Pages

Saturday, May 22, 2010

காதலும் கடவுளும்

நான் காவ்யா. சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கிறேன். என்னை பற்றி சொல்வதற்கு இது நேரமில்லை. என் வாழ்வின் மிகக் கடினமான நிமிடங்களை கழித்துக் கொண்டிருக்கிறேன். சிவா – இவன் தான் இனி எனக்கு எல்லாமே என்று முடிவு செய்து ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டன. என் வீட்டில் சிவாவை பற்றிக் கூறி சம்மதம் வாங்கி விட்டேன். சிவா வீட்டில் தான் பிரச்சினை. நான் வேறு ஜாதி என்பதால் அவன் பெற்றோர் என்னை ஏற்க மறுக்கின்றனர். கடந்த ஒரு மாதமாகவே சிவாவுக்கும் எனக்கும் எதெற்கெடுத்தாலும் சண்டை தான். இன்று என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில் சிவா கால் பண்ணினான்.

ஹலோ காவ்யா..

‘ஹ்ம்ம் சொல்லு டா’..

“எப்படி சொல்றதுன்னு தெரில பா, என்னால இனிமேல் வீட்ல நம்ம லவ்வ பத்தி பேச முடியாது. அப்பா என் கால்ல விழாத குறை தான். அம்மா நெஞ்சுவலின்னு சொல்லி உட்கார்ந்துட்டாங்க. நான் வீட்டுக்கு ஒரே பையன் அப்படிங்கறதுனால அவங்க ஆசைப்பட்டபடி தான் என் கல்யாணம் நடக்க்கணுமாம். என்னால அவங்கள எதிர்த்து பேசமுடில. என்ன பேசவே விடல அவங்க ரெண்டு பேரும். இப்ப என்ன பண்றது?“.

"நீ என்ன பண்ணலாம்னு இருக்க?".

“எல்லாத்தையும் விட்டுடலாம் காவ்யா. நானும் என்னால முடிஞ்ச அளவு போராடிப் பாத்துட்டேன். அவங்க மனசு மாறுற மாதிரி தெரில. நீ எனக்காக வெயிட் பண்றது வேஸ்ட் பா. என்னால எதுவும் பண்ண முடில. நான் அவங்கள விட்டுட்டு வந்துட்டேன்னா ஏதாச்சும் பண்ணிக்குவாங்கன்னு பயமா இருக்கு. அவங்க சம்மதம் உனக்கும் வேணும்ல?”

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனே தொடர்ந்தான்.

“எதுவும் பேச மாட்டியா? நான் இப்படி முடிவு பண்ணது தப்பு தான். இப்படி ஒரு பொண்ண வேணாம்னு சொல்லிட்டு விட்டுட்டு போறேன்ல இந்த பாவத்துக்கு எனக்கு என்ன தண்டனை கிடைக்க போதுன்னு தெரில. இனிமேல் நமக்குள்ள எதுவும் வேணாம். அம்மா அப்பாவுக்காக நான் உன்னை விட்டு தர்றேன். உங்க அம்மா அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் உன்னை இப்படி கஷ்டப் படுத்தினதுக்கு. எனக்காக உன் டைம்ம வேஸ்ட் பண்ண வேணாம். உனக்கு நல்ல லைப் அமையும். அப்புறம் உன் உடம்ப பாத்துக்கோ. நல்லா சாப்டு, ப்ரூட் ஜூஸ், …”

“போதும் பா நிறுத்துறியா. ப்ளீஸ் லீவ் மீ அலோன் பார் சம்டைம். ஐ பெக் யு...”.

“ஹ்ம்ம்.. ஹாப்பி பெர்த்டே காவ்யா. மே காட் ப்லெஸ் யு வித் வாட்எவர் யு வான்ட்”..

“நீ வாழ்த்துறதே தப்பா இருக்கே டா. அதான் நீ இல்லையே அப்புறம் என்ன காட் ப்லெஸ்... இப்படி ஒரு பெர்த்டே என் லைப்ல வந்ததே இல்ல. உன்னோட நிரந்தர பிரிவு தான் நீ எனக்கு தந்து இருக்கிற பெர்த்டே கிப்ட். ரொம்ப சந்தோசத்த தருது டா உன்னோட கிப்ட்.. எனக்காக ஒன்னு பண்ண முடியுமா”.

“ஹே ஏன் இப்படி எல்லாம் கேட்குற, உனக்கு இல்லாமயா. சொல்லு பா”

“உனக்காக நான் வடபழனி முருகன் கோவில்ல சாயங்காலம் 7-8 வெயிட் பண்ணுவேன். என் பிறந்தநாள் இன்னைக்கு. உன்னோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு இருக்கு. ப்ளீஸ் எனக்காக வா”

“இங்க பாரு காவ்யா உன்ன ஏமாத்திட்டு போறேன் நான். ப்ளீஸ் டோன்ட் ஸ்பாயில் யுவர் லைப். உன்ன துரத்தி துரத்தி லவ் பண்ணி உன்னை இவ்ளோ தூரம் நான் பைத்தியம் ஆக்குனது போதும். இனிமேலும் அதை நான் பண்ண விரும்பல. நான் கண்டிப்பா வரமாட்டேன். நீ நல்லா இருக்கணும். எனக்காக வெயிட் பண்ணாத. ஸ்பெண்ட் டைம் வித் யுவர் பேமிலி”

“நான் வெயிட் பண்ணுவேன் கண்டிப்பா. அப்புறம் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு கட் செய்தேன்.

இன்று நிலைமை இவ்வளவு மோசம் ஆகும் என்று நான் சற்றும் எதிர் பார்க்கல. "நான் ஏன் பிறந்தேன்? இதுல பிறந்தநாள் வேற ஒரு கேடு!! என் லைப்ல ஏன் இப்படி ஒரு பையன கொண்டுவந்துட்டு இப்ப இப்படி பண்றது என்ன நியாயம்?" என்று ரூமில் இருந்த முருகன் சாமியிடம் பேசிக் கொண்டு இருந்தேன். எப்பொழுது உறங்கினேன் என்று தெரிய வில்லை.

மாலை 6 மணி. அவனுக்கு பிடித்த டைரி மில்க் மட்டும் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு பஸ் ஏறினேன். கோவிலுக்குள் நுழையும் போது மணி 6.45. நாங்கள் எப்போதும் சந்திக்கும் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு பின்னால் உள்ள இடத்தில் சென்று அமர்ந்தேன். அவனோடு சேர்ந்து சாமி கும்பிடலாம் என்று முடிவு செய்தேன். மணி இப்போது 7. பயங்கர கூட்டம் வேறு. அவனை தேடிக் கொண்டு இருந்தேன். அவன் இன்னும் வரவில்லை. நேரம் போகப் போக கடவுள் மேல் கோபம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. "எத்தன தடவ நானும் அவனும் சேர்ந்து வந்து உங்கிட்ட மண்டியிட்டு வேண்டி இருப்போம். உனக்கு எதுவுமே கேட்கலைல. கடவுள்னு ஒருத்தர் இல்லவே இல்ல. எல்லாம் சும்மா. அப்படி இருந்திருந்தா அவன் அம்மா அப்பா மனச மாத்தி இருப்பாருல்ல. இனிமேல நான் கோவிலுக்கு வர மாட்டேன்.." கடவுளிடம் தங்கள் குறைகளையும் நிறைகளையும் சொல்லிக் கொண்டு இருந்த பக்தர்கள் கூட்டத்தை பார்த்து கத்த வேண்டும் போல இருந்தது "கடவுள்னு யாரும் இல்ல. உங்க டைம்ம வேஸ்ட் பண்ணாம வேற ஏதாச்சும் உருப்படியா பண்ணுங்கன்னு.."

மணி 8 ஆகி இருந்தது. அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. 34 நிமிடங்கள் ஏதோ பித்து பிடித்தவள் போல உட்காந்து இருந்தேன் என்ன செய்வது என்றே தெரியாமல். கிளம்பலாம் என்று எழுந்தேன் அவனுக்காக வாங்கி வைத்து இருந்த சாக்லேட்டை பார்த்தேன். கோபம் கோபமாக வந்தது. என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கையில் ஒரு சிறுவனை பார்த்தேன். 4 வயது இருக்கும். கோவிலில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தான். அவனருகில் சென்றேன். "இன்னைக்கு என்னோட பிறந்தநாள் இந்தா சாக்லேட் எடுத்துக்கோ" என்றேன். 'ஹாப்பி பெர்த்டே' என்று சொல்லிவிட்டுடைரி மில்க்கை பையில் போட்டுக் கொண்டு மறுபடியும் ஓட முயற்சித்தான். அவன் கையை பிடித்து இழுத்து, "உன் பேர் என்ன?" என்றேன். ‘சிவா’ என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

முருகனுக்கு தீப ஆராதனை நடந்து கொண்டிருக்க பக்தர்களோடு பக்தையாக என்னையும் அறியாமல் வேண்ட ஆரம்பித்தேன் “எப்படியாது ஏதாச்சும் அதிசயம் பண்ணி சிவா அம்மா அப்பா மனச மாத்திடு முருகா. அவனோட மட்டும் தான் என் லைப் இருக்கணும்” என்று.


பின் குறிப்பு : ஒரு தூணிற்கு பின்னால் நின்று கொண்டு மாலை 6 மணியில் இருந்து இரண்டு சிவந்த கண்கள் கண்ணீர் மல்க காவ்யாவை பார்த்துக் கொண்டு இருந்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை....

0 comments:

Post a Comment