Pages

Tuesday, January 18, 2011

என் டைரி பக்கங்களில் சில....

08-12-2010

'எப்படி டி இருக்க?' காலம் இப்படி ஒரு கேள்வியை உன்னிடம் கேட்க வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. 'பிரிவு' - வாழ்வில் எத்தனையோ பிரிவுகளை சந்தித்து இருக்கிறேன். பள்ளிப் படிப்பு முடிந்து நண்பர்களை பிரிந்தது, முதன் முதலாக அம்மாவை விட்டு பிரிந்து சென்று கல்லூரி விடுதியில் சேர்ந்தது, கல்லூரி முடிந்து மீண்டும் பிரிவு, பணியில் ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாததால் மீண்டும் மீண்டும் நட்பின் பிரிவு.... இப்படி பிரிவுகள் தான் வாழ்க்கை என்றாலும் அவை அனைத்தையும் காலத்தின் கட்டாயம் என்று என் மனம் ஏற்றுக் கொள்கிறது உன் காதல் தந்த பிரிவைத் தவிர. அவர்கள் அனைவருடனும் தினமும் அல்லது என்றோ ஒரு நாள் பேசுகிறேன் அல்லது பார்க்கிறேன். இப்படி டைரியில் மட்டும் 'எப்படி இருக்க' என்று விடை கிடைக்காத கேள்வியை கிறுக்கும் நிலைமை வந்தது இல்லையே...

உனக்கு தெரியுமா இப்பொழுதெல்லாம் தினமும் டைரி எழுதுவதில்லை. என் மனச் சுமையை என் டைரியும் ஏன் சுமக்க வேண்டும்? எழுதாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது உன் பிரிவு தரும் வலியை சரியாக என் டைரியிடமாவது சொல்ல எந்த மொழியிலும் எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை...

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்று டைரி எழுத ஒரு காரணம் உள்ளது.

நீ ஆசைப்பட்ட மாதிரி பைக் வாங்கிட்டேன் லூசு. Honda unicorn. இதை உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு அந்த ஒரே காரணம் தான் இன்னைக்கு என் டைரியை திறந்தேன். பைக் வாங்கிட்டேங்கிற சந்தோசத்தை விட, நீ என் கூட இல்லையே இந்த சந்தோசத்தை பகிர்ந்துக்க அப்படிங்கிற கஷ்டம் தான் அதிகமா இருக்கு....

பைக் வாங்கியதும் உன்னைத் தான் மனசுல நினைத்தேன். உங்கிட்ட சொல்லிட்டே தான் முதல் முறை பைக்கை ஸ்டார்ட் பண்ணேன். ஓட்டினேன். இந்த சந்தோஷம் போதும்ல!!!! சத்தியமா போதாது பா. நீ பின்னால உட்காரனும் உன்கூட ஊரை சுற்றனும் என் பைக்ல.. போ டி.. என் வாழ்க்கையில் எல்லாம் எப்பவுமே கனவா தான் இருக்கு 'நீ என்னைக் காதலித்ததை' தவிர....

'Life goes on' ன்னு சொல்லுவ அடிக்கடி. 'Yes, Life is going on and on'... ஆனால், வாழ்க்கையில நல்லதோ கெட்டதோ ஏதாச்சும் ஒன்னு நடக்கும் போது நீ என் பக்கத்துல இல்லன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு லூசு.



08-12-2009

'ஆபீஸ் பஸ் இன்னைக்கு மிஸ் பண்ணிட்டேன். லோக்கல் பஸ்ல ஆபீஸ் வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு டி'

"பேசாம ஒரு பைக் வாங்கலாம்ல. நீ நினைச்ச நேரத்துக்கு ஆபீஸ் வரலாம் எந்த கஷ்டமும் இல்லாம"

'லைசென்ஸ் இன்னும் எடுக்கலை டி'

"முழுசா சொல்லு டா. உனக்கு பைக் ஓட்ட தெரியாது அதனால இன்னும் லைசென்ஸ் எடுக்கலைன்னு" சிரித்தாள்.

'பைக் ஏதோ ஓட்டுவேன். வண்டி வாங்கணும்ன்னு இதுவரை தோனலை. லைசென்ஸ் எடுக்கலை. ஆனால் எப்ப உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ அன்னைல இருந்து வாங்கனும்னு தோனுது'

"நல்லா வேளை டா சாமி நீயும் நானும் ஒரே ஊர்ல இல்லை"

'ஏன்?'

"ஒரே ஊர்ல மட்டும் இருந்திருந்தோம் என்னை பின்னால வச்சுக்கிட்டு சுத்துறதுக்காகவே எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நல்லா பைக் ஓட்டக் கத்துக்கிட்டு லைசென்ஸ் எடுதிருப்பல்ல.. உடனே ஒரு பைக்கையும் வாங்கிட்டு வந்து என் ஹாஸ்டல் முன்னால வந்து நின்னுருப்ப"

'இவ்வளவு நாளா இது எனக்கு தோனாம போயிடுச்சே. வர்றேன் டி உன் ஹாஸ்டலுக்கு. உன்னை என் பைக்கில தூக்கிட்டு போகப் போறேன் பாரு'

சிரித்தாள்.

'எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு டி'

"என்ன?"

'நீ என் பின்னால உட்கார்ந்து வர்ற மாதிரி உன்னோட வண்டியில உன் பின்னால உட்கார்ந்து நான் வரனும் உன்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு'

"ஆசையைப் பாரு" வெட்கத்தோடு சிணுங்கினாள்.

ஒரு காமெடி டி. உன்கிட்ட பேசிட்டு போன பிறகு நடந்துச்சு.

'மேடம் டூ வீலர் பார்கிங் ஸ்டிக்கர் வேணும்'

"வண்டி நம்பர் சொல்லுங்க சார்"

'வண்டி இனிமேல் தான் வாங்கணும்'

"சார், வண்டிய வாங்குங்க முதல்ல. அப்புறமா ஸ்டிக்கர் வாங்கிக்கோங்க"

'அசிங்கப்படேன் டி'

"உன் பைக் ஆர்வத்துக்கு அளவே இல்ல டா. தேவையா இப்படி அசிங்கப்படுறது" அவளின் சிரிப்பு நிற்கவே இல்லை.


16-12-2010

மார்கழி மாதம் முதல் நாள். காலை எழுந்ததும் என் காதல் பொக்கிஷங்கள் அடங்கிய பேக்கை எடுத்தேன். உள்ளிருந்து ஒரு அட்டைப் பெட்டியை பிரித்தேன். குளிரைத் தாங்க ஒரு ஜாக்கெட் இருந்தது. கொடுக்கப்பட்ட தேதியைப் பார்த்தேன் 16-12-2009. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முதல் முறை இன்று தான் அதை அணியப் போகிறேன். எனக்கு அதை அணிய மனமில்லை. காரணம் ஒன்று தான் எங்கே அது பழதாகி விடுமோ என்று. உன்னிடம் இருந்து எனக்கு காதல் பரிசு எதுவும் இனி கிடைக்கப் போவது இல்லையே. நான் இப்பொழுது பாதுகாக்கும் சொத்தே நம் காதல் தான டி.

இருந்தாலும் அதை அணிய முடிவெடுத்தேன். அதை அணியும் போது ஏதோ நீ என்னுடன் இருப்பது போல ஒரு உணர்வு. நீ கொடுத்த ஜாக்கெட்டை அணிந்து கொண்டு இன்று தான் முதல் முதலாக என் பைக்கில் செல்கிறேன். பைக்கை ஸ்டார்ட் செய்தேன் நீ என் பின்னால் ஏறி அமர்ந்தது போல இருந்தது....



16-12-2009


'ஹே லூசு எங்க டீம் ல நாங்க சீக்ரட் ஏஞ்சல் கேம் விளையாடுறோம்'

"ஓ.. சரி நீ யாருக்கு கிப்ட் தரணும்?"

அவளிடம் இந்த கேள்வியைத் தான் எதிர்பார்த்தேன். அவள் கோபமாக கேட்பது போல இருந்தது.


அவளை மேலும் கோபப்படுத்தி பார்க்கலாம் என்று தோன்றியது எனக்கு.

'நான் எங்க டீம் ல சரண்யா க்கு தரணும் டி.. என்ன டி வாங்கித் தரலாம்'

"டேய் என்ன கொலைகாரியா மாத்திடாத. உனக்கு என்ன தைரியம் என்கிட்ட அவளுக்கு என்ன வாங்கித் தரலாம்னு கேட்ப?"


'கேம் தான டி. ஏன் கோச்சுக்கிற?'


"ஆமா கேம் ல. இதையே சாக்கா வச்சுக்கிட்டு உன் டீம் ல இருக்கிற எல்லாவளுக்கும் ஏதாச்சும் வாங்கிக்கொடு ராசா. இன்னைக்கு சாயங்காலம் என்னைய கூட்டிட்டு போ நானே செலக்ட் பண்ணித் தரேன். போதுமா?"

எனக்கு மனதுக்குள் சிரிப்பு தான் வந்தது.


மாலை நான்கு மணிக்கு எனக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாக கால் வந்தது. உள்ளே ஒரு அழகான கருப்பு ஜாக்கெட் இருந்தது. என் டீம் நண்பர்களிடம் காண்பித்தேன் மிகவும் அழகாக இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள்.

"உனக்கு இன்னைக்கு என்ன கிப்ட் டா கிடைச்சது?"


'என்னோட ஏஞ்சல் கிட்ட இருந்து எனக்கு ஜாக்கெட் கிடைச்சிருக்கு டி. நான் தான் இன்னும் வாங்கித் தரணும். என்னோட ஏஞ்சல் யாருன்னு தெரியலை டி. ரொம்ப நல்லா இருக்கு ஜாக்கெட். வாங்கித் தந்தது யாருன்னு தெரிஞ்சா அவங்களுக்கு ஏதாச்சும் பண்ணனும் டி'

"போ போடா ஊர்ல இருக்கிற எல்லாத்துக்கும் ஏதாச்சும் பண்ணு. போய் தங்கத்துல ஏதாவது வாங்கிக்கொடு சரியா. நான் ஒரு லூசு. எங்க டீம் லயும் இந்த கேம் இருக்கு ஆனால் உன்னைத் தவிர வேற யாருக்கும் எதுவும் வாங்கித் தரக் கூடாதுன்னு நான் அதுல சேரவே இல்லை. ஆனால் நீ...."


'கோபம் எப்ப மேடம் குறையும்?'


அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.

'நீ தான் இதை வாங்கினேன்னு எனக்கு தெரியும்'


"எப்படி?"

'நானும் அந்த கேம்ல சேரவே இல்லையே'


"ஏன்"

'எது பண்ணாலும் என் ஏஞ்சலுக்கு தான் பண்ணனும்'


"இப்ப தான் சந்தோசமா இருக்கு. போட்டுப் பார்த்தியா? கரெக்டா இருக்கா? வாங்கும் போது நான் போட்டுப் பார்த்து தான் வாங்கினேன். எனக்கு கொஞ்சம் பெருசா இருந்துச்சு அப்ப உனக்கு சரியா இருக்கும்னு எடுத்துட்டேன்"

'எனக்கு கரெக்டா இருக்கு டி. உலகத்துல எங்க தேடுனாலும் இப்படி ஒரு ஜாக்கெட் என்னால வாங்க முடியாது'


"ஏன்?"

'நீ முதல்ல போட்டுப் பார்த்ததுல்ல'

"நீ.... நீ.... போடா...." சிணுங்கினாள்.


சிறிது நேரத்தில் என் டீம் லீட் வந்தார்.
"ஜாக்கெட் நல்லா இருக்கு டா"
'என் ஏஞ்சல் வாங்கிக் கொடுத்தது அண்ணா....'
அவர் அதை போட்டுப் பார்க்க எடுக்க, 'அண்ணா ஏஞ்சல் வாங்கிக் கொடுத்ததை வேற யாரும் போட்டுப் பார்த்தா ஏஞ்சல் குற்றம் ஆயிடும்' என்றேன். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.


31-12-2010


நாளை புத்தாண்டு. சென்ற வருடம் உனக்கு தான் முதன் முதலில் வாழ்த்தினேன். எனக்கு கிடைத்த முதல் வாழ்த்தும் உன்னுடையது தான். இப்பொழுதெல்லாம் பண்டிகை, விழா வருகிறது என்றால் கோபம் தான் வருகிறது. யாருக்கும் வாழ்த்து சொல்லவும் பிடிக்கவில்லை வாழ்த்து பெறவும் விருப்பமில்லை. என் மொபைலை ஆப் செய்தேன். வாழ்த்தில் 'happy' வெறும் சொல்லளவில் மட்டுமே இருப்பதில் எனக்கு பிடிக்கவில்லை.

ஏன் 2009 முடிந்து 2010 பிறந்தது என்று இருக்கிறது இப்பொழுது 2011 ம் பிறக்கப் போகிறது. ஆனால் என் மனமோ 2009 வருடத்தில் நான் வாழ்ந்த வாழ்வை திரும்பி வாழவே ஆசைப்படுகிறது. அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்கும் பொழுது தான் மீண்டும் டைரி எழுதுவேன். "அப்படியென்றால் நீ எழுதப் போறதே இல்லையா" என்று என் டைரி கேட்டது. முற்றுப் பெறாத டைரி பக்கங்களுக்கு என் கண்கள் முற்றுப்புள்ளி வைத்தது கண்ணீரால்.

10 comments:

Priya said...

No more words to explain the feel... dont expect comments for this... :(

Unknown said...

கண் கலங்க வைக்கிரீங்க அண்ணா :(

ஆர்வா said...

அடுத்தவர் டைரியை படிப்பதே சுவாரஸ்யமான விஷயம் தானே.. உங்கள் டைரி சுவாரஸ்யமாய் இருக்கிறது

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

எவனோ ஒருவன் said...

@கவிதை காதலன்

கருத்துக்கு நன்றி.

தங்கள் வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் மிக அருமை....

மாணவன் said...

டைரி குறிப்புகளை உணர்வுகளுடன் மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டு நெகிழவைத்துவிட்டீர்கள் அருமை நண்பரே

எவனோ ஒருவன் said...

@ மாணவன்

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே....

ப்ரியமுடன் வசந்த் said...

மிகவும் பிடித்த பதிவு பாஸ் நானும் இது மாதிரி ஒரு கற்பனை காதல் டயரி எழுதலாம்ன்னு தோணவச்சிருக்கு கிளாஸ் ப்ரசண்டேசன்...

எவனோ ஒருவன் said...

@ப்ரியமுடன் வசந்த்

வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி வசந்த் :-)

விரைவாக எழுதுங்கள். தங்கள் பதிவைப் படிக்க மிக ஆவலாக உள்ளேன்....

ரேவா said...

என் டைரி பக்கங்களில் சில.... அழகான காலத்தை கண்முன்னே நிறுத்தியது... வாழ்த்துக்கள்...

எவனோ ஒருவன் said...

@ ரேவா

கருத்துக்கு நன்றி தோழி....

Post a Comment