Pages

Monday, August 22, 2011

பயணம் 3 : பெங்களூர் - வயநாடு - பெங்களூர்(கிறுக்கல்கள்)

12.08.2011
ஏப்ரலில் சேலம் சென்ற பின்பு நெடுதூரப் பயணம் ஏதும் செல்லவில்லை. எங்கேயாவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. விக்னேஷும் இரண்டு மாதத்திற்கு முன்பு தான் புது Unicorn எடுத்து இருந்தான். அவனும் எங்கேயாவது போகலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். 13, 14, 15 விடுமுறை என்பதால் ஒரு ட்ரிப் போடலாம் என்று முடிவெடுத்தோம். எங்கே போகலாம் என்று தான் தெரியவில்லை. விக்னேஷ் வேறு சென்னையில் இருந்து பைக்கில் கிளம்பிவிட்டான் பெங்களூருக்கு. ஷங்கர் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து வைத்து இருந்தான் - சிக்மகளூர், கூர்க், வயநாடு. கூர்க் போகலாம் என்று எனக்கு ஒரு யோசனை வந்தது. எனினும் வயநாடு போகலாம் என்று பொதுக்குழு முடிவெடுத்தது இரண்டு பைக்கில் - நான் விக்னேஷ், ஷங்கர், பிரபு. விக்னேஷ் ஷங்கர் வீட்டை அடைந்திருந்தான் இரவு 8 மணிக்கு. நாளை(13.08.2011) காலை 6 மணிக்கு ஷங்கர் வீட்டில் இருந்து புறப்படுவாதாக தீர்மானித்தோம்.

13.08.2011
எழும் போது மணி 5.45!!!! வீட்டில் இருந்து புறப்பட்டு 6.30 க்கு ஷங்கர் வீட்டை அடைந்தேன். பிரபு வர லேட் ஆகவே 7 மணிக்கு தான் புறப்பட்டோம். Nice ரோட்டைத் தான் அடைந்து இருப்போம் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது அனைவருக்கும். மைசூர் ரோட்டில் Kamat ல் breakfast buffet கிடைக்கும் அதுவும் 80 ரூபாய்க்கு. எனவே அங்கு சாப்பிடலாம் என்று வண்டியை செலுத்தினோம். 50 கி.மீ ல் Kamat வர கூட்டம் அதிகமாக இருந்தது. எங்களைப் போல நிறைய மக்கள்ஸ் பிளான் பண்ணி இருக்காங்கையா! லேட் ஆகும் என்பதால் வேற இடத்தில் சாப்பிடலாம் என்று தோன்றியது. விக்னேஷ் முகத்தில் ஒரே கவலை ரேகைகள்! அதிஹாசில் சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். நானும், ஷங்கரும் அதிஹாசை அடைந்து விக்னேஷிற்கு கால் செய்தால் அவன் அந்த இடத்தை தாண்டி இருந்தான். கேட்டதற்கு இடது பக்கத்தில் வரவே இல்லை என்றான். 'நாங்க எப்ப டா இடது பக்கம் வரும் என்று சொன்னோம்' என்றோம். இங்கே நிறுத்தலாம் அங்கே நிறுத்தலாம் என்று ஒரு வழியாக Mandya வை அடைந்தோம். அங்கே சிற்றுண்டியை முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.


மைசூரை அடையும் போது மணி 10.30. அங்கே ஒரு குட்டி பிரேக் - இளநீர். விக்னேஷிற்கு அவன் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. KPN ல் பெங்களூருக்கு 5.30 க்கு வந்து சேர்ந்ததாகவும் விளையாடிவிட்டு ஷங்கர் வீட்டிற்குப் போய்க் கொண்டிருப்பதகாவும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அடப்பாவி என்று மற்ற மூவரும் வாயைப் பிளந்தோம்.

ஊட்டி செல்லும் ரோட்டை எடுத்தோம். இரு புறமும் டபுள் லேனாக இருந்த ரோடு சிங்கிள் லேன் ஆக மாறியது. நடுவில் divider ம் இல்லை. எனவே, 90 KMPH ஆக இருந்த வேகம் 60 - 70 KMPH ஆக மாறியது. Nanjangudu தாண்டியதும் டிராபிக் கம்மியாக இருக்கவே மீண்டும் வேகமெடுத்தோம். தொடர்ந்து 150 கி.மீ ஓட்டியதால் சற்று அசதியாக இருந்தது. எனவே, மீண்டும் ஒரு ஸ்டாப் Begur ல். பேக்கரி ஒன்றில் அடித்து நொறுக்கினோம். இவங்க ஊர் சுத்தப் போனாங்களா இல்லை சாப்பிடப் போனாங்களான்னு எல்லாம் கேட்கப்புடாது :-)
ஷங்கரை வண்டியை ஓட்ட விட்டு நான் பின்னால் உட்கார்ந்து ஒய்வெடுக்க ஆரம்பித்தேன். ஊட்டி ரோட்டில் இருந்து Gundlupet ல் கட் எடுத்தோம். ரோட்டின் இருபுறமும் சாமந்திப் பூக்கள் தோட்டம் இருந்தது. கொள்ளை அழகாய் கண்ணை மிகவும் கவர்ந்தது. தர்பூசணிப் பழங்களும் விற்றுக் கொண்டிருந்தார்கள். திரும்பி வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.
Bandipur காட்டு வழி ஆரம்பித்தது. இந்த வழியைப் பற்றி நான் சொல்வதை விட அவ்வழியே பயணித்துப் பார்த்தால் எனக்குள் ஏற்பட்ட உணர்வை நீங்களும் உணர்வீர்கள். இருபுறமும் காடு. எந்த வண்டியும் நிற்க அனுமதி இல்லை. சத்தம் எழுப்பக் கூடாது காட்டு விலங்குகளுக்கு இடையுறு இல்லாமல் இருக்க. சூரியன் சுட்டெரித்தாலும் அது நம்மேல் விழாத வண்ணம் மரங்களின் நிழல். நானும் ஏதாவது வன விலங்கைப் பார்த்து விட மாட்டேனா என்று சாலையின் இருபுறமும் மிக ஆவலோடு பார்த்துக் கொண்டே வந்தேன். என்னைப் போலவே காரில் பயணித்துக் கொண்டிருந்த பல தலைகள் எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தன. நான்கு எருமைகளைத் தவிர வேறு எந்த விலங்கும் இல்லை. அந்த நான்கு எருமைகளும் பைக்கில் சென்று கொண்டிருந்தன ;-)
கேரளா பார்டரை அடைந்தோம் 2. மணிக்கு. வண்டியை நான் ஓட்ட ஆரம்பித்தேன். 2.45 மணிக்கு Sultan Bathery. கேரளா வந்தால் டி சாப்பிடாமல் இருக்கக் கூடாது என்று விக்னேஷ் கூறினான். டீ குடிக்க இப்படி ஒரு காரணமா! டீ சாப்பிட்டுக் கொண்டே பதினைந்து நிமிடங்கள் மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம். Kalpetta(Wayanad) நோக்கிச் சென்றோம் இருட்டும் முன் falls ஒன்றைப் பார்க்கப் போகலாம் என்று. முன்பு திருவனந்தபுரத்தில் வேலை பார்த்ததால் தனக்கு மலையாளம் தெரியும் என்று விக்னேஷ் மலையாளத்தில் வழி விசாரித்தான் ஒருவரிடம். அவர் பதிலுக்கு ஆங்கிலத்தில் பதில் கூறினார். பின்ன அவன் பேசியதில் ஒரு வார்த்தை கூட மலையாளம் இல்லை. falls போய்விட்டு திரும்பினால் மிகவும் இருட்டி விடும் என்பதால் அந்த திட்டத்தை விட்டுவிட்டோம். என்ன பண்ணலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர் விக்னேஷும் ஷங்கரும். மதியச் சாப்பாடு வேற சாப்பிடாமல் இருந்ததால் பசி எடுக்க ஆரம்பித்து இருந்தது. சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் என்று kalpetta ல் 'Affas' என்றொரு ஓட்டலுக்கு சென்றோம் 4.30 மணிக்கு.

அந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு இரண்டு வருடங்கள் முன்பு நான் சென்ற மூணாறு ஞாபகம் தான் வந்தது. எந்த Hill Station சென்றாலும் எனக்கு மூணாறு ஞாபகமே வரப் போகிறது. ரொம்ப புதிர் போடுறேனா மூணாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நான் பேசிக் கொண்டே இருப்பேன். எனவே, மூணாரைப் பற்றி அப்புறம் கூறுகிறேன்.


எங்கடா தங்கப் போறோம் என்று ஷங்கரிடம் கேட்டேன். அவன் தான் கடந்த முறை வயநாடு வந்த போது தங்கிய Resort ல் தங்கலாம் என்றான். சாப்பிட்டுக் கொண்டே கால் செய்தோம். 15 ஆம் தேதி வரை இடம் காலி இல்லை என்ற பதில் வந்தது. என் மனதில் ஒரு சின்ன பயம் தங்க எங்கேயும் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்று. Pookot Lake அருகில் resorts நிறைய இருக்கும் என்று அந்த lake நோக்கிச் சென்றோம். செல்லும் வழியில் நிறைய resorts விளம்பரங்கள் இருந்தன. ஒன்று விடாமல் கால் செய்து விசாரித்தால் எல்லா இடங்களிலும் காலி இல்லை என்பதே பதில். தங்கும் இடத்தைப் பற்றி அப்புறம் கவலைப் பட்டுக் கொள்ளலாம் என்று நாங்கள் Pookot Lake உள்ளே சென்றோம்.

நாங்கள் உள்ளே செல்லும் போது மணி 5.15 என்பதால் Boating செல்ல அனுமதி இல்லை. ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் அங்கே சிறிது நேரத்தைக் கழித்தோம். கொடைக்கானல், மூணாறு மாதிரி பெரிதாய் இல்லை என்றாலும் மிக அழகாக இருந்தது. இரண்டு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கூட்டம் வேறு. Lake இன்னும் இளமையாய் காட்சி அளித்தது.

ஒரு கல்லூரி - வெறும் மாணவர்கள் கூட்டம் மட்டும். இன்னொரு கல்லூரி மாணவ மாணவியர் இருபாலரும். முதலில் அந்த மாணவர் கல்லூரிப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மாணவியர் கூட்டம் நிற்கவே அவர்களைப் பார்த்து பயங்கரமாக கூச்சலிட்டுக் கொண்டு ஆரவாரம் செய்து கொண்டே சென்றனர். அடுத்தது மற்றொரு கல்லூரிப் பேருந்தும் புறப்பட்டுச்சு சென்று விட்டது. அவர்களும் பேருந்தினுள் ஆட்டம் பாட்டம் என்று இருந்தனர். என் கல்லூரி நாட்கள் - ஹ்ம்ம் திரும்பக் கிடைக்கப் போறது இல்லை....


பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பார்ட் டைம் ஆக சுற்றுலாப் பயணிகளுக்கு ரூம் புக் செய்து தரும் வேலை செய்து கொண்டிருந்தான். நல்ல வேலை அவனை அந்த lake ல் பிடித்தனர் ஷங்கரும் விக்னேஷும். அவன் அவனுக்குத் தெரிந்த ஓட்டல்களில் விசாரிக்க ஆரம்பித்தான்.


நான் வீட்டிற்கு போன் செய்தேன். அவர்கள் போன் செய்து நான் எடுக்காமல் விட்டு விட்டால் போன் மலையாளத்தில் பேசி என்னைக் காட்டிக் கொடுத்து விடுமே! இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தேன் யாரும் எடுக்கவில்லை. மனதில் ஒரு சின்ன பயம் மாட்டிக் கொள்வேனோ என்று. இந்தப் பக்கம் ஷங்கர் அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான். Indica வில் வந்ததாகவும் டிரைவர் பொறுமையாகத் தான் ஓட்டுகிறார் என்று. யாருமே வீட்டில் சொல்லவில்லை பைக்கில் வந்ததை.


அந்தப் பையன் மூலம் ஒரு ஓட்டலில் ரூம் கிடைத்தது ஒரு வழியாக. Thalipuzha வில் உள்ள Green View. இரண்டு ரூம்கள் இருந்தும் நாங்கள் ஒரு ரூம் மட்டுமே எடுத்துக் கொண்டோம். ரூம் வந்து சேரும் பொழுது மணி 6.30. காலை 7 மணி முதல் மாலை வரை பைக் ஓட்டிக் கொண்டே இருந்தோம். அறையில் இங்கிலாந்திடம் இந்தியா கேவலமாக மூன்றாவது டெஸ்டில் தோற்றத்தைப் பார்த்தோம். பின் 9 மணி அளவில் வெளியே சாப்பிடப் புறப்பட்டோம். வீட்டிற்கு கால் செய்தேன். நல்ல வேளை இந்த முறை அம்மா எடுத்தார்கள். என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு சாப்பிட போய்க் கொண்டிருக்கிறேன் என்று மட்டும் கூறினேன். பிரபுவும் இதையே தான் கூறினான் அவன் வீட்டிலும்.


பக்கத்தில் ஓட்டல் எங்கே இருக்கிறது என்று விசாரித்தால் 200 மீ தூரத்தில் இருக்கிறது என்று கூறினர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட தூரத்தில் ஓட்டல் ஏதும் இல்லை. இப்படி200 மீ 200 மீ ஆக நடந்து நடந்து 2 கி.மீ நடந்து இருப்போம். நடந்தது கூட ஒன்றும் தோனவில்லை. இரவு நேரம் சாலை விளக்குகள் இல்லை. மலைப் பாதை வேறு. வாகனங்கள் வேகமாக வருவதும் போவதுமாக இருந்தன. ஓரமாக நடந்தும் செல்ல முடியவில்லை. த்ரில்லிங் ஆக இருந்தது உண்மையாகவே. இன்னைக்கு பட்டினியோட தான் உறங்கப் போகிறோம் என்று நினைத்த போது ஒரு ஓட்டல் வந்தது. கேரளா பரோட்டா சாப்பிட்டேன். என் நண்பர்கள் Fried rice, சப்பாத்தி என்று கட்டினர்.


அறை நோக்கி திரும்ப நடக்க ஆரம்பித்தோம். பிரபு மொபைலில் சிக்னல் இல்லை என்று புலம்பிக் கொண்டே வந்தான். விக்னேஷ் 'டேய் யாருட்ட பேச இப்படி துடிச்சிட்டு இருக்க' என்றான் பிரபுவிடம். ஷங்கர் "மூணாறு ல உன்னை மாதிரி இப்படித் தான் ஒருத்தன் airtel சிக்னலுக்காக ரொம்ப அட்டூழியம் செய்தான்" என்று சொன்னான் என்னைப் பார்த்துக் கொண்டே. 'அவன் என்ன எல்லாம் பண்ணான் என்று எனக்கும் தெரியுமே' என்றான் விக்னேஷ். அவர்கள் இருவருக்கும் மௌனத்தைத் தவிர வேறு எதையும் பதிலாய்த் தர இயலவில்லை என்னால்.

அந்த இருட்டு என் மனதிற்கு ஏதோ ஒரு வித இன்பத்தைத் தந்தது. தனிமையில் சிறிது நேரம் இருக்க வேண்டும் எண்டு இருந்தது. எனவே நான் முன்னாள் தனியாய் நடந்து போக ஆரம்பித்தேன். தூரத்தில் தண்ணீர் ஓடுகின்ற சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தேன். அந்த 30 நிமிடத் தனிமை என்னை ஏதோ ஒரு புது உலகத்திற்கே அழைத்துச் சென்றது. வாழ்க்கையில் இந்த மாதிரி உணர்வுகள் எப்பொழுதாவது தான் கிடைக்கின்றது. போகும் போது வெகு தூரம் நடந்தது போல இருந்தது. ஆனால், அத்தனிமையில் வந்த போது அந்த தூரத்தை மிக விரைவில் கடந்து விட்டது போல இருந்தது.


அறை வந்து சேர்ந்ததும் அவர்கள் மூவரும் உறங்க ஆரம்பித்தனர். ஆனால், என் மனமோ மூணாறு நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. என் கண்களுக்கு உறங்க விருப்பமில்லை. சிறிது நேரம் யாருமே இல்லாத இருள் நிறைந்த அச் சாலையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நானும் உறங்கச் சென்றேன்.


14.08.2011
காலை 6 மணிக்கு அனைவரும் எழுந்தோம். வேகமாக அனைவரும் புறப்பட ஆரம்பித்தோம். 7.30 மணிக்கு மீண்டும் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். முதலில் soochipara falls செல்லலாம் என்று முடிவெடுத்தோம். 20 கி.மீ தொலைவில் தான் இருந்தது. ஆனாலும், அங்கே செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. Hills ல் நான் பைக் ஓட்டுவது அதுவே முதல் முறை. மிக வித்தியாசமாகவும் த்ரில்லிங்காகவும் இருந்தது. ஏனென்றால் சாலை நேராக இல்லை. நிறைய வளைவுகள் இருந்தன. அதுவும் அடுத்து வரப் போகும் வளைவு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு திருப்பமும் ஒவ்வொரு திசையில் இருந்தது. தேயிலைத் தோட்டங்கள் மேலும் அழகைச் சேர்த்தது அச்சாலைகளுக்கு. 8.30 மணிக்கு soochipara falls சென்று அடைந்தோம்.
நான் குளிக்கக் கூடாது என்று தீர்மானித்தேன். பைக்கை பார்க் செய்து விட்டு நுழைவுச் சீட்டு வாங்கினோம். ஒரு கி.மீ நடந்தால் தான் அருவியை அடைய முடியும். காலை நேரம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து சற்று கம்மியாகவே இருந்தது. அருவியைப் பார்த்ததும் என் மனம் முடிவை மாற்றிக் கொண்டது. நான் தான் முதலில் குளிக்கத் தயாராகி இருந்தேன். அதைப் பார்த்ததும் என் நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். நான் தான் அவர்களிடம் தண்ணீரில் இறங்க மாட்டேன் என்று சொல்லி இருந்தேனே!
என்ன ஒரு குளிர், நீரில் இறங்கியதும்!!!! ஏதோ ஐஸ் கட்டி மேல் இருப்பது போல இருந்தது. ஆனால் ஒரு இரண்டு நிமிடங்களில் அக்குளிரும் போய் விட்டது. அருவியில் குளிக்க இயலவில்லை. அவ்வளவு வேகமாக அருவி பாய்ந்து கொண்டிருந்தது. அருவிக்கு வலப்பக்கம் Swimming Pool போல நீர் தேங்கி இருந்தது. நாங்கள் அதில் தான் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். அதன் பின் ஒரு பாறை மேல் ஏறி அருவியைப் பார்த்து உட்கார்ந்தோம். தண்ணீர் கீழே விழும் வேகத்தில் எங்கள் மீது சாரலைத் தூவியது. மழையில் நனைவதை விட அச்சாரலில் நனைந்து கொண்டிருந்தது மனதுக்கு ஒரு இனம் புரியாத சந்தோசத்தை தந்தது. இன்னும் சிறிது நேரம் இருக்க வேண்டும் போல இருந்தது ஆனால் வேறு இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டி இருந்ததால் பிரிய மனமின்றி soochipara வை விட்டுப் பிரிந்தோம். மோர், noodles, omlette என்று எங்கள் வயிற்றை நிரப்பினோம்.
அடுத்து எங்கள் destination meenmutty falls. அங்கு இருந்து 30 கி.மீ செல்ல வேண்டும். மலைப் பாதைகளில் ஓட்டி சிறிது அனுபவம் கிடைத்து விட்டதால் இப்பொழுது கொஞ்சம் வேகமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். மிக அழகான சாலையில் இருந்து ஒரு திருப்பத்துக்குள் நுழைந்தோம். 2 கி.மீ உள்ளே செல்ல வேண்டும். சிறிது நேரம் சென்றதும் பாதை மறைந்து விட்டது, மிகவும் ஏற்றமான பாதையாக இருந்தது. ஜீப் மட்டுமே அது போன்ற பாதையில் எளிதாக செல்ல முடியும். பைக் ஏறுமோ ஏறாதோ என்று ஒரு சந்தேகம் இருந்தாலும் அந்த கரடு முரடான பாதையில் எங்கள் பைக் கொஞ்சம் எளிதாகவே ஏறியது.

Meenmutty falls ஐ நெருங்கினோம் 12 மணிக்கு. நுழைவுச் சீட்டு எடுத்தோம். இங்கு Guide இல்லாமல் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். 10 நபர்கள் அடங்கிய குழுக்கு 300 ரூபாய் கட்டணம். அதற்கு மேல் ஒவ்வொரு எக்ஸ்ட்ரா நபருக்கும் 30 ரூபாய். நாங்களோ நான்கு நபர்கள் தான். இருந்தாலும் 300 ரூபாய் கட்டினோம். எங்களைப் போல இன்னொரு தமிழ் நண்பர்கள் கூட்டும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து டிக்கெட் எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கையில் பிரபு டிக்கெட் உடன் நின்று கொண்டிருந்தான். இதை சொல்லக் காரணம் எங்களைப் போல நீங்களும் ஏமாந்து விடக் கூடாதல்லவா.


Guide முன்னே செல்ல நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம். எங்களுக்கு எதிரே வந்தவர்கள் தொப்பலாக நனைந்து இருந்தார்கள். சிறிது நேரம் சென்றதுமே அனைவருக்கும் அசதி ஆகி விட்டது. நின்றோம். Guide இன்னும் 1.5 கி.மீ போகணும் என்று சொல்ல அய்யய்யோ என்று நடக்க ஆரம்பித்தோம். நான் இது வரை trekking சென்றதில்லை. இதை trekking என்று சொல்ல முடியாது. Adventure என்று தான் சொல்ல வேண்டும். முழுதும் ஒற்றையடிப் பாதை. சில இடங்களில் கயிறின் உதவி இன்றி கீழே இறங்க முடியாது. மிகவும் வழுக்கவும் செய்தது. வழுக்கி விழுந்தால் எங்கே சென்று சேருவோம் என்று யாருக்கும் தெரியாது! இப்படிப்பட்ட பாதையில் நடந்து தவழ்ந்து உருண்டு ஒரு வழியாக அருவியை அடைந்தோம்.

அங்கே சென்றால் யாருக்கும் குளிக்க அனுமதி இல்லை. அருவி அருகே செல்லக் கூட முடியாது. Soochipara வை விட அரக்கத்தனத்துடனும் பயங்கர ஒலி எழுப்பிக் கொண்டும் நீர் வீழ்ந்து கொண்டிருந்தது. புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டோம். திரும்பி ஏற ஆரம்பித்தோம். வரும் போதாவது இறக்கம். இப்பொழுது!! கொஞ்ச தூரம் ஏறியதுமே மூச்சு வாங்க ஆரம்பித்தது. கயிறைப் பிடித்து தொங்கிக் கொண்டே ஏற ஆரம்பித்தேன். கடைசி ஒரு கி.மீ ல் என் கைகளும் கால்களாக மாறி இருந்தது. நான்கு கால்களைக் கொண்டு விலங்குகளைப் போல ஏற ஆரம்பித்தேன். ஏறி முடிந்தவுடன் நானும் முழுதும் தொப்பலாக நனைந்து இருந்தேன் மற்றவர்களைப் போல வியர்வையில். நாங்கள் அருவியில் குளிக்க வில்லை வியர்வையில் தான் குளித்தோம் என்பது தெரியாமல் அருவியைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் இறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் ஆல் தி பெஸ்ட் சொன்னோம். மோர் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் விற்றுக் கொண்டிருந்தனர். தலா இரண்டு லிட்டர் குடித்தோம் ஒவ்வொருவரும்.
1.30 மணிக்கு பெங்களூர் நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். Kalpetta செல்லாமல் 2.30 மணிக்கு Sultan Bathery யை அடைந்தோம். அங்கே ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். நான் மட்டும் தான் அசைவம் என்பதால் தனியே வெளுத்துக் கட்டினேன். சிப்ஸ், கேக் வாங்கிக் கொண்டு 3 மணிக்கு கிளம்பினோம். எனக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. கேரளா பார்டரைத் தாண்டி Bandipur காட்டுப் பகுதி வந்ததும் ஷங்கரை ஓட்டச் சொல்லிவிட்டு நான் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். வரும் போது பார்த்து ரசித்த எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Begur தாண்டியதும் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்தோம் தர்பூசணி சாப்பிட்டு கொண்டே. நாங்க ஒரு தடவ சாப்பிடனும் ன்னு முடிவு பண்ணிட்டா சாப்பிடாம விட மாட்டோம் ல :-) பெரிய பழம் ஒன்று இருபது ரூபாய் தான். அங்க இருந்து பெங்களூருக்கு கொண்டு வர்றது கஷ்டம் இல்லைன்னா ஒரு பத்து பழங்கள் வாங்கி இருக்கலாம்!!!!
நான் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். Mysore வந்து சேரும் போது மணி 6 சரியாக. ஒரு குட்டி பிரேக். பயப்படாதீங்க எதுவும் சாப்பிடலை :-) பெங்களூர் ரிங் ரோடு எடுப்பதற்கு பதிலாக தவறான பாதையில் 7 கி.மீ சென்று விட்டோம். திரும்ப 7 கி.மீ பின்னால் வந்து ரிங் ரோடை அடைந்தோம். மணி 7.15. இனி டபுள் லேன் தான் என்றாலும் இருட்டி விட்டது. ரொம்ப வேகத்தில் செல்ல முடியவில்லை. எதிரே வரும் வாகனங்களின் விளக்குகள் கண்ணை மிகவும் உறுத்தின. ரொம்ப நேரம் ஒட்டியது போல இருந்தது இருந்தாலும் 50 கி.மீ தான் கடந்திருந்தோம். 8.30 மணிக்கு Maddur ல் ஒரு சின்ன பிரேக். இளநீர் குடித்து விட்டு இருபது நிமிடங்கள் வெட்டி போட்டோம். இதற்கப்புறம் எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அந்த இருட்டிலும் எதிரே வாரும் வாகனங்களின் ஒளியையும் பொருட்படுத்தாமல் 80 - 90 KMPH காரின் வேகத்திற்கு வண்டியை ஓட்டினேன். இந்த ட்ரிப்பில் நான் ஓட்டியதில் என்னை மிகவும் கவர்ந்தது Maddur ல் இருந்து Nice ரோடு பயணம் தான். 70 கி.மீ தூரம். மனதில் ஒரே எண்ணத்தைத் தவிர வேற எதுவும் இல்லை. நினைவுகள் இனிமையாய் இருக்கும் பொழுது பயணமும் இனிது தானே :-)

பெங்களூரு Royal Meenakshi Mall ஐ அடைந்தோம் 10.15 மணிக்கு. ஷங்கர் McDonalds சாப்பிட ஏதாவது வாங்கச் சென்றான். நாங்கள் மூவரும் வெளியே நின்று கொண்டு இந்த பயணத்தின் இனிமையான நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இம்முறை ஷங்கர் வீட்டுக்குச் செல்லாமல் நேரே என் வீட்டுக்கு வந்துவிட்டோம். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை பைக்கில் தான் சுற்றி இருக்கிறோம் :-) சாப்பிட்டு விட்டு உறங்க ஆரம்பித்தோம்.


பின் குறிப்பு :
15 ஆம் தேதி விக்னேஷ் சென்னை புறப்பட்டுச் சென்றான். எனக்கும் சென்னை செல்ல வேண்டும் போல இருந்தது. Missing Chennai a LOT!!!!

7 comments:

ரேவா said...

நண்பா இந்த தடவ நீங்க அடிச்ச கூத்தோட பிச்சர் சேர்த்தது செம....எல்லா போட்டோவும் கொள்ளை அழகு....ரொம்ப நன்றி இந்த மாதிரி இடங்களை போட்டோலயாவது பார்க்கும் வாய்ப்பை கொடுத்ததுக்கு... பைசா செலவில்லாமல் நாங்களும் உன்னோடு பயணம் செய்தோம்...நண்பர்கள் சேர்ந்தால் அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே...நடந்த விசயங்களை அழகாய் தொகுத்து இருக்கிறாய்...ரசித்தேன்...வாழ்த்துக்கள்...

ரேவா said...

ஆனந்த் உனக்கு பின்னாடி நல்ல எதிர்காலம் இருக்கு... ஹி ஹி

ரேவா said...

நான்கு எருமைகளைத் தவிர வேறு எந்த விலங்கும் இல்லை. அந்த நான்கு எருமைகளும் பைக்கில் சென்று கொண்டிருந்தன ;-)


முதன் முதலாக....முதன் முதலாக... ஹி ஹி

ரேவா said...

இவங்க ஊர் சுத்தப் போனாங்களா இல்லை சாப்பிடப் போனாங்களான்னு எல்லாம் கேட்கப்புடாது :-)

சீச்சீ நீ சாப்டதெல்லாம் கேக்க மாட்டோம், ஆனா எங்களுக்கு புதுசா வாங்கித்தா

ரேவா said...

நினைவுகள் இனிமையாய் இருக்கும் பொழுது பயணமும் இனிது தானே :-)

செம எண்டிங்...எப்படி பா இப்படி எழுதுற...சூப்பர் வழக்கம் போல....இந்த டைம் பிச்சர் சூப்பர்....கிளிக்கிய நட்புக்கும் வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் said...

////ரேவா said...
ஆனந்த் உனக்கு பின்னாடி நல்ல எதிர்காலம் இருக்கு... ஹி ஹி////

என்ன எதிர்காலம் ரேவா? என்னைய வச்சு காமெடி பண்ணலையே :-(

Unknown said...

ur words are too good. nijamave andha place i parkanum nu thoona vachadhu... good one

Post a Comment