Pages

Friday, October 25, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 5

எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் நிலாவைத் தவிர மற்ற அனைவரும் A செக்ஷன் நிலா மட்டும் B செக்ஷன். வேண்டும் என்றே யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றியது. தமிழ் சார் மேல் தான் சந்தேகம் வந்தது. அவருக்குத் தான் நானும் நிலாவும் நெருங்கிப் பழகுவது சுத்தமாக பிடிக்கவில்லை. எங்கள் இருவரின் பெற்றோரிடமும் அவர் எத்தனையோ முறை இதை பற்றி சொல்லிப் பார்த்தார் ஆனால் எங்கள் இருவரின் வீட்டிலும் இதை கண்டுகொள்ளாதலால் அவர் இப்படி செய்திருக்க வேண்டும்.

நிலாவை இடைவேளையில் சந்தித்தேன். அவள் அழுதிருந்ததை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தன. என்னைப் பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

‘எதுக்கு டா என்னை மட்டும் வேற செக்ஷன்ல போட்டாங்க? இப்ப மாத்த முடியாதா?’

“காலைல ஹிஸ்டரி சாரட்ட பேசினேன். அவர் இனி மாத்துறது கஷ்டம்னு சொன்னாரு. தமிழ் சார் தான் இப்படி பண்ணதா சொன்னாரு” - ஹிஸ்டரி சார் ஒருவர் தான் மாணவர்களிடம் மிக நெருங்கிப் பழகுபவர். தமிழ் சார்க்கு எங்களை மட்டும் இல்லை ஹிஸ்டரி சாரையும் பிடிக்காது.

‘தமிழ் சாரை திட்டித் தீர்த்தாள். அம்மா அப்பாவை பேச வச்சு செக்ஷன் மாறப் போறேன்டா. இந்த செக்ஷன் எனக்குப் பிடிக்கவே இல்லை நீ நம்ம கேங் இல்லாம.’

நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் இடைவேளை முடிய லஞ்சில் மீட் பண்ணலாம் என்று சொல்லி விட்டு அவரவர் கிளாஸ்க்கு சென்றோம்.

எப்ப லன்ச் வரும் என்று இருந்தது. பாடம் கவனிக்கவே இல்லை. லன்ச் பெல் அடிக்க லன்ச் பாக்ஸை கூட எடுக்காமல் ஓடினேன் நிலாவைப் பார்க்க.

‘இன்னைக்கு அம்மா அப்பாக்கிட்ட பேசி நாளைக்கு அவங்கள கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்’ என்றாள் நிலா.

“நிலா இந்த விசயத்தை நாம பெருசாக்க வேணாம்னு தோனுது. ஒரு வருடம் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் நிலா”

‘உன்னால முடியுமா?’

“என்னால நிஜமா முடியல நீ இல்லாத கிளாஸ்ல உட்கார. ஆனால் இப்ப வேற வழி இல்ல. அவரால இந்த வருஷம் மட்டும் தான் நம்மள பிரிக்க முடியும். அடுத்த வருஷம் என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன்”

‘என்னடா சொல்ற? அடுத்த வருஷமும் நம்மள பிரிச்சிட்டாருன்னா?’

“லூசு அடுத்த வருஷம் எப்படி நம்மள அவரால பிரிக்க முடியும். நாம ரெண்டு பெரும் ஒரே க்ரூப்ல எடுப்போம். நாம அடுத்த வருஷம் பதினொன்றாம் வகுப்பு போறோம். மறந்துட்டியா!!!!”

‘அட ஆமால்ல’ லேசாக சிரித்தாள் அவள் அழகான முன்பற்கள் தெரியும்படி.

“நாம ரெண்டு பெரும் இடைவேளையில் மீட் பண்ணப்  போறோம். ஒரே கிளாஸ்ல இருக்கிற மாதிரி கண்டிப்பா இருக்காது தான் ஆனாலும் இந்த சின்னப் பிரிவைத் தாங்கிக்கலாம். ரெண்டு பேரும் நல்லா படிச்சு ஒரே க்ரூப்ல சேரனும். அது தான் நம்ம அடுத்த குறிக்கோளா இருக்கனும்”

‘சரிடா. கண்டிப்பா ஒரே க்ரூப்பா தான் இருப்போம் நாம ரெண்டு பேரும். எந்த க்ரூப் டா சேரலாம்?’

“உனக்கு என்ன க்ரூப் பிடிக்கும்னு சொல்லு அதுல சேரலாம்”

‘எனக்குன்னு ஏதும் இல்லடா. நம்ம ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் க்ரூப் மேக்ஸ் பையாலஜி. ஆனால் எனக்கு கம்ப்யூட்டர் சைடுல போனும்னு தான் இருக்கு. இப்ப போய் வீட்ல கம்ப்யூட்டர் குரூப் எடுக்கப் போறேன்னு சொன்னா இந்த க்ரூப் வேணாம்னு சொல்லுவாங்க. மேக்ஸ் பையாலஜி எடுத்தாலும் ஸாஃப்ட்‌வேர் சைடு போக முடியும். அதனால ஃபர்ஸ்ட் க்ரூப் தான்டா எடுக்கனும்’

“சரி நிலா”

‘உனக்கு எந்த க்ரூப் டா பிடிக்கும். அத சொல்லு முதல்ல’

“நீ எந்த க்ரூப்ல இருக்கியோ அந்த க்ரூப் தான் எனக்கு பிடிக்கும்”

சிரித்தாள்.

இன்டர்வல் லன்ச் நேரங்களைத் தவிர பள்ளி முடிந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக் கொண்டே பேசிக் கொண்டு மெதுவாக நடந்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தோம்.

5 மாதங்கள் இப்படியே ஓடின.

ஒரு நாள்,

நான் கெமிஸ்ட்ரி லேபில் இருந்தேன். நிலா எனக்காக லன்ச்க்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள் வெளியில். அரையாண்டு செய்முறைத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் என்னால் வெளியில் வந்து அவளிடம் பேச முடியவில்லை. வேக வேகமாக டெஸ்ட்டை முடித்து ரிப்போர்ட்டை சமர்ப்பித்து விட்டு வெளியில் பார்த்தேன் நிலாவை காணவில்லை. லன்ச் ஹாலுக்கு சென்றேன்.

நிலா அவள் கிளாஸ் பையன் கௌதம் உடன் வெளியில் வந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் ‘சரி நான் கிளம்புறேன் நிலா. கிளாஸ்ல பார்ப்போம்’ விடை பெற்றுச் சென்றான் கௌதம்.

‘என்னடா அதுக்குள்ள லேப் முடிச்சிட்டியா? நல்லா பண்ணியா இல்லையா?’ என்றாள் நிலா.

“அதை விடு. உனக்கு புது நண்பர்கள் கிடைச்சிட்டாங்க போல” என்றேன்.

‘நான் உனக்காக லேப்க்கு வெளியே காத்துக்கிட்டு இருந்தேன் டா. வித்யாவைப் பார்த்தேன். அவ நீ இப்ப தான் உள்ள போய் இருக்கன்னு சொன்னா. அதான் கௌதம் கூட….’

“நான் எப்படினாலும் வருவேன்னு உனக்கு தெரியாதா? ஏன் அவனோட போன?”

‘டேய் சொல்றது முதல்ல கேளு...’

“எல்லாமே புரிஞ்சுகிட்டேன் இப்ப.. நீ ஏதும் பேச வேணாம். என்ன தான் இருந்தாலும் நான் இப்ப வேற செக்ஷன் தான. உன் கிளாஸ் நண்பர்கள் மாதிரி வராதுல்ல”

‘சூர்யா நான் சொல்றத ஃபர்ஸ்ட் கேளு டா’

“ஒன்னும் வேணாம். கிளாஸ் போ நீ. நானும் கிளம்புறேன். Bye” என்றேன்.

அப்போது கூட ‘என் மேல இருக்கிற கோபத்தை சாப்பாடுல காட்டாத. சாப்பிட்டு கிளாஸ்க்கு போ’ என்றாள் நிலா.

“உன் நண்பர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க உனக்காக நீ கிளாஸ்க்கு கிளம்பலாம்” கோபமாக பேசிவிட்டு சென்றேன்.

அவள் ஏதும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன. எங்களுக்குள் வந்த முதல் சண்டை இது தான்.

அடுத்த நாள் லன்ச் டைம் நிலா என் வகுப்பிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். ‘வாடா  லன்ச் போலாம்’ என்றாள். “நீ இனிமேல் கௌதம் கூட சாப்பிட்டுக்கோ. நமக்குள்ள இனி எதுவும் இல்ல. வா வித்யா லன்ச் போலாம்” சொல்லிவிட்டு வித்யாவுடன் சென்றேன்....


உறங்கச் செல்கிறேன்….

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ நானும் செல்கிறேன்...!

Unknown said...

“நீ எந்த க்ரூப்ல இருக்கியோ அந்த க்ரூப் தான் எனக்கு பிடிக்கும்"////////////// பசங்கள திருத்தவே முடியாது :) :)

அதென்ன பொண்ணுங்க வேற பசங்க கூட பேசினா மட்டும் அப்படி ஒரு கோபம்??? இந்த விஷயத்துலயும் பசங்கள திருத்தவே முடியாது.....

நிலா பாவம்ம்ம்ம்ம்....

Post a Comment