Pages

Monday, July 05, 2010

அடைமழை காதல்

"வாழ்க்கை இதோட முடியப் போறது இல்லை, இன்னும் எவ்வளவோ இருக்கு. காலம் தான் உனக்கு பதில் சொல்லும். கடவுள் எல்லாமே உன் நல்லதுக்கு தான் பண்ணுவாரு. கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு வாழ்க்கையை வாழு. வாழ்க்கையில அடுத்து என்ன தான் நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம். உன்னோட மனசை பக்குவப் படுத்த தான் கடவுள் இப்படி எல்லாம் பண்றாரு. Whatever Happens, Life has to go on......" இவை எல்லாம் கடந்த நான்கு மாதங்களில் எனக்கு கிடைத்த சொற்பொழிவுகள். என்னோட நண்பர்களில் யாராவது என்னோட நிலைமையில் இருந்திருந்தாலும் கண்டிப்பாக நானும் இப்படி தான் இலவசமாய் உபதேசம் செய்திருப்பேன். காசா? பணமா?

காதல். இந்த வார்த்தைக்கு என்னோட அகராதில பொருள் தேடினால் அவளோட பேரு மட்டும் தான் இருக்கும். எங்க ரெண்டு பேருக்கும் இருந்த காதலை மத்தவங்களுக்கு புரிய வைக்க முடியுமா என்ன? என் மேல எவ்வளவு பைத்தியமா இருந்தான்னு அவளுக்கே தெரியாது. 'ஏன்டி இப்படி என்னைத் தனியா விட்டுட்டு போன?' என்று எனக்குள் இருக்கும் அவளிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அவளை மட்டுமே நினைத்தபடி என் வாழ்நாளில் இன்னொரு பக்கத்தை புரட்டி முடித்தேன். நள்ளிரவு 12 மணி. கேப் டிரைவர் அண்ணா கால் பண்ண வீட்டுக்கு கிளம்பினேன். எப்பொழுதும் என்னோடு பயணம் செய்யும் வெண்ணிலவைத் தேடினேன். காணவில்லை. கண்களை மூடினேன் அவளோடு மட்டும் பேசுவதற்காக. கடந்த ஆண்டு இதே நாளில் என் வாழ்க்கை என்னும் நாட்குறிப்பில் அவள் எழுதிய பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தாள்.


"என்ன மா பண்ணிட்டு இருக்க? உறங்கிட்டு இருக்கியா?"

'உனக்கே இது நல்லா இருக்காடி? நைட் இரண்டு மணிக்கு கால் பண்ணிட்டு உறங்கிட்டு இருக்கியான்னு கேட்குற? என்னாச்சு இப்ப தான போன் பேசிட்டு உறங்கப் போறேன்னு சொன்ன?'

"இல்ல மா. நாளைக்கு நான் ஊருக்குப் போறேன்ல. இரண்டு நாள் உன்னோட குரலைக் கேட்க முடியாது. அதான் மா. உன்னை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு மா"

'ஹே லூசு, just 2 days. போயிட்டு வா. நான் Mondayக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'

"காலண்டர்ல சனி, ஞாயிறு இல்லாம இருந்து இருக்கலாம்ல மா?"

'உலகத்துல இருக்கிற எல்லா software engineers சேர்ந்து உன்னை கொல்லப் போறாங்க நீ பேசுறத மட்டும் கேட்டா'

சிரித்தாள்.

"என்னைய மாதிரியும் யாராச்சும் இருப்பாங்க மா. சனி, ஞாயிறு வேணாம்னு"

'மேடம்க்கு என்னாச்சு இன்னைக்கு? என்னை அவ்வளோ மிஸ் பண்றியா?'

"எஸ் மா. என்கிட்ட வார்த்தை இல்லை எவ்வளோன்னு சொல்ல"

'இங்க பாரு லூசு, இப்ப என் கூட பேசிட்டு இருக்க. நான் அதை மட்டும் தான் நினைக்கிறேன். நீ ஊருக்குப் போறதை யோசிச்சா நானும் மூட் அவுட் ஆகி எதுவுமே பேச முடியாது'

"ஆமால்ல. சரி இப்ப நான் நல்லாப் பேசுறேன் மா. பையா படத்துல பாட்டு கேட்டியா மா? ஒரு பாட்டுல இந்த இரண்டு வரி வரும்..

என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும். என் அந்திமாலை என் அந்திமாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்"

பாடியே காண்பித்தாள். அந்தப் பாடலை அழகான பெண் குரலில் கேட்ட ஒரே ஆள் நானாக மட்டும் தான் இருப்பேன். அவளே தொடர்ந்தாள்.

"இந்த பாட்டுல வர்ற மாதிரி என் லைப் இருக்கணும் மா. சந்தோசம்னா என்னன்னு என்கிட்ட யாராச்சும் கேட்டா நான் இதை தான் சொல்லுவேன்"

எனக்கான அவள் காதலை ரசித்தேன்.

'ஆனால் இந்த பாட்டை நமக்காக கொஞ்சம் மாத்த வேண்டி இருக்கே'

"என்னான்னு?"

'நீயே யோசிச்சு பாருடி. நாம உறங்கப் போறது எல்லாரும் எழுந்த பிறகு. முழிக்கிறது எல்லாரும் உறங்கும் போது. அதனால..'

செல்லமாக சிணுங்கினாள்.

"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அதை சொன்னேன் மா"

'அப்ப கல்யாணம் முடியுற வரை இப்படி நைட் ஷிப்ட் தானா?'

"எப்படினாலும் காலைல ஆபீஸ்ல ஒன்னும் வெட்டி முறிக்கப் போறது இல்லை. அதனால என்கிட்ட பேசுறதுல ஒன்னும் குறைய மாட்ட. பேசப் பிடிக்கலைன்னா வச்சுட்டு போகலாம்"

சின்னதாய் கோபித்தாள்.

'சரி கோபப்படாதடி'

"கோபமா தான் இருக்கேன். என் கோபம் குறைய ஏதாச்சும் சொல்லு. என்னை எவ்வளோ பிடிக்கும் உனக்கு?"

'எவ்வளவுன்னு சொல்லத் தெரியல. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ..'

"பிடிக்கலையா?"

'பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்டி. உன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்கிறது இல்லை'

"அதான பார்த்தேன். இந்த weekend என்ன மா பண்ணப் போற?"

'football விளையாடப் போவேன். வேற... பிரண்ட்ஸ் கூப்பிட்டால் படத்துக்குப் போவேன்'

"வெளிய போனா சீக்கிரம் ரூம் வந்திடு மா. லேட் நைட் வெளிய சுத்தாத ப்ளீஸ். அப்புறம் இந்த football விளையாடப் போறது எல்லாம் கல்யாணம் வரை தான். அதுக்கப்புறம் உன்னை எங்கேயும் போக விடமாட்டேன். எப்பவும் என்கூட தான் இருக்கணும். நானும் எப்பவும் உன்கூட தான் இருப்பேன். என்னைத் தனியா விட்டுட்டு போயிடக் கூடாது. உன்னை விட்டுப் பிரிந்து என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது மா"

'சரிங்க மேடம். வேற ஏதாச்சும் இருக்கா? நம்ம வீட்டுக்கு நானே கள்ளச் சாவி ரெடி பண்ணனும் போலையே'

"அப்படி மட்டும் நீ என்னை ஏமாத்திட்டு விளையாடப் போனா உன்னை groundல விரட்டி விரட்டி அடிப்பேன்"

சிரித்தேன்.

'இப்படி தனியா மாடியில நின்னு பேசுறியே உனக்கு பயமா இல்லையா?'

"எதுக்கு பயப்படனும்? போன்ல நீ இருக்க. நம்ம ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா நிலா இருக்காங்க. நிலாவுக்கு இந்தப் பக்கம் நான் இருக்கேன். அந்தப் பக்கம் நீ மா.நான் எப்பவும் இப்படி தான் நினைப்பேன். ஊருக்குப் போறப்ப எல்லாம் நிலா வர்றதுக்காகத் தான் காத்துகிட்டு இருப்பேன். நிலாவை பார்த்தா நீ என்கூட இருக்கிற மாதிரியே இருக்கும் மா"

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

'என்னை இவ்வளோ லவ் பண்றியே.. do i really deserve ur love pa?'

"இப்படி எல்லாம் கேட்டு என்னை கஷ்டப் படுத்தாத மா. நான் எல்லாத்தையும் சொல்றேன். நீ சொல்லமாட்ட. நீ என் மேல எவ்வளோ பைத்தியமா பாசமா அக்கறையா காதலா இருக்கன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நம்மளை மாதிரி யாருமே இந்த உலகத்துல இருக்க முடியாது மா"

'கரெக்ட் தான் நீ சொல்றது. எல்லாரும் வாசல் தெளிச்சு கோலம் போட ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம இரண்டு பேரு மட்டும் தான் இன்னும் உறங்கவே இல்லை. நம்மளை மாதிரி யாருமே இருக்க முடியாது'

"ச்சி போடா கிண்டல் பண்ணாத. இன்னும் 5 mins பேசிட்டு உறங்கப் போலாம். ஒகே வா?"

'இல்லை இன்னும் 10 mins பேசிட்டுப் போலாம். ஒரு நிமிஷம்டி சமையல் பண்ற அக்கா வந்துட்டாங்க. என்ன சமையல் பண்றதுன்னு சொல்லிடுறேன் அவங்கள்ட்ட'

"நீ எதுவும் சொல்ல வேணாம். போனை அவங்க கிட்ட கொடு நான் சொல்லிக்கிறேன் என்ன சமைக்கணும்னு. எப்ப பார்த்தாலும் ஒரே மெனு தான், இன்னைக்காவது வேற ஏதாச்சும் சாப்பிடு"

போனை அக்காவிடம் கொடுக்க 5 நிமிடங்கள் பேசினாள். இது எல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு சமைக்கணுமா என்று அந்த அக்கா கேட்டது என் காதில் விழுந்தது. அக்கா முகத்தில் கவலை தெரிந்தது, சமைத்து விட்டு இன்று சீக்கிரம் போக முடியாதே என்று.

'என்னடி சொன்ன அந்த அக்கா இவ்வளோ சோகமா ஆயிட்டாங்க'

"எப்ப பார்த்தாலும் லெமன் சாதம், தக்காளி சாதம், வெஜ் ரைஸ் இதான் சமைக்கிறாங்க. அதான் இன்னைக்கு டிபனுக்கு சப்பாத்தி, தக்காளி சட்னி, மதியத்துக்கு சாம்பார், இரண்டு பொறியல், ரசம், அப்புறம் இப்ப உனக்கு பால் சூடு பண்ணி தரச் சொன்னேன், உன்னோட லஞ்ச் பாக்ஸை நல்லா கழுவச் சொன்னேன், உன்னோட ட்ரெஸ்ஸ ஊற வச்சு துவைக்கச் சொன்னேன் நீ ஊற வைக்கவும் மறந்திடுவன்னு, உன் ரூம்ம கிளீன் பண்ணச் சொன்னேன் சாயங்காலம். இவ்வளவு தான் சொன்னேன். அப்புறம் நம்ம கல்யாணத்துக்குப் பிறகு அவங்களை வரவேணாம்னு சொல்லிட்டேன் மா"

'உனக்கும் சமைக்கத் தெரியாதே!'

"தெரியுமோ தெரியாதோ நான் சமையல் பண்றத தான் நீ சாப்பிடனும்"

'நல்ல சாப்பாடு என்னைக்கு கிடைக்கும்னு தெரியலையே'

"அடிங்க. இங்க தூறல் விழ ஆரம்பிக்குது மா திடீர்னு... ஹையா மழையும் வருது"

'நனையாத. கீழ இறங்கி ரூம்க்கு போடி. உன் உடம்புக்கு ஏதாச்சும் ஆயிடப் போகுது. ப்ளீஸ் பா'

"நோ மா. நனையப் போறேன். போன்ல நீ. என்னை நனைச்சுக்கிட்டு மழை. எப்படி இருக்கு தெரியுமா? இப்படி ஒரு மழைக்க்காகத் தான் இவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் வந்திருக்கு. I am soooooooo soooooo happy"

'இப்பவே இந்த மழைல எல்லாம் நனைஞ்சுக்கோ. கல்யாணத்துக்குப் பிறகு குடையை எடுத்துட்டு ஓடி வந்திடுவேன்'

"ha ha ha. உன் குடையை வீசி எறிஞ்சிடுவேன் மா. உன்னோட சேர்ந்து நனையனும் அப்ப தான் என்னோட முழுக் கனவும் நனவாகும்"


"சார் 100 Feet Road வந்திடுச்சு, எந்த கட்ல திரும்பனும் உங்க வீட்டுக்கு" - டிரைவர் அண்ணா.

'நான் இங்கயே இறங்கிக்கிறேன் அண்ணா'.

"சார் மழை பயங்கரமா பெய்யுது. லேட் நைட் வேற. எப்படி போவீங்க தனியா?"

'நான் தனியா இல்லை அண்ணா. என் துணையோட தான் இருக்கேன்' என்று சொல்லிவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.


'இதோ நானும் நனைய வந்துட்டேன்டி...'

நாங்கள் இருவர் மட்டுமே நனைந்து கொண்டிருக்கும் இந்த மழை என்றுமே நிற்கப் போவது இல்லை.

2 comments:

Unknown said...

unga story padicha enakku nut-tu kalandurum polarukku :(

ரேவா said...

நண்பா இந்த அடைமழை நெஞ்சை கனக்கச் செய்கிறது...உன் பதிவை படிக்கையில் தான், கதையோடு பயணப்படும் ஒரு உணர்வு கிடைக்கிறது, கதைக்கு அருமை என்று பதில் இடவா? இல்லை அடைமழை நினைவை தந்த காதலுக்கு சாபம் இடுவதா தெரியவில்லை....ஆனாலும் ரசிக்கும் படியாய், கதை இருந்தது...

Post a Comment