Pages

Thursday, June 17, 2010

என்ன சொல்லப் போகிறாய்..

நான் கார்த்திக். பொங்கல் லீவுக்காக ஊருக்கு வந்து இருக்கிறேன். வீணாவும் வீட்டுக்குப் போய் இருக்கிறாள். எப்பொழுதெல்லாம் வீணா, ஊருக்குப் போகிறாளோ அந்த நேரங்களில் அவளிடம் பேசவே முடியாது. எஸ்எம்எஸ் மட்டும் வரும். இரண்டு நாள் ஆகியும் என் வீணாவிடம் இருந்து எஸ்எம்எஸ் ஏதும் வரவில்லை. ஒவ்வொரு முறை பீப் சவுண்ட் வரும் போதும் ஓடோடிப் போய் மொபைலை பார்ப்பேன். என் அருமை நண்பர்கள் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு அதிகமா பொங்கல் வாழ்த்து அனுப்பி பாசத்தை பொழிந்து இருக்கிறார்கள். குட்டி போட்ட பூனை மாதிரி மொபைலை சுத்தி வந்தேன். சன் மியூசிக்கில் எங்கள் இருவருக்கும் பிடித்த "எங்கேயோ உன்முகம் நான் பார்த்த ஞாபகம்" பாடல் ஓடிக்கொண்டிருக்க எனக்கு ஒரு ஐடியா வந்தது. 'Karthik : Veenu, I Miss you sooo much di' என்று அனுப்பினேன் சன் மியூசிக்கிற்கு. வீணு டிவி பார்த்துட்டு இருப்பாளான்னு தெரியாது இருந்தாலும் அனுப்பினேன் என் காதல் மேல இருந்த நம்பிக்கையில. பாட்டு முடியப் போகிற நேரத்தில் சன் மியூசிக்கிற்கு வீணு பதில் அனுப்பினாள் "Veenu : Karthik, I Miss you sooooo much than you do" என்று.

இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வீணுவிடம் இருந்து கால் வந்தது. "'நீ சாப்பிடு, நான் மொபைல எடுத்துட்டு வர்றேன்" என்று அம்மா சொல்ல எனக்கு பகீர் என்று ஆகி விட்டது. அவள் பேரை நான் 'வீணா குட்டி' என்றுல்ல வச்சு இருக்கேன். அம்மா யாருடா இதுன்னு கேட்க நான் ஏதோ உளற ஆரம்பித்தேன். 'இல்லம்மா, எங்க ஆபீஸ் ரெண்டு வீணா வேலை பார்க்கிறாங்க, இந்த பொண்ணு குட்டையா, ஒல்லியா இன்னொரு வீணாவுக்கு குட்டி மாதிரி இருக்கும், அதான் அப்படி பேர் வச்சு இருக்கோம்' என்று சொல்லி சமாளித்தேன். சாப்பிட்டு முடித்து விட்டு போனை எடுத்துக்கொண்டு மாடிக்கு ஓடினேன்.

"இவ்வளவு நேரம் என்னடா பண்ணிட்டு இருந்த? என்கிட்ட பேசுறத விட உனக்கு என்ன முக்கியமான வேலை?" என்றாள் செல்லக் கோபத்துடன். நான் கீழே சாப்பிடும் போது நடந்ததை சொன்னேன். "நான் எவ்வளவோ டைம் சொல்லி இருக்கேன்ல உங்கிட்ட ஊருக்குப் போகும் போது பேரை மாத்திக்கோடான்னு. என்னைப் பாரு நான் எவ்வளோ தெளிவா இருக்கேன். இந்த விஷயத்துல நான் தான்டா பெஸ்ட்" என்று கிண்டல் அடித்துக் கொண்டிருந்தாள். அவள் இப்படி கலகலப்பாக பேசுவதுதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்ததே. அவள் சிரிக்கணும் அதுக்காக நான் கோமாளியாகக் கூட தயார். அவள் சிரிப்பதை ரசித்துக் கொண்டிருக்க அவளோ "என்ன எதுவுமே பேசமாட்டேங்கிற? போ பா போய் மிச்சம் இருக்கிறத சாப்பிடு. சாப்பாட பார்த்தா உனக்கு தான் வேற எதுவுமே ஞாபகம் இருக்காதே. எவ்வளோ கஷ்டப்பட்டு கால் பண்ணிருக்கேன்னு எனக்கு தான் தெரியும்" என்று கடிந்து கொண்டாள். 'ஹே பேசிட்டு தானடி இருக்கேன், எப்படி பொங்கல் போகுது' என்றேன். "பொங்கலா!! அனேகமா நாளைக்கு தான் எனக்குப் பொங்கல்னு நினைக்கிறேன்" என்றாள். 'என்னடி சொல்ற!' என்றேன். "ஆமாம்டா, வீட்ல அப்பா கல்யாண பேச்சை எடுக்கிறாரு நான் உன்னைப் பத்தி சொல்லிடலாம்னு இருக்கேன்" என்றாள். 'சரிடி, அவர் நல்ல மூட்ல இருக்கும் போது சொல்லு, சொல்லிட்டு எனக்கு கால் பண்ணு உடனே, நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்' என்றேன். "சரிடி கார்த்திகா, நீ போய் நல்லா சாப்பிடுடி, அம்மா அப்பா வந்துட்டாங்கடி, எனக்காக சாப்பிட வெயிட் பண்ணுவாங்கடி, அப்புறமா பேசுறேன்டி" என்று சொல்லி விட்டு வைத்தாள். அடி 420 என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

வீணுவிடம் இருந்து கால் வரவே இல்லை. மொபைல் சுவிட்ச் ஆப் வேற செய்திருந்தாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அம்மாவிடம் எதெற்கெடுத்தாலும் கோபித்துக் கொண்டு இருந்தேன். எப்ப சென்னை போவோம், போய் வீணுவை பாப்போம் என்று இருந்தது. அவளின் தோழி சுபாவிற்கு கால் பண்ணிப் பார்த்தேன். சுபாவும் எனக்கும் தெரியல என்றாள். நைட் முழுவதும் அவளுக்கு கால் பண்ணிக் கொண்டே இருந்தேன். சுவிட்ச் ஆன் செய்யப்படவே இல்லை. திங்கள்கிழமை, எப்பொழுதும் கடைசி ஆளாக ஆபீஸ் போகும் நான் அன்று முதல் ஆளாக சென்றேன். என்னோட வேலையைப் பார்க்காமல் ஒவ்வொருவரும் வருவதை போவதை நான் கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். ஆபீஸ்க்கு வரவேண்டிய 134 பேர் வந்தாகிவிட்டது என் வீணுவைத் தவிர. சுபாவிடம் கேட்டதற்கு 'Veena will come in at 12' என்று பதில் வந்தது. கடிகாரத்தில் நிமிட முள்ளிற்குப் பதில் நான் நகர்ந்து கொண்டு இருந்தேன்.

மணி 12 வீணா வந்தாள். பொதுவாக ஒரு 'ஹாய்' சொன்னாள் எனக்கும் சேர்த்து தான். லஞ்ச் போலாமா என்று கேட்டதுக்கு எனக்கு பசிக்கல என்று மட்டும் பதில் வந்தது. 'எனக்கும் பசிக்கல, நானும் போல' என்றேன். சரி என்றாள். காலையிலும் சாப்பிடவில்லை இவளுடன் சேர்ந்து பசியும் என்னை இம்சை செய்தது. 'ஏதாச்சும் ப்ராப்ளமா வீணு' என்றேன். என்னோட பெயர் வீணா என்றாள். 'ஹே உனக்கு என்னாச்சு, என்னவோ மாதிரி பேசுற?' என்றேன். அதற்கு பதில் தந்தாள் 'இவ்வளோ நாள் தான் தப்பா பேசுனேன் இப்ப தான் தெளிவா பேசுறேன்' என்று. 'போதும் வீணா விளையாடினது, எனக்குப் பசிக்குது வா சாப்பி போலாம்' என்றேன். "இங்க பாரு கார்த்திக், உனக்கும் எனக்கும் இனிமேல எதுவுமே இல்ல. எங்க வீட் உன்னைப் பத்தி பேசியாச்சு. முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்க சாதிக்குள்ள மட்டும் தான் கட்டிக் கொடுப்பாங்களாம். அடுத்த சாதில இருக்கிறவங்க அவங்களுக்கு மனுசங்க இல்லையாம். நீயா, அவங்களான்னு நான் முடிவு பண்ணனுமாம். எனக்கு அவங்களும் முக்கியம் கார்த்திக். நான் அவங்க பக்கம் போயிடுறேன் கார்த்திக். ப்ளீஸ் என்னை விட்டுடு. அவங்க தான் என்னைப் புரிஞ்சுக்கல நீயாது என்னைப் புரிஞ்சுக்கோ" என்று கூறி அழரம்பித்து விட்டாள். 'முதல்ல எல்லாப் பெத்தவங்களும் சொல்றது தான், பாத்துக்கலாம் வீணா' என்றேன். "உனக்கு அவங்களைப் பத்தி தெரியாது கார்த்திக், அவங்க எப்பவும் மாற மாட்டாங்க. 25 வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா அப்பாவுக்காக என்னோட காதலை தியாகம் பண்றதா முடிவு பண்ணிட்டேன். இதுல உன்னோட வாழ்க்கையை பலி டா ஆக்குனதுக்கு மன்ன்னிசிடு. Sorry for everything Karthik" என்றாள். நான் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். "கார்த்திக் நீ போய் முதல்ல சாப்பிடு, உன் கோபத்தை சாப்பாடு மேல காண்பிக்காத. நீ பசி தாங்க மாட்ட" என்றாள். இப்படி என்னை பத்தி இவ்வளவு அக்கறையா பாசமா இருக்கிறவளை எப்படி மிஸ் பண்ணிட்டு வாழ முடியும்னு சொல்லுங்க?

அன்றைய தினம் முழுதும் வேலை ஓடவில்லை. வீணா இல்லாம என்னால ஒரு வாழ்கையை யோசிச்சே பார்க்க முடியல. கண்டிப்பா நான் இல்லன்னா வீணாவும் சந்தோசமா இருக்க மாட்டா. ஆனால் அவ ஒரு முடிவு பண்ணிட்டா கண்டிப்பா அதை மாத்த மாட்டா. அம்மா அப்பாவுக்காக என்னனாலும் பண்ணுவா என்று எனக்கு நல்லாவே தெரியும். அவள் வாழ்க்கையை தியாகம் பண்ணக் கூட தயாரா இருப்பா. இப்படிப்பட்ட பொண்ணுக்கு அப்படி ஒரு அம்மா அப்பாவைக் கொடுத்த கடவுளைத் திட்டினேன். என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஷங்கர் கால் பண்ணினான் 'டேய் டைம் ஆச்சு, வீட்டுக்குப் போலாம்' என்று. சரியாக 34 நிமிடங்களில் வீட்டை அடைந்தேன். டிவியில் புதிதாக ஒரு படத்தின் trailer ஓடிக்கொண்டு இருந்தது. அதில் என் வாழ்வின் பாதிப்பும் இருந்தது. நாயகனும் நாயகியும் பேசிய வசனங்கள் நான் வாழ்வில் பேசியது கேட்டது போல இருந்தது. 'விண்ணைத்தாண்டி வருவாயா' பிப்ரவரி 26 முதல் என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சேனலை மாற்றாமல் அந்த படத்தில் trailer ஐ மறுபடியும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு நான்கு முறை பார்த்து விட்டு ஏதோ ஒன்று முடிவு செய்தவனாய் உறங்கப் போனேன்.

மறுநாள் ஆபீஸ் போனதும் முதல் வேலையாக youtube இல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் trailerஐ தேடிப்பிடித்தேன். வீணாவுக்கு அனுப்பினேன்.

'வீணா, பார்த்தியா?'

"ஹ்ம்ம்"

'என்ன பீல் பண்ண?'

"இன்னொரு லவ் ஸ்டோரி. அவ்வளவு தான்"

'உனக்கு வேற எதுவுமே தோனல?'

"என்ன தோனனும்?"

'ஒன்னும் இல்ல வீணா, நான் ஒன்னு முடிவு பண்ணிட்டேன்'

....

'இந்த படத்தை பார்ப்போம். ஏதோ நம்ம லைப் மாதிரி இருக்கு. இதுல க்ளைமாக்ஸ் என்னவா இருக்கோ அந்த முடிவையே நாமளும் எடுத்துக்கலாம். Give me a chance please'

"உனக்கு மறை கழன்டிடுச்சா?? படத்தை வச்சு வாழ்க்கையை முடிவு பண்ணாலாம்னு சொல்ற.. லைப்னா என்னன்னு தெரியாதா உனக்கு? அவ்வளவு ஈஸியா போயிடுச்சா? என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது கார்த்திக். சாரி."

'நான் தெளிவா தான் இருக்கேன். நீ இல்லாம என்னால வாழ முடியாது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரில. அதான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன். கடவுள்ட்ட பூ போட்டு பார்த்து சில முடிவை நாம எடுக்கிறது இல்லையா?? பூவா தலையா போட்டு பார்க்கிற மாதிரி, ஜோசியத்த நம்புற மாதிரி.. அந்த மாதிரி தான் வீணா.. வேற வழி தெரியாம என் லைப்ல இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கிறேன்'

"சரி படத்துல ஒரு வேளை லவ்வர்ஸ் பிரிஞ்சுட்டா அந்த முடிவை எடுத்துக்குவியா?"

'நீ ஏன் பிரியிறத பத்தி தான் யோசிப்பியா? சேருறது பத்தி நான் யோசிக்கிறேன் அதான் இந்த படத்துக்காக என் வாழ்கையவே பந்தயப் பொருளா ஆக்குறேன்'

"சரி கார்த்திக். உன்னோட முடிவுக்கே நானும் வர்றேன்" என்றாள். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி தான் என்றாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்னால். படம் ரிலீஸ் ஆக இன்னும் 34 நாட்கள் இருக்கிறது.

நைட் ரூமிற்கு போய் ஷங்கரிடம் நடந்ததை சொன்னேன். "டேய் லவ் பண்ணா இப்படி எல்லாம் தான் யோசிப்பாங்கலாடா? love is blindன்னு கேள்விப் பட்டிருக்கேன். நீ அதை நிரூபிக்கிற டா. உன்னை என் நண்பன்னு சொல்லிக்கிறதில்ல பெருமையா இருக்குடா" என்று கிண்டல் அடித்தான். 'கண்டிப்பா என் நிலைமை உனக்குப் புரியாதுடா . i dont want to lose her in my life. she is a gem. எனக்கே தெரியலடா நான் ஏன் இப்படி முடிவு பண்ணேன்னு' என்றேன். "பெஸ்ட் ஆப் லக் கார்த்திக்" என்றான்.

நாட்கள் ஓட ஆரம்பித்தன. 'Judgement Day' க்காக காத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு வித பயத்துடன். இருந்தாலும் என் காதல் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. 'டேய் ஷங்கர் சிம்பு, த்ரிஷா, கௌதம் மேனன், இல்ல அந்த படத்துல வொர்க் பண்ண யாரோட மொபைல் நம்பராது எனக்கு கிடைக்குமா?' என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தான். "என்னைக்காச்சும் நான் உங்கிட்ட சொல்லிருக்கேனா அவங்க எல்லாம் என் ப்ரண்ட்ஸ்ன்னு, என்கிட்ட நம்பர் கேட்குற.. பொறுடா இன்னும் 20 நாட்கள் தான இருக்கு" என்றான். 'ஹ்ம்ம்' என்றேன்.

பின்னொரு நாள் நானும் சங்கரும் ஆபீஸ் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தோம். 'ஷங்கர், கொஞ்ச நாள் முன்னால ஏதோ ஒரு படம் தியேட்டருக்கு வர்றதுக்கு முன்னாலேயே நெட்ல கிடைசிடுசுன்னு ஒரு நியூஸ் சொன்னியே.. அந்த மாதிரி இந்தப் படமும் நெட்ல ரிலீஸ் ஆயிடுச்சாடா? கிடைக்குமா டா??' என்றேன். எரித்து விடுவது போலப் பார்த்தான். "டேய் அந்த படத்த நான் தான் திருடி நெட்ல ரிலீஸ் பண்ண மாதிரி சொல்ற. அப்பா சாமி!! விண்ணைத்தாண்டி வருவாயா வர்றதுக்குள்ள என்னைய உள்ள தள்ளிடலாம்னு ஏதும் ஐடியாவாடா? என்னை ஏதோ பழி வாங்க பிளான் போட்டு இருக்கியா?" என்றான். 'இல்ல ஷங்கர், பயம் அதிகமாயிட்டே இருக்கு. அதான்' என்றேன். "புரியுதுடா, ஆனால் நீ வெயிட் பண்ணித் தான் ஆகணும். கண்டிப்பா படத்துல நல்ல முடிவா தான்டா இருக்கும். மனச போட்டு ரொம்ப குழப்பாத" என்றான்.

படம் ரிலீஸ் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகக் கூடாதா என்று இருந்தது. காலேஜ்ல செமெஸ்டருக்கு பயந்து இருக்கேன். ஆனால் இந்த அளவுக்கு பயந்தது இல்லை. 24 ஆம் தேதி புக்கிங் ஆரம்பிக்க சத்யமில் இரண்டு டிக்கெட்டுகள் புக் செய்தேன். வீணாவிற்கு போன் செய்து first day first show புக் பண்ணியாச்சு என்றேன். எப்பொழுதும் இப்படி புக் செய்தால் என்னோடு சண்டை போடுபவள் இந்த முறை எதுவும் பேசாமல் "சரிடா நான் சத்யம் வந்திடுறேன்" என்றாள். 'முடிவு என்னவா இருக்கும்னு நினைக்கிற வீணா?' என்றேன். "நம்ம லவ் எப்படி முடியப் போகுதுன்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்றாள்.

26 பிப்ரவரி 2010. காலை 6.34 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். வடபழனி கோவிலுக்குச் சென்றேன். முருகன் பேசுவது எனக்கே கேட்டது "டேய் பாவி! இது உனக்கே ஓவரா இல்ல. பரீட்சை டைம்ல கூட நீ என்னைப் பார்க்க வந்தது இல்லையேடா" என்று. 'வேற வழி இல்ல முருகா, எக்ஸாம்ல பெயில் ஆனா திரும்ப அதே பரீட்சையை எழுதிக்கலாம். ஆனால் இப்ப லைப்ல வீணாவை விட்டுட்டேன்னா எப்பவும் திரும்ப கிடைக்கமாட்டாளே' என்றேன். சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டு கிளம்பினேன்.

10 மணிக்கு சத்யம் வந்து சேர்ந்தேன். வீணாவும் நின்று கொண்டிருந்தாள். 'போய் hall ticket வாங்கிட்டு வந்திடுறேன் வீணா' என்றேன். "என்ன?" என்றாள். 'ஒன்னும் இல்ல வீணா, எக்ஸாம் எழுதுற மாதிரி இருக்கு. அதான்' என்றேன். சிரித்தாள். படம் பார்க்க போகாமல் அவள் சிரிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கலாம் போல இருந்தது. இருவரும் உள்ளே நுழைந்தோம். படம் ஆரம்பிக்க இன்னும் 5 நிமிடங்கள் இருந்தது. 'வீணா எனக்கு பயமா இருக்கு, நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி' என்றேன். "படம் ஆரம்பிச்சிடுச்சு. பாரு கார்த்திக்" என்றாள்.

முதல் ஸீனே என்னைத் தூக்கி வாரிப் போட்டது. அழும் நிலைக்குச் சென்று விட்டேன். சிம்பு பெயர் கார்த்திக் வேறு. என்னை ஒரு முறை பார்த்தாள். நிறைய காட்சிகள் எங்கள் இருவருக்குள் நடந்தது போல இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் B.E. முடித்தோம் என்றாலும் அவள் என்னை விட பத்து மாதம் மூத்தவள். அவளை இந்த வயது வித்தியாசத்தில் நான் சமாதானப்படுத்த பட்டபாடு இருக்கிறதே!! சிம்பு தோற்றுப் போனார். சிம்புவிடம் த்ரிஷா 'its all over now' என்று சொல்லிவிட்டுப் போக நான் வீணாவைப் பார்த்தேன், எதுவுமே தெரியாத மாதிரி படத்தில் மூழ்கி இருந்தாள். சர்ச் கல்யாண ஸீன் வர பதற்றம் அதிகமாகியது. நான் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு கீழே குனிந்து கொண்டேன். 'டேய் இப்ப என்ன சொன்னா தெரியுமா, இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல, கல்யாணம் வேணாம்னு சொல்லி இந்தக் கல்யாணத்த நிறுத்திட்டாடா தம்பி' என்று சிம்பு நண்பராக வரும் கணேஷ் சொன்ன பின் தான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். பாதிக் கிணறைத் தாண்டியது போல இருந்தது. சரியாக இன்டர்வலும் வந்தது. படத்தில் த்ரிஷா கல்யாணம் நின்று போனதற்கு சிம்பு கூட என் அளவுக்கு சந்தோஷப் பட்டு இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இதோட படத்த முடிச்சு இருக்கலாம்ல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

இரண்டாவது பாதி படம் ஆரம்பித்தது.

வீணா நாம பேசியதை கௌதம் எங்கேயோ ஒளிஞ்சு இருந்து கேட்டுட்டாரா என்றேன். அதே புன்னகையைப் பதிலாய், இல்லை பரிசாய்த் தந்தாள். காதல், சண்டை, பிரிவு என்று படம் போய்க் கொண்டு இருந்தது. அமெரிக்காவில் சிம்புவும் த்ரிஷாவும் கல்யாணம் செய்து கொள்ள நான் 'Yes' என்று சொல்லி விசிலடித்து கைதட்ட ஆரம்பித்து விட்டேன். 'வா வீணா கிளம்பலாம்' என்றேன் சந்தோஷத்தில். அவளோ ஸ்க்ரீனைக் காண்பித்தாள். 'A film by Karthik' என்று இருந்தது. என் முகம் வாடிப் போனதைக் கண்டிப்பாக கவனித்து இருப்பாள். அடுத்து வந்த ஒவ்வொரு காட்சியும் என்னை அழ வைத்தது. படம் முடிய இருவரும் வெளியே வந்து அதே சத்யம் வாசலில் நின்று கொண்டு இருந்தோம்.

'சரி வீணா நான் கிளம்புறேன், நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல, நாம முடிவு பண்ண படி ...' கண்கள் கலங்க ஆரம்பித்தன. என்னால் பேச முடியவில்லை. என் கண்களைப் பார்த்தாள். அவள் பேச ஆரம்பித்தாள் "நான் முடிவு பண்ணிட்டேன் கார்த்திக். படத்துல வர்ற கார்த்திக்கை கடைசில அப்படி பார்த்ததே என்னால தாங்கிக்க முடியலடா. பிற்காலத்துல அதே நிலைமைல என்னோட கார்த்திக்கை என்னால பார்க்க முடியாதுடா. என்ன ஆனாலும் நீ மட்டும் தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன்டா" என்றாள். வாழ்க்கையில் முதல் முறையாக சந்தோஷத்தில் என் கண்கள் கலங்க ஆரம்பித்து இருந்தன. "எதுக்குடா இப்ப அழுற, இந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிக்க முடியலன்னா?" என்றாள். 'இந்த அழகான ராட்சசி கூட காலம் முழுவதும் வாழப் போகிற சந்தோசத்துலடி' என்றேன். "நல்லா பேசக் கத்து வச்சு இருக்கடா. சரி பைக் எடு" என்றாள். 'வீணா, ரொம்ப சந்தோசமா இருக்கேன் நான் ஆபீஸ் வரலைடி, உன்னை ட்ராப் பண்ணிடுறேன்' என்றேன். "அப்ப ரொம்ப சந்தோசமா இருந்தா என்னைத் தனியா விட்டுடுவியா" என்றாள் சிறு கோபத்துடன் என் தேவதை. 'ஹே நான் அப்படி சொல்லலடி' என்றேன். "மவனே நான் அப்படி எல்லாம் உன்னைத் தனியா விட்டுட மாட்டேன். நானும் ஆபீஸ் போல. lets go for a long drive on ECR" என்றாள். 'ஆபீஸ்?' என்று கேட்டேன். "நேத்தே நம்ம ரெண்டு பேருக்கும் லீவ் அப்ளை பண்ணிட்டேனே. ஏன்டா நீ இன்னும் உன் password மாத்தலையா?" என்று சிரித்தாள். 'எனக்கு மட்டும் இப்படி ஒரு 420 யை கடவுள் கொடுத்துட்டாரே' என்றேன். "அடிங்க" என்றாள்.

"Thank you Gowtham sir, உங்க படத்தால தான் எங்க வாழ்கையே" என்று என்னையும் அறியாமல் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். பைக்கை ECRல் செலுத்தினேன். "டேய் கார்த்திக் எந்த நம்பிக்கையில இப்படி ஒரு முடிவுக்கு வந்த? படத்தை வச்சு..??" என்றாள். 'உன் காதல் மேல இருந்த நம்பிக்கையில வீணா. நீ என் மேல வச்சு இருக்கிற அன்பு மேல இருந்த நம்பிக்கையில' என்றேன். வீணா என்னை இறுக்க அணைத்துக்கொண்டு அழகான பல்வரிசைத் தெரிய சிரிக்க ஆரம்பித்தாள். கவிதையாக இருந்தது :-).

Wednesday, June 16, 2010

சாதியை போற்றுவோம்!!

சாதியை போற்றுவோம்!!

தினமும்
என்னவளின் முகத்தைப்
பார்த்து எழ ஆசைப்பட்டவனை,
அடுத்து என்று பார்ப்போம்?
என்று ஏங்க வைத்ததற்கு.

என்னவளுடன் வாழும் கனவுகள்
பல்லாயிரம் கண்ட எனக்கு,
காலம் முழுவதும் அழும்படி
நனவைத் தந்ததற்கு.

என்னவள் தான் உலகம்
என்று இருந்த எனக்கு,
'தனிமை' என்ற புது
உலகைப் பரிசளித்ததற்கு.

தாய் தந்தையை விட
என் மேல் பைத்தியமாய்
பாசம் வைத்த என்னவளை
என்னிடமிருந்து பிரித்ததற்கு.

ஏன் பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்?
என்று மட்டுமே என்னை
தற்பொழுது சிந்திக்க வைத்து
வாழ்வை நரகமாக்கியதற்கு.

இவை போல பல
நன்மைகளை நான் கேட்காமலேயே
எனக்களித்த சாதியே
உனக்கு தலைவணங்குகிறேன்.

மனித இனமே!, இத்தனை
வல்லமை கொண்ட சாதியை
என்றுமே விட்டுத் தரமாட்டோமாக!
சாதியை போற்றி வளர்ப்போம்!!

அழகி போட்டி

நீ பிறந்தது முதல்
அழகி போட்டி
இரண்டாவது, மூன்றாவது
இடங்களுக்கு மட்டுமே
நடத்தப்படுகிறதாம்.

உன் காதல்

வாழ்க்கையில் ஒரு பகுதி
தான் காதல் என்றார்கள்.
நீ என்னைக் காதலிக்க
ஆரம்பித்த பின் தான் தெரிந்து கொண்டேன்..
உன் காதலில் ஒரு பகுதி கூட
வாழ்க்கை அடங்காது என்று..

புயல்

புயலுக்கு ஏன்
உன் பெயர் வைக்கலைன்னு
தெரியுமா?

ஏன்?”

ஒரு புயலுக்கு
எப்படி இன்னொரு
புயலோட பேரை வைப்பாங்க?

Thursday, June 10, 2010

குடைக்கு தடை

இன்று முதல்
குடை பயன்படுத்த தடை!!!
நீ குடை உபயோகிப்பதால்
மழை வருவதில்லை என்று..

Monday, June 07, 2010

ஒரு சின்னத்தாமரை..

'வேட்டைக்காரன்' படத்தில் வரும் "ஒரு சின்னத்தாமரை.." பாடலில் வரும் இந்த இரண்டு வரிகளுக்கு ரொம்ப நாளாக அர்த்தம் தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக வலையினில் பார்த்தேன் அதன் பொருளை. அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்

சாலையில் பயணிக்கும் பெண்கள் வெறுமனே போவதில்லை. ஜன்னல் ஓரம் காத்துக்கிடக்கும் கண்களில் திரி கொளுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். காற்று வாங்கத்தான் ஜன்னல் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அறியாமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

நன்றி : தினகரன்

இந்த பொருள் தவறு என்றால் பின்னூட்டமிடவும்.