Pages

Sunday, December 05, 2010

நீயா நானா

நவம்பர் 24, 2010, BTM அடையார் ஆனந்த பவன்:

"கார்த்திக், இந்த வாரம் சனிக்கிழமை சிவன் கோவில் போகலாம்டா பிரதோஷம் அன்னைக்கு" என்றாள் காவ்யா.

'ஹே சொல்ல மறந்துட்டேன் லூசு அம்மாவும் தங்கச்சியும் இந்த வாரம் பெங்களூர் வர்றாங்க ஊர்ல இருந்து. அதனால..'

"அதனாலென்ன??"


'அவங்கள எங்கயாவது வெளிய கூட்டிட்டு போகணும். உன்னோட வெளிய வர முடியுமான்னு தெரியல'

"ஹ்ம்ம். சரி என்னைப் பத்தி எப்ப அம்மாட்ட பேசப் போற?"

'அவங்க கிளம்புறதுக்குள்ள உன்னைப் பத்தி கண்டிப்பா சொல்லிடுவேன். உன்னையவே நேர்ல போய் நிறுத்திடுறேன். போதுமா?'

"ஹ்ம்ம். பார்க்கத் தான போறேன் என்ன பண்ணப் போறன்னு.."


நவம்பர் 26, இரவு 11 மணி,

"காவ்யா அம்மா தங்கச்சி ரயில் ஏறிட்டாங்க. S9 34, 36. நான் மறந்தாலும் மறந்திடுவேன் நீயும் ஞாபகத்துல வச்சுக்கோ"

"காலைல போன் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேட்டுக்கோ அவ்வளவு தான??"


'இல்லடி. மொபைல் இல்ல அவங்கள்ட்ட. காலைல அவங்க ஏதாச்சும் போன் பூத்தை தேடிட்டு இருக்கணும். அதான் நானே நேர்ல வர்றேன்னு சொல்லிட்டேன். அவங்களை அங்கேயே இருக்கச் சொல்லி இருக்கேன்'

"ஹ்ம்ம். சரி டா"


'சரி காவ்யா. நான் இன்னைக்கு சீக்கிரமா உறங்கப் போறேன். இல்லைன்னா காலைல எந்திரிக்க முடியாது. காலைல என்னைய 5.30 க்கு எழுப்பி விட்டுடு'

"இன்னும் கொஞ்ச நேரம் என்னோட பேசிட்டுப் போடா. ரெண்டு நாள் அத்தை, நாத்தனாரை பார்த்ததும் என்னைய நீ மறந்திடுவ. அதுக்கெல்லாம் சேர்த்து இப்ப என்கிட்ட நீ பேசணும்" செல்லமாக சிணுங்கினாள்.

'சரி டி. ஆனால், ரெண்டு நாளுக்கும் சேர்த்து பேசணும்னா விடிய விடிய பேசினாக் கூட பத்தாதே'


"ஐடியா டா. நீ என்கிட்ட பேசிட்டே இரு. டைம் ஆனதும் ஸ்டேஷன் கிளம்பிடு. எப்படி??"

சிரித்தேன்.


நன்றாக உறங்கிக் கொண்டிருதேன். காலிங் பெல் சத்தம் கேட்டு முழித்தேன். கதவைத் திறந்தால்...

'அம்மா, ஸ்வாதி நீங்க எப்படி இங்க? எப்படி வந்தீங்க? அலாரம் வச்சேன் ஏன் அடிக்கலைன்னு தெரியல!!' என்று உளறிக் கொண்டிருக்கையில் காவ்யாவும் உள்ளே நுழைந்தாள்.


"யாருடா இந்தப் பொண்ணு??" - அம்மா.

'அம்மா அது.. அது வந்து.. என்னோட வேலை பார்க்கிற பொண்ணும்மா. என் பிரண்ட்.' என்று சொல்லி முடிப்பதற்குள் என் தங்கை ஸ்வாதி சிரிக்க ஆரம்பித்தாள்.

'ஏன் ஸ்வாதி சிரிக்கிற?' என்று அவளிடம் கேட்டேன். அவள் நடந்ததை சொன்னாள்.

காலை 6 மணி, பெங்களூர் ரயில் நிலையம் :

"கார்த்திக் ஆபீஸ் முடிஞ்சு வர ரொம்ப லேட் ஆயிடுச்சு. அவன் உறங்கிட்டு இருக்கான். அதான் என்னை அனுப்பினான்" - காவ்யா.

"ஓ அப்படியாம்மா. என் புள்ளை விடிய விடிய உழைச்சு இப்ப துரும்பா இளைச்சு போயிருப்பானே. சரி நீ யாரும்மா அவனோட வேலை பார்க்கிறியா? அவன் பிரண்டா?" - அம்மா.

"முதல்ல பிரண்டா மட்டும் தான் இருந்தேன். இப்ப அதுக்கும் மேல" - காவ்யா.

அதுக்கும் மேலன்னா என்னடி அர்த்தம் என்று அம்மா ஸ்வாதியிடம் கேட்க, "உனக்கு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கிறியாம்மா" என்று அம்மாவிடம் பதில் சொல்லி விட்டு, "வாங்க மதினி நாம அண்ணன் வீட்டுக்குப் போவோம் என்று ஸ்வாதி சொல்ல அம்மாவிற்கு எல்லாம் புரிந்தது.

வரும் வழியில்,

"என்னடி சொல்ற?? மதினியா!! என் சம்மதம் இல்லாம உங்க அண்ணன் எப்படி இவளை கல்யாணம் பண்றான்னு பார்க்கிறேன்" - அம்மா.

"ஸ்வாதி, அத்தைக்கு கார்த்திக் கல்யாணம் பார்க்க கொடுத்து வைக்கல போல. நீயாவது வந்திடு" - காவ்யா.

"எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு மதினி. நான் கண்டிப்பா வர்றேன்" - ஸ்வாதி.

நடந்ததை கேட்டு எனக்கு மயக்கமே வந்தது. காவ்யாவை நான் முறைக்க அம்மா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்.


'அம்மா காவ்யா உன்னை மாதிரியே ரொம்ப நல்லவா அம்மா. அவள்ட்ட பேசிப் பார்த்தா உங்களுக்கும் அவளை பிடிக்கும்மா..' என்றேன்.

"ஹ்ம்ம்" மட்டுமே அம்மாவின் பதிலாய் வந்தது.


ஐந்து நிமிடங்களில் காபி ரெடி செய்தாள் காவ்யா. "காபி குடிச்சிட்டு நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. ரெண்டு நாள் சமையல் கட்டு பக்கமே நீங்க ரெண்டு பேரும் வரக் கூடாது" என்றாள் காவ்யா.

அம்மா எதுவும் பேசவில்லை.


"ஸ்வாதி நீங்க இன்னைக்கு கறி சாப்பிடுவீங்கள்ள? உங்களுக்கு கறி சமைக்கவா?" - காவ்யா

"ஒரு நிமிஷம் மதினி. அம்மாக்கிட்ட கேட்கிறேன்"

"மதினி இன்னைக்கு பிரதோஷம். அதனால கறி வேணாம்னு சொல்றாங்க. உங்களுக்கு சமைச்சுக்கோங்க மதினி" - ஸ்வாதி.

"இல்லை ஸ்வாதி. நான் எந்த வெள்ளி சனியும் அசைவம் சாப்பிட மாட்டேன்" - காவ்யா.


"ஓ இதான் விசயமா!! இதனால தான் எங்க அண்ணனும் இப்ப எல்லாம் வெள்ளி சனி சைவமா மாறிட்டானா" என்று ஸ்வாதி சொல்ல காவ்யாவின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது, ஆனால் அம்மாவும் கண்களோ என்னை முறைத்துக் கொண்டிருந்தது.

அம்மா என்னிடம் வந்து சிவன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தாள். காவ்யா அந்நேரம் வர, "அத்தை நானும் அன்னைக்கே சொன்னேன் சிவன் கோவிலுக்குப் போனும்னு. நீங்க கிளம்பி ரெடியா இருங்க. நான் என் ரூம்ல போய் கிளம்பிட்டு வர்றேன். நாம எல்லாரும் சேர்ந்தே போவோம் கோவிலுக்கு" என்றாள் காவ்யா.


1 மணி நேரம் கழித்து வந்தாள் காவ்யா. நீல நிறப் புடவை அணிந்து இருந்தாள். நான் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்துக் கொண்டிருந்ததை அம்மா கவனித்து விட்டாள்.


"மதினி, சுடிதார் ல ஒரு அழகா இருக்கீங்க. சேலைல ரொம்ப ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்கீங்க. எங்க அண்ணன் கொஞ்சம் கம்மி தான் உங்களுக்கு" என்று ஸ்வாதி சொல்ல, அம்மா "என் பையனுக்கு என்னடி. அவனை கட்டிக்க ஐஸ்வர்யா ராயை விட அழகிகள் எல்லாம் காத்துக் கிடக்காங்க" என்றாள். "உன் பையனை கட்டிக்க!!! காமெடி பண்ணாதம்மா ஊரு விட்டு ஊரு வந்து" என்றாள் ஸ்வாதி.

நானும் காவ்யாவும் எதுவும் பேசவில்லை. நால்வரும் வண்டியில் புறப்பட்டோம். "வண்டியில மெதுவாப் போ கார்த்திக். ஒன்னும் அவசரமில்ல" என்று அம்மா எப்பவும் போனில் சொல்வதை காவ்யா நேரில் சொன்னாள். அம்மாவின் கண்களில் முதல் முறை ஒரு மாற்றம் தெரிந்தது. கெம்ப்போர்ட்டை வந்தடைந்தோம். "ஸ்வாதி இந்த கோவில் தான் தீபாவளி படத்துல போகாதே பாட்டுல வரும்" என்று என் தங்கையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் காவ்யா. என் தங்கையும் காவ்யாவும் சிறிது நேரத்திலேயே நெருங்கிப் பழக ஆரம்பித்தது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது ஏனென்றால் ஸ்வாதி யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பேசிட மாட்டாள்.


கோவிலில் இருந்து புறப்பட்டோம். "காவ்யா அம்மா, ஸ்வாதியை கூட்டிட்டு ஷாப்பிங் போகலாம்" என்றேன். "கார்த்திக் நானும் இதை தான் சொல்ல வந்தேன் நீ முந்திட்ட" என்றாள். கிருஷ்ணா கலெக்சன்ஸ் சென்றோம். அம்மா, தங்கைக்கு சாரி எடுத்துக் கொடுத்தாள். நானும் அம்மாவிற்கு சாரியும் தங்கைக்கு சுடிதாரும் எடுத்தேன். Forum சென்றோம் அடுத்து. நானும் அம்மாவும் Landmark ல் தமிழ் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருக்க ஸ்வாதியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். அரை மணி நேரம் ஆகியும் இருவரும் திரும்ப வரவில்லை.

காவ்யாவிற்கு போன் செய்தால் என்னையும் அம்மாவையும் PVR classic அருகே வரச் சொன்னாள். நாங்கள் அங்கே சென்று பத்து நிமிடங்கள் கழித்து இருவரும் வந்தனர். ஸ்வாதி கையில் ஒரு புது மொபைல் போன் Sony Ericsson ELM. "அண்ணா, உனக்கு கூட இது தோனலை இது வரை" என்று கோபித்துக் கொண்டாள் ஸ்வாதி. அவள் சொல்வது உண்மை தான். என் முகம் வாடிப் போவதை பார்த்த காவ்யா, "கார்த்திக் போன வாரமே சொல்லிட்டு இருந்தான் வீட்டுக்கு மொபைல் வாங்கனும்னு. நான் வாங்கிக் கொடுத்தா என்ன, உங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தா என்ன? எல்லாம் ஒன்னு தான் ஸ்வாதி" என்று என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினாள். அம்மா ஏதாச்சும் பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். அம்மாவின் அமைதி தொடர்ந்தது.

"கார்த்திக் படம் பார்த்துட்டு வீட்டுக்கு போலாமா?"
என்றாள் காவ்யா. 'அம்மா, இங்க எந்திரன், உத்தம புத்திரன் தவிர வேற எந்த படமும் ஓடல. எந்தப் படம் போகலாம்?' என்று அம்மாவிடம் கேட்க "உத்தம புத்திரன் குடும்பப் படமா இருக்கும் அதுக்கே போலாம் பா" என்றாள். படம் முடிந்து அனைவரும் வீட்டுக்குப் புறப்பட்டோம். வரும் வழியில், ஸ்வாதி "அண்ணா, நீ எப்படி மதினிட்ட propose பண்ண?" என்று கேட்டாள். அதற்கு காவ்யா தான் பதிலளித்தாள். "உங்க அண்ணன் உங்க அம்மாகிட்ட என்னை லவ் பண்றத சொல்லவே இவ்வளவு பயப்படுறான். என்கிட்ட சொல்லிருப்பான்னு நினைக்கிற?" என்று சொன்னாள். இருவரும் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். அந்நேரம் நாங்கள் BTM cricket ground ஐ கடந்து கொண்டிருந்தோம். காவ்யா சொல்வதைப் போல எனக்கு அவளை ரொம்ப பிடித்து இருந்தாலும் அவளிடம் என் காதலை சொல்ல மட்டும் தைரியம் வரவே இல்லை. ஒரு வேளை அன்று காவ்யாவும் சொல்லாமல் இருந்திருந்தால் காவ்யா என்னை வாழ்க்கையில் இழந்திருப்பதை விட நான் தான் என் வாழ்வில் காவ்யா என்னும் தேவதையை தொலைத்து இருப்பேன்.

ஆகஸ்ட் 6, 2009 BTM cricket ground காலை 5.34 மணி

நானும் காவ்யாவும் jogging செய்து கொண்டிருந்தோம்.

"கார்த்திக், உங்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும்"

'சொல்லு காவ்யா'

"க்ரிஷ் என்னை லவ் பண்றதா சொல்றான்"

என் மனம் அந்த நொடி உடைந்து போனது. இருந்தாலும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் 'நீ என்ன பதில் சொன்ன?' என்றேன்.

"என்ன சொல்லிருப்பேன்னு நினைக்கிற?"

'தெரியல. உன் வாழ்க்கை நீ தான முடிவு பண்ணனும். நல்லா பையனா இருந்தா நீ... '

"தெரியும் டா நீ இதை தான் சொல்லுவேன்னு. அவனை பிடிச்ச்சிருந்தா நான் எதுக்கு டா பெங்களூர் குளிர்ல காலங்காத்தால இப்படி உன்கூட ஓடிட்டு இருக்கப் போறேன். என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியல டா. உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும். நீ சொல்லுவன்னு பார்த்தேன். ஆனால்.."

அவள் சொல்லி முடிப்பதற்குள் 'இன்றாவது என் காதலை சொல்லிவிட வேண்டும் என்று தினமும் கொண்டு வந்தும் தராமலே திரும்ப எடுத்துச் செல்லப்படும் Greeting Card' ஐ சேர வேண்டிய இடத்தில் சேர்த்தேன்.


வீட்டை வந்து சேர்ந்தோம். 'அத்தை, ஸ்வாதி நான் நாளைக்கு வர்றேன்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் காவ்யா. அம்மா இப்பொழுது பேச ஆரம்பித்தாள்.

"காவ்யாவை.."

காவ்யாவை எனக்கு பிடிச்சிருக்கு என்
று சொல்லப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்..

"கார்த்திக் மணி 9 ஆயிடுச்சு. நீயும் காவ்யா கூட அவா வீட்டு வரைக்கு போயிட்டு வாப்பா" என்றாள்.

'சரிம்மா' என்று பதில் அளித்து விட்டு காவ்யாவுடன் புறப்பட்டேன்.

காவ்யா வீட்டுத் தெரு:

"கார்த்திக் ரொம்ப அதிகமா ஏதாச்சும் பேசிட்டேனா? இல்ல அதிகப் பிரசங்கித்தனமா ஏதாச்சும் பண்ணிட்டேனா. நீ சொல்றதுக்குள்ள நானே அவசரப்பட்டு சொல்லிட்டேன்னு கோபமா என் மேல?"

'உன் மேல கோபம் இல்லடி. அம்மாகிட்ட எப்படி நம்ம காதலை பத்தின பேச்சை ஆரம்பிக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். நீயே சொன்னது ஒரு விதத்துல நல்லது தான்டி'

"அம்மா என்னை பத்தி என்ன சொன்னாங்க"

'இது வரை ஏதும் சொல்லலை. ஆனால் நம்பிக்கை இருக்குடி. இந்த உலகத்துல உன்னை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது'

"கொஞ்சம் பயமா இருக்கு டா என்ன நடக்கப் போகுதோன்னு. அவங்க என்னைப் பத்தி எதுவுமே சொல்லலைன்னா நானே கேட்கப் போறேன்டா என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு"

'உலகத்துல என்னை பிடிச்சிருக்கான்னு பையனோட அம்மாகிட்ட கேட்கிற முதல் பொண்ணு நீயா தான்டி இருக்கப் போற'

சிரித்தாள்.

"சரி கார்த்திக் நீ கிளம்பு. டைம் ஆயிடுச்சு. நாளைக்கு மீன், கறி எல்லாம் வாங்கி வச்சிடு. நான் வந்து சமைக்கிறேன் அம்மாவை வேலை செய்ய வைக்காத"

'சரிடி. நான் கிளம்புறேன். நாளைக்குப் பார்ப்போம்' என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

நவம்பர் 28 :

Fish fry, சிக்கன் என்று சமைத்து அசத்தினாள் காவ்யா. இன்று எங்கேயும் வெளியே போகததால் சாப்பிட்டு ஒரு குட்டி உறக்கம் போட்டோம் அனைவரும். அம்மாவிற்கு பெங்களூர் குளிரில் வெளியே போகவும் விருப்பம் இல்லை. காவ்யா ஸ்வாதியை அவள் ரூமிற்கு அழைத்துச் சென்றாள். திரும்ப வரும் பொழுது சாக்லேட்ஸ் உடன் வந்தாள் ஸ்வாதி. "என்ன காவ்யா என்னை எதுவுமே வாங்கித் தர விடமாட்டேன்கிற" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டேன். "அண்ணா மதினியை விட்டுட்டு போக எனக்கு மனசே வரல" என்று சோகமாய் சொன்னாள் ஸ்வாதி. "கவலைப்படாத ஸ்வாதி அடுத்த டைம் கார்த்திக் ஊருக்கு வரும் போது நானும் வந்திடுறேன்" என்று காவ்யா சொல்ல அம்மா முறைக்கிறாளா சிரிக்கிறாளா என்று எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

9.20 க்கு ரயில். அனைவரும் ஸ்டேஷனுக்கு புறப்பட்டோம். "கார்த்திக் இன்னைக்கும் கோட் எடுத்துக்க மறந்திட்டியா? திரும்ப வரும் போது ரொம்ப குளிரா இருக்கும்டா. கோட் எடுத்துக்கோ" என்றாள் காவ்யா. 'அவ்வளவா குளிர் இல்ல காவ்யா. வா கிளம்பலாம்' என்றேன். "என்னது குளிர் இல்லையா!! எனக்கு ஒரே நடுக்கமா இருக்கு. அவா சொன்ன மாதிரி அந்த கோட் எடுத்துக்க" என்று அம்மா சொன்னதும் எனக்கு மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் வந்தது.

9 மணி, பெங்களூர் ரயில் நிலையம் :

அம்மாவும் ஸ்வாதியும் ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். "அத்தை என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு நீங்க சொல்லவே இல்லை" என்று கேட்டே விட்டாள் காவ்யா. அம்மா முதல் முறை காவ்யாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"ஒவ்வொரு பையனும் தன்னோட ரெண்டாவது அம்மாவை வாழ்க்கைத் துணை மூலமா பார்க்கிறதாவும், ஒவ்வொரு பொண்ணும் தன்னோட முதல் குழந்தையை தனக்கு வரப் போறவன் மூலம் அடையிறதாவும் ஒரு புத்தகத்துல படிச்சு இருக்கேன்மா. என் பையனை நீ ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிற. அவனை நான் கூட இருந்து கவனிச்சுக்கிற மாதிரி இருக்குமா. உனக்கு அவன் மேல இருக்கிற காதலும் என்னோட தாய்ப்பாசமும் ஒன்னு தான். உங்களை பிரிக்க எனக்கு மனசு இல்லம்மா" என்று சொல்லி காவ்யாவின் நெற்றியில் முத்தமிட்டாள் அம்மா.

"எங்க காதலை நீங்க ஏத்துக்கிட்டது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அத்தை" என்று சொல்லி அம்மாவின் காலில் விழுந்தாள் காவ்யா.

"அத்தை நான் போய் குடிக்க தண்ணீர் வாங்கிட்டு வந்திடுறேன்" என்று தண்ணீர் வாங்கச் சென்றாள் காவ்யா.

'ரொம்ப தேங்க்ஸ் மா காவ்யாவை நீ புரிஞ்சுகிட்டதுக்கு' என்றேன்.


பின்வரும் நிகழ்வுகளைப் பற்றி எதவும் தெரியாத கார்த்திக் சிரித்துக் கொண்டிருந்தான்.
எல்லாமே சுபமாக தான முடிஞ்சு இருக்கு இனிமேல என்னன்னு தான யோசிக்கிறீங்க!!! காவ்யாவும், கார்த்திக் அம்மாவும் மனதில் நினைத்தது என்னவென்றால்,

"டேய் உன்னைய லவ் பண்ண வைக்கக் கூட நான் இவ்வளவு கஷ்டப்படலைடா. உங்க அம்மாவை சம்மதிக்க வைக்க அவ்வளவு கஷ்டப்பட்டுட்டுடேன். கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கிறேன் அவங்களா நானான்னு" - காவ்யா.

"காவ்யா என் மருமகளே, என்ன தான் நீ பாசமா என்கிட்ட பேசினாலும் என்னைய கவிழ்க்க சதி நடக்கிற மாதிரியே இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கிறேன் நீயா நானான்னு" - அம்மா.

2 comments:

Priya said...

"ஒவ்வொரு பையனும் தன்னோட ரெண்டாவது அம்மாவை வாழ்க்கைத் துணை மூலமா பார்க்கிறதாவும், ஒவ்வொரு பொண்ணும் தன்னோட முதல் குழந்தையை தனக்கு வரப் போறவன் மூலம் அடையிறதாவும்" - Really true and nice lines..
Alaga solli iruka.. nalla flow..

Unknown said...

கதை நல்லா இருக்கு :)

Post a Comment