் டா. அதனால எக்ஸாம் முடிச்சிட்டு பாரு நிலாவை. எக்ஸாம் ஹாலுக்கு லேட்டா வந்த எக்ஸாம் எழுத விட மாட்டாங்க” என்றான் கார்த்திக்.

“நான் பார்த்துக்கிறேன் டா. வந்திடுவேன் சரியான நேரத்துக்கு” என்றேன்.

எங்கள் பேருந்து தன் பயணத்தை தொடங்கியது. எக்ஸாம் சென்டரை சென்று அடையும் போது மணி 9.55. எக்ஸாம் 10 மணிக்கு. என்ன செய்வது என்று தெரியவில்லை. நிலா எனக்காக காத்துக் கொண்டிருப்பாள்….


உறங்கச் செல்கிறேன்….

Monday, October 28, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 6

“வித்யா நீ போய் சாப்பிடு” என்றேன்.

‘நீ எங்க டா போற?’ என்றாள் வித்யா.

“எனக்கு இங்க சாப்பிட பிடிக்கல அதனால வீட்டுக்குப் போறேன்”

‘அதான் இன்னைக்கு அவளே சாப்பிட கூப்பிட்டாள்ல அவளோட போய் இருக்க வேண்டி தான?’

“நான் வருவேன்னு தெரிஞ்சும் நேத்து ஏன் அவ என்ன விட்டுட்டுப் போனா. அதை நினைச்சாலே ஏதோ ஒரு கோபம் வருது அவ மேல. என் நட்புக்கு இவ்வளவு தான் மதிப்பா???? இதெல்லாம் உனக்குப் புரியாது.. விடு வித்யா”

‘கோபத்தை குறைச்சுக்கோடா. நீ கோபப்படுறதா இருந்தா முதல்ல எங்கிட்ட தான் கோபப்படனும். நேத்து நிலா லேப் வெளிய தான் உனக்காக காத்துக்கிட்டு இருந்தா. நீ அப்ப தான் உள்ள போய் இருந்த அதனால நான் தான் நீ வர லேட் ஆகும்னு அவளை போகச் சொன்னேன்’

“நீ சொன்னா அவ போயிடுவாளா????”

‘எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு நான் தான் உங்க சண்டைக்கு காரணம்னு. நான் வேணா அவகிட்ட பேசிப் பார்க்கிறேன் டா’

“ஒன்னும் வேணாம். எங்களை சேர்த்து வைக்கிறேன்னு நீ ஏதும் பண்ண நான் உன்கிட்டயும் பேச மாட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்” சொல்லிவிட்டு கிளம்பத் தயாரான நேரத்தில் நிலாவும் வந்தால் சைக்கிள் ஸ்டாண்டிற்கு.

அவளும் தன் சைக்கிளை எடுத்தாள். என்னைப் புரிந்து கொண்டவளாய் வித்யா நான் கேட்க நினைத்ததை நிலாவிடம் கேட்டாள் எங்க டி போற என்று. நிலா ‘வீட்டுக்குப் போய் சாப்பிடப் போறேன்’ பதில் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

வித்யா நான் என்ன சொல்ல போகிறேன் என்று என்னையே பார்த்தாள். நான் பதில் எதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றேன்.

‘எப்படி இப்படி ஒரு ஃப்ரெண்ட்ட உன்னால பேசாம இருக்க முடியுது???? நேத்து கூட என்ன நடந்துச்சு என்று தெரியாம நீ தான் அவசரப்படுறியோன்னு தோனுது. அவள்ட்ட பேசு என்றாள்’ வித்யா.

அவள் சொல்வது எனக்கு புரிந்தாலும் என் ஈகோ என்னைத் தடுத்தது நிலாவிடம் பேச.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் எந்த க்ரூப் வேண்டும் என்று பொதுத் தேர்வுக்கு முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்புத் தேர்வில் அந்த குரூப்பிற்கு தேவையான மதிப்பெண்கள் எடுத்தால் நாம் கேட்ட க்ரூப் கிடைத்துவிடும்.

அன்று க்ரூப் பதிவு செய்யும் நாள்,

நாங்கள் எல்லாரும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் வித்யா நின்று கொண்டிருந்தாள். அந்நேரம் நிலா வர அவளை தனக்குப் பின்னால் நிறுத்தினாள் நாங்கள் ஏதும் பேசிக் கொள்வோம் என்று. நானும் நிலா என்னிடம் க்ரூப் பற்றி ஏதும் கேட்பாள் அப்படியே அவளிடம் பேசிவிடலாம் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் வித்யாவிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள். என்னை கண்டு கொள்ள கூட இல்லை. நானும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை. வித்யாவின் முறை வர அவள் முதல் க்ரூப் என்றாள். நிலா பதிவு செய்யும் முறை, அவள் என்னை திரும்பி ஒரு முறை பார்த்தாள். ஆனால், ஏதும் பேசவில்லை. அவளும் முதல் குரூப்பை பதிவு செய்து விட்டு வித்யா விடம் பேச ஆரம்பித்தாள் மீண்டும்.

இப்போது என்னுடைய முறை. பேசுவதை விட நான் என்ன க்ரூப் எடுக்கப் போகிறேன் என்பதிலேயே நிலாவின் கவனம் முழுதும் இருந்தது. கம்ப்யூட்டர் க்ரூப் வேணும் என்றேன். இதைக் கேட்டதும் நிலா ஏதும் பேசாமல் அவள் க்ளாஸிற்கு சென்று விட்டாள் வித்யாவிடம் கூட சொல்லாமல். வித்யா என்னை அசிங்கமாக திட்டாத குறை தான். அவளுக்கு தெரிந்த 'நாயே பேயே சனியனே' போன்ற வார்த்தைகளால் என்னை வறுத்து எடுத்தாள். ‘அவளை ரொம்ப கஷ்டப்படுத்துற நீ. எங்கிட்டயும் பேசாத போ டா’ என்று சொல்லிவிட்டு வித்யாவும் சென்று விட்டாள்.

அவர்கள் இருவரும் சென்றதும் பதிவு செய்து கொண்டு இருப்பவரிடம் ‘சார் நான் என்ன க்ரூப் சொன்னேன்?’ என்றேன். IInd க்ரூப் தம்பி என்றார். எனக்கு முதல் க்ரூப் தான் வேணும் என்றேன். தம்பி இனி மாத்த முடியாது என்று அவர் சொல்ல அவர் காலில் விழாத குறையாக எப்படியோ எனக்கு முதல் க்ரூப் என்று மாற்ற வைத்தேன்.

நாளை முதல் Study Holidays ஆரம்பிக்கப் போகிறது. நிலாவை அடுத்து பரீட்சை அன்று தான் பார்க்க முடியும். இன்று கிளம்புவதற்கு முன் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். எங்கள் க்ளாஸ் சீக்கிரமே முடிந்ததால் நான் அவள் க்ளாஸ் முன் நின்று கொண்டிருந்தேன். அவளுக்காக காத்திருக்கிறது தெரிந்து விடக் கூடாது என்று அஷோக்கிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவள் க்ளாஸ் முடிந்தது. பேக் எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள்.

என்னை பார்த்தவள் உன்கிட்ட கொஞ்சம் தனிய பேசனும், வீட்டுக்கு போயிட்டே பேசலாமா என்றாள். நான் சரி என்று சொல்ல இருவரும் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தோம்.

‘அன்னைக்கு ஏன் வேற க்ரூப் எடுத்த?’

“ஏதோ ஒரு கோபத்துல”

‘அப்புறம் எதுக்கு திரும்ப முதல் க்ரூப்னு மாத்துன?’

“உனக்கு எப்படி தெரியும்?”

‘உளவுத்துறைல இருந்து செய்தி வந்துச்சு. அப்படி என்னடா கோபம் என் மேல. நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்? அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா’

“அதைப் பத்தி பேசாத. நினைச்சா இன்னும் கோபம் வருது”

‘நீ இப்படி தான் சொல்லுவன்னு தெரியும் அதான் என் மனசுல இருக்கிறத இந்த லெட்டர்ல எழுதி இருக்கேன். வீட்டுல போய் படி. படிச்சப்புறம் என்னை நீ புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்’

“ஹ்ம்ம்”

‘நீ எங்கிட்ட பேசலைன்னா கண்டிப்பா என்னால பரீட்சை நல்லா எழுத முடியாது. அப்புறம் யார் நினைத்தாலும் ரெண்டு பேரும் ஒரே க்ரூப்ல படிக்க மாட்டோம். என் ஸ்கோர் குறைந்தால் கடைசி க்ரூப் தான் கிடைக்கும். நான் கஷ்டப்பட்டு படிக்கிறதை விட நீ பரீட்சை முன்னால சொல்ற ஆல் தி பெஸ்ட்ல என்னோட மார்க்ஸ் இருக்கு’

“நீ கண்டிப்பா நல்லா பண்ணுவ நான் ஆல் தி பெஸ்ட் சொல்லலைன்னாலும்”

‘ஏன்டா இப்படி என்னோட சண்டை போடுற. நான் என்ன சொன்னாலும் நீ இப்படி தான் இடும்புக்கு பேசுவ. அந்த லெட்டரை படி அதுக்கப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ நம்ம நட்பு தொடரனுமா இல்லை வேண்டாமா என்று. பரீட்சை அன்னைக்கு உன்னை சந்திப்பேங்கிற நம்பிக்கைல இப்போ கிளம்புறேன்’ என்றாள்.

“என்ன இருக்கு அந்த லெட்டர்ல?”

‘உங்கிட்ட பல முறை என்ன நடந்துச்சுன்னு சொல்ல வந்தேன். நீ என்னை பேசவே விடலை. அதான் இப்ப லெட்டரா எழுதிட்டேன் நீயே படிச்சு தெரிஞ்சுக்கோ. பார்க்கலாம் ஆங்கிலப் பரீட்சை அன்னைக்கு உனக்கு என்னைப் பார்க்கனும் என்று இருந்தால்’

விடை பெற்றோம் இருவரும்.

வீட்டிற்கு வந்ததும் நிலா கொடுத்த லெட்டரைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.


உறங்கச் செல்கிறேன்….

Friday, October 25, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 5

எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் நிலாவைத் தவிர மற்ற அனைவரும் A செக்ஷன் நிலா மட்டும் B செக்ஷன். வேண்டும் என்றே யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றியது. தமிழ் சார் மேல் தான் சந்தேகம் வந்தது. அவருக்குத் தான் நானும் நிலாவும் நெருங்கிப் பழகுவது சுத்தமாக பிடிக்கவில்லை. எங்கள் இருவரின் பெற்றோரிடமும் அவர் எத்தனையோ முறை இதை பற்றி சொல்லிப் பார்த்தார் ஆனால் எங்கள் இருவரின் வீட்டிலும் இதை கண்டுகொள்ளாதலால் அவர் இப்படி செய்திருக்க வேண்டும்.

நிலாவை இடைவேளையில் சந்தித்தேன். அவள் அழுதிருந்ததை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தன. என்னைப் பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

‘எதுக்கு டா என்னை மட்டும் வேற செக்ஷன்ல போட்டாங்க? இப்ப மாத்த முடியாதா?’

“காலைல ஹிஸ்டரி சாரட்ட பேசினேன். அவர் இனி மாத்துறது கஷ்டம்னு சொன்னாரு. தமிழ் சார் தான் இப்படி பண்ணதா சொன்னாரு” - ஹிஸ்டரி சார் ஒருவர் தான் மாணவர்களிடம் மிக நெருங்கிப் பழகுபவர். தமிழ் சார்க்கு எங்களை மட்டும் இல்லை ஹிஸ்டரி சாரையும் பிடிக்காது.

‘தமிழ் சாரை திட்டித் தீர்த்தாள். அம்மா அப்பாவை பேச வச்சு செக்ஷன் மாறப் போறேன்டா. இந்த செக்ஷன் எனக்குப் பிடிக்கவே இல்லை நீ நம்ம கேங் இல்லாம.’

நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் இடைவேளை முடிய லஞ்சில் மீட் பண்ணலாம் என்று சொல்லி விட்டு அவரவர் கிளாஸ்க்கு சென்றோம்.

எப்ப லன்ச் வரும் என்று இருந்தது. பாடம் கவனிக்கவே இல்லை. லன்ச் பெல் அடிக்க லன்ச் பாக்ஸை கூட எடுக்காமல் ஓடினேன் நிலாவைப் பார்க்க.

‘இன்னைக்கு அம்மா அப்பாக்கிட்ட பேசி நாளைக்கு அவங்கள கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்’ என்றாள் நிலா.

“நிலா இந்த விசயத்தை நாம பெருசாக்க வேணாம்னு தோனுது. ஒரு வருடம் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் நிலா”

‘உன்னால முடியுமா?’

“என்னால நிஜமா முடியல நீ இல்லாத கிளாஸ்ல உட்கார. ஆனால் இப்ப வேற வழி இல்ல. அவரால இந்த வருஷம் மட்டும் தான் நம்மள பிரிக்க முடியும். அடுத்த வருஷம் என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன்”

‘என்னடா சொல்ற? அடுத்த வருஷமும் நம்மள பிரிச்சிட்டாருன்னா?’

“லூசு அடுத்த வருஷம் எப்படி நம்மள அவரால பிரிக்க முடியும். நாம ரெண்டு பெரும் ஒரே க்ரூப்ல எடுப்போம். நாம அடுத்த வருஷம் பதினொன்றாம் வகுப்பு போறோம். மறந்துட்டியா!!!!”

‘அட ஆமால்ல’ லேசாக சிரித்தாள் அவள் அழகான முன்பற்கள் தெரியும்படி.

“நாம ரெண்டு பெரும் இடைவேளையில் மீட் பண்ணப்  போறோம். ஒரே கிளாஸ்ல இருக்கிற மாதிரி கண்டிப்பா இருக்காது தான் ஆனாலும் இந்த சின்னப் பிரிவைத் தாங்கிக்கலாம். ரெண்டு பேரும் நல்லா படிச்சு ஒரே க்ரூப்ல சேரனும். அது தான் நம்ம அடுத்த குறிக்கோளா இருக்கனும்”

‘சரிடா. கண்டிப்பா ஒரே க்ரூப்பா தான் இருப்போம் நாம ரெண்டு பேரும். எந்த க்ரூப் டா சேரலாம்?’

“உனக்கு என்ன க்ரூப் பிடிக்கும்னு சொல்லு அதுல சேரலாம்”

‘எனக்குன்னு ஏதும் இல்லடா. நம்ம ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் க்ரூப் மேக்ஸ் பையாலஜி. ஆனால் எனக்கு கம்ப்யூட்டர் சைடுல போனும்னு தான் இருக்கு. இப்ப போய் வீட்ல கம்ப்யூட்டர் குரூப் எடுக்கப் போறேன்னு சொன்னா இந்த க்ரூப் வேணாம்னு சொல்லுவாங்க. மேக்ஸ் பையாலஜி எடுத்தாலும் ஸாஃப்ட்‌வேர் சைடு போக முடியும். அதனால ஃபர்ஸ்ட் க்ரூப் தான்டா எடுக்கனும்’

“சரி நிலா”

‘உனக்கு எந்த க்ரூப் டா பிடிக்கும். அத சொல்லு முதல்ல’

“நீ எந்த க்ரூப்ல இருக்கியோ அந்த க்ரூப் தான் எனக்கு பிடிக்கும்”

சிரித்தாள்.

இன்டர்வல் லன்ச் நேரங்களைத் தவிர பள்ளி முடிந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக் கொண்டே பேசிக் கொண்டு மெதுவாக நடந்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தோம்.

5 மாதங்கள் இப்படியே ஓடின.

ஒரு நாள்,

நான் கெமிஸ்ட்ரி லேபில் இருந்தேன். நிலா எனக்காக லன்ச்க்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள் வெளியில். அரையாண்டு செய்முறைத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் என்னால் வெளியில் வந்து அவளிடம் பேச முடியவில்லை. வேக வேகமாக டெஸ்ட்டை முடித்து ரிப்போர்ட்டை சமர்ப்பித்து விட்டு வெளியில் பார்த்தேன் நிலாவை காணவில்லை. லன்ச் ஹாலுக்கு சென்றேன்.

நிலா அவள் கிளாஸ் பையன் கௌதம் உடன் வெளியில் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் ‘சரி நான் கிளம்புறேன் நிலா. கிளாஸ்ல பார்ப்போம்’ விடை பெற்றுச் சென்றான் கௌதம்.

‘என்னடா அதுக்குள்ள லேப் முடிச்சிட்டியா? நல்லா பண்ணியா இல்லையா?’ என்றாள் நிலா.

“அதை விடு. உனக்கு புது நண்பர்கள் கிடைச்சிட்டாங்க போல” என்றேன்.

‘நான் உனக்காக லேப்க்கு வெளியே காத்துக்கிட்டு இருந்தேன் டா. வித்யாவைப் பார்த்தேன். அவ நீ இப்ப தான் உள்ள போய் இருக்கன்னு சொன்னா. அதான் கௌதம் கூட….’

“நான் எப்படினாலும் வருவேன்னு உனக்கு தெரியாதா? ஏன் அவனோட போன?”

‘டேய் சொல்றது முதல்ல கேளு...’

“எல்லாமே புரிஞ்சுகிட்டேன் இப்ப.. நீ ஏதும் பேச வேணாம். என்ன தான் இருந்தாலும் நான் இப்ப வேற செக்ஷன் தான. உன் கிளாஸ் நண்பர்கள் மாதிரி வராதுல்ல”

‘சூர்யா நான் சொல்றத ஃபர்ஸ்ட் கேளு டா’

“ஒன்னும் வேணாம். கிளாஸ் போ நீ. நானும் கிளம்புறேன். Bye” என்றேன்.

அப்போது கூட ‘என் மேல இருக்கிற கோபத்தை சாப்பாடுல காட்டாத. சாப்பிட்டு கிளாஸ்க்கு போ’ என்றாள் நிலா.

“உன் நண்பர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க உனக்காக நீ கிளாஸ்க்கு கிளம்பலாம்” கோபமாக பேசிவிட்டு சென்றேன்.

அவள் ஏதும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எங்களுக்குள் வந்த முதல் சண்டை இது தான்.

அடுத்த நாள் லன்ச் டைம் நிலா என் வகுப்பிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். ‘வாடா  லன்ச் போலாம்’ என்றாள். “நீ இனிமேல் கௌதம் கூட சாப்பிட்டுக்கோ. நமக்குள்ள இனி எதுவும் இல்ல. வா வித்யா லன்ச் போலாம்” சொல்லிவிட்டு வித்யாவுடன் சென்றேன்....


உறங்கச் செல்கிறேன்….

Friday, October 18, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 4

எந்த பாட்டுக்கு ஆடலாம் சூர்யா?’ என்று வித்யா மீண்டும் கேட்க “வித்யா நாம இப்படி செய்தால் எப்படி?” என்றேன்.

‘எப்படி?’ என்றாள் நிலா.

‘அவன் எங்கிட்ட சொன்னான்’ என்றாள் வித்யா.

‘நாமன்னு நீ என்னையும் சேர்த்து தான சொன்ன?’ – நிலா.

“நீயும் தான் நிலா. நீ மட்டும் இல்லை கார்த்திக் அஷோக்கும் தான்” என்றேன்.

அப்படி என்ன திட்டம் என்று கார்த்திக்கும் அஷோக்கும் நுழைந்து கொண்டார்கள் இப்பொழுது.

“வித்யா, நிலா உங்களில் ஒருத்தர் கார்த்திக் கூட ஆடுங்க இன்னொருத்தர் அஷோக் கூட” என்றேன்.

‘ரெண்டு டீமையும் அனுப்புவாங்களா Interschool Competition க்கு?’ – வித்யா.

“அடிப்பாவி நாம பதிவு பண்ணா நம்மளை உடனே தேர்ந்தெடுத்ததிடுவாங்களா? நம்ம ஸ்கூல்ல இருந்து நிறைய டீம் பதிவு பண்ணிருப்பாங்க. முதலில் தகுதிச் சுற்று இருக்கும் பள்ளி அளவில்.  அதுல ஜெயிக்கிறவங்களை அனுப்புவாங்க’ என்றேன்.

‘ஓ அப்படியா!. சரி எனக்கு ஓகே. யாரு ஜெயிக்கிறாங்களோ எங்களுக்குள்ள அவங்க பெஸ்ட் டான்சர் என்று தெரிஞ்சிடும் நானா இல்ல நிலாவா என்று. அது போதும் எனக்கு’ என்றாள் வித்யா.

நான் வித்யா கூட ஆடுறேன் என்று கார்த்திக்கும் அஷோக்கும் போட்டி போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். அல்பங்களா என்று நிலா தலையில் அடித்துக் கொண்டாள்.

‘எனக்கு இது ஓகே இல்ல. சூர்யா, உனக்கு தக்காளி முட்டை விக்கிறவங்க கூட கூட்டணி ஏதும் இருக்கா? என்ன இவனுங்களோட ஆட சொல்ற…. இவ்வளவு பெரிய ரிஸ்க் என்னால எடுக்க முடியாது’ என்றாள் நிலா.

கார்த்திக் அஷோக் இருவரின் முகமும் வாடிப் போனது. நிலா சொல்வது போல அவர்கள் இருவரும் மோசாமாக ஆடுபவர்கள் அல்ல.

‘நிலா என்னோட பயந்துட்டா போட்டி போட’ என்று வித்யா வம்பிழுத்தாள்.

‘நான் ஒன்னும் பயப்படலைடி. சரி வா நாம ரெண்டு பெரும் Solo dance ல் பதிவு பண்ணலாம். பார்க்கலாம் யார் ஜெயிக்கிறாங்க என்று’ கோபத்துடன் சொன்னாள் நிலா.

இப்படியே சென்றால் பெரிய சண்டை ஆகிவிடும் என்று நான் குறுக்கிட்டேன். “நண்பர்களே, நம்ம திட்டத்தை மாத்திடலாம். நமக்குள்ள எந்த சண்டையும் வந்திடக் கூடாது தனித்தனியா ஆடி. இப்ப என்ன உங்க ரெண்டு பேருல யாரு நல்ல ஆடுறீங்கன்னு தெரியனும். அவ்வளவு தான? நாங்க பார்த்து சொன்னா ஓகேவா இல்லை நடுவர்கள் சொன்னா மட்டும் தான் நம்புவீங்களா?’ என்றேன்.

‘எங்களுக்குள்ள யார் பெஸ்ட்ன்னு தெரியனும் அவ்வளோ தான். யாரு சொன்னாலும் ப்ராப்ளம் இல்லை’ என்றனர் நிலாவும் வித்யாவும்.

“அப்ப சரி. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஆடுங்க. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து வின்னரா இல்லையா என்று நடுவர்கள் பார்க்கட்டும். நாங்க 3 பெரும் உங்களில் யாரு பெஸ்ட்ன்னு சொல்றோம். இந்த டீல் ஓகேவா?” என்றேன்.

‘ஓகே’ என்றார்கள் இருவரும்.

தகுதிச் சுற்று வரும் வரை எந்த பிரச்சனையும் இருக்காது என்று தற்காலிக நிம்மதி வந்தது. நிலா வித்யா இருவரும் கிளம்பிச் சென்றனர்.

தகுதிச் சுற்று அன்று என்ன பண்ணப் போறேன் என்று தெரியலையே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் அஷோக்கும் கார்த்திக்கும் நம்ம ஆட்டத்தை குறை சொன்ன நிலா சரியா ஆடலைன்னு சொல்லிடலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர். ‘அடப்பாவிங்களா! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கப் போறேனோ!!! விடு சூர்யா அன்னைக்கு பார்த்துக்கலாம்’  என்று நானும் புறப்பட்டுச் சென்றேன் வீட்டிற்கு.

தகுதிச் சுற்று நாளும் வந்தது.
Solo dance ல் நானும், pair dance ல் நிலா வித்யாவும், Group Dance ல் நாங்கள்  ஐவரும் என்று எங்கள் நண்பர்கள் பட்டாளமே எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். வெற்றி பெற்றவர்களை அறிவித்ததும் வித்யாவும் நிலாவும் நேராக எங்களிடம் வந்தனர்.

‘எங்க ரெண்டு பேருல யாரு நல்லா ஆடினோம்?’ இருவரும்.

நிலாவைத் தான் சரியா ஆடவில்லை என்று கார்த்திக்கும் அஷோக்கும் சொல்லப் போகின்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் நிலாவைப் பார்த்தார்கள். அவளைப் பார்த்ததுமே பயம் தொற்றிக் கொண்டது போல எதற்கு வம்பு என்று 'சூர்யா சொல்லுவான்' என்று எஸ்கேப் ஆகி விட்டார்கள்.

‘சொல்லு சூர்யா’ என்றாள் நிலா.

‘நான் தான நல்லா ஆடினேன்’ என்றாள் வித்யா.

“நீங்க ரெண்டு பேரும் ஆடினதற்கு பெயர் தான் டான்சா?’ என்றேன்.

என்னை இருவருமே கையில் கிடைத்த புக்கை எடுத்து அடிக்க ஆரம்பித்தார்கள்.

‘சொல்லு டா யாரு பெஸ்ட் என்று’ இருவரும் என்னை விடுவதாய் இல்லை.

ஏதாவது கதை சொல்லி எஸ்கேப் ஆகி விட வேண்டியது தான் என்று “நீங்க ரெண்டு பேரும் என் கண்கள் மாதிரி. எந்த கண்ணு நல்லா பார்க்குது என்று சொல்ல முடியுமா? முடியாதில்ல? அப்படித் தான் உங்க ஆட்டமும். நீங்க ரெண்டு பேருமே பெஸ்ட். அதான் நீங்க ஜெயிச்சீங்க” என்றேன்.

‘நல்லா எஸ்கேப் ஆகிற. வித்யாவே என்னை விட நல்லா ஆடினதா இருக்கட்டும். நம்ம டீம்ல எல்லாருமே ஜெயிச்சிட்டோம் அது போதும் எனக்கு’ என்றாள் நிலா.

‘இல்ல நிலா நீ தான் என்னை விட நல்லா ஆடின’ இது வித்யா.

இருவரும் மாறி மாறி அன்பு மழை பொழிய கார்த்திக்கும் அஷோக்கும் இருவருக்கும் குடை பிடித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு மிக சந்தோஷமாக சென்றது. பத்தாம் வகுப்பில் இப்படி ஒரு பெரிய குண்டு வந்து விழும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட என்னையும் நிலாவையும் தான் அது மிகவும் பாதித்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அட்டவணை வந்தது. நான் 'அ' பிரிவு என்றும் நிலா 'ஆ' பிரிவு என்றும் இருந்தது அதில்….உறங்கச் செல்கிறேன்….

Monday, October 14, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 3

வித்யாவின் கூந்தலைப் பார்த்தவள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்த்தாள். என்ன சொல்வது!!!! வித்யாவின் கூந்தல் தோள்பட்டை வரை கூட நீடிக்கவில்லை.

‘இதுக்கு தான் இந்த பில்டப் கொடுத்தியா?’ என்றாள் நிலா.

“இப்ப முடியை கம்மி பண்ணிட்டா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். எனக்கு நீளமா இருந்தா தான் பிடிக்கும்னு சொன்னா திரும்ப வளர்க்கப் போறா”

‘முதல்ல அவளுக்கு உன்னை அடையாளம் தெரியுதான்னு பார்ப்போம்’

“அவளே வந்து எங்கிட்ட பேசு
வா பாரு” என்றேன்.

'பார்க்க தான போறேன்' என்றாள்.

'முடி கம்மியா இருந்தா என்ன அவ அழகு தான்' என்றேன். என்னை முறைத்துவிட்டுச் சென்றாள் நிலா.

நான் வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் ஒரு முறையாவது என்னை பார்த்து விட மாட்டாளா என்று. ஏதோ ஒரு படத்தில் வந்தது போல 10 எண்ணுவதற்குள் என்னைப் பார்த்து விடுவாள் என்று எண்ண ஆரம்பித்தேன். 1000 வரை எண்ணியது தான் மிச்சம்….

இடைவேளையில் என்னிடம் வந்து பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் முன்னே இரண்டு மூன்று முறை நடந்து சென்றேன் வேண்டுமென்றே. ஆனால் என்னுடைய முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலா என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள். ‘போய் உன் இடத்துல உட்காருடா’ என்று கண்களால் சொன்னாள்.

மீண்டும் வகுப்பு தொடங்கியது. உணவு இடைவேளையும் வந்தது. நாங்கள் சாப்பிடப் போகத் தயாரானோம். அப்பொழுது திடீரென்று ஒரு குரல் ‘சூர்யா’ என்று.

இது வித்யாவின் குரல் தான். கண்டுபிடித்த பின்னும் தெரியாதபடி நிலா யாரோ என்னைய கூப்பிடுறாங்க என்றேன்.

‘யாரும் இல்லையே. வா சீக்கிரம் போகலாம் பசிக்குது’ என்றாள்.

“இல்ல யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு. சரி வா போகலாம்” என்றேன்.

‘டேய் உன்னை எத்தனை முறை கூப்பிடுறது’ என்று என் முன்னே வந்து நின்றாள் வித்யா.

‘என்னை ஞாபகம் இருக்க இல்லையா சார்க்கு?’ என்றாள் வித்யா.

“உன்னை எப்படி மறப்பேன் வித்யா!!!!”

‘அப்புறம் எதுக்குடா எங்கிட்ட வந்து பேசல?’ லேசாக கோபித்தாள்.

“உனக்கு என்னை ஞாபகம் இருக்காதுன்னு நினைச்சேன்”

‘போடா புடலங்கா. உன்னை எப்படி மறப்பேன்? Missed you a lot’ என்றாள் வித்யா.

“Me too” என்று நான் சொல்ல வாய் எடுக்கும் முன் நிலா குறுக்கிட்டாள். ‘சூர்யா லன்ச்க்கு டைம் ஆச்சு. வா போலாம். வந்து பேசு உன் வித்யா கிட்ட’ என்றாள்.

நானும் சேர்ந்துக்கலாமா உங்க கூட என்று வித்யா கேட்க கண்டிப்பாக என்றேன். நிலா என்னை எரித்துக் கொண்டிருந்தாள் அவள் பார்வையால்.

நான் என் நண்பர்களை அறிமுகம் செய்தேன் வித்யாவிற்க்கு. ‘இது நிலா’ என்று நான் சொல்ல நிலா ‘சூர்யாவின் பெஸ்ட் பிரண்ட்’ என்றாள். ‘என்னைய விடவா’ என்றாள் வித்யா. “இவங்க ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்க போறேனோ” என்று மனதினுள் நினைத்துக் கொண்டேன்.

அடுத்து அஷோக் கார்த்திக்கையும் அறிமுகம் செய்தேன். அவர்களுடன் கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் வித்யா. ‘வலியுது டா. தொடச்சுக்கோங்க’ என்றாள் நிலா அவர்கள் இருவரையும் பார்த்து. சாப்பிட்டு விட்டு க்ளாஸிற்கு வந்தோம்.

ஒரு வாரம் சென்றது. ஃபிஸிக்ஸ் கிளாஸ் நடந்து கொண்டிருந்தது. ஒரு அறிவிப்பு வந்தது பள்ளிகளுக்கு இடையிலான நடனப் போட்டி பற்றி. Solo dance, group dance பிரிவுகளில் நம்ம பள்ளியில் இருந்து கலந்துக்கனும் என்று.

நிலா என்னிடம் வந்தாள். ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுறோம். பேர் கொடுப்போம்’ என்றாள். அதே நேரம் வித்யாவும் ‘நம்ம கெமிஸ்ட்ரீ நல்லா இருக்கும். நாம ரெண்டு பேரும் ஆடலாம்’ என்றாள்.

'ஸ்கூல்ல யார்கிட்டனாலும் கேளு. எங்களோட physics chemistry maths biology பத்திலாம் சொல்லுவாங்க' என்றாள்.

'எவ்வளோ நாள் தான் இப்படி ஒரே முகத்தையே அவங்க பார்ப்பாங்க. பாவம் அவங்க. அதனால இந்த முறை நாங்க ஆடுறோம்' என்றாள் வித்யா.

‘நீ என் கூட தான ஆடப் போற என்று’ நிலா கேட்க ‘இல்ல என்னோட தான் ஆடுவான்’ என்று வித்யா பதில் சொல்ல “என்ன கொடுமை சரவணன் இது.. என்ன பதில் சொல்வது” என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்….
 

உறங்கச் செல்கிறேன்….