Pages

Monday, August 15, 2011

பயணம்

"நம் வாழ்க்கை பயணத்திற்கும் மற்ற பயணங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். வாழ்க்கை பயணத்தில் எப்பொழுது ஏற்றம் இறக்கம் வளைவு நெளிவுகள் வரும் என்று நமக்கு தெரியாது. நாம் அனைவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கிறோம். சில நேரங்களில் நம் பாதை மற்றவர் பாதையோடு இணைகின்றது. அப்படி இணையும் தருணங்களில் ஒன்றாக பயணிக்கிறோம். இப்படி பயணிப்பது தான் வாழ்க்கை. எப்படி பயணித்தாலும் அனைவரின் பயணமும் இறுதியில் சென்று முடிவது கல்லறையில்."

இப்படி என் டைரியில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. காலை 5 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. குளித்து விட்டு வீட்டை விட்டு கிளம்பினேன். ஆதவன் உதிக்கத் தொடங்கி இருந்தான். ஐந்து நிமிடங்கள் நடக்க பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து எண் 34 எனக்காகவே காத்துக் கொண்டு இருப்பது போல இருந்தது. ஏறினேன். எங்க சார் போனும் என்று நடத்துனர் கேட்க 'கல்லறை' என்றேன். டிக்கெட் வாங்கிக் கொன்று ஜன்னலோரம் சென்று அமர்ந்தேன்.

காலை நேரம் என்பதால் பேருந்தில் ஒரு சிலர் தான் இருந்தனர். பகலில் இருக்கும் ஆரவாரம் எதுவுமின்றி மிக அமைதியாக இருந்தது அக்கணம். ரசிக்கத் தொடங்கினேன் அமைதியை.

வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை அவள் என் வாழ்வில் வரும் வரை நான் நம்பவில்லை. அவளை முதல் முதலில் சந்தித்தது ஒரு பேருந்து பயணத்தில் தான்.


'சிங்கநல்லூர் சிக்னல் ' என்று நடத்துனர் விசிலடிக்க என் மனம் நினைவுகளோடு வாழத் தொடங்கியது.


சிங்கநல்லூர் சிக்னல் :

நான் கார்த்திக். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு CHL Technologies இல் Software Engineer ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.


எப்பொழுதும் பைக்கில் ஆபீஸ் செல்லும் நான் பைக்கை சர்வீஸ் கொடுத்து இருந்ததால் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை. என் நண்பன் ஷங்கருக்கு கால் செய்து என்னை பிக் அப் பண்ண சொன்னேன். என் நேரம் அவன் இன்று சீக்கிரமே ஆபீஸ் சென்று விட்டான்.


'சிக்னல் வந்ததும் சொல்லு வர்றேன். மறக்காம ரெண்டு தம் வாங்கி வச்சுடு' என்றான்.


'டேய் சிக்னல் ல இருந்து ஷேர் ஆட்டோ ல நம்ம ஆபீஸ் வந்தாலே அஞ்சு ரூபாய் தான் டா' என்றேன்.


'டேய் இங்க சிக்னல் கம்மியா இருக்கு நீ வந்துட்டு கால் பண்ணு' வைத்து விட்டான்.


'அடப்பாவி' நானும் போனை வைத்தேன்.

வெயிலை சமாளிக்க குளிர் சாதனப் பேருந்தில் ஏறினேன். 'அழகிய திமிருடன் இரு விழிப் புயல் எனைத் தாக்குதே' ஒலித்துக் கொண்டிருந்தது. 'மாதவனுக்கு தான் அப்படி எல்லாம் நடக்கும்' ஏதோ ஒரு குரல் கேட்டது என்னுள்ளே. அக்குரலுக்கு பதில் ஏதும் கூறாமல் பாடலை ரசிக்க ஆரம்பித்தேன். திடீரென்று அதே குரல் மீண்டும் ஒலித்தது மச்சி அங்க பாரு என்று. பார்த்தேன். 'நல்ல வேளை மாதவன் கண்ணுல இந்தப் பொண்ணு படலை' அக்குரலுக்கு பதில் அளித்தேன். அவளையே கண்ணிமைக்காமல் பார்க்க ஆரம்பித்தேன். நான் பெண்களை ஏறெடுத்து பார்க்காதவன் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். எந்தப் பெண்ணிலும் ஏற்படாத ஒரு உணர்வு இவளைப் பார்த்ததும் மனதினுள் உருவானது. சிக்னல் வர ஐந்து நிமிடங்கள் இருக்க ஷங்கருக்கு கால் செய்து அவனை வரச் சொன்னேன். என்னுடைய ஸ்டாப் வந்தது. இறங்கினேன். அவள் என்னை பேருந்தில் இருந்து பார்ப்பாள் என்று நினைக்க மீண்டும் அதே குரல் ஒலித்தது 'படம் பார்த்து ரொம்ப கேட்டுப் போய் இருக்க. ஒழுங்கா ஆபீஸ் கிளம்பு டா' என்று. இருந்தாலும் நான் பேருந்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவளைக் காணவில்லை உள்ளே.

என் பின்னால் நின்று கொண்டிருந்தாள். எங்கள் கம்பெனி ID CARD ஐ போட்டுக் கொண்டாள்.

'நம்ம ஆபீசா!!!! இவளை இது வரை பார்த்ததே இல்லையே' என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவள் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியிடம் CHL Technologies எப்படி போகணும் என்று கேட்டுக் கொண்டிருந்தாள். அப்பெண்மணி பதில் ஏதும் கூறவில்லை. இன்னொரு பெண்ணிடம் அவள் கேட்க தெரியாதும்மா என்ற பதில் வந்தது. அவள் அடுத்து யாரிடம் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் நான் என்னுடைய ID ஐ எடுத்து போட்டுக் கொண்டேன். அவள் என்னருகில் வந்தாள்.

'Excuse me CHL Technologies எப்படி போனும்?' என்று கேட்டாள்.

'இங்க இருந்து ஷேர் ஆட்டோ ல போகணும். நானும் அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்' என்றேன். நாங்கள் எப்பொழுதும் டீ குடிக்கும் பேக்கரி வாசலில் ஷங்கர் Pulsar ஐ நிறுத்திக் கொண்டிருந்தான்!

நான் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். ஷங்கர் எனக்கு கால் பண்ணினான். போனை silent இல் போட்டேன்.

"நீங்க இன்னைக்கு தான் இந்த ஆபீஸ் ல ரிப்போர்ட் பண்றீங்களா?"

'ஆமா சார், நான் Fresher' என்றாள்.

"ஓ. எந்த காலேஜ் ல படிச்சீங்க?"

'அமிர்தா ல'

"Computer Science ?"

'இல்ல. IT'

வேற என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஆட்டோ வந்தது. உள்ளே ஏறினாள். நான் ஏறுவதை ஷங்கர் பார்த்து விட்டான். அந்த டிராபிக்கிலும் என் பெயரை உரக்கச் சொல்லி அழைக்க ஆரம்பித்தான். ஆனால், என் காதில் மட்டும் அது விழவில்லை.

"அண்ணா வண்டியை எடுங்க. டைம் ஆச்சு" என்றேன்.

'சார், இன்னொரு டிக்கெட் ஏறலாம். ஒரு நிமிஷம் சார்' என்று சொல்லிவிட்டு அவர் டீ குடிக்கச் சென்றார்.

எங்கள் கம்பெனி ID உடன் இன்னொருவன் ஏறினான். உள்ளே ஏறியவன் அவளுடன் பேச ஆரம்பித்தான். 'ஹே பூர்ணிமா. நீயும் இந்த ODC தானா? What a Surprise' என்றான்.

'ஆமா, ப்ரவீன்' அவள் வேறு ஏதும் பேசவில்லை.

'என்கிட்ட சொல்லி இருந்தா நாம ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கலாம்ல. எப்படி வழியை கண்டுபிடிச்சு வந்த?'

'பஸ் ல சிக்னல் வரை வந்துட்டேன். அப்புறம் தான் வழி தெரியல. இவர் நம்ம ஆபீஸ் தான் டா. இவர் தான் ஹெல்ப் பண்ணாரு' என்று அவள் சொல்ல அவன் என்னைப் பார்த்தன். என் கண்களில் இருந்த அதே கோபத்தை அவன் கண்களிலும் கண்டேன்.

அவன் மேலும் அவளிடம் பேச ஆரம்பிக்க எனக்கு கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது எந்த காரணமும் இன்றி. ஆட்டோ டிரைவர் வண்டியை எடுக்க ஆரம்பிக்க நான் இறங்கிக் கொண்டேன்.

'தம்பி ரொம்ப லேட் பண்ணலைல. உட்காருங்க' என்றார்.

"இல்லைன்னா என் பிரண்டை இப்ப தான் பார்த்தேன். எனக்காக வெயிட் பண்றான். அவனோட போறேன்" என்று பதிலளித்தேன். அவளை ஒரு முறை பார்த்து விட்டு இறங்கினேன்.

'ஏன்டா நான் கூப்பிட கூப்பிட கண்டுக்காம போயிட்டு இருக்க?' என்றான் ஷங்கர்.

"உன்னை பார்க்கலை மச்சி"

'டேய் என்கிட்டவேவா... யாரு மச்சி அந்த பொண்ணு?'

"எந்தப் பொண்ணு டா?"

'நடிச்சது போதும்.. சொல்லு டா'

"fresher ஆக நம்ம கம்பெனி ல சேருறா டா"

'அது ஏன் மச்சி இன்னொரு பையன் ஏறுனதும் இறங்கிட்ட?'

அடப்பாவி அப்ப எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருந்திருக்கான்.

"நீ எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்ததை பார்த்தேன் மச்சி. அதான் இறங்கிட்டேன்"

'தம்பி நீங்க போனை silent ல போட்டதுல இருந்து உங்களை வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்' என்றான் ஷங்கர்.

அவனிடம் மேலும்
பொய் சொல்ல விருப்பமில்லை. "தெரியலை டா அவளை முதல் முறை பார்க்கிற மாதிரி இல்லை. ஏதோ ஒரு பீல் மச்சி. சரியா சொல்ல தெரியலை"

'மச்சி இப்ப எல்லாம் ஸ்கூல் லையே பொண்ணுங்களை புக் பண்ணிடுறாங்க. நீ ரொம்ப லேட் டா'

"அவளைப் பார்த்தா அப்படி இருக்கும்னு தோனலை டா"

'சரி நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்ட. அவா பின்னால சுத்திட்டு உனக்கு இல்லன்னு தெரிஞ்ச பிறகு கம்பெனிக்கு என்னை தண்ணி அடிக்க கூப்பிட கூடாது டா....'

"டேய் என் லவ் success ஆனதுக்கு உனக்கு தண்ணி வாங்கித் தர்றேன் டா"

'பார்க்கலாம் மச்சி.... எப்படியோ எனக்கு தண்ணி confirmed'

"டேய் நம்ம மணி நம்பர் என்ன?"

'எதுக்கு டா. திடீர்னு மணி நம்பர்'

"பூர்ணிமாவை நம்ம டீம் ல சேர்க்க"

மணி - எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜர்!

'சார் ஜங்ஷன் வந்தா கொஞ்சம் சொல்றீங்களா' என்று ஒரு குரல் கேட்க நினைவுக்கு வந்தேன். குரல் வந்தது என் பக்கத்து இருக்கையில் இருந்து. முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.


"சொல்றேன் சார்" அவரிடம் சொல்லிவிட்டு இது என்ன ஸ்டாப் என்று பார்த்தேன்.


திருவான்சேரி :

பூர்ணிமா என் டீமில் சேர்ந்தாள். சேர்ந்தாள் என்பதை விட சேர்க்கப்பட்டாள் என்று சொல்வதே சரி. மணி செய்த இன்னொரு நல்
காரியம் என்னை அவளுக்கு Mentor ஆக போட்டது. படு புத்திசாலியாக இருந்தாள் பூர்ணிமா. அழகும் அறிவும் ஒரே இடத்துல சேராதுன்னு எப்படி சொல்லலாம் இவளைப் பார்க்காமல்? அவள் கேட்கும் doubt களுக்கு பதில் சொல்லவே நானும் நிறைய படிக்க வேண்டி இருந்தது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கும் நேரங்களில் தான் அவளுடன் தனியாக இருக்க முடிந்தது. அதற்காவே தினமும் இரண்டு மணி நேரங்கள் அவளுக்கு training எடுத்தேன். அழகில் மட்டுமன்றி புத்தி கூர்மையிலும் என்னை கவர்ந்திருந்தாள். நான் அவள் மேல் காட்டும் கூடுதல் அக்கறை வெட்ட வெளிச்சமாகிப் போனது எங்கள் டீமில் இருந்த அனைவருக்கும். அதற்கு காரணம் எங்கள் டீமில் செயல்படும் உளவுத்துறை.

ஒரு நாள் உளவுத்துறையில் இருந்து எனக்கு தகவல் வந்தது. பூர்ணிமா சூர்யா என்ற பையனுடன் திருவான்சேரியில் இருக்கும் Baskin Robbins க்கு ஏழு மணிக்கு செல்வதாக அதில் குறிப்பிட்டிருந்தது.

ஷங்கரிடம் அதைப் பற்றிக் கூறினேன். அவனோ 'நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல டா இந்தக் காலத்துல எல்லாம்...' என்று ஆரம்பித்தான்.

"உன் வாயில இருந்து நல்லது எதுமே வராதா டா"


'அப்ப இன்னைக்கு நைட்டே தண்ணியா????'


"உன்னைய. நான் அங்க போயிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்" திருவான்சேரி கிளம்பினேன்.

இரவு மணி 7.௧0
Baskin Robbins இல் ஆஜர் ஆகி இருந்தேன். பூர்ணிமாவைத் தேடினேன். அவள் தனியாக உட்கார்ந்து இருந்தாள். அவளுக்குத் தெரியாதவாறு நானும் ஒரு டேபிளில் அமர்ந்தேன். யார் அந்த சூர்யா? மிக ஆவலாடு அவள் டேபிளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


நான் அவளைப் பார்ப்பதை மறைத்துக் கொண்டிருந்த டேபிள் காலியாக பூர்ணிமா என்னைப் பார்த்து விட்டாள். என்னருகில் வந்தாள்.


'Mentor சார், இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? தனியாவா வந்தீங்க?' என்று கேட்டாள் பூர்ணிமா.


"பிரண்ட் ஒருத்தரை திருவான்சேரியில் பார்க்க வந்தேன். அவர் வர இன்னும் 30 நிமிடங்கள் ஆகும். அதான் இங்க உள்ள
நுழைஞ்சிட்டேன். நீங்க?"

'ஐஸ் கிரீம்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். வாரத்துக்கு நாலு தடவையாவது சாப்டிடுவேன். சூர்யா கூட எப்பவும் வருவேன். உங்களுக்கு தெரியுமா இன்னைக்கு சூர்யா ட்ரீட்'


'எவன்டா அந்த சூர்யா' மனதினுள் திட்டினேன்.


"ஓ.. சூர்யா எங்க?"


'ஐஸ் கிரீம் வாங்க' என்றாள்.


இன்னும் பேசிட்டு இருக்க பூர்ணிமா என்று அவள் டேபிளில் இருந்து ஒரு குரல் கேட்டது 'ஐஸ் கிரீம் உருகிடப் போகுது. சாப்பிட வா' என்று.


என்னையும் அழைத்தாள். நான் மறுத்தும் அவள் என்னை விடுவதாய் இல்லை. நானும் அவளுடன் சேர்ந்து கொண்டேன்.


'இவா தான் என் ரூம்மேட்' என்று எங்கள் டேபிளில் இருந்த ஒரு பெண்ணை அறிமுகம் செய்தாள்
.

இருவரும் ஹாய் சொல்லி கொண்டோம்.


'எனக்கு சாக்லேட் flavor ரொம்ப பிடிக்கும். அதனால உங்களுக்கும் சாக்லேட் தான் என்று' Chocolate Fudge ஐ எனக்கு கொடுத்தாள் பூர்ணிமா.


'யாரை தேடிட்டு இருக்கீங்க சாப்பிடாம?' என்று சுவைத்துக் கொண்டே கேட்டாள் பூர்ணிமா.


"சூர்யா வந்ததும் சாப்பிடலாம்னு தான்"


'இவா தான் சூர்யா. நான் தான் சூர்யா ஐஸ் கிரீம் வாங்க போயிருக்கான்னு சொன்னேன்ல' சிரிக்க ஆரம்பித்தாள்.


சூர்யாவோ முறைத்துக் கொண்டிருந்தாள் எங்கள் இருவரையும்.


"சூர்யா ன்னு சொன்னதும் நான் ஒரு பையனா இருக்கும்னு நினைச்சேன். சாரி சூர்யா" வளிந்தேன்.


'பரவா இல்லை. ஆனால், சூர்யா பொண்ணுன்னு தெரிஞ்சதும் உங்க முகத்துல முன்ன இருந்ததை விட சந்தோஷம் நிறைய தெரியுதே' என்று என் காலை வாரினாள் சூர்யா.


'என்னடி பேசுற? சும்மா இரு டி' என்று அதட்டினாள் பூர்ணிமா.


அந்நேரத்தில் எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை...."கொடுத்த Hands On எல்லாத்தையும் முடிச்சிட்டியா பூர்ணிமா" என்றேன்.


'ஆபீஸ்ல தான் ரொம்ப வேலை வாங்குறீங்கன்னு புலம்பினா. ஐஸ் கிரீம் ஷாப்லயுமா??' என்றாள் சூர்யா.


'நீ ரொம்ப பேசுற டி. முடிச்சிட்டேன் கார்த்திக்' என்றாள் பூர்ணிமா.


இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என் நிலைமை நாறிப் போய் விடும் என்று 'டைம் ஆச்சு பூர்ணிமா. கிளம்புறேன்' என்று விடைபெற்றேன்.


உளவுத்துறைக்கு கால் பண்ணினேன். "சூர்யாங்கிறது ஒரு பொண்ணு" என்றேன் கோபத்துடன்.


'Information கலெக்ட் பண்றப்போ எங்கயோ தப்பு நடந்திருக்கு. இனிமேல் இப்படி தப்பு நடக்காம பார்த்துக்கிறோம்'


"ஒரு மண்ணும் தேவை இல்லை. இனிமேல் பூர்ணிமா பத்தி உங்ககிட்ட இருந்து எந்த தகவலும் வரக் கூடாது. நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்" போனை வைத்தேன்.


ஆனால் உள்மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இன்பம் சூர்யா பெண்ணாகிப் போனதில். ஷங்கருக்கு போன் செய்தேன் நடந்ததை பற்றிச் சொல்ல.


கமல் தியேட்டர் :

டீம் மீட்டிங் சென்று கொண்டிருந்தது. வழக்கம் போல மணி மட்டும் பேசிக் கொண்டிருந்தார். இப்படி ஒருத்தர் பேச மற்ற அனைவரும் அதை கவனிக்க ஆரம்பித்தாலே எனக்கு காலேஜ் lecture ஞாபகத்துக்கு வந்துவிடும் நானும் உறங்கிவிடுவேன். அன்றும் அப்படியே நடந்தது. திடீரென்று ஷங்கர் என்னை உலுப்பினான். மீட்டிங் முடிந்து விட்டது என்று நான் எழுந்தேன். மணி என்னிடம் Team outing எங்க போலாம் என்று கேட்டார். ஷங்கர் Team outing பத்தி மணி பேச ஆரம்பிச்சார் டா அ
தான் உன்னை எழுப்பிவிட்டேன் என்று கிசுகிசுத்தான். Resort ஏதாச்சும் போகலாம் மணி, ஒரு நாள் புல்லா கழிக்க அதான் கரெக்டா இருக்கும் என்றேன். 'என்னது ஒரு நாளா? வேலை பார்க்கிற ஐடியா இல்லையா? வெள்ளிகிழமை லஞ்ச்க்கு அப்புறமா தான் கிளம்ப முடியும்' என்றார் மணி. "அப்ப ஏதாச்சும் படத்துக்கு தான் போக முடியும் மணி. படம் முடிச்சிட்டு டின்னர் போகலாம்' என்றேன். பூர்ணிமா குறுக்கிட்டாள் 'எங்க PG ல லேட்டா போனா திட்டு விழும் அந்த வார்டன்ட்ட' என்னைப் பார்த்தாள். 'அப்ப படத்துக்கு மட்டும் போலாம் மணி. வேற என்னைக்காவது ஒரு நாள் வேணா டீம் லஞ்ச் போயிடுவோம்' என்றேன். 'Team outing போறோமா இல்லை நீ Dating போறியா டா' முணு முணுத்தான் ஷங்கர். "உனக்கும் இப்படி ஒரு நிலைமை வராமலா போயிடப் போகுது" என்றேன் பதிலுக்கு.

'சரி என்ன படத்துக்கு போகலாம்?' என்றார் மணி. 'கஜினி' இந்த வெள்ளி தான் ரிலீஸ் ஆகுது அதுக்குப் போகலாம் என்றான் ஷங்கர். நான் பூர்ணிமாவைப் பார்த்தேன். அவள் முக பாவனை கஜினி க்கு இஷ்டம் இல்லை எனக் காட்டியது. வேற என்ன படம் இப்ப ஓடிட்டு இருக்கு என்று யோசித்தேன். "தொட்டி ஜெயா" போகலாம் என்றேன். அவள் முகம் மலர்ந்தது. அந்த படம் பார்த்தாச்சு கஜினி க்கு போகலாம் என்று சில குரல்கள் எழுந்தன. இன்னொரு டீம் உள்ளே நுழைந்து இந்த மீட்டிங் ரூமை புக் பண்ணியிருப்பதாக சொல்ல 'சரி என்ன படத்துக்கு போறோம் என்று நீங்களே பேசி முடிவு பண்ணி சொல்லுங்க. ஒரு முடிவுக்கு வரலைன்னா இன்னைக்கு எவனிங் vote பண்ணி முடிவெடுப்போம்' என்றார் மணி.

"எந்த படத்துக்கு போலாம்னு எல்லாரும் சொல்றாங்க? உளவுத்துறை என்னடா சொல்லுது" என்றேன் ஷங்கரிடம்.

'உன்னையும் பூர்ணிமாவையும் தவிர எல்லாருமே கஜினி டா. இதான் உளவுத்துறை அறிக்கை'

"நீயுமா டா"

'நீ பூர்ணிமாக்காக தொட்டி ஜெயா ன்னு சொல்ற. நான் என் அசினுக்காக கஜினி டா'

"சரி இப்ப என்ன பண்ணா இந்த முடிவு மாறும்?"

'எங்களை கொஞ்சம் கவனிச்சா போதும் டா'

"நான் பூர்ணிமாவை மட்டும் தனியா கூட்டிட்டு தொட்டி ஜெயா பார்த்துட்டு வந்தா கூட 200 ரூபாய் தான் டா ஆகும். உங்களை கவனிச்சா 2000 த்தை தாண்டிடுமே!!!!"

'அப்படியா ராசா. சரி நீ அவளை தனியா கூட்டிட்டு அந்த படத்துக்கு போ. இப்ப நாம எல்லாரும் கஜினி போவோம்'

"டேய் எப்படி டா என் கூட தனியா வருவா?"

'தெரியுதுல்ல. சரி முடிவா என்ன சொல்ற?'

"உங்களை கவனிக்கிறதை தவிர வேற என்ன வழி இருக்கு?"

'அப்படி வா டா வழிக்கு'

மணியிடம் கடன் வாங்கி அவருக்கும் சேர்த்தே கவனித்தேன். கமல் தியேட்டரில் தொட்டி ஜெயா புக் செய்தோம். நான் எதிர்பார்த்த வெள்ளியும் வந்தது.

கிளம்பும் நேரத்தில் உளவுத்துறையிடம் இருந்து ஒரு செய்தி 'பூர்ணிமாவிற்கு அடுத்த சீட்டை எனக்கு ரிசர்வ் செய்து தருவதாக'. 'ஒரு விளக்கெண்ணையும் தேவை இல்லை' என்றேன்.

பூர்ணிமாவிற்கு இரண்டு சீட் தள்ளியே அமர்ந்தேன். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை நான் ஒரு காட்சி கூட பார்க்கவில்லை. என் தேவதை படத்தை ரசிக்கும் அழகை நான் என் கண்களால் ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சிரிப்பது, ஹீரோ ஹீரோயினுக்கு கஷ்டம் என்றால் கோபப்படுவது, அவளுக்கு பிடித்த பாடல் வரும் பொழுது மென்மையான குரலில் பாடுவது, சென்டிமென்ட் காட்சிகளில் கண்களில் நீர் தேங்குவது என்று அவள் செய்யும் ஒவ்வொன்றையும் ரசித்தேன். எல்லாரும் இப்படித் தான் படம் பார்ப்பார்கள் என்றாலும் அவள் என்ன செய்தாலும் எனக்கு புதிதாகவே இருந்தது.

முருகன் கோவில் ஸ்டாப் :

ஒரு வியாழக்கிழமை. அம்மாவிடம் இருந்து போன் வந்தது. 'டேய் கார்த்திக் இன்னைக்கு உன்னோட ராசிக்கு தக்ஷனா மூர்த்தியா கும்பிட்டா ரொம்ப நல்லது. மறக்காம கோவிலுக்குப் போடா'

"இங்க தக்ஷனா மூர்த்தி கோவில் எங்க இருக்குன்னு தெரியலம்மா"

'போன டைம் நான் வந்தப்ப என்னைய முருகன் கோவிலுக்கு கூட்டிட்டு போனல்ல அந்த கோவில்ல இருக்காரு. கண்டிப்பா போகணும் டா'

அடுத்த டைம் வரும் போது எந்த கோவிலுக்கும் கூட்டிட்டு போயிடக் கூடாது மனதினுள் நினைத்துக் கொண்டேன். "சரிம்மா இன்னைக்கு சாயந்திரம் போறேன்" என்றேன்.

'சாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிடு டா' என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

மாலை 6 மணிக்கு முருகன் கோவில் சென்றேன். விநாயகரை வழிபட்டு விட்டு என் எதிரில் பார்த்தால் பூர்ணிமா நின்று கொண்டிருந்தாள். முதல் முறை அவளை சேலையில் பார்த்தேன். இப்ப தான் பசங்க ஏன் கோவில் குளமா சுத்துறாங்க என்று எனக்கு அர்த்தம் புரிந்தது.

அவள் இன்னும் முணு முணு என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள். 'எல்லாமே நீ அழகாய் தான் பண்ணுவியா இல்ல நீ பண்றதுனால எல்லாமே அழகா இருக்கா?? ஏன் டி என்னை இப்படி கொல்ற' அவள் அருகில் சென்றேன்.

"உங்க அம்மாவும் உங்களை தக்ஷனா மூர்த்தியை கும்பிட்டு வரச் சொன்னாங்களா?" என்றேன்.

சிரித்தாள்.

'நான் வாரா வாரம் கண்டிப்பா கோவில் வந்திடுவேன் கார்த்திக்' என்றாள்.

சொல்ல மறந்துவிட்டேன் mentor sir கார்த்திக்காக மாறிவிட்டது இரண்டு மாதங்களுக்கு முன்பு.

"நிறைய நல்ல பழக்கம் உங்ககிட்ட இருக்கும் போலையே"

அதற்கும் சிரிப்பே பதிலாய் வந்தது முதலில்.

"என்ன பூர்ணிமா நீ மட்டும் தனியாவா வந்த. எங்க சூர்யாவைக் காணோம்?"

'அவளுக்கு ஆபீஸ் ல நிறைய வேலை இருக்கு. அதனால அவளால வர முடியலை. நீங்க தனியாவா வந்தீங்க'


"நான் கோவிலுக்குத் தனியா வர்றதா? சான்ஸே இல்லை. என் காலேஜ் பிரண்ட் கவிதா கூட வந்தேன். நீயும் எங்களோட join பண்ணிக்கிறியா?" கண்டிப்பா ஒத்துக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் கேட்டேன்.


'சரி கார்த்திக்' என்றாள்.


அய்யய்யோ என மனதில் நினைத்துக் கொண்டு மொபைலை எடுத்து புதிய மெசேஜ் வந்திருப்பது போல காட்டிக் கொண்டேன்.

"கவிதா டிராபிக் ல மாட்டிக்கிட்டாளாம்"


'நான் வெயிட் பண்றேன் கார்த்திக்'


"அவா வர லேட் ஆகும் போல. நீ சாமி கும்பிட்டு கிளம்பு இல்லைன்னா உனக்கு லேட் ஆகிடும். PG க்கு எப்படி போற? அந்த ரோடு safe தான?"


'ஒன்னும் பயம் இல்லை கார்த்திக். பிரவீன் தெரியும் ல அவன் என்னை ட்ராப் பண்றேன்னு சொல்லிருக்கான்' என்றாள்.


"நான் பொய் தான் டி சொன்னேன்" மனதுக்குள் மட்டும் தான் சொல்ல முடிந்தது. "டேய் பிரவீன் நீ மட்டும் என கையில மாட்டின" மனதில் நினைத்துக் கொண்டேன்.

"நான் கவி வர்ற வரை வெயிட் பண்றேன். பூர்ணிமா, நீ சாமி கும்பிட்டு சீக்கிரம் கிளம்பு. நாளைக்கு ஆபீஸ் ல பார்க்கலாம்" என்றேன்.

அவள் ஒவ்வொரு தெய்வமாய் சுற்றி வழிபட என மனம் அவளை சுற்ற ஆரம்பித்தது.


அம்மாவிற்கு போன் செய்தேன்.


"அம்மா தக்ஷனா மூர்த்தியை தான் கும்பிடனுமா? நான் மகாலக்ஷ்மியை கும்பிட்டேன்" என்றேன்.


'என்னைக்கும் இல்லாத அதிசயமா
இன்னைக்கு நீ கோவிலுக்குப் போனதே உன் ராசிக்கு ரொம்ப நல்லது' என்றார்.

சிரித்தேன் மகாலக்ஷ்மியைப் பார்த்துக் கொண்டே.


ஜெயாநகர் - Coffee Day

ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பூர்ணிமா வந்தாள்.


'கார்த்திக் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசவேண்டி இருக்கு'


"Official or personal?" என்றேன்.


'ரெண்டுமே'


"மீட்டிங் ரூம் புக் பண்றேன். 4 மணிக்கு நாம பேசலாம்"


'கார்த்திக் வெளிய எங்கயாச்சும் மீட் பண்ணலாமா? ஒருத்தரை உனக்கு intro தர வேண்டி இருக்கு'


"எனக்கா? யாரு?"


'எவனிங் வரை பொறு. நேர்லயே பார்க்கப் போறியே'


மனதினுள் ஒரு கலக்கம். யாரா இருக்கும்? சரி நேரிலேயே போய் பார்த்திடலாம் என்று தோன்றியது.


"எங்க மீட் பண்ணலாம்?"


'நீயே சொல்லு'


"ஜெயாநகர் - Coffee Day ஓகே வா?"


'ஓகே. 7 மணிக்கு வந்திடு'


"ஓகே"


மாலை ஏழு மணிக்கு ஆஜர் ஆனேன். அவள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன். 'A lot can happen over coffee' எப்பொழுதும் இதை வாசிக்கும் போது ரொமான்டிக்காக தோன்றும் எனக்கு இன்னைக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது மனதினுள் உள்ள பதற்றத்தால். வரப்போறது யாரா இருக்கும்?


பூர்ணிமா வந்து கொண்டிருந்தாள். வெள்ளை நிறச் சுடிதார் அணிந்து இருந்தாள். Coffee Day மிக அழகாய் மாறியது அவள் வருகைக்கு பின்பு. அங்கே இருந்த எல்லா ஆண்களின் பார்வையும் பூர்ணிமா மீது விழுந்தது. "அதான் எல்லாரும் உங்க ஆளு கூட தான் டா வந்திருக்கீங்க. அப்புறம் என்ன டா இங்க பார்வை?" மனதிற்குள் திட்டிக்கொண்டேன் சரமாரியாக.


'வந்து ரொம்ப நேரம் ஆச்சா?'


"இல்லை அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால தான் வந்தேன். யாரோ வருவாங்கன்னு சொன்ன? எங்க?"


'டிராபிக் ல மாட்டிட்டாங்க. வருவாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல'


'என்ன இவ்வளவு மரியாதை கொடுத்து பேசுறா' மனதிற்குள் ஒரு சின்ன பயம்.


'நாம ஏதாச்சும் சாப்பிடலாமா கார்த்திக்? ரொம்ப பசிக்குது'


"என்ன சாப்பிடுற?"


'நான் coffee day வர்றது இதான் முதல் முறை. எனக்கு எதுவும் தெரியாது. அதனால நீயே ஆர்டர் பண்ணு'


இரண்டு Mochachillo ஆர்டர் செய்தேன்.


"சொல்லு பூர்ணிமா" ஆரம்பித்தேன் நான்.


'கார்த்திக் எங்க வீட்டுல ஒரு பையன் பார்த்து இருக்காங்க' என்னை பார்த்துக் கொண்டே சொன்னாள்.


"ஹ்ம்ம்"


'அவரு பெங்களூருல வேலை பார்க்கிறாரு' அவள் முடிப்பதற்குள் குறுக்கிட்டேன்.


"உனக்கு பெங்களூருக்கு transfer வேணுமா" என்றேன். என் குரலில் இருந்த கோபத்தை அவள் கண்டிப்பாக உணர்ந்திருப்பாள்.


'நான் அப்படி சொன்னேனா? வீட்டுல என்ன சொல்லட்டும்?'


"என்கிட்ட ஏன் கேட்கிற?"


'உளவுத்துறைல இருந்து நிறைய கேள்விப்பட்டேன் கார்த்திக். என்னைய ஒரு பையன் உயிருக்கு உயிரா நேசிக்கிறானாம்'


"அவன் நேசிச்சு என்ன பண்ண? இப்ப தான் எல்லாமே முடிஞ்சு போச்சே" என் குரல் தளுதளுத்தது.


'என்ன முடிஞ்சு போச்சு இப்ப?'


நான் பதில் ஏதும் சொல்லவில்லை.


'அவனை வேற எவளோ ஒருத்திக்கு விட்டுத் தர மனசில்ல. அதனால தான் அவன்கிட்ட ஒரு பொய் சொன்னேன் வீட்ல பையன் பார்த்திருக்கிறதா. அப்படியாது எல்லார்கிட்டயும் சொன்ன என் காதலை என்கிட்ட சொல்லுவான்னு'


என் கண்களில் இருந்த அதே காதலை பார்த்தேன் அவள் கண்களிலும்.


இதுக்கு மேலையும் சொல்லலைன்னா என்னை திட்ட ஆரம்பிச்சுடுவா...


"எப்ப பூர்ணிமா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்?"


'ஒரு காதலியா உன்னை இம்சை பண்ண வேண்டியது ரொம்ப இருக்கு டா. அதுக்கப்புறம் தான் உன் மனைவியா. ஓகே வா?'


சிரித்தேன்.


"சரி யாரோ வருவாங்கன்னு சொன்ன? எங்க ஆளைக் காணோம்?"


'நான் என்ன உன்னைய மாதிரி பொய் சொல்லுவேன்னு நினைச்சியா? வேற யாரு சூர்யா தான் வர்றா. சரி அன்னைக்கு ஏன் பொய் சொன்ன?'


"சும்மா தான்"


'அதுவும். கவிதாவை கவின்னு கூப்பிடுற? என்ன தைரியம் உனக்கு?'


சிரித்தேன்.


'இனிமேல் எவா பேரையாச்சும் சொல்லு. கவனிச்சுக்கிறேன்' அவள் சொல்லி முடிக்க சூர்யா வந்தாள்.


'நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல டி.. இவரு உன்னை பார்க்க தான் ஐஸ் கிரீம் ஷாப் வந்தாருன்னு' என்றாள் சூர்யா.


"உங்க பிரண்ட் மட்டும் என்னவாம். என்னைப் பார்க்கிறதுக்கு கோவிலுக்கு வரலை? அன்னைக்கு உங்களுக்கு ஆபீஸ் ல வேலை அதிகம்னு இவா மட்டும் தனியா வந்தா"


'எனக்கு வேலை அதிகமா? நான் 5 மணிக்கெல்லாம் ஹாஸ்டல் வந்திடுவேன். எப்படி இது நடந்துச்சு?' என்றாள் சூர்யா.


"அன்னைக்கு அண்ணனைப் பார்க்கப் போறேன்னு சொன்னேன்ல"


'ஏன்டி பொய் சொன்ன என்கிட்ட?' - சூர்யா.


'நான் எங்க டி பொய் சொன்னேன். உங்க அண்ணன் கார்த்திக்கைத் தான் பார்க்கப் போனேன்'


'ரெண்டு தடவ பார்த்து பேசுனதுக்கு எனக்கு அண்ணன் ஆக்கிட்டியா? கார்த்திக் நீங்க ரொம்ப பாவம். ஒருத்திய பார்க்க விட மாட்டா. ஆனாலும், நான் ஒரு லூசு டி. அண்ணனைப் பார்க்க எதுக்கு சேலை கட்டிட்டுப் போறான்னு எனக்கு தோனவே இல்லை பார்த்தியா?' என்றாள் சூர்யா.


மூவரும் சிரிக்க ஆரம்பித்தோம்.


'A lot can happen over coffee' அர்த்தம் புரிந்தது அவளால்.


Cluny Convent Stop :

Cluny Convent ஐ பார்த்தாலே ஏழு வருடங்களுக்கு முன்பு நான் தங்கி இருந்த வீட்டின் பக்கத்தில் இருந்த 'Johnathan(Johny)' ஞாபகம் தான் வரும்.


அன்று ஒரு நாள்,

பூர்ணிமாவுடன் போன் பேசிக் கொண்டிருந்தேன். ஜானி எங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.


'என்ன டா குழந்தை சத்தம் கேட்குது?'


"ஹே லூசு பக்கத்து வீட்டு பையன் டி. weekend இங்க வந்து விளையாடிட்டு இருப்பான்"


'ஹ்ம்ம்'


"Johny say Hi to aunty" ஜானியிடம் போனை கொடுத்தேன்.


'hi aunty'


'....' - பூர்ணிமா


'My name is Johnathan'


'....' - பூர்ணிமா


'I am studying LKG at Cluny Convent'


"Johny Give a Kiss to aunty"


....


"Johny You talk to aunty later" அவனிடம் இருந்து போனை வாங்கினேன்.


"சொல்லு டி"


அவள் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.


"என்ன டி ஏதும் பேச மாட்டேன்கிற?"


'டேய் fraud'


"என்னடி திடீர்னு"


'போடா எனக்கு வெட்க வெட்கமா வருது'


"எதுக்கு டி"


'எப்படி டா பண்றது எல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கிற?'


"என்னடி சொல்ற?"


'அடப்பாவி இன்னுமா. ச்சி போ எனக்கு ரொம்ப வெட்கமா வருது' என்றாள்.
போனில் கூட வெட்கப்பட முடியுமா அழகியே!

"எனக்கு ஒன்னும் புரியலை டி. என்னன்னு சொல்லு"


'குழந்தையை முத்தம் கொடுக்க சொல்லிட்டு நீ தான கொடுத்த. உன்னோட முதல் முத்தம்... போடா நான் அப்புறம் கால் பண்றேன்' வெட்கத்துடனே வைத்து விட்டாள்.


ஒவ்வொரு முதல் முத்தத்திற்கும் ஒரு வரலாறு இருக்குமோ!


தோகா பீச் ஸ்டாப் :

நாங்கள் இருவரும் கடல் அலையை வெறித்து பார்த்த படி உட்கார்ந்து இருந்தோம். இரண்டு வருடங்கள் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்தது எங்கள் காதல். எதிர்பார்த்த ரூபத்தில் பூகம்பம் வெடித்தது.


நானும் பூர்ணிமாவும் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள். எங்கள் இருவரின் பெற்றோருமே எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.


எத்தனையோ போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இருந்தும் எங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை இருவருக்கும்.


"எதாச்சும் பேசு பூர்ணிமா"


'நாம பிரிஞ்சிடலாம் கார்த்திக்'


"நல்லா யோயசிச்சு தான் சொல்றியா பூர்ணிமா? நான் இல்லாத உன்னை என்னால நினைச்சு பார்க்க முடியலை"


'யோசிச்சு இருந்தா நான் இப்படி ஒரு முடிவை சொல்லி இருக்க மாட்டேன் கார்த்திக். நான் இனிமேல் எதுமே யோசிக்கப் போறது இல்லை. யோசிச்சு எதாச்சும் பேசுனா படிச்ச திமிருல பேசுறான்னு வீட்ல சொல்றாங்க' அழுதாள்.


நான் எதுவும் பேசவில்லை. அவளை சமாதானப் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.


'காதலிச்சது தப்பா கார்த்திக்?'


அதற்கு மேலும் என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை.


அசோக் நகர் :

"பூர்ணிமா இன்னைக்கு தான் என்னோடைய கடைசி நாள் நம்ம ஆபீஸ் ல. பெங்களூருல ஒரு வேலை பார்த்திருக்கேன். இன்னைக்கு நைட் இந்த ஊரை விட்டு போயிடுவேன்"


'!!!!' அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள்.


"நீ சொன்ன மாதிரி நாம பிரிஞ்சிடலாம் பூர்ணிமா. என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது. எனக்கு வேற வழி தெரியலை இந்த ஊரை விட்டு போறதைத் தவிர"


அவள் எதுவுமே பேசவில்லை.


"கடைசியா எதாச்சும் பேசு பூர்ணிமா? உன்னோட குரலை கேட்கணும் போல இருக்கு"


'எத்தனை மணிக்கு ட்ரெயின்?'


"நைட் 11 மணிக்கு"


அவள் அப்படி கேட்ட போது கூட அவள் மேல் கோபப்பட முடியவில்லை. மூன்று வார்த்தையாவது பேசினாளே என்று சந்தோஷப் படவே தெரிந்தது.


இரவு 10 மணி,

ஜங்ஷனுக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுத்தேன்.
பூர்ணிமாவும் வந்தாள் என்னை இறுதியாக வழி அனுப்ப. என் தேவதையைப் பார்ப்பது இன்றே கடைசி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே வந்தோம். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 'இன்னும் ஒரு மணி நேரம் தான் என் தேவதை என்னுடன் இருப்பாள்' இதை யோசிக்க யோசிக்க என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

'கார்த்திக் என்னால சுத்தமா முடியலை. நீ என்னை விட்டுட்டு போறதை என்னால பார்க்க முடியாது. நான் இங்கயே இறங்கிக்கிறேன். Miss You Karthik' அழுதுகொண்டே இறங்கிவிட்டாள் அசோக் நகர் சிக்னலில்.


"இந்தப் பேருந்து பயணத்தில் கூட அவள் என்னுடன் முழுதும் இருக்க என் விதியில் இல்லை" என் விதியை நொந்து கொண்டேன்.


"என் பக்கத்தில் இருந்த பெரியவர் சற்று கண் அயர்ந்து இருந்தார். அய்யா ஜங்ஷன் வந்திடுச்சு. இறங்கி ரோட்டை கிராஸ் பண்ணிக்கோங்க"


'ரொம்ப நன்றி தம்பி' இறங்கினார் பெரியவர்.


ஜங்ஷன் என்னை கடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


ஜங்ஷன் :

கண்ணீரும காதலுமாய் ஜங்ஷனை அடைந்தேன்.


Platform 4 இல் பெங்களூர் வண்டி நின்று கொண்டிருந்தது. என்னுடைய இருக்கையில் யாரோ அமர்ந்திருக்க "excuse me, இது என்னோட சீட்" என்றேன்.


'எவ்வளவு தைரியம் டா உனக்கு? என்னைய தனியா விட்டுட்டு போயிடலாம்ன்னு
எப்படி உனக்கு தோனுச்சு?'

"பூர்ணிமா"


'என்னையும் உன்கூட கூட்டிட்டு போ டா"


"பூர்ணிமா"


'நீ இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு பார்க்க முடியலை கார்த்திக். நீ, நான், நம்ம காதல் போதும் கார்த்திக்'


அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


'ரொம்ப சுயநலமா இருக்கேன் ல கார்த்திக். அம்மா அப்பா ஒரு நாள் நம்மள புரிஞ்சுப்பாங்க'


பச்சை விளக்கு எரிய எங்கள் இருவரின் பயணமும் தொடங்கியது.


'கல்லறை வந்திடுச்சு.. இறங்குங்க இதான் கடைசி ஸ்டாப்' என்றார் நடத்துனர்.


இறங்கினேன்.


"ஒவ்வொரு மனிதனின் பயணமும் இறுதியில் சென்று முடிவது கல்லறையில். நாம் இருவரும் ஒன்றாகத் தான் வாழ்க்கை என்னும் பயணத்தை தொடங்கினோம். ஆனால், நீ மட்டும் ஏன் வேறு பாதையில் சென்றாய் பாதியில்?"


என்னையும் அறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்தது. வீட்டிலிருந்து அழைப்பு வர கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.


"ஹலோ, சொல்லு டா"


'கார்த்திக் எங்க போன என்னைத் தனியா விட்டுட்டு, சீக்கிரமா வா கார்த்திக்' என்றாள் வைஷ்ணவி.


"இன்னும் 30 நிமிஷத்துல வந்திடுவேன். சரியா?"


'ஓகே கார்த்திக். I am waiting for you. Come soon' முத்தம் கொடுத்து விட்டு போனை வைத்தாள் வைஷ்ணவி.


இருவரும் ஒன்றாகத் தான் பயணத்தை ஆரம்பித்தோம். ஆனால், அவள் சேரும் இடம் மட்டும் சீக்கிரம் வந்துவிட்டது. நான் பாதைகளை தொலைத்துவிட்டு நின்று கொண்டிருந்தேன். என் பயணம் நின்று விடக் கூடாது என எனக்கான பாதையை காண்பித்து விட்டுத் தான் சென்றாள். வைஷ்ணவி உடன் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்கிறேன்.


வைஷ்ணவி - எங்கள் இருவரின் நான்கு வயது குட்டி தேவதை.


எனக்கான பயணம் முடியும் வரை அவள் எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றாள் கல்லறையில்.

6 comments:

Priya said...

எனக்கான பயணம் முடியும் வரை அவள் எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றாள் கல்லறையில்.

nice lines.. film edukalam.. karthik character superb.. keep writing da..

ரேவா said...

சில பயணங்கள் நம் நினைவை விட்டு நீங்காது, நம்முள் பயணம் செய்யும் என்பதற்கு, இந்த பயணமே ஒரு சாட்சி....நண்பா உன் பதிவுகள் ஒவ்வொன்றிலும் கா(ந்)த(ல்) சக்தி உள்ளது, அது ஒவ்வொரு முறையும் என்னை ஈர்க்கிறது.....வாழ்த்துக்கள்...

FunScribbler said...

//film edukalam//

very true!!!!!!:)))

some suggestions (if you don't mistake me):
- try to write in small parts so that viewers may not get tired reading the entire lengthy story.
- add some pictures (relevant ones. like the bust stop scenes, office areas) it will enhance the story.

FunScribbler said...

I have read only half the story but so far two lines are amazing

//என் கண்களில் இருந்த அதே கோபத்தை அவன் கண்களிலும் கண்டேன்//

//மச்சி இப்ப எல்லாம் ஸ்கூல் லையே பொண்ணுங்களை புக் பண்ணிடுறாங்க. நீ ரொம்ப லேட் டா' //

soooooooo true! பொண்ணுங்க மட்டும் இல்ல. நல்ல பசங்களும் all fully booked. தண்ணி இல்லாத காட்டுல இருக்குற மாதிரி இருக்கு, பாஸ்! என்ன செய்ய??:))))

எவனோ ஒருவன் said...

@ Thamizhmaangani

Thanks much for your valuable suggestions and comments. When I write a story in future, I will take care of such things. Thanks again for visiting my blog.

Unknown said...

Good one. ending except panave illai. en sogama ending? kasta patu love la win pani irukaga 100 years vara happy a irukanum la?

Post a Comment