Pages

Tuesday, October 01, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 1

நான் இப்படி ஒரு புது உலகத்தில் மாட்டிக்கொள்வேன்  என்று ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. எல்லாமே எனக்கு புதியதாய் இருந்தது. எந்த முகமும் எனக்கு பரிட்சயமானதாய் இல்லை. வித்யாவின் ஞாபகம் என்னை வாட்டி வதைத்தது. அவளை நினைத்து அழுது அழுது என் கண்கள் குளமாக மாறி இருந்தது. என் அம்மா தான் நான் வித்யாவை பிரிந்ததற்கு காரணம். நான் எவ்வளவோ பிடிவாதமாய் இருந்தும் என் அம்மா இரங்கி வரவில்லை. வித்யா அவளை நினைத்து பார்த்தால் எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது அவள் ரெட்டை ஜடை தான். என்னைப் பொருத்த வரை இவ்வுலகில் அவளுடைய கூந்தல் தான் மிக நீளமானது. அவள் ஜடையை ஒரு நாளைக்கு 100 முறையாது பிடித்து விளையாடவில்லை என்றால் எனக்கு உறக்கமே வராது. மற்றவர்கள் அவள் ஜடையை பிடித்து இழுத்தால் திட்டுபவள் என்னை மட்டும் எதுவும் சொல்ல மாட்டாள். அடுத்து அவள் கண்கள். அவள் உதடுகள் பேசி இதுவரை நான் கேட்டதே இல்லை. கண்களால் பேசி என்னை வீழ்த்தியவள்.

“வித்யாவும் இப்பொழுது என்னைப் போல புலம்பிக் கொண்டிருப்பாளோ? இல்லை Life has to go on என்று என்னை மறந்து தனது புது வாழ்க்கையை தொடங்கி இருப்பாளோ?” இது போன்ற ஓராயிரம் கேள்விகள் எனக்குள் பிறந்து கொண்டே இருந்தன. எல்லா கேள்விகளுக்கும் விடை தர வேண்டியவள் வித்யா. அவளை எப்படி தொடர்பு கொள்வது என்று கூட எனக்கு தெரியவில்லை. மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. மனம் போன போக்கிலே நடக்க ஆரம்பித்தேன் நான்காவது மாடியை அடைந்தேன். அங்கு இருந்து உலகத்தையே காண முடிந்தது என் வித்யாவைத் தவிர.

இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கின்றது. நான் மீண்டும் எனக்கு பிடிக்காத உலகத்திற்குள் நுழைய வேண்டும். என் விதியை நினைத்து நொந்து கொண்டேன். திரும்பச் சென்றேன் என் இடத்திற்கு. அங்கிருந்த அனைவருக்கும் ஒரு துணை இருந்தது. சிலருக்கு ஒன்றுக்கு மேலும் இருந்தது. இவ்வளவு வளர்ந்த பின்னும் ஓடி பிடித்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படி பக்குவமே இல்லாத கும்பலிடம் மாட்டிக்கொண்டேனே என்று வருத்தமாய் இருந்தது. நான் ஓரமாக இருந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்ப்பதை பார்த்துவிட்ட ஒருவன் என்னிடம் வந்தான், 'நான் அவளை டச் பண்ணிட்டேன்ல அவ அவுட் ல' என்று கேட்டான். அவனை அப்படியே எரித்து விடுவது போல பார்த்தேன். அப்படியே நகர்ந்து சென்று விட்டான் அவன் இடத்திற்கு.

அப்படி அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் முதன் முதலாக அவளை கவனித்தேன். அவளை கவனிக்க வைத்தது அவளது கூந்தல் தான். வித்யா கூந்தலை விட இவளுக்கு நீளம் ரொம்ப அதிகமாக இருந்தது. கண்களும் வித்யாவை விட அழகாக இருந்தது. வித்யாவை கொஞ்ச நேரம் மறந்து விட்டு இவளை ரசிக்க ஆரம்பித்தேன். அவளை முதலில் எப்படியாவது தோழியாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் ஒரு மூன்று பொறுக்கி பசங்க (எனக்கு மட்டும் பொறுக்கிகளாய் தோன்றினார்கள்) அவளிடம் போட்டிப் போட்டுக் கொண்டு கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் பேசிவிட்டு அவள், தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

நான் நேராக அவளிடம் சென்றேன். 'Hi, I am Surya' என்றேன்.

“I am Nila” என்றாள்.

அடுத்து என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், காட்டுக் கூச்சலாய் இருந்த அந்த இடம் தீடீரென்று மயான அமைதியாய் மாறியது. அனைவரும் அவரவர் இருக்கையில் சென்று அமர நானும் அமர்ந்தேன் என் இடத்தில். நிலாவை விட்டுச் செல்ல மனமின்றி.

மேடம் ஒருவர் உள்ளே நுழைந்தார். எங்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார். முதல் நாள் என்ன நடக்கப் போகிறதோ என்று மனதிற்குள் திக் திக் என்று இருந்தது.

“Hello my dear students, welcome to class II. என்னோட பேர் ரீட்டா, நான் தான் உங்க க்ளாஸ் டீச்சர். முதள் நாள் அதனால இன்னைக்கு க்ளாஸ் வேண்டாம். Attendance கொடுத்திட்டு விளையாடப் போலாம்” என்றார்.

வருகைப்பதிவு முடிந்ததும் நான் நேராக நிலாவை நோக்கிச் சென்றேன்.

உறங்கச் செல்கிறேன்….

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்...

JJ Lavanya said...

சூப்பர் அண்ணா. எத்தனை நாட்களாகிவிட்டது உங்கள் கதைகளைப் படித்து... பூரிப்பு தாங்கவில்லை :) தொடர்ந்து எழுதவும்..

Post a Comment