Pages

Monday, April 25, 2011

பயணம் 2 : பெங்களூர் - சேலம் - பெங்களூர்(கிறுக்கல்கள்)

22.04.2011
புனித வெள்ளி என்பதால் அலுவலகத்தில் மூன்று நாட்கள் விடுமுறை. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பிறந்த ஊருக்குச் சென்று வந்ததால் இந்த விடுமுறைக்கு பைக்கில் எங்கயாவது செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அருள் புது வீடு கட்டிய பின்பு நான் அவன் வீட்டிற்குச் செல்லவில்லை. அருள்? என் கல்லூரி நண்பன். கல்லூரிக் காலங்களில் கோவையில் இருந்து சேலத்திற்கு பதினைந்து முறை சென்று இருப்போம் நண்பர்கள் பட்டாளத்துடன். எல்லா முறையும் அருள் வீட்டில் தான் தங்குவோம் நாம தான் சோறுன்னா சட்டி தின்கிற கூட்டம் ஆச்சே. நான் நிறைய முறை யோசித்திருக்கிறேன் எப்படி எங்க எல்லாருக்கும் சளைக்காமல் சமைச்சு போடுறாங்கன்னு. இதை விட அருள் வீடு எங்க எல்லோருக்கும் பிடிக்க காரணம் நம் வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும். அருள் வீட்டில் நாங்கள் அடித்த கூத்துகள் ஏராளம். அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம். எப்படியோ விக்னேஷை சம்மதிக்க வைத்து அவனையும் சேலம் வர வைத்தேன் ஏதாவது ஒரு சின்ன ட்ரிப் போலாம் என்று. அவனுக்கு வெள்ளி விடுமுறை இல்லாததால் சனிக் கிழமை காலை வருவதாய் சொன்னான்.

அம்மாவிற்கு போன் செய்தேன். சேலம் போவதாய் சொன்னேன். பஸ்ஸா, ரயிலா என்று கேட்டார்கள். பஸ் தான் என்று பொய் சொன்னேன். மன உறுத்தலாக இருந்தாலும் வேறு வழி இல்லை. பைக்கில் போகிறேன் என்றால் திட்டு யார் வாங்குறது!

நானும் ஷங்கரும் பெங்களூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்பினோம். ஓசூரைத் தாண்டி அடையார் ஆனந்த பவனில் ஒரு பிரேக் எடுத்தோம். போகும் வழியில் மழை வருவது போல இருந்தது. ஒரு சில இடங்களில் தூறல் இருந்தது. ஆனால், ஒரு இரண்டு கி மீ சென்றால் நல்ல வெயில். கிருஷணகிரி - சேலம் பாதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரோட்டிற்கு இருபுறமும் பச்சைப் பசேல் எனக் காட்சி அளித்தது. 5.30 மணிக்கு ஷங்கர் வீட்டை அடைந்தோம். ஷங்கரின் அக்கா மகனுக்கு ஒரு நான்கு வயது இருக்கும். எங்கள் இருவரையும் பார்த்து வெகுளித் தனமாக ஒரு கேள்வி கேட்டான். எப்படி மாமா பைக்கை பஸ்சில வச்சுட்டு வந்தீங்க? எங்க வச்சீங்க என்று. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல வேளை ஷங்கர் அம்மா நாங்கள் பைக்கில் வந்ததை கவனிக்க வில்லை. பார்த்து இருந்தால் எங்கள் இருவருக்கு அர்ச்சனை தான்.... விக்னேஷ் மெசேஜ் அனுப்பி இருந்தான் "5 மணி ரயில் ஏறிவிட்டதாகவும் 10 மணிக்கு சேலத்தில் இருப்பேன்" என்றும்.

நானும் ஷங்கரும் அருள் வீட்டுக்குப் புறப்பட்டோம். பின், ஊத்துமலை முருகன் கோவிலுக்குச் சென்றோம் அருள் குடும்பத்துடன். ஆனால், நான் கோவிலுக்குள் செல்லவில்லை. நான் தான் இப்பொழுதெல்லாம் சாமி கும்பிடுறது இல்லையே. அருளிடம் "கடவுள் இருந்தா நல்லா இருக்கும்" என்று கமல் வசனங்களைப் பேசி சமாளித்தேன். அந்த மலையில் இருந்து சேலம் முழுவதையும் பார்க்கலாம். அந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு திருச்சி மலைகோட்டை தான் நினைவுக்கு வந்தது (அடுத்த ட்ரிப் திருச்சியா :-) !). சேலம் முழுவதையும் பார்க்கும் அக்காட்சி மிக அழகாக இருந்தது. அங்கு இருந்து கிளம்பும் போது லேசாகத் தூறல் விழ ஆரம்பித்தது. அருள் வீடு வந்து சேரும் போது முழுவதும் நனைந்து இருந்தோம் நானும் ஷங்கரும். ஆரம்பித்த மழை நிற்கவே இல்லை. பெங்களுரு மழையில் இருந்து தப்பிக்க சேலம் சென்றால் அங்கும் எங்களை மழை விடவில்லை. இரவு உணவை A2B யில் முடித்தோம். ஷங்கர் அவன் வீட்டிற்குச் சென்றான். மழையின் காரணத்தால் விக்னேஷ் வர மிக தாமதம் ஆனது. தனிஷ்பேட்டையில் இருந்து சேலத்திற்கு 20 நிமிடிங்கள் தான் ஆகும். ஆனால், விக்னேஷ் ட்ரெயின் வர 2.30 மணி நேரம் ஆனது. அவன் வீடு வந்து சேரும் போது மணி 1. "ஏன்டா ட்ரெயின் நகரலன்னா ஆட்டோ பிடிச்சு வரத் தெரியாதா? நீ என்ன சின்னப் பிள்ளையா?" என்று அவனை கடுப்பேத்திக் கொண்டிருந்தேன். அப்படியே அன்று இரவு உறங்கிப் போனோம்.

23.04.2011
காலை எழும் போது மணி 9.30. நாங்கள் எப்பொழுது அருள் வீட்டிற்குச் சென்றாலும் 'காரப் பனியாரம்' சிற்றுண்டியாக இருக்கும். பேருக்குத் தான் சிற்றுண்டி. ஆனால், நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்தால், சாப்பாடை பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டதோ என்று எண்ணத் தோன்றும் பார்ப்பவர்களுக்கு. ஒரு கட்டு கட்டினோம் நானும் விக்னேஷும். அருள் வீட்டிலும் இரண்டு வாண்டுகள்.... அவன் அக்கா குழந்தைகள். நொடிக்கு ஒரு முறை எங்களையும் மாமா மாமா என்று அழைத்தது மிக அழகாக இருந்தது. மிகவும் ரசித்தேன். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம். அவர்களுடன் கேரம் விளையாடினோம். அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால், எங்களை அந்த பிஞ்சுகள் இரண்டும் மறக்கவில்லை.

12 மணி அளவில் நான், அருள், ஷங்கர், விக்னேஷ் மேட்டூர் புறப்பட்டோம். எங்களுடன் அருளின் அக்கா மகனும் சேர்ந்து கொண்டான். ஜலகண்டபுரம் வழியாக மேட்டூர் சென்றோம். போகும் வழியில் பல கிராமங்களைக் கடந்து சென்றோம். நகரங்களைப் போலில்லாமல் மிக அழகாக அமைதியாக இருந்தது. கடைசிக் காலங்களை இப்படி ஒரு அழகான கிராமத்தில் கடத்த வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. மேட்டூர் சென்று இறங்கியதும் தர்பூசணி, மாங்காய் என்று அடித்து நொறுக்கினோம். அதன் பின் குளிக்கச் சென்றோம். சிறு சிறு படிக்கட்டுகளில் இருந்து நீர் வீழ்ந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு படிக்கட்டும் நான்கு அடி இருக்கும். நாங்கள் அப்படியொரு ஒரு நான்கடி நீர் வீழ்ச்சியின் கீழ் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். நிறைய குட்டி மீன்கள் அந்த நீரோடு போய்க் கொண்டிருந்தன. அந்தப் படிக்கட்டில் இருந்து நீரோடு கீழே விழும் போது 'நாம் தண்ணீரில் தான் மீண்டும் விழப் போகிறோம்' என்று அறியாமல் ஒவ்வொரு மீனும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மீண்டும் படிக்கட்டின் மேலே தாவ முயன்று தோற்றுக் கொண்டு இருந்தது. அதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. அப்பொழுது விக்னேஷ் ஒரு தத்துவம் சொன்னான். அப்பொழுது அவனை நாங்கள் கிண்டல் அடித்தாலும் அதில் இருந்த உண்மையை மறைக்க இயலாது. "இந்த சின்ன நீர் வீழ்ச்சி ல இருந்து ஒவ்வொரு மீன் விழும் போது நாம சாகப் போறோம் என்று நினைச்சு தன்னை காப்பாதிக் கொள்ள மறுபடியும் தாவுகின்றன. அந்த மீன்களுக்குத் தெரியாது நாம போய் ஒரு பெரிய நீர்தேக்கத்தை தான் அடையப் போறோம்னு. இது தான் வாழ்க்கை என்று". உண்மையில் ரசித்தேன். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

குளித்து முடித்து விட்டு சேலம் புறப்படத் தயாரானோம். சாப்பிட நிறைய மீன் வகைகள் இருந்தது. அருள் என்னை சாப்பிட அழைத்தான். நான் இன்று சைவம் என்றேன். 'ஏன்டா சாமி கும்பிட மாட்ட அப்புறம் என்ன சனிக்கிழமை கறி சாப்பிட மாட்டேன்னு சொல்ற. நீயெல்லாம் இதை பின்பற்றக் கூடாது' என்றான். அவனிடம் என்ன பதில் கூற என்று தெரியவில்லை. அதெல்லாம் அப்படித்தான் என்றேன். "அவளுக்காகத் தான் என்னை மாற்றிக் கொண்டேன்" என்று சொல்ல வேண்டும் போல இருந்தது. அவளுக்காக மாறிய நான் மீண்டும் மாறுவது எனக்குப் பிடிக்கவில்லை.

ஷங்கரும், விக்னேஷும் சைவம். அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மீண்டும் தர்பூசணி, மாங்காய், கரும்புச் சாறு என்று என் வயிற்ரை நிரப்பிக் கொண்டிருந்தேன் அங்கே எதுவும் எனக்குப் பிடித்த ஹோட்டல் தென்படாததால். சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் சேலம் புறப்பட்டோம். ஜலகண்டபுரம் தாண்டியதும் மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. கோடை மழை போல தெரியவில்லை. மழைக் காலம் முன் கூட்டியே ஆரம்பித்தது போல இருந்தது. காரில் சென்றதால் இந்த முறை நனையாமல் தப்பித்தோம். 6 மணி அளவில் அருள் வீட்டை அடைந்தோம். சேலத்தில் வசிக்கும் இன்னொரு கல்லூரி நண்பன் சபரியும் அருள் வீட்டிற்கு வந்தான்.

மழை இன்னும் நின்ற பாடில்லை. மழையில் நனைந்து கொண்டே கணேஷ் மகாலிற்கு சென்றோம். இரவு உணவை அங்கே முடித்தோம். யார் பில் செலுத்துவது என்று ஒரு பட்டி மன்றமே நடந்தது. கடைசியில் நான் தான் பலிகடா ஆனேன். ஆனால், எப்பொழுது செய்த புண்ணியமோ "only cash" என்றார்கள் ஹோட்டல் நிர்வாகத்தினர். விக்னேஷ் அவன் அம்மாவோடு தன் கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டே wallet யைத் தந்தான். பலி ஆடு மாறியது :-)

வெளியில் மழை இன்னும் பெய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் ARRS multiplex சென்றோம். 'கோ' படம் பார்த்தோம். Housefull. படம் நன்றாகப் போனது. ஜீவா அருமையாக நடித்து இருந்தார். பியா கதாப்பாத்திரம் என் மனதை தொட்ட அளவிற்கு கார்த்திகா கதாப்பாத்திரம் இல்லை என்று தான் சொல்லுவேன். படம் முடிந்து வீடு வந்து சேரும் போது மணி இரண்டு. நாங்கள் ஒய்வெடுக்க ஆரம்பித்தோம் ஆனால் மழை ஒயவில்லை.

25.04.2011
காலை 10 மணிக்குத் தான் எழுந்தோம். அருள் வீட்டில் டிபன். சிக்கன், மட்டன் குழம்போடு இட்லி, தோசை, சப்பாத்தி. பாவம் விக்னேஷ் அவனுக்கு மட்டும் தக்காளி சாப்ஸ். வெளுத்துக் கட்டினேன். அதன் பின் வாண்டுகளுடன் மீண்டும் கேரம். அதற்குப் பிறகு கிரிக்கெட் விளையாடினோம் பிளாஸ்டிக் பாலில் தான். ஒவ்வொரு முறை அருள் வீடிற்கு போகும் போதும் ஏதாச்சும் உடைப்பது எங்கள் வழக்கம் என்றாகி விட்டது போல. இந்த முறை நொறுக்கியது ட்யூப்லைட்.

மதியம் பசிக்கவே இல்லை. காலைல அப்படி சாப்பிட்டா எப்படி பசிக்கும்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது :-) நானும் ஷங்கரும் பெங்களுரு புறப்படத் தயாரானோம் இருட்டுவதற்குள் வந்து சேர்ந்து விட வேண்டும் என்று. சரவணாவில் ஐஸ் கிரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு அருள், விக்னேஷிடம் இருந்து 3.10 க்கு விடை பெற்றோம். அவர்கள் இருவரும் சென்னைக்கு இரவு 10 மணிக்கு கிளம்புகின்றனர். ஓசூரை நெருங்கும் போது நன்றாக மழை வீசியது. முழுவதும் நனைந்து விட்டோம். மழையில் நடந்து இருக்கிறேன். நனைந்து கொண்டு பைக் ஓட்டியதும் நன்றாக தான் இருந்தது. ஓசூரைத் தாண்டினால் மழை சுத்தமாக இல்லை. பெங்களூரை நெருங்கும் போது எங்கள் உடை காய்ந்து இருந்தது.

மாலை 6.20 அம்மாவிற்குப் போன் செய்தேன். பெங்களுரு அடைந்து விட்டேன் என்றேன். அவர்களே பைக்கை ஷங்கர் வீட்டில் நிறுத்தி இருக்கியா என்றார்கள். ஆமாம், என்றேன். சிறிது நேரம் ஷங்கர் வீட்டில் இருந்து விட்டு 9 மணிக்கு என் ரூமிற்குப் புறப்பட்டேன்.

பயணம் ஆரம்பித்த நொடி முதல் இப்பொழுது வரை மனதில் இந்த வரிகள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது,

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்....

Monday, April 18, 2011

கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரத்தை
அறிந்தவளு(னு)க்கு
என் கண்ணீரின்
ஈரத்தை உணர
முடியவில்லை.
அதனால்,
என் மனதை
கல்லாக்கி விட்டேன்.
அப்படியாவது
என் மனம்
அவளு(னு)க்கு
புரியட்டும் என்று!

Friday, April 01, 2011

என் உயிர் நீயல்லவா

"வைஷு அப்பாவை எங்கடி?" என்றாள் வீணா.

'தெரியாதும்மா' என்று மேரியோ விளையாடிக் கொண்டே பதில் அளித்தாள் 6 வயது நிரம்பிய வைஷ்ணவி.

"ஏன்டி பொய் சொல்ற. அப்பா போனதுக்கப்புறம் நீ தான் கதவை லாக் பண்ணிருக்க"

வைஷ்ணவி கையில் டைரி மில்க் இருந்தது. அம்மா கேட்டா சொல்லக் கூடாதுன்னு வசந்த் தான் வாங்கி கொடுத்து இருப்பான். இந்த அப்பாவும் பொண்ணும் சேர்ந்துட்டு பண்ற அட்டூழியம் தாங்க முடியலை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

"என்னடி காலைலேயே உனக்கு கம்ப்யூட்டர் கேம். போய் படிக்கிற வழியைப் பாரு"

'நீ போய் முதல்ல அப்பாவை கண்டு பிடிக்கிற வழியைப் பாரு'

"அப்படியே அப்பா மாதிரியே வந்திருக்கா. எதை சொன்னாலும் பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு. இருடி உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரு நாள் அர்ச்சனை இருக்கு"

'நீ எப்ப மா அர்ச்சனை பண்ண எல்லாம் கத்துக்கிட்ட?'

"பண்ணும் போது சொல்றேன் டி எங்க கத்துக்கிட்டேன்னு.

'சரிம்மா'

"அப்பா எங்கன்னு சொல்லு டி? அவர் போய் கறி எடுத்துட்டு வந்தா தான் சமைக்க முடியும். இல்லைன்னா பட்டினி தான் நீ"

'நானும் அப்பாவும் KFC ல போய் சாப்பிடுவோம்மா'

இவகிட்ட பேசிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது என்று வசந்தின் நண்பன் ஷங்கருக்கு போன் செய்தாள் வீணா.

"ஷங்கர் அண்ணா, வசந்த் எங்க? நீங்க எல்லாரும் விளையாடிட்டு இருக்கீங்களா?"

'விளையாட தான் வந்தான் தங்கச்சி. இப்ப தான் கிளம்பினான். இன்னும் ஒரு 10 நிமிஷத்துல வீட்டுல இருப்பான்னு நினைக்கிறேன்' என்றான் ஷங்கர்.

'சரின்னா வச்சிடுறேன்' என்றாள் வீணா. அரை மணி நேரம் ஆகியும் வசந்த் வரவில்லை.

எனக்கு பிறந்தது, வாய்ச்சது மட்டும் இல்ல. என்னைச் சுத்தி எல்லாமே புழுகினி கூட்டமா தான் இருக்கு என்று நொந்தது கொண்டே வெளியே புறப்பட்டாள்.

'நீ எங்கம்மா கிளம்பிட்ட'

"ஹ்ம்ம்ம்ம்ம்.. டென்னிஸ் விளையாடப் போறேன்" முறைத்துக் கொண்டே கூறினாள் வீணா

'பெத்தவங்க நீங்க மட்டும் விளையாடப் போங்க. பிள்ளைங்க விளையாடினா மட்டும் படிக்கப் போன்னு சொல்லி திட்டுங்க' என்றாள் வைஷு.

MT
B கிரிக்கெட் கிரௌண்ட் :
"ஸ்வேதா நீ என்ன இங்க?"

'வேற எதுக்கு வீணா. ராகுலைத் தேடி தான். காலைலேயே ராகுல் நல்ல பிள்ளையா பால் வாங்கிட்டு வர்றேன்னு கிளம்பினான். அப்ப எனக்கு தெரியல எதுக்கு பயபுள்ள இன்னைக்கு ரொம்ப பொறுப்பா இருக்கான்னு. ஒரு மணி நேரம் கழிச்சு தான் புரிஞ்சது.'

"இன்னும் எல்லாருக்கு சின்னப் பசங்கன்னு நினைப்பு. சரி ஸ்வேதா உன் பையன் கிஷோர் எங்க? உறங்கிட்டு இருக்கானா?"

'ராகுலை எழுப்பி விட்டதே அவன் தான். இங்க சீனியர்ஸ் டீம் விளையாடிட்டு இருக்கா. அங்க பாரு ஜூனியர்ஸ் டீம்'

அவள் கை காண்பித்த இடத்தில் 10 சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். எல்லாரும் வசந்தின் நண்பர்கள் பிள்ளைகள்.

"ஸ்வேதா எனக்கு பொண்ணா பிறந்ததுனால ஒன்னு குறையுது" என்றாள் வீணா.

ஸ்வேதாவும் வீணாவும் சிரித்தார்கள். இருவரும் ஒரு மணி நேரம் பேசினார்கள் வைஷுவும் கிஷோரும் செய்யும் சேட்டைகளைப் பற்றி.

'வீணா கிளம்பலாமா' என்றான் வசந்த்.

"நீங்க போய் இன்னொரு மேட்ச் ஆடுங்க நான் ஸ்வேதா கூட பேசிட்டு இருக்கேன்" என்றாள் வீணா.

'வீட்டுல வைஷு தனியா இருப்பாடி. பசியா இருப்பா. வா கிளம்புவோம்'

"இவ்வளவு நேரம் அது தோனலையா உங்களுக்கு"

'வீட்டுல போய் நம்ம சண்டைய வச்சுக்குவோம். ராகுல் ஸ்வேதா நாங்க கிளம்புறோம். மச்சான்ஸ் பை' எல்லாரிடமும் விடை பெற்றான் வசந்த்.

"ஸ்வேதா கண்டிப்பா ஒரு நாள் வீட்டுக்கு நீங்க எல்லாரும் வரனும்" என்று விடை பெற்றாள் வீணாவும்.

மதியம் 2 மணி:

"வசந்த் இங்க வா" வீணா அலறும் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்தான் வசந்த.

'என்ன ஆச்சு வீணா' என்றான் வசந்த்.

"உன் மகளைப் பாரு எனக்கு பிடிச்ச பாட்டு வைக்க மாட்டேங்கிறா!"

'ஏன் டி எப்பவும் என் செல்லத்தோட சண்டை போட்டுட்டே இருக்க?'

"நான் என்
பண்றது வசந்த். நம்ம கல்யாணத்துக்கு முன்னால நீ என் கூட அவ்வளவு சண்டை போடுவ. இப்ப ரொம்ப மாறிட்ட. மாமியார் கூட சண்டை போடலாம்னு பார்த்தா.... உன்னை பெத்தவங்க ஆச்சே உனக்கு மேல பொறுமைசாலியா இருக்காங்க. ஊரெல்லாம் என் மருமகள் அப்படி இப்படின்னு என்னை புகழ்றதுக்கே அவங்களுக்கு நேரம் பத்துறது இல்லை. சரி வசந்த, அப்ப நான் உன் செல்லம் இல்லையா. வைஷு மட்டும் தானா?" என்றாள் வீணா.

சிரித்தான் வசந்த்.

'அம்மாவுக்கு அந்த பாட்டை வச்சிடு வைஷு. மம்மி பாவம்ல'

"அப்பா, நான் பிறந்ததுல இருந்து இந்தப் பாட்டை மட்டும் தான் எப்பவும் கேட்டுட்டே இருக்கேன். எங்க ஸ்கூல் பிரேயர் சாங் கூட எனக்கு மனப்பாடம் ஆகலை ஆனால் இந்தப் பாட்டு என் மனசுல அப்படி பதிஞ்சு போயிடுச்சு...." என்றாள் வைஷு.

வசந்திற்கு என்ன பாட்டு என்று புரிந்து விட்டது. டிவி யில பார்க்கலைன்ன என்ன.. என் வீணா செல்லத்திற்கு நான் பாடுறேன் என்று 'உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி" என்று பாட ஆரம்பித்தான் வசந்த்.

"அப்பா ப்ளீஸ் பா. நீ பாடாத. நான் அந்த சேனலையே வச்சிடுறேன்" என்று சேனலை மாற்றினாள் வைஷு.

இப்பொழுது வீணாவும் வசந்துடன் சேர்ந்து பாட ஆரம்பிக்க ஹாரிஸ் ஜெயராஜை திட்டிக் கொண்டே தன் அறைக்கு ஓடினாள் வைஷு.

டிவியில் பாடல் முடிந்த பின்னும் இவர்கள் பாடுவது முடிந்த பாடில்லை....

ஒரு திங்கள்கிழமை:
வைஷுவை ஸ்கூலில் இறக்கிவிட்டார்கள் வீணாவும் வசந்தும். வைஷு டாடா காண்பித்து முடிக்கும் வரை வசந்த் அந்த இடத்தை விட்டு காரை நகர்த்தவில்லை. "கிளம்பு வசந்த் நமக்கு பின்னால பாரு ஜாம் ஆயிடுச்சு" என்றால் வீணா. 'என் பிள்ளை உள்ள போனதுக்குப் பிறகு தான் நான் கிளம்புவேன்' என்றான் வசந்த். வைஷு ஸ்கூலுக்குள் சென்றதும் காரை வீணா அலுவலகத்திற்கு செலுத்தினான்.

"வசந்த் எத்தனை முறை சொல்லி இருக்கேன். இந்த ரோட்டுல வராதன்னு"

'இந்த ரோடு தான் மா டிராபிக் இல்லாம இருக்கும்'

"டேய் என்கிட்டே பொய் சொல்லாத டா. நீ ஏன் இந்தப் பக்கம் வர்றன்னு எனக்கு தெரியும் டா"

'என்னடி புருஷனை மரியாதை இல்லாம டா போட்டு பேசுற'

"நீ பண்ற காரியத்துக்கு உனக்கு மரியாதை வேற வேணுமா"

கார் 'கயல்விழி கலை மற்றும் அறிவியல் கல்லூரி' சாலைக்குள் நுழைந்ததும் வேகத்தை மிகவும் குறைத்தான் வசந்த்.

'அந்த லாவண்டர் கலர் சுடிதார் பொண்ணு ரொம்ப அழகா இருக்கிறா? இல்ல?'

"ஆமா உன் தங்கச்சி மாதிரியே இருக்கா பார்க்க" என்று வீணா வசந்தை முறைத்துக் கொண்டே கூறினாள்.

'அந்த பச்சைக் கலர் உன் தங்கச்சி மாதிரி இல்ல வீணா? என்ன அழகு!'

"அப்ப அவளையே கட்டி இருக்க வேண்டி தான. இனிமேல் என்கிட்ட நீ எதுவும் பேசாத" வீணா பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

'வீணா.. புஜ்ஜு குட்டி.. என் செல்லம்ல. பேசு மா. இனிமேல் இந்த ரோட்டுல நான் வரமாட்டேன்'

வீணா லேசாக சிரித்தாள்.

'புதுசா ஒரு காலேஜ் திறந்திருக்காங்க. நாம அந்த வழியே போகலாம்'

"நீ திருந்தவே மாட்ட. என் ஆபீஸ் வந்திருச்சு. நான் இறங்கிக்கிறேன். ஈவ்னிங் பார்ப்போம்'

'எப்பவும் தர்றத தராம போற?'

"என்னது?"

'flying kiss'

"என் முன்னால வேற பொண்ணுங்களை சைட் அடிச்சல்ல அதனால கட். பை"

வசந்த் பாவமான முகத்தோடு கிளம்ப ஆபீஸ் கேட்டுக்குள் நுழையும் முன் திரும்பி வசந்தைப் பார்த்தாள் வீணா. மற்றவர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக ஒரு flying kiss கொடுத்து விட்டு ஆபீசுக்குள் நுழைந்தாள் வீணா. வசந்தின் மனசைப் போல காரும் பறக்க ஆரம்பித்தது....

வசந்த் ஆபீஸ் சென்றடைந்ததும் வீணாவிடம் இருந்து கால் வந்தது.

'சொல்லு டி'

"வசந்த், ஊர்ல அம்மாக்கு உடம்பு சரி இல்லை"

'என்னடி ஆச்சு அத்தைக்கு? பயப்படுற மாதிரி எதுவும் இல்லைல'

"இல்லை வசந்த், எப்பவும் வர்ற முதுகு வலி தான். இப்ப வலி கொஞ்சம் அதிகமா இருக்குதுன்னு அம்மா சொன்னாங்க"

'சரி டி, நீ ஊருக்கு கிளம்பு அம்மாவை பார்த்துக்கோ. ஆபீஸ்ல லீவ் அப்ளை பண்ணிட்டியா?'

தன் மனதை நன்றாக புரிந்து கொள்ளும் கணவன் அமைந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் வீணா.

"உன்கிட்ட பேசிட்டு லீவ் அப்ளை பண்ணலாம்னு இருந்தேன் வசந்த்"

'லூசா டி நீ. நான் என்ன சொல்லப் போறேன். நீ லீவ் அப்ளை பண்ணு. நான் உனக்கு டிக்கெட் போடுறேன்'

"வசந்த், வைஷ்ணவி...."

'அவளுக்கு இப்ப பைனல் எக்ஸாம்ஸ் இருக்கு டி. முடிஞ்சதும் நான் அவளை கூட்டிட்டு வர்றேன்.'

"அத்தை வேற இந்த வாரம் தான் மதினி வீட்டுக்கு போனாங்க. அவங்களை கூப்பிடலாமா?"

'நான் பார்த்துக்கிறேன் டி வைஷு வை. பத்து நாளில் எக்ஸாம்ஸ் முடியப் போகுது. அவா என்ன சின்னக் குழந்தையா?'

'சரி வசந்த். பஸ் டைமை பொருத்து என்னை பிக் அப் பண்ண வந்திடு'

இருவரும் போனை கட் செய்தார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையம், மாலை 6.34 மணி,
எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள் வீணாவும் வசந்தும். திண்டுக்கல் செல்லும் பேருந்து புறப்படத் தயாராக இருந்தது.

'பஸ் கிளம்பப் போகுது வீணா. உள்ள போ'

வீணா பதில் எதுவும் பேசாமல் தான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வசந்தைப் பார்த்தாள். வசந்த் ஏதாச்சும் பேசு என்று அவள் உள்மனம் ஏங்கியது.

'மிஸ் யு வீணா' என்றான் வசந்த்.

"மிஸ் யு டூ வசந்த்" என்றாள் வீணா.

பேருந்து புறப்பட்டது.

தன் வீட்டை அடைந்ததும் வசந்திற்கு போன் செய்து தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை தெரிவித்தாள் வீணா. வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டாள். அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றாள். அம்மாவிற்கு மட்டும் இன்றி அப்பாவுக்கும் ஒரு complete checkup செய்தாள். ஹாஸ்பிடல், வீட்டு வேலைகள் என்று இரண்டு நாட்கள் ஓடிப் போனது.

புதன்கிழமை இரவு 10 மணிக்கு வசந்திற்கு போன் செய்தாள்.
"வைஷு என்ன பண்ணிட்டு இருக்கா? படிச்சிட்டாளா?"

'படிச்சு முடிச்சிட்டு இப்ப தான்டி உறங்க ஆரம்பிச்சா'

"அம்மாவைத் தேடினாளா? உனக்கு எந்த சிரமும் இல்லையே வசந்த்?"

'அவளா? அப்பா, அம்மா சீக்கிரம் வரலைன்னா நாம வேற அம்மா பார்த்துக்கலாம்ன்னு சொன்னாடி.'

"அதுக்கு துரை என்ன சொன்னீங்க.."

'வைஷு, உன் எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் நாம இன்டர்வியு வச்சு புது அம்மாவை செலக்ட் பண்ணலாம்னு சொன்னேன்'

"நீ....
சார் அப்புறம் எதுக்கு அன்னைக்கு பஸ் எத்தி விடும் போது கண் கலங்கி நின்னீங்க?"

'நீ மட்டும் என்னவாம். ஆனால், அங்க போய் சேர்ந்ததும் என்னையும் என் பொண்ணையும் மறந்திட்ட. எப்ப வீட்டுக்கு வரப் போறன்னு கூட சொல்லலை'

"சொல்றேன் வசந்த். அம்மாக்கு இன்னும் வலி குறையலை"

'நீ வேணா பாரு.. சீக்கிரமா மட்டும் நீ வரலைன்னா புதுசா ஒரு அம்மாவை பார்க்கப் போறோம் பாரு'

"விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத வசந்த். ப்ளீஸ்"

'விளையாட்டுக்கு சொல்லலை டி'

வீணா பதில் ஏதும் பேசவில்லை.

'என்ன பதிலைக் காணோம்'

"நான் வைக்கிறேன் வசந்த். அப்புறமா பேசுறேன்"

'சரி நாம இப்ப சண்டை போட வேணாம். பேசாம அம்மாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு டி. இங்க வச்சு அவங்களை பார்த்துக்கலாம்'

"இல்லை வசந்த். அம்மாவை இப்ப எங்கயும் ட்ராவல் பண்ணக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க"

'ஹ்ம்ம் சரி டி. அம்மாவை பார்த்துக்கோ. பரீட்சை முடிஞ்சதும் நான் வைஷுவை கூட்டிட்டு வர்றேன். கொஞ்சம் அடிக்கடி போன் பண்ணு டி. நீ இல்லாம ஏதோ தனியா இருக்கிற மாதிரி இருக்கு டி'

"சரி டா. கண்டிப்பா பண்றேன். என் செல்லத்துக்கு குட் நைட்" என்றாள் வீணா.

'குட் நைட். வசந்த் ட்ரீம்ஸ்' என்றான் வசந்த்.

அடுத்த நாள் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் திவ்யாவை பார்த்தாள். திவ்யா பள்ளியில் வீணாவின் ஜூனியர். இருவரும் பக்கத்து பக்கத்து வீடு என்பதால் நெருங்கிய தோழிகளாய் பழகினர்.

"எப்படி பெங்களூர் ல இருந்து வந்த? ஊருக்கு வர்றதா என்கிட்ட நீ சொல்லவே இல்லை" என்றாள் வீணா.

திவ்யா பதில் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

"என்னடி ஆச்சு" என்றாள் வீணா.

'மனசே சரி இல்லைக்கா. அதான் வீட்டுக்கு வந்திட்டேன்' என்றாள் திவ்யா.

"என்னடி ஆச்சு. வேலை ரொம்ப அதிகமா இருக்கா. மன அழுத்தமா?"

'வேலை எல்லாம் நல்லா தான் போகுது. நான் கார்த்திக் ன்னு ஒரு பையனை காதலிக்கிறதா உங்ககிட்ட சொல்லி இருக்கேன்ல'

"ஹ்ம்ம் ஆமா டி"

'நேத்து அவனோட ஜி மெயில ஓபன் பண்ணிப் பார்த்துட்டு இருந்தேன். அதுல காவ்யான்னு வேற ஒரு பொண்ணோட மெயில்ஸ், போட்டோஸ் எல்லாம் இருந்துச்சுக்கா. அந்த பொண்ணு யாருடான்னு கேட்டதுக்கு அவன் பதில் ஏதும் சொல்லலை. அப்புறம் அந்த மெயில்ஸ் எல்லாம் படிச்சுப் பார்த்தேன். எனக்கு முன்னால அவன் அந்தப் பொண்ணை லவ் பண்ணிருக்கான். இப்ப அவங்களுக்குள்ள எதுவும் இல்லைன்னு சொல்றான். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அக்கா. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அதான் ஊருக்கு வந்திட்டேன்' என்றாள் திவ்யா.

வீணாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "நல்லா யோசிச்சு தெளிவான ஒரு முடிவுக்கு வாடி. தனியா இருக்காத. அக்கா இங்க தான் இருப்பேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு. இன்னைக்கு சாயங்காலம் நாம கோவிலுக்குப் போகலாம்" என்றாள் வீணா.

'சரிக்கா' என்றாள் திவ்யா.

அன்று இரவு வசந்த் போன் செய்தான்.
'என்ன மேடம் ரொம்ப பிஸியா? ஒரு கால் கூட இல்லை?'

"அப்படி இல்லை வசந்த். திவ்யா தெரியும்ல அவளும் ஊருக்கு வந்திருக்கா. ரொம்ப நாளைக்கு அப்புறமா அவளைப் பார்த்தேனா அதான் அவள்ட்ட பேசிட்டு இருந்தேன்"

'ஓ சரி டி.. என்னடி இன்னைக்கு டல்லா இருக்கா. என்னாச்சு? உடம்புக்கு ஒன்னும் இல்லைல'

"நல்லா தான் இருக்கேன் வசந்த்"

சிறிது நேரம் யோசித்தவளாய்,

"வசந்த் உன் ஜிமெயில் பாஸ்வோர்ட் என்ன?" என்றாள் வீணா.

'நான் சொல்றேன்னு சொன்னப்ப வேணாம்னு சொன்ன. இன்னைக்கு என்ன திடீர்னு'

"சும்மா தான். சொல்லேன்"

'veenabk534'

"நான் ஏன் வசந்தை சந்தேகப்படுறேன்? வசந்த் அப்படி எல்லாம் இருக்
மாட்டான்" என்று யோசித்தாலும் அவளையும் அறியாமால் கேட்டே விட்டாள்.

"வசந்த் நான் உன்னை ஒன்னு கேட்பேன். ஆமா இல்லைன்னு மட்டும் பதில் சொல்லணும்"

'என்னடி புதிர் போடுற.. சரி கேளு'

"உன்னோட முதல் காதல் நான் தான?"

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை வசந்த்.

'அது வந்து வீணா.... இல்லை'

வீணாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. வசந்திடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.

'ஆனால், அந்தக் காதல் வேற வீணா'

"நீ எதுவும் பேச வேணாம் வசந்த். விளையாட்டுக்கு நீ சொன்னாலே என்னால தாங்கிக்க முடியாது. உன் முதல் காதலைப் பற்றி மேல எதுவும் சொல்லாத வசந்த்"

அழைப்பை துண்டித்தாள் வீணா. வசந்த் அழைத்துக் கொண்டே இருந்தான். அவனிடம் பேச அவள் மனம் விட்டுக் கொடுக்கவில்லை.

மறுநாள் திவ்யாவைப் பார்த்தாள் வீணா.
"என்னடி முடிவு பண்ணி இருக்க?"

'நான் உங்க கிட்ட என்ன பண்ணலாம்னு கேட்க வந்தேன் அக்கா..'

"என்கிட்டையா!! நீயாவது புத்திசாலித் தனமா முடிவு எடு டி. உன் வாழ்க்கைக்கு முடிவு சொல்ற தகுதியில நான் இல்லை"

திவ்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'சரிக்கா' என்றாள்.

அன்று இரவு வசந்த் நம்பரில் இருந்து மீண்டும் கால் வந்தது. நான்காவது முறை தான் எடுத்தாள் வீணா.

"அம்மா எப்பம்மா வீட்டுக்கு வரப் போற?" என்றாள் வைஷு.

"நான் எதுக்கு டி வரனும். நீ தான் வேற அம்மா பார்க்கலாம்ன்னு சொன்னல்ல. அப்புறம் நான் எதுக்கு?"

"அப்பா நேத்துல இருந்து ரொம்ப அப்செட்டா இருக்காரும்மா"

"ஹ்ம்ம் நானும் தான்"

"என்னம்மா ஆச்சு. உடம்பு சரி இல்லையா? அப்பாகிட்ட பேசுறியா?"

"வேணாம் டி. நீ சாப்பிட்டியா கண்ணு"

"நான் சாப்பிட்டேன்மா. அப்பா தான் இன்னும் சாப்பிடலை"

"உன்னை பத்தி மட்டும் தான் கேட்டேன் வேற யாரையும் பத்திக் கேட்கலை. சரி நீ போய் உறங்கு வைஷு. பரீட்சை முடிஞ்சதும் நீ பாட்டி வீட்டுக்கு வந்திடு"

"அப்பாவை நீ தான் தனியா விட்டுட்டு போயிட்ட. நான் வர மாட்டேன்மா. நீ பாட்டியை கூட்டிட்டு இங்க வா"

"இனிமேல் நான் அங்க வரமாட்டேன். புது அம்மாவை பார்க்கச் சொல்லு உங்க அப்பாவை" என்று கோபமாக பேசிவிட்டு வைத்தாள் வீணா.

'Please call me. Let me explain. Missing you a lot Veena' என்று மெசேஜ் அனுப்பி இருந்தான் வசந்த். வீணா இன்னும் வசந்தை மன்னிக்கவில்லை. 'Missing you a lot Veena' வை மட்டும் ஒரு நூறு முறை படித்து விட்டு உறங்கிப் போனாள்.

'அக்கா நான் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன்' என்றாள் திவ்யா.

"என்னடி முடிவு பண்ணி இருக்க. அவனை மறந்திடலாம்ன்னு தான?"

'இல்லைக்கா. அவன் இல்லாம என்னால வாழ முடியாதுக்கா. "A man is lucky if he is the first love of a woman, and a woman is lucky if she is the last love of a man" என்று கேட்டிருக்கேன் அக்கா. அந்த விதத்துல நாங்க ரெண்டு பேரும் அதிர்ஷ்டக்காரங்க. ஏன் பசங்களுக்கு மட்டும் அப்படின்னு இப்ப நான் யாருகிட்டயும் வாதாட விரும்பல. ஆயிரம் தடவைக்கு மேல யோசிச்சு பார்த்துட்டேன் அது உண்மை தான்னு தோனுது. என் வாழ்க்கை என் முதல் காதல் கார்த்திக் கூட தான் நல்லா இருக்கும். அவன் என்னை கண்டிப்பா காலம் பூரா சந்தோசமா பார்த்துக்குவான். என்னால மட்டும் தான் அவன நல்லா பார்த்துக்க முடியும். என் முடிவு சரி தானக்கா?'

"ஆல் தி பெஸ்ட்" என்றாள் வீணா.

அடுத்த நிமிடம் வசந்திற்கு போன் செய்தாள் வீணா.
"ஹலோ வசந்த்"

'அம்மா.. அப்பா வீட்ல இல்லம்மா'

"எங்கடி போய் இருக்காரு?"

'அவரோட முதல் காதலை வீட்டுக்கு கூட்டிட்டு வரப் போய் இருக்காரு. நீ தான் எங்களை வேற அம்மா பார்த்துக்க சொல்லிட்டல்ல'

"என்னடி சொல்ற?"

'சரிம்மா புது அம்மா வர்றதுக்குள்ள நான் போய் கிச்சனை கிளீன் பண்றேன். அப்ப தான் அவங்க வந்ததும் சமையல் பண்ண சரியா இருக்கும்'

"ஏன்டி யாரு சமைச்சு போட்டாலும் சாப்பிடுவியா? இருடி உங்க ரெண்டு பேரையும் அங்க வந்து கவனிச்சுக்கிறேன். அவளை!!! இப்பவே கிளம்பி அங்க வர்றேன்னு உங்க அப்பாகிட்ட சொல்லிடு"

'சரி சொல்லிடுறேன் மா. உன்னோட டிரஸ் எடுக்க வர்றன்னு சொல்லிடுறேன்'

"உனக்கு இருக்குடி, உங்க அப்பா சும்மா இருந்தாலும் நீ தான் ஏத்தி விட்டு இருப்ப. இந்தா வர்றேன்" போனை கட் செய்தாள் வீணா.

ஊருக்குப் போய் வைஷுவை கூட்டிக் கொண்டு வருவதாக தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்னை வந்து சேர்ந்தாள் வீணா.

ஒரு பெண் உருவம் உள்ளே நடந்து கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று விட்டது. உள்ளே சென்று ஒரு கலவரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு ஒரே ஆச்சரியம். உள்ளே இருந்த பெண் உருவம் வேறு யாருமல்ல வீணாவின் அத்தை, வசந்தின் அம்மா. மீண்டும் வீணாவின் இதயம் துடிக்க ஆரம்பித்தது.

'என்னோட முதல் காதல் என்னோட அம்மா தான். இதை எங்க என்னை சொல்ல விட்ட' என்றான் வசந்த்.

வீணா மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.

'அம்மா வந்ததும் நானே ஊருக்கு வந்து உன்கிட்ட நேர்ல தெளிவா பேசலாம்னு இருந்தேன். ஆமா இப்ப எப்படி திடீர்னு வந்த?' என்றான் வசந்த்.

ஊரில் நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் வீணா.
"எப்படியோ வசந்த், என்னைப் பொருத்த வரை உன்னோட முதல் காதலும் நான் தான், உன்னோட கடைசிக் காதலும் நான் தான். நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரி" என்றாள் வீணா.

'என்னோட கடைசிக் காதல் நீன்னு நான் சொன்னேன்னா?'

"என்ன சொல்ற வசந்த்?"

'ஆமா வீணா, வேற யாரையும் நான் காதலிக்க மாட்டேன்னு நினைச்சேன். ஆனால், அவா என் வாழ்க்கைல வந்ததும் எல்லாமே மாறிடுச்சு'

"யாரு அவா வசந்த். எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சுன்னு இப்ப தான் நினைச்சேன். ஆனால....என்னை ரொம்ப அழ வைக்காத வசந்த். நான் எங்க அம்மா வீட்டுக்கே போறேன் திரும்ப. பாருங்க அத்தை. நான் இப்ப என்ன பண்ணனும்? என்கிட்டவே எவ்வளவு தைரியமா சொல்றான். இனிமேல் உன் காதல்ல நான் குறுக்கிட மாட்டேன் வசந்த். நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன்"

"டேய், ஏன்டா அவளை இவ்வளவு சீண்டிப் பார்க்கிற?" என்றார் வசந்தின் அம்மா.

'என்னோட இந்தக் காதலுக்கு காரணம் நீ தான் வீணா. நான் உன்னைத் தவிர யாரையும் காதலிக்க மாட்டேன்னு தான் நினைச்சேன். ஆனால், நீ தான்....'

"நான் என்ன டா பண்ணேன்???? என்னை ரொம்ப குழப்பாத வசந்த்"

'என் தேவதை வீணா மூலமா தான என்னோட குட்டி தேவதை வைஷு கிடைச்சா. அப்ப காரணம் நீ தான?'

"You! You! You! You! You! You! You! Stupid! my sweet Idiot!"

நடப்பதை எல்லாம் வசந்தின் அம்மா ரசித்துக் கொண்டிருந்தார்.

"வசந்த், திவ்யா சொன்னால 'A man is lucky if he is the first love of a woman, and a woman is lucky if she is the last love of a man' இதை பத்தி என்ன நினைக்கிற?"

'அதைப் பத்தி எனக்கு தெரியல. என்னைப் பொருத்த வரை என்னோட உயிரா நீ இருக்க, உன்னோட உயிரா நான் இருக்கேன். இதான் அதிர்ஷ்டம்ன்னு நினைக்கிறேன். என் வாழ்க்கைத் துணையா நீ அமைந்தது என் பாக்கியம்' என்றான் வசந்த்.

"I am so lucky to get you as my life da" என்றாள் வீணா.

"என்னை மன்னிச்சிடு வசந்த், உன்னை புரிஞ்சுக்காம சண்டை போட்டுட்டேன். நான் சந்தேகப்பட்டுட்டேன்ல உன்மேல"

'இல்லைடி. நீ என்கிட்ட கோபப்பட்டது, சண்டை போட்டது எல்லாமே சந்தேகத்துனால இல்லை. என் மேல இருக்கிற possessiveness னால. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உன்னோட possessiveness தான்.

"I Love you Vasanth"

'Love you too டி என் பொண்டாட்டி'

'வீணா!'

"ஹ்ம்ம்."

'வீணா'

"சொல்லு டா"

'எனக்கு இன்னொரு காதல் வேணும்' என்று வீணாவின் காதில் கிசுகிசுத்தான் வசந்த்.

"நீ ரொம்ப ரொம்ப கெட்டவன் டா" வெட்கத்துடன் வசந்தின் மார்பில் முகத்தை புதைத்தாள் வீணா.

- காதல் தொடரும் :-)