Pages

Monday, April 25, 2011

பயணம் 2 : பெங்களூர் - சேலம் - பெங்களூர்(கிறுக்கல்கள்)

22.04.2011
புனித வெள்ளி என்பதால் அலுவலகத்தில் மூன்று நாட்கள் விடுமுறை. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பிறந்த ஊருக்குச் சென்று வந்ததால் இந்த விடுமுறைக்கு பைக்கில் எங்கயாவது செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அருள் புது வீடு கட்டிய பின்பு நான் அவன் வீட்டிற்குச் செல்லவில்லை. அருள்? என் கல்லூரி நண்பன். கல்லூரிக் காலங்களில் கோவையில் இருந்து சேலத்திற்கு பதினைந்து முறை சென்று இருப்போம் நண்பர்கள் பட்டாளத்துடன். எல்லா முறையும் அருள் வீட்டில் தான் தங்குவோம் நாம தான் சோறுன்னா சட்டி தின்கிற கூட்டம் ஆச்சே. நான் நிறைய முறை யோசித்திருக்கிறேன் எப்படி எங்க எல்லாருக்கும் சளைக்காமல் சமைச்சு போடுறாங்கன்னு. இதை விட அருள் வீடு எங்க எல்லோருக்கும் பிடிக்க காரணம் நம் வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும். அருள் வீட்டில் நாங்கள் அடித்த கூத்துகள் ஏராளம். அதைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம். எப்படியோ விக்னேஷை சம்மதிக்க வைத்து அவனையும் சேலம் வர வைத்தேன் ஏதாவது ஒரு சின்ன ட்ரிப் போலாம் என்று. அவனுக்கு வெள்ளி விடுமுறை இல்லாததால் சனிக் கிழமை காலை வருவதாய் சொன்னான்.

அம்மாவிற்கு போன் செய்தேன். சேலம் போவதாய் சொன்னேன். பஸ்ஸா, ரயிலா என்று கேட்டார்கள். பஸ் தான் என்று பொய் சொன்னேன். மன உறுத்தலாக இருந்தாலும் வேறு வழி இல்லை. பைக்கில் போகிறேன் என்றால் திட்டு யார் வாங்குறது!

நானும் ஷங்கரும் பெங்களூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்பினோம். ஓசூரைத் தாண்டி அடையார் ஆனந்த பவனில் ஒரு பிரேக் எடுத்தோம். போகும் வழியில் மழை வருவது போல இருந்தது. ஒரு சில இடங்களில் தூறல் இருந்தது. ஆனால், ஒரு இரண்டு கி மீ சென்றால் நல்ல வெயில். கிருஷணகிரி - சேலம் பாதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரோட்டிற்கு இருபுறமும் பச்சைப் பசேல் எனக் காட்சி அளித்தது. 5.30 மணிக்கு ஷங்கர் வீட்டை அடைந்தோம். ஷங்கரின் அக்கா மகனுக்கு ஒரு நான்கு வயது இருக்கும். எங்கள் இருவரையும் பார்த்து வெகுளித் தனமாக ஒரு கேள்வி கேட்டான். எப்படி மாமா பைக்கை பஸ்சில வச்சுட்டு வந்தீங்க? எங்க வச்சீங்க என்று. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நல்ல வேளை ஷங்கர் அம்மா நாங்கள் பைக்கில் வந்ததை கவனிக்க வில்லை. பார்த்து இருந்தால் எங்கள் இருவருக்கு அர்ச்சனை தான்.... விக்னேஷ் மெசேஜ் அனுப்பி இருந்தான் "5 மணி ரயில் ஏறிவிட்டதாகவும் 10 மணிக்கு சேலத்தில் இருப்பேன்" என்றும்.

நானும் ஷங்கரும் அருள் வீட்டுக்குப் புறப்பட்டோம். பின், ஊத்துமலை முருகன் கோவிலுக்குச் சென்றோம் அருள் குடும்பத்துடன். ஆனால், நான் கோவிலுக்குள் செல்லவில்லை. நான் தான் இப்பொழுதெல்லாம் சாமி கும்பிடுறது இல்லையே. அருளிடம் "கடவுள் இருந்தா நல்லா இருக்கும்" என்று கமல் வசனங்களைப் பேசி சமாளித்தேன். அந்த மலையில் இருந்து சேலம் முழுவதையும் பார்க்கலாம். அந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு திருச்சி மலைகோட்டை தான் நினைவுக்கு வந்தது (அடுத்த ட்ரிப் திருச்சியா :-) !). சேலம் முழுவதையும் பார்க்கும் அக்காட்சி மிக அழகாக இருந்தது. அங்கு இருந்து கிளம்பும் போது லேசாகத் தூறல் விழ ஆரம்பித்தது. அருள் வீடு வந்து சேரும் போது முழுவதும் நனைந்து இருந்தோம் நானும் ஷங்கரும். ஆரம்பித்த மழை நிற்கவே இல்லை. பெங்களுரு மழையில் இருந்து தப்பிக்க சேலம் சென்றால் அங்கும் எங்களை மழை விடவில்லை. இரவு உணவை A2B யில் முடித்தோம். ஷங்கர் அவன் வீட்டிற்குச் சென்றான். மழையின் காரணத்தால் விக்னேஷ் வர மிக தாமதம் ஆனது. தனிஷ்பேட்டையில் இருந்து சேலத்திற்கு 20 நிமிடிங்கள் தான் ஆகும். ஆனால், விக்னேஷ் ட்ரெயின் வர 2.30 மணி நேரம் ஆனது. அவன் வீடு வந்து சேரும் போது மணி 1. "ஏன்டா ட்ரெயின் நகரலன்னா ஆட்டோ பிடிச்சு வரத் தெரியாதா? நீ என்ன சின்னப் பிள்ளையா?" என்று அவனை கடுப்பேத்திக் கொண்டிருந்தேன். அப்படியே அன்று இரவு உறங்கிப் போனோம்.

23.04.2011
காலை எழும் போது மணி 9.30. நாங்கள் எப்பொழுது அருள் வீட்டிற்குச் சென்றாலும் 'காரப் பனியாரம்' சிற்றுண்டியாக இருக்கும். பேருக்குத் தான் சிற்றுண்டி. ஆனால், நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்தால், சாப்பாடை பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டதோ என்று எண்ணத் தோன்றும் பார்ப்பவர்களுக்கு. ஒரு கட்டு கட்டினோம் நானும் விக்னேஷும். அருள் வீட்டிலும் இரண்டு வாண்டுகள்.... அவன் அக்கா குழந்தைகள். நொடிக்கு ஒரு முறை எங்களையும் மாமா மாமா என்று அழைத்தது மிக அழகாக இருந்தது. மிகவும் ரசித்தேன். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம். அவர்களுடன் கேரம் விளையாடினோம். அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால், எங்களை அந்த பிஞ்சுகள் இரண்டும் மறக்கவில்லை.

12 மணி அளவில் நான், அருள், ஷங்கர், விக்னேஷ் மேட்டூர் புறப்பட்டோம். எங்களுடன் அருளின் அக்கா மகனும் சேர்ந்து கொண்டான். ஜலகண்டபுரம் வழியாக மேட்டூர் சென்றோம். போகும் வழியில் பல கிராமங்களைக் கடந்து சென்றோம். நகரங்களைப் போலில்லாமல் மிக அழகாக அமைதியாக இருந்தது. கடைசிக் காலங்களை இப்படி ஒரு அழகான கிராமத்தில் கடத்த வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. மேட்டூர் சென்று இறங்கியதும் தர்பூசணி, மாங்காய் என்று அடித்து நொறுக்கினோம். அதன் பின் குளிக்கச் சென்றோம். சிறு சிறு படிக்கட்டுகளில் இருந்து நீர் வீழ்ந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு படிக்கட்டும் நான்கு அடி இருக்கும். நாங்கள் அப்படியொரு ஒரு நான்கடி நீர் வீழ்ச்சியின் கீழ் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். நிறைய குட்டி மீன்கள் அந்த நீரோடு போய்க் கொண்டிருந்தன. அந்தப் படிக்கட்டில் இருந்து நீரோடு கீழே விழும் போது 'நாம் தண்ணீரில் தான் மீண்டும் விழப் போகிறோம்' என்று அறியாமல் ஒவ்வொரு மீனும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மீண்டும் படிக்கட்டின் மேலே தாவ முயன்று தோற்றுக் கொண்டு இருந்தது. அதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. அப்பொழுது விக்னேஷ் ஒரு தத்துவம் சொன்னான். அப்பொழுது அவனை நாங்கள் கிண்டல் அடித்தாலும் அதில் இருந்த உண்மையை மறைக்க இயலாது. "இந்த சின்ன நீர் வீழ்ச்சி ல இருந்து ஒவ்வொரு மீன் விழும் போது நாம சாகப் போறோம் என்று நினைச்சு தன்னை காப்பாதிக் கொள்ள மறுபடியும் தாவுகின்றன. அந்த மீன்களுக்குத் தெரியாது நாம போய் ஒரு பெரிய நீர்தேக்கத்தை தான் அடையப் போறோம்னு. இது தான் வாழ்க்கை என்று". உண்மையில் ரசித்தேன். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

குளித்து முடித்து விட்டு சேலம் புறப்படத் தயாரானோம். சாப்பிட நிறைய மீன் வகைகள் இருந்தது. அருள் என்னை சாப்பிட அழைத்தான். நான் இன்று சைவம் என்றேன். 'ஏன்டா சாமி கும்பிட மாட்ட அப்புறம் என்ன சனிக்கிழமை கறி சாப்பிட மாட்டேன்னு சொல்ற. நீயெல்லாம் இதை பின்பற்றக் கூடாது' என்றான். அவனிடம் என்ன பதில் கூற என்று தெரியவில்லை. அதெல்லாம் அப்படித்தான் என்றேன். "அவளுக்காகத் தான் என்னை மாற்றிக் கொண்டேன்" என்று சொல்ல வேண்டும் போல இருந்தது. அவளுக்காக மாறிய நான் மீண்டும் மாறுவது எனக்குப் பிடிக்கவில்லை.

ஷங்கரும், விக்னேஷும் சைவம். அவர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மீண்டும் தர்பூசணி, மாங்காய், கரும்புச் சாறு என்று என் வயிற்ரை நிரப்பிக் கொண்டிருந்தேன் அங்கே எதுவும் எனக்குப் பிடித்த ஹோட்டல் தென்படாததால். சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் சேலம் புறப்பட்டோம். ஜலகண்டபுரம் தாண்டியதும் மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. கோடை மழை போல தெரியவில்லை. மழைக் காலம் முன் கூட்டியே ஆரம்பித்தது போல இருந்தது. காரில் சென்றதால் இந்த முறை நனையாமல் தப்பித்தோம். 6 மணி அளவில் அருள் வீட்டை அடைந்தோம். சேலத்தில் வசிக்கும் இன்னொரு கல்லூரி நண்பன் சபரியும் அருள் வீட்டிற்கு வந்தான்.

மழை இன்னும் நின்ற பாடில்லை. மழையில் நனைந்து கொண்டே கணேஷ் மகாலிற்கு சென்றோம். இரவு உணவை அங்கே முடித்தோம். யார் பில் செலுத்துவது என்று ஒரு பட்டி மன்றமே நடந்தது. கடைசியில் நான் தான் பலிகடா ஆனேன். ஆனால், எப்பொழுது செய்த புண்ணியமோ "only cash" என்றார்கள் ஹோட்டல் நிர்வாகத்தினர். விக்னேஷ் அவன் அம்மாவோடு தன் கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டே wallet யைத் தந்தான். பலி ஆடு மாறியது :-)

வெளியில் மழை இன்னும் பெய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் ARRS multiplex சென்றோம். 'கோ' படம் பார்த்தோம். Housefull. படம் நன்றாகப் போனது. ஜீவா அருமையாக நடித்து இருந்தார். பியா கதாப்பாத்திரம் என் மனதை தொட்ட அளவிற்கு கார்த்திகா கதாப்பாத்திரம் இல்லை என்று தான் சொல்லுவேன். படம் முடிந்து வீடு வந்து சேரும் போது மணி இரண்டு. நாங்கள் ஒய்வெடுக்க ஆரம்பித்தோம் ஆனால் மழை ஒயவில்லை.

25.04.2011
காலை 10 மணிக்குத் தான் எழுந்தோம். அருள் வீட்டில் டிபன். சிக்கன், மட்டன் குழம்போடு இட்லி, தோசை, சப்பாத்தி. பாவம் விக்னேஷ் அவனுக்கு மட்டும் தக்காளி சாப்ஸ். வெளுத்துக் கட்டினேன். அதன் பின் வாண்டுகளுடன் மீண்டும் கேரம். அதற்குப் பிறகு கிரிக்கெட் விளையாடினோம் பிளாஸ்டிக் பாலில் தான். ஒவ்வொரு முறை அருள் வீடிற்கு போகும் போதும் ஏதாச்சும் உடைப்பது எங்கள் வழக்கம் என்றாகி விட்டது போல. இந்த முறை நொறுக்கியது ட்யூப்லைட்.

மதியம் பசிக்கவே இல்லை. காலைல அப்படி சாப்பிட்டா எப்படி பசிக்கும்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது :-) நானும் ஷங்கரும் பெங்களுரு புறப்படத் தயாரானோம் இருட்டுவதற்குள் வந்து சேர்ந்து விட வேண்டும் என்று. சரவணாவில் ஐஸ் கிரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு அருள், விக்னேஷிடம் இருந்து 3.10 க்கு விடை பெற்றோம். அவர்கள் இருவரும் சென்னைக்கு இரவு 10 மணிக்கு கிளம்புகின்றனர். ஓசூரை நெருங்கும் போது நன்றாக மழை வீசியது. முழுவதும் நனைந்து விட்டோம். மழையில் நடந்து இருக்கிறேன். நனைந்து கொண்டு பைக் ஓட்டியதும் நன்றாக தான் இருந்தது. ஓசூரைத் தாண்டினால் மழை சுத்தமாக இல்லை. பெங்களூரை நெருங்கும் போது எங்கள் உடை காய்ந்து இருந்தது.

மாலை 6.20 அம்மாவிற்குப் போன் செய்தேன். பெங்களுரு அடைந்து விட்டேன் என்றேன். அவர்களே பைக்கை ஷங்கர் வீட்டில் நிறுத்தி இருக்கியா என்றார்கள். ஆமாம், என்றேன். சிறிது நேரம் ஷங்கர் வீட்டில் இருந்து விட்டு 9 மணிக்கு என் ரூமிற்குப் புறப்பட்டேன்.

பயணம் ஆரம்பித்த நொடி முதல் இப்பொழுது வரை மனதில் இந்த வரிகள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது,

மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்....

12 comments:

ரேவா said...

நான் தான் பஸ்ட்...படிச்சிட்டு சொல்லுறேன்.........

ரேவா said...

வழக்கம் போல் இந்த பயணத்தில் நானும் பயணித்தேன் என்று தான் சொல்லவேண்டும்... நீ எடுத்த புகைப்படத்தை இணைத்திருந்தால் கூடுதல் அழகு கிடைத்திருக்குமோ?... என்ற எண்ணம்...உதாரணம் நிறைய குட்டி மீன்கள் அந்த நீரோடு போய்க் கொண்டிருந்தன. அந்தப் படிக்கட்டில் இருந்து நீரோடு கீழே விழும் போது 'நாம் தண்ணீரில் தான் மீண்டும் விழப் போகிறோம்' என்று அறியாமல் ஒவ்வொரு மீனும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மீண்டும் படிக்கட்டின் மேலே தாவ முயன்று தோற்றுக் கொண்டு இருந்தது. இந்த இடம் எனக்கு அப்படி தோன்றியது...
நட்புக்கள் உடன் இருக்கும் எல்லா பயணமும் சுவையானது தான்....நட்பில் இழந்த விசயங்களை, உணர்ந்தேன்....பதிவும் அழகு....உங்கள் நட்பும்....சில கட்டுபாடுகளும்.....வாழ்த்துக்கள் ஆனந்த்....

எவனோ ஒருவன் said...

நன்றி ரேவா தங்கள் கருத்துக்கு :-)

என்னால் தான் என் வேண்டுகோளை ஏற்று தாங்கள் எழுதிய "இனிக்க இனிக்க காதல் செய்யும் காதல் தோழன் அப்டேட்ஸ்....(காதல் + ரொமான்ஸ்)" பதிவை முதலில் படிக்க முடியாமல் போய்விட்டது. வருந்தினேன்.

http://revakavithaikal.blogspot.com/2011/04/blog-post_9551.html

தங்கள் கதை மிக அருமை. தொடர்ந்து இது போன்ற கதைகளையும் எழுதுங்க.

கொஞ்சம் போட்டோஸ் எடுத்தோம். எல்லாம் என் நண்பன் அருளிடம் உள்ளது. அவன் அனுப்பியதும் புகைப்படங்களை இணைக்கிறேன்.

Priya said...

அழகான நண்பர்கள்.. அழகா எழுதிருக்க...
குறிப்பாக மீன்களை பற்றி சொல்லிய விதம் அழகு...
மழையில் நனஞ்சுட்டே பைக் ல போறது ரொம்ப சூப்பரா இருக்கும்...

எவனோ ஒருவன் said...

@ Priya

நீ எப்ப மழைல நனைஞ்சுட்டு பைக் ல போன? :-)

அன்புடன் மலிக்கா said...

நினைவுகளின் ஊடே நிலைநிறுத்திய பயணம் நீண்டு தொடரட்டும்..

//மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்..//

ஒன்று செய்யவேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள்
தங்கள் ஏக்கம் தெரிந்து வந்தடையும் தானாக..

Priya said...

மழைல நனைஞ்சுட்டு பைக் ல போனதில்ல ஆனா நல்லா இருக்கும்னு தெரியும்...

ஜெ.ஜெ said...

//ஏன்டா ட்ரெயின் நகரலன்னா ஆட்டோ பிடிச்சு வரத் தெரியாதா? நீ என்ன சின்னப் பிள்ளையா?////

எல்லாரயுமே இப்படிதான் கேப்பீங்களோ?? :)

//இந்த சின்ன நீர் வீழ்ச்சி ல இருந்து ஒவ்வொரு மீன் விழும் போது நாம சாகப் போறோம் என்று நினைச்சு தன்னை காப்பாதிக் கொள்ள மறுபடியும் தாவுகின்றன. அந்த மீன்களுக்குத் தெரியாது நாம போய் ஒரு பெரிய நீர்தேக்கத்தை தான் அடையப் போறோம்னு. இது தான் வாழ்க்கை என்று//

சூப்பர்.. விக்னேஷ் இந்த அளவுக்கு யோசிக்கிறாங்களா??? கிரேட்...

siddhadreams said...

பகிர்வுக்கு நன்றி! எங்கள் ஊரைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்!
நான் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவன், தற்போது டெல்லியில் வாழ்கிறேன்!

எவனோ ஒருவன் said...

@ ஜெ.ஜெ

உரிமை இருக்கிற எல்லார்கிட்டயும் கேட்க வேண்டி தான் :-)

என் கூட இருக்கும் போது விக்னேஷ் இதை கூட யோசிக்க மாட்டானா :-)

எவனோ ஒருவன் said...

@ siddhadreams

வருக்கைக்கு நன்றி நண்பரே.

இந்த முறை உங்கள் ஊரைச் சுற்றி பார்க்க நேரமில்லை. முடிந்தால் உங்கள் ஊரில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள் அடுத்த முறை சென்று வருகிறேன் :-)

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப்பாரட்டுக்கள்.

Post a Comment