Pages

Sunday, November 07, 2010

Ferrero Rocher

22 ஏப்ரல் 2010, பெங்களூரை காலி செய்து விட்டு சென்னையில் புதிதாக வேலையில் சேர்ந்தேன். என்னவள் உலா வந்த வீதிகளில் நானும் என் கால் தடங்களைப் பதிப்பதற்கு. இப்போது அவள் எங்கு இருக்கிறாள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் எதுவுமே எனக்கு தெரியாது. இருந்தாலும் ஒரு முறையாவது அவளை பார்த்து விட மாட்டேனா என்று சென்னை எங்கும் அவளை தேடினேன். இப்படி தேடுவது கூட கடவுளுக்கு பிடிக்கவில்லை போல யு கே டைமில் வேலைக்கு வரும்படி ஆகிவிட்டது. பேருந்தில் செல்வதை நிறுத்தி விட்டு ஆபீஸ் கேபில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

புதிய இடம் என்பதால் எனக்கு ஆபீசில் நண்பர்கள் யாரும் இல்லை. வருவது வேலை பார்ப்பது கிளம்புவது என்று என் நாட்களை கழித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் சேர்த்து ஐந்து பேர் மட்டும் ஷிப்டில் வந்தோம். அவர்களில் ஒருத்தி ஸ்வாதி. சென்னையில் எனக்கு கிடைத்த முதல் தோழி. இதனால் தான் நெருங்கிய நண்பர்கள் ஆனோம் என்று காரணம் எதுவும் சொல்ல தெரியவில்லை. எனக்கு அமைந்த எல்லா நண்பர்களுமே அப்படித்தான். ஸ்வாதியைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் அவள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தவள் அவள் தான். என் இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்து கொள்வேன்.

இரவு 9 மணிக்காக இருவரும் காத்துக் கொண்டிருப்போம் hello fm ல் டைரி நிகழ்ச்சி கேட்பதற்கு. ஸ்பீக்கரில் போட்டு விட்டு அதை கேட்டுக் கொண்டே வேலை செய்வோம். நாங்கள் இருவருமே பேசாமல் அமைதியாக இருக்கிறோம் என்றால் RJ கிரீஷ் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லத் தேவை இல்லை. அவர் பேசும் விதத்திற்கு நாங்கள் இருவரும் மிகப் பெரிய விசிறிகள். சிலர் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த முக்கியமான நபர்கள், அவர்கள் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை கிரிஷுக்கு மெயில் அனுப்ப அதை அவர் அவருக்கே உரிய பாணியில் பகிர்வது தான் அந்த நிகழ்ச்சி. ஸ்வாதி அடிக்கடி சொல்வது நம்ம நட்பை பத்தி ஒரு நாள் கிரிஷுக்கு மெயில் அனுப்புவேன் என்று தான்.

12 மணிக்கு எங்களுக்கு கேப். நாங்கள் புறப்பட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில் தான் சரியாக ஸ்வாதி வீட்டில் இருந்து போன் வரும். அவள் பேசுவதை கேட்க சிரிப்பு தான் வரும்.

....

"எத்தனை தடவை பா சொல்றது 12 மணிக்கு தான் கேப் புறப்படும்ன்னு"

....

"ஐயோ அப்பா என்னைய கடத்திட்டா போகப் போறாங்க.சாப்பிட்டீங்களா??"

....

"அம்மா மொக்கை போடாம போனை வைங்க. நான் கேப் ஏறிட்டு கால் பண்றேன்"

'உங்க வீட்ல இன்னும் முழிச்சிட்டு இருப்பாங்களா ஸ்வாதி?' என்றேன். "எங்க வீட்டுல இப்ப தான் டின்னர் சாப்பிடுவாங்க உறங்க இரண்டு மணி ஆயிடும். என்கிட்ட ஏதாச்சும் பேசாம சாப்பிட மாட்டாங்க அதான் தினமும் இந்த நேரத்துக்கு சரியா கால் பண்றாங்க" என்றாள்.

தினமும் ஆபீசில் கும்மாளம் தான். டீம் லஞ்ச் போகப் போறதாக PM மெயில் அனுப்பி இருந்தார். கார்த்திக் மெயிலில் இருந்து

"Hi All,

I am going to sai baba temple. Sai baba prasadam is more important than treat. Hence, I would not be able to join with you guys.

Will pray for you all. Eat well. Have fun.

Thanks,
~Karthik"


என்று ஸ்வாதி மெயில் அனுப்பினாள் டீமிற்கே. இப்படி ஒரு மெயில் அனுப்பிய விஷயம் கார்த்திக்கிற்கு தெரியவே தெரியாது. லஞ்ச் போகும் நாள் அன்று PM கார்த்திக்கிடம் வந்து "நீ தான் வரலைல. Regression Report அனுப்பிடு" என்றார். "நான் எப்ப வரலைன்னு சொன்னேன்!!" என்று கார்த்திக் பேந்த பேந்த முழிக்க நாங்க அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.

வெள்ளிக்கிழமை, ஸ்வாதி ஊருக்குப் போய் இருந்தாள். நான் மட்டும் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் டைரி கேட்டுக் கொண்டே. கிரீஷ் நட்பை பற்றி பேசிக் கொண்டே இருந்தார். நான் ஸ்வாதிக்கு கால் செய்தேன்.

'ஹே நீ மட்டும் ஊருக்குப் போயிட்ட பார்த்தியா. நான் மட்டும் தான் ஆபீஸ்ல தனியா உட்கார்ந்துட்டு இருக்கேன் தெரியுமா?' என்று புலம்ப ஆரம்பித்தேன்.

"போடா போடா மொக்கை போடாத. உன் மொக்கையை எப்படி டா அந்த பொண்ணு தங்கிக்கிட்டா??" என்றாள் ஸ்வாதி.

அவள் எப்பொழுதும் இப்படி தான் பேசுவாள் என்றாலும் எனக்கு என்னமோ போல ஆகி விட்டது. 'சரி நான் வைக்கிறேன்' என்று கட் செய்தேன். என்னையும் அறியாமல் அழ ஆரம்பித்தேன்.

ஸ்வாதி மெசேஜ் அனுப்பினாள் "எதுக்கு டா கோச்சுக்கிட்டு போனை கட் பண்ண?" என்று.

'சாரி உன்னை தொந்தரவு பண்ணதற்கு. நீ சொன்ன மாதிரி அவள் என்னை விட்டு போனதற்கு பல காரணங்களில் ஒரு காரணம் என் மொக்கையை தாங்க முடியாம தான்' என்று பதில் அனுப்பினேன்.

"டேய், நான் சும்மா விளையாட்டுக்கு தான் டா அப்படி சொன்னேன். நான் எப்படி பேசுவேன்னு உனக்கு தெரியும்ல" என்றாள்.

அவள் என்ன சொன்னாலும் என் மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இனிமேல் உன்னை disturb பண்ண மாட்டேன் என்று சொன்னதை மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தேன்.

"டேய் நான் மனசுல இருந்து அப்படி சொல்லலைடா. எப்பவும் போல தான் பேசுனேன். என்னை அழ வைக்காத டா. உனக்கு ஒன்னு தெரியுமா நான் என் இன்பாக்ஸ்ல என் பாய் பிரண்ட் மெசேஜ் விட உன்னோடதை தான் ரொம்ப சேர்த்து வச்சு இருக்கேன் டா. உன் நட்பு எனக்கு அவ்வளவு பிடிக்கும் டா. என்கிட்ட பேசாம இருக்காத" என்றாள்.

எனக்கு ஸ்வாதி மேல் இருந்த கோபம் இந்த மெசேஜ் பார்த்ததும் அப்படியே குறைந்து விட்டது. இருந்தாலும் இன்று போன் செய்தால் அவள் மனம் புண்படும்படி பேசி விடக்கூடாது என்ற பயத்தில் நாளைக்கு பேசுறேன் போய் உறங்கு என்றேன்.

"நீ இனிமேல் பேசினாலும் முன்னால பேசுன மாதிரி என்கிட்ட இருக்க மாட்ட. என்னோட பேச்சை நான் குறைக்கணும் இனிமேல. இப்படி யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது" என்றாள்.

அவளை இனியும் கஷ்டப்படுத்த மனம் இல்லை. அவளுக்கு கால் செய்தேன். எட்டாவது தடவை எடுத்து பேசினாள் அழுது கொண்டே. அவள் கேட்ட முதல் கேள்வி "எப்போதும் போல என்கிட்ட இனி பேசுவல்ல" என்று தான். 'பேசுவேன் கண்டிப்பா' என்றேன். "நான் இப்படித் தான் நிறைய தடவை என்னையும் அறியாமல் பேசிடுவேன். சாரி டா. என் வாழ்கையில யாருக்காகவும் இப்படி அழுதது இல்லைடா. உன் நட்புக்காக அழுதது எனக்கு கஷ்டமா தெரியலை. நம்ம நட்போட ஆழம் எனக்கு புரியுது. ரொம்ப சந்தோசமா இருக்கு. வாழ்கையில ஒரு நண்பனுக்காக இப்படி அழுவேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை" என்றாள். அவள் அழுகை நின்ற பாடில்லை.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். 'என்னால ரொம்ப நேரம் கோபமா இருக்க முடியாதுன்னு உனக்கு தெரியும்ல' என்றேன். எவ்வளவோ சமாதனம் சொல்லிப் பார்த்தும் அவள் அழுகையை நிறுத்த மாட்டேன் என்பதில் பிடிவாதாமாய் இருந்தாள். எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மழலை ஞாபகம் வரவே 'உனக்கு என்ன சாக்லேட் வேணும்னு சொல்லு' என்றேன். அப்படியே அழுகையை நிறுத்தினாள். "எனக்கு.. எனக்கு.. Ferrero Rocher வேணும்" என்றாள். 'நீ இன்னும் சின்ன புள்ளைன்னு நிரூபிச்சுட்ட' என்றேன். "போடா" என்றாள். 'போய் ஊரெல்லாம் சொல்லிடாத, அழுதா நான் சாக்லேட் வாங்கித் தருவேன்னு' என்றேன். சிரித்தாள்.

திங்கள்கிழமை சாக்லேட் வாங்கிக் கொண்டு சென்றேன். 'சாரி ஸ்வாதி நீ கேட்ட Ferrero Rocher கிடைக்கல, இது தான் இருந்தது என்று வேற சாக்லேட்டை கொடுத்தேன். அவள் எனக்கு Ferrero Rocher தான் வேணும் என்று அடம் பிடித்தாள். உங்க ஏரியாவுல "The Chocolates" ல எல்லா விதமான சாக்லேட்ஸ் இருக்கும் நாளைக்கு வாங்கிட்டு வரலைன்னா நான் திரும்ப அழுவேன் என்றாள். இதற்கு மேலும் நான் அவளிடம் சொன்ன பொய்யை மறக்க முடியவில்லை. 'உனக்கு இப்ப வாங்கின சாக்லேட் நீ சொன்ன கடையில தான் வாங்கினேன். அங்க Ferrero Rocher இருந்தது. ஆனால் நான் என்னவளுக்கு முதல்ல வாங்கிக் கொடுத்தது Ferrero Rocher தான். அவளுக்குத் தவிர வேற யாருக்கும் வாங்கித் தர என் மனசு இடம் தர மாட்டேங்குது. தப்பா எடுத்துக்காத' என்றேன். "டேய் நான் என் தப்பா எடுத்துக்கப் போறேன். உன் சென்டிமென்ட்க்கு குறுக்க வர நான் விரும்பலைடா. இனிமேல் நானும் என்னவனுக்கு முதல் முதலா வாங்கித் தந்ததை வேற யாருக்கும் வாங்கித் தரமாட்டேன். உங்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்" என்றாள்.

சிரித்தேன்.

"உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டல்ல??" என்றாள் ஸ்வாதி. 'கேளு' என்றேன். "எப்படி
அவள் மேல இன்னும் இப்படி இருக்க முடியுது??" என்றாள்.

'எனக்கு
அவள் எப்படி ரொம்ப அன்பு காட்டணும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்திருக்காள். யாரையும் வெறுக்க சொல்லித் தரலை. காதல்ன்னு இல்லை, ஒருத்தர் மேல அன்பா இருந்துட்டோம்னா என்ன ஆனாலும் கடைசி வரை அந்த அன்பு ஒரு துளி கூட குறையக் கூடாதுன்னு சொல்லுவா. அவள் சொன்ன படி தான் நான் என் வாழ்க்கையை வாழுறேன். எனக்கு அவள் சொல்லித் தந்ததை இப்ப உனக்கு சொல்லித் தரேன்.

Pass it on....'

2 comments:

Priya said...

Nice friendship... :)

யார் இவன் ? said...

நட்பின் பிரிவிலும் கண்ணீர் வரும்னு அருமையா சொல்லி இருக்கீங்க பாஸ் . நல்ல நட்பின் கதை .

Post a Comment